சவுதியை புரட்டிப்போட்ட கனமழை!
25 Nov,2022
சவுதி அரேபியாவில் பெய்த கனமழையால் இருவர் பலியாகினர். மேற்கு சவுதி அரேபியாவின் கடலோர நகரமான ஜெத்தா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியது. சுமார் நான்கு மில்லியன் மக்கள் வசிக்கும் பெரிய நகரமான ஜெத்தாவில், புனிதத்தலமான மெக்கா அமைந்துள்ளது. மெக்காவை இணைக்கும் சாலை கனமழை காரணமாக மூடப்பட்டது.
நகரில் பள்ளிகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், விமானங்கள் தாமதமானதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
ஜெத்தாவில் ஒவ்வொரு ஆண்டும் குளிர்கால மற்றும் கனமழை வெள்ளம் ஏற்படுவதால், குடியிருப்பாளர்கள் பாதிப்புகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
இதுவரை கனமழைக்கு இரண்டு பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 123 பேர் பலியாகினர். மேலும் அதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கழித்து ஏற்பட்ட வெள்ளத்திற்கு 10 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.