வாழவே தகுதியற்ற உக்ரைன் நகரங்கள்.. கொல்லப்பட்ட 7000 அப்பாவி பொதுமக்கள் - ஐநா அதிர்ச்சி
20 Jan,2023
உக்ரைனில் பத்து மாதங்களாக நீடித்து வரும் போரில் அப்பாவி பொதுமக்கள் 7ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதத்தில் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கியது. அந்த போர், சுமார் 10 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த, கடும் போரில் உக்ரைன் நாட்டின் பல நகரங்கள் சேதமடைந்துள்ளன. பொதுமக்கள் வாழும் பகுதிகளிலும் ரஷ்யா ஏவுகனைத் தாக்குதல் நடத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையும் மற்ற உலக நாடுகளும் குற்றம் சாட்டி வந்தாலும் ரஷ்யா அதை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
ரஷ்யாவின் ஏவுகனை தாக்குதல்களால் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் வாழவே தகுதியற்ற நிலையில் உருக்குலைந்துள்ளது. மருத்துவமனைகள் கூட தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன.
மேலும் மின் நிலையங்களும் தகர்க்கப்பட்டுள்ளதால் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகள் இருளுக்குள் மூழ்கிக் கிடக்கின்றன. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் வசிக்கும் அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் ரஷ்ய ராணுவம் மிக மோசமான தாக்குதலை நடத்தியது.
தென்கிழக்கு நகரமான நீப்ரோ நகரில் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆயிரத்து 700 பேர் வசித்து வந்ததாகவும், அவர்களில 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 75க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை ரஷ்யா பொதுமக்கள் மீது நடத்திய மிக மோசமான தாக்குதல் இது என மேற்குலக நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. ரணுவத்தினர் யாரும் இல்லாத, பொதுமக்கள் மட்டுமே வசிக்கும் கட்டடத்தில் தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்குரியது என ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ரஷ்ய திட்டவட்மாக மறுத்துள்ளது.