ஆற்றில் படகு கவிழ்ந்தது வங்கதேசத்தில் 26 பேர் பலி
06 Apr,2021
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், சரக்கு கப்பலுடன் மோதி, படகு கவிழ்ந்ததில், 26 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
வங்கதேசம், சிடலக்யா ஆற்றில், 100க்கும் மேற்பட்ட பயணியருடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. சையத்புர் கோய்லா படித்துறை அருகே சென்ற போது, எதிரே வந்த சரக்கு கப்பலுடன் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.இதையடுத்து படகு கவிழ்ந்ததில், ஏராளமான பயணியர் நீரில் மூழ்கினர். அவர்களில், நீச்சல் தெரிந்த, 60 பேர், தப்பித்து கரை சேர்ந்தனர். மீட்பு படையினர், ஆற்றில் மூழ்கியோரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில், 26 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காணாமல் போன எஞ்சியோரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. இந்த விபத்தின் போது, சரக்கு கப்பல் நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த, வங்கதேச நீர்வள போக்குவரத்து ஆணையம், குழு ஒன்றை அமைத்துள்ளது. திடீரென வீசிய சூறாவளி தான் படகு விபத்துக்கு காரணம் என, கூறப்படுகிறது.