ஸ்ரீலங்கா வரும் சுற்றுலா பயணிகள் ஐந்து இரவுகள் தங்கியிருப்பது கட்டாயம் ஓகஸ்ட் முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் இன்றி நாட்டுக்கு வர அனுமதி
07 Jun,2020
கொரோனா தொற்றை அடுத்து முடக்கம் கண்ட சுற்றுலாத்துறையை மீளவும் புத்துயிர் கொடுக்க அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல்,சுறு்றுலாப்பயணிகள் ஸ்ரீலங்காவுக்கு வருவதற்காக விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.
ஆனால் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், குறைந்தபட்சம் 05 இரவுகளாவது நாட்டில் தங்கியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள், இந்நாட்டிற்கு வருகை தருவதற்கு குறைந்தபட்சம் 72 மணிநேரத்திற்கு முன்னர் தங்களது PCR பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அவர்கள் விமான நிலையத்திற்கு வருகை தந்த பின்னர், மீண்டும் PCR பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முடிவுகள் கிடைக்கும் வரை, கொழும்பில் அல்லது நீர்கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் ஒரு நாள் சுற்றுலாப் பயணிகள் தங்க வைக்கப்படுவார்கள் என, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு பின்னர், நோய்க்கான அறிகுறிகள் தென்படாத பட்சத்தில், தனிமைப்படுத்தலுக்கான பரிந்துரை இருக்காது எனவும், குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 10 நாட்கள் அல்லது, அதற்கு மேற்பட்ட காலம் தங்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் 03 PCR பரிசோதனைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஸ்ரீலங்கா வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி
சுற்றுலா பயணிகளுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் இன்றி நாட்டுக்கு வர அனுமதி வழங்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும் இடை இடையே அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என இலங்கை சுற்றுலா துறை தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இதனடிப்படையில் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் கட்டுநாயக்க, ரத்மலானை மற்றும் மத்தள விமான நிலையங்கள் மூலம் இலங்கை வருவதற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிய வருகின்றது.
சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையங்களில் பி.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும்.
எவ்வாறாயினும் இதற்கான கட்டணம் அறிவிடப்படமாட்டாது எனவும் சுற்றுலா துறை தரப்பினர் தெரிவிக்கின்றனர்.