அமெரிக்கா . இந்தியா விமான சேவை துவக்கம்
21 Jan,2022
புதுடில்லி:அமெரிக்காவில் '5ஜி' அலைக்கற்றை சேவையால் விமான சேவை பாதிக்கப் படும் என அறிவிக்கப்பட்டதால்,நிறுத்தப்பட்ட இந்தியாவுக்கான விமான சேவை துவங்கியது.
அமெரிக்காவில் 5ஜி அலைக்கற்றை மூலம் தொலை தொடர்பு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 5ஜி சேவையால் சில குறிப்பிட்ட விமானங்களில் பயன்படுத்தப் படும் தொலை தொடர்பு சாதனங்களில் பாதிப்பு ஏற்படலாம் என, கூறப்பட்டது.அதனால் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நேற்று முன்தினம் இயக்கப்படவிருந்த எட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இது தொடர்பாக அமெரிக்க விமான ஆணையம் வெளியிட்ட செய்தியில், '5ஜி சேவையால் விமானங்களில் பயன்படுத்தப்படும் மாற்று தொலை தொடர்பு அலைக்கற்றுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. 'அதனால் விமானங்களை இயக்குவதில் எந்த பிரச்னையும் இல்லை' என கூறப்பட்டது.இதை, 'போயிங்' விமான தயாரிப்பு நிறுவனமும் உறுதி செய்தது. இதையடுத்து, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு 'ஏர் இந்தியா' நிறுவனம் நேற்று ஆறு விமானங்களை இயக்கியது.