சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12.87 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10.52 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 28.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 2.26 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 97,600-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது
இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 81 ஆயிரத்தை தாண்டியது- தொற்றுக்கு மேலும் 469 பேர் பலி
கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு 81 ஆயிரத்தை தாண்டியது. 24 மணி நேரத்தில் 469 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, கடந்த மாதத்தில் இருந்து அதிகரித்து வருகிறது. நேற்று தொடர்ந்து 23-வது நாளாக பாதிப்பு அதிகரித்தது.
நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், புதிதாக 81 ஆயிரத்து 466 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். முந்தைய நாளில் 72 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் இந்த எண்ணிக்கை 9 ஆயிரம் அதிகரித்துள்ளது.
கடந்த அக்டோபர் 2-ந் தேதிக்கு பிறகு, 6 மாதங்களில் இதுதான் அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு ஆகும்.
இதையடுத்து, நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியே 23 லட்சத்து 3 ஆயிரத்து 131 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 14 ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளது. இது, மொத்த பாதிப்பில் 5 சதவீதமாகும். குணமடைந்தவர்கள் விகிதம் 93.67 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவுக்கு 469 பேர் பலியாகி உள்ளனர். கடந்த டிசம்பர் 6-ந்தேதிக்கு பிறகு இதுதான் அதிகபட்ச பலி எண்ணிக்கை ஆகும். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரத்து 396 ஆக அதிகரித்துள்ளது. பலி விகிதம் 1.33 சதவீதமாக உள்ளது.
தடுப்பூசி போடும் பணி
பலியான 469 பேரில், மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 249 பேர் ஆவர். பஞ்சாப் மாநிலத்தில் 58 பேரும், சத்தீஷ்காரில் 34 பேரும், தமிழ்நாட்டில் 19 பேரும் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கையில் மராட்டிய மாநிலம் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளன.
கடந்த 1-ந்தேதிவரை, மொத்தம் 24 கோடியே 59 லட்சத்து 12 ஆயிரத்து 587 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 1-ந்தேதி மட்டும் 11 லட்சத்து 13 ஆயிரத்து 966 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.