உக்ரைன் மீது ரஷியா 26-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-
* 7,295 பேர் வெளியேற்றம் உக்ரைன் துணை பிரதமர்
உக்ரேனிய நகரங்களில் இருந்து மொத்தம் 7,295 பேர் மனிதாபிமான தாழ்வாரங்கள் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று உக்ரைனின் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் கூறியுள்ளார். திட்டமிடப்பட்ட ஏழு வழித்தடங்களில் நான்கு செயல்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அரசு இன்று கிட்டத்தட்ட 50 பஸ்கள் மரியுபோலில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்காக அனுப்ப திட்டமிட்டுள்ளது என கூறப்படுகிறது.
* மரியுபோலில் ஆயுதங்களைக் கீழே போடுமாறு ரஷியா உக்ரைன் படைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது
கிழக்கு துறைமுக நகரமான மரியுபோலில் உக்ரைன் படைகள் சரணடைய வேண்டும் என்று ரஷியா கூறியுள்ளது.
உக்ரைன் ராணுவம் "உங்கள் ஆயுதங்களை கீழே போடுங்கள்," என்று ரஷிய கர்னல்-ஜெனரல் மிகைல் மிஜின்ட்சேவ், பாதுகாப்பு அமைச்சகத்தால் விநியோகிக்கப்பட்ட ஒரு மாநாட்டில் கூறினார்.
மேலும் "ஒரு பயங்கரமான மனிதாபிமான பேரழிவு உருவாகியுள்ளது," மிஜின்ட்சேவ் கூறினார். "ஆயுதங்களைக் கீழே போடுபவர்கள் அனைவரும் மரியுபோலில் இருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறார்கள் என கூறினார்.
மார்ச் 21 இன்று மாஸ்கோ நேரப்படி காலை 10 மணிக்கு (07:00ஜிஎம்டி) மரியுபோலில் இருந்து மனிதாபிமான தாழ்வாரங்கள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
* மரியுபோல் நோக்கி முன்னேறி வருவதாக ரஷியா கூறுகிறது
ரஷிய இராணுவம் கிழக்கு உக்ரைனுக்குள் மேலும் 12 கி.மீ தூரம் முன்னேறி, மரியுபோல் அருகே உள்ள நிகோல்ஸ்கே எல்லையை அடைந்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்துள்ளார். இது குறித்து உக்ரைன் தரப்பிலிருந்து எந்த உறுதிப்படுத்தலும் இல்லை.
* ரஷியா விவகாரத்தில் நடுநிலையை கைவிட்டு தங்கள் நாட்டை ஆதரிக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கு, உக்ரைன் வலியுறுத்தி உள்ளது. இஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, 80 ஆண்டுகளுக்கு முன்பு யூதர்களை உக்ரைன் காப்பாற்றியதாக நினைவு கூர்ந்தார். தற்போது இஸ்ரேல் நடுநிலைமையை கைவிட்டு உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் நேரம் வந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், இதுவரை 34 லட்சம் மக்களை அகதிகளாக மாற்றி இருக்கிறது. அவர்கள் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, மால்டோவா, ஹங்கேரி, பெலாரஸ், சுலோவேகியா நாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.
மொத்தம் 1 கோடி பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர் என ஐ.நா. அகதிகள் அமைப்பு நேற்று தெரிவித்தது. அவர்களில் 65 லட்சம் பேர் உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ளதாகவும் அந்த அமைப்பு சொல்கிறது.
ஆனால், உக்ரைன் நகரங்களை எல்லாம் சுவடு தெரியாமல் அழித்துவிட வேண்டும் என்று ரஷியா கங்கணம் கட்டிக்கொண்டு, காட்டுமிராண்டித்தமான தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அதுவும் ரஷிய படைகளின் முற்றுகையின்கீழ் உள்ள மரியுபோல் நகரம், பூமியில் ஒரு நரகமாக மாறி வருவது பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
துறைமுக நகரமான மரியுபோலை 3 வார காலமாக ரஷியா தாக்கி வருகிறது. எவ்வளவு அடித்தாலும் தாங்கும் என்ற நினைப்பில் அங்கு குண்டுமழை பொழிந்து வருகிறது. குடியிருப்புகள், ஆஸ்பத்திரிகள், பிரசவ ஆஸ்பத்திரிகள், வெடிகுண்டு தவிர்ப்பு புகலிடங்கள் எதுவும் தாக்குதலுக்கு விதிவிலக்காக இல்லை.
போர் தீவிரம் அடைந்து வருவதால், அங்கிருந்து கடந்த ஒரு வாரத்தில் 40 ஆயிரம் பேர் தங்கள் சொந்த வாகனங்கள் மூலமாக இடம் பெயர்ந்துள்ளனர்.
2,300 பேர் ஏற்கனவே கொன்று குவிக்கப்பட்டும் ரஷிய படைகளின் ரத்த தாகம் குறையவில்லை. குடிதண்ணீர், சாப்பாடு, மின்சாரம் எதுவும் இன்றி இந்த நகர மக்கள் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேட்டை நாய் போல ரஷியா அந்த நகரை துரத்திக்கொண்டிருக்கிறது.
அங்கு பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என ஏறத்தாழ 400 பேர் உயிருக்குப் பயந்து தஞ்சம் அடைந்திருந்த கலைப்பள்ளி மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் அங்கு இருந்த 400 பேரின் கதி என்னவானது என்பது உடனடியாக தெரியவரவில்லை.
இந்த நகரை ரஷியா உருக்குலையச்செய்து வருவது பற்றி உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவிக்கையில், “அமைதியான நகரத்துக்கு ஆக்கிரமிப்பாளர்கள் செய்தது, பல நூற்றாண்டு காலத்துக்கு நினைவுகூரப்படும் பயங்கரவாதம் ஆகும்” என குறிப்பிட்டார்.
உக்ரைனில் பாதாள ஆயுதக்கிடங்குகளை அழிப்பதற்கு கின்ஸால் என்னும் ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணைகளை ரஷியா பயன்படுத்தியது.
நேற்று மறுபடியும் கருங்கடல் துறைமுக நகரான மைகோலாய்வ் அருகேயுள்ள கோஸ்டியன்டினிவ்காவில் இருந்த எரிபொருள் கிடங்கை கின்ஸால் ஏவுகணை கொண்டு தாக்கி ரஷியா அழித்துள்ளது. இதை அந்த நாட்டின் ராணுவ செய்தி தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் உறுதிப்படுத்தினார். இந்த தாக்குதலில் கலிபிர் ரக குரூஸ் ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஓவ்ரூச்சில் வெளிநாட்டு போராளிகளும், உக்ரைன் சிறப்பு படைகளும் தங்கியுள்ள ராணுவ தளத்தை வான்வழி ஏவுகணைகள் தாக்கி அழித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதற்கு மத்தியில் ரஷிய படைகள் ஆக்கிரமித்துள்ள கெர்சன், காகோவ்கா, பெர்டியான்ஸ்க் ஆகிய நகரங்களில் நேற்று பொதுமக்கள் கண்டன பேரணிகளை நடத்தினர்.
கெர்சனில் நடந்த பேரணியில் பங்குபெற்றவர்கள் உக்ரைன் தேசியகொடிகளை அசைத்து “கெர்சன் தான் உக்ரைன்” என கோஷங்களை முழங்கிய காட்சிகளை கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.