தமிழ் தேசிய நினைவேந்தல் நாள் 2017
27 Nov,2017
தமிழ் தேசிய நினைவேந்தல் நாள் 2017 நவம்பர் 27 ஆம் திகதி, தமிழ் தேசிய நினைவேந்தல் தினத்தையொட்டி உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தாயக மீட்புக்கான விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த விடுதலைப் போராளிகளை நினைவு கூருகின்றனர். ஆயிரக்கணக்கான போராளிகளும் மக்களும் தங்கள் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் இனப்படுகொலையில் இருந்து பாதுகாப்பதற்காகவும் தங்கள் இன்னுயிர்களை ஈந்துள்ளனர். ஒரு இனமானது தனது உரிமைகளுக்காகவும் சுதந்திர வாழ்வுக்காகவும் தங்களது உறவுகளை நினைவு கூர்வது சர்வதேசரீதியில் ஏற்றுக் கொல்லப்பட்ட ஒன்றாகும். கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக இந்த அடிப்படை உரிமையானது இனவாத இலங்கை அரசினால் மறுக்கபட்டது. புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் இடைவிடாத செயல்பாடுகளின் மூலமாக அந்த உரிமை இன்று மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மத்தியிலும் இடித்தழிக்கப்பட்ட கல்லறையின் சிதறல்களைத் தேடியெடுத்து புனர்நிர்மாணப் பணிகளை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். தாயகத்திலுள்ள எமது மக்களின் துணிச்சலான இந்த முயற்சிகளுக்கு தலைவணங்குகின்றோம். புலம்பெயர் மக்களின் இடையறாத சோர்வுறாத செயல்பாடுகள் இராணுவ நெருக்குவாரங்களுக்கு மத்தியில் வாடும் எம் மக்கள் விரும்பும் மாற்றங்களைக் கொண்டு வரும் என்பது திண்ணம். இன்று ஏற்பட்டுள்ள இந்த மாற்றமானது எமக்கு நம்பிக்கையைத் தருவதுடன் மேலும் எமது தொடர்ச்சியான சர்வதேச செயல்பாடுகளுக்கு உந்துசக்தியாகவுள்ளது. 2015இல் வெளிவந்த மனித உரிமை கழகத்தின் 30/1 தீர்மானத்திலுள்ள சரத்துக்களை முழுமையாக அமுலாக்குவதற்கு இலங்கை அரசு உடன்பட்டிருந்த போதும் குறிப்பிடத்தக்க மாற்றமொன்றும் அங்கு நடைபெறவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஓர் செயலகம் (OMP) உருவாக்கப்பட்டபோதிலும் அதன் செயல்பாடுகள் பெயரளவிலேயே உள்ளது. இவ் விடயம் தொடர்பில் ஐ நா. வின் மனித உரிமை ஆணையாளர் அவர்கள் கடந்த செப்டெம்பர் 2017 அமர்வின்போது சுட்டிக் காட்டியது குறிப்பிடத்தக்கது. எம்மின விடுதலைக்காக தம் இன்னுயிரை அர்ப்பணித்த வீரர்களுக்கும் மக்களுக்கும் மரியாதை செலுத்தும் இவ் வேளையில் தொடர்ந்தும் எம்மினத்தின் விடுதலை நோக்கிய பயணத்தில் சோர்வடையாது பயணிப்போம் என்று உறுதியெடுப்போம். உலகத்தின் கண்முன்னே இலங்கையரசின் கபடத்தனமான இரட்டைவேடத்தைக் கலைப்பதற்காக உள்ளும் புறமும் உள்ள சவால்களுக்கெதிராக எமது சகோதர அமைப்புகள் ஒன்றுபடுமாறு அழைக்கும் அதே வேளையில் 2015 தீர்மானத்தை அமுலாக்கம் செய்ய வைப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுமாறு உரிமையுடன் அழைக்கின்றோம். சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அத் தீர்மானத்தை அமுலாக்கம் செய்வதற்கு எமது தாயகத்திலுள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து இலங்கை அரசிற்கெதிரான ஒரு மக்கள் போராட்டத்தினை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இலங்கையரசால் வழங்கப்பட்ட உறுதி மொழிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தீர்மானகரமான முடிவொன்றை சர்வதேசம் சமூகம் முன்வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி ஆகும். “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”