ராஜபக்ஷக்கள் கூறும் ஒரே நாடு – ஒரே இனம் – ஒரே சட்டம்..!!

13 Sep,2020
 

 
 
 
கொரோனா தொற்றுக்கு சற்று முன்பாக அதாவது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக ராஜபக்ஷக்களுக்கு நெருக்கமான ஊடக முதலாளி ஒருவர் என்னிடம் சொன்னார், “தேர்தல் காலம் வரையிலும் தான் அவர்கள் இப்படி தனிச் சிங்கள வாக்குகளை இலக்குவைத்து அரசியலைக் கொண்டு போவார்கள். தேர்தல் முடிந்ததும் அவர்கள் தங்களுடைய போக்கை மாற்றிக் கொள்வார்கள்” என்று.
 
நான் அவருக்குச் சொன்னேன் “தேர்தல் முடிந்ததும் பல்லினத் தன்மை மிக்க ஓர் இலங்கைத் தீவை கட்டியெழுப்புவதற்கான ஓர் அரசியல் கலாசாரத்தை அவர்கள் முன்னெடுப்பார்கள் என்று நம்புகிறீர்களா? அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு, ஏனென்றால் ராஜபக்ஷக்கள் எப்பொழுதும் அவர்களுடைய சொந்த வெற்றிகளின் கைதிகளாகவே காணப்படுகிறார்கள். இம்முறையும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபின்னர் அவர்கள் தமது வெற்றிக்காக தூண்டிவிட்ட சக்திகளின் கைதிகளாகவே இருப்பார்கள். அதிலிருந்து பின்வாங்கி பல்லினத் தன்மை மிக்க ஓர் இலங்கைத் தீவை கட்டியெழுப்புவது கடினமாக இருக்கும்.” என்றேன்.
 
இப்பொழுது தேர்தல் முடிந்துவிட்டது. தேர்தலுக்குப் பின்னரான நிலைமைகளைத் தொகுத்துப் பார்த்தால் ராஜபக்ஷக்கள் அவர்களுடைய வெற்றிகளின் கைதிகளாகவே இன்றுவரையிலும் காணப்படுகிறார்கள். அவர்கள் உருவாக்கிய அமைச்சரவையில் மொத்தம் 30 அமைச்சர்களில் ஒருவர் தான் தமிழர். ஒருவர் தான் முஸ்லிம்.
 
நாற்பது  இணை அமைச்சர்களில் இரண்டு தமிழர்கள் இருக்கிறார்கள். முஸ்லிம் ஒருவரும் கிடையாது. இது இன விகிதாசாரத்துக்கு முற்றிலும் முரணான ஒரு அமைச்சரவை. தொகுத்துச் சொன்னால் இது ஒரு பல்லினத் தன்மை மிக்க அமைச்சரவை என்று கூறமுடியாது. பெருமளவுக்கு ஒற்றைப்படையான ஓர் அமைச்சரவை.
 
அமைச்சரவை விடயத்தில் மட்டுமல்லாது அதற்குப் பின்னரும் அவர்கள் முன்னெடுக்கும் அரசியலைப் பொறுத்தவரை அவர்கள் பல்லினத்தன்மை மிக்க ஓர் இலங்கைத் தீவை கட்டி எழுப்புவார்களா என்று கேட்க வேண்டியிருக்கிறது.
 
ஒரு முஸ்லிமை நீதி அமைச்சராக நியமித்து இருக்கிறார்கள். ஆனால் அவர் ஒரு சுயாதீனமான நிதியமைச்சராக இயங்க முடியாது. முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு நீதியை முன்னெடுப்பதற்கு அவர்கள் ஒரு முஸ்லீமை அமைச்சராக்கி இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதாவது ஒரு முஸ்லிம் கதிர்காமர்?
 
சில நாட்களுக்கு முன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் மாடு கொல்லப்படுவதைத் தடை செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதாவது இறைச்சிக்காக மாடு  வெட்டுவது தடை செய்யப்பட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.  அநாகரிக தர்மபாலவின் போதனைகளைப் பின்பற்றி அவ்வாறு இறைச்சிக்காக மாடு வெட்டுவதைத் தடுக்கப் போவதாக அவர் கூறியிருக்கிறார். இது தொடர்பாக இன்னமும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை.
 
புத்தர் இறைச்சிக்காக மாடு கொல்லப்படுவதைத் தடுக்கவில்லை. அவர் இறப்பதற்கு முன்பு கடைசியாக அருந்திய உணவு பன்றி இறைச்சிக் கறி என்று கூறப்படுகிறது. அந்த உணவை அவருக்கு நந்தன் என்று அழைக்கப்படும் இரும்பு வேலை செய்யும் ஒரு தொழிலாளி சமைத்து வழங்கினார்.
 
அந்த உணவை அருந்திய பின்பு புத்தருக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டதாகவும் அதன் தொடர்ச்சியாக அவர் பரிநிர்வாணம் அடைந்ததாகவும் ஒரு கதை உண்டு. இவ்வாறு நந்தன் கொடுத்த உணவு அவருக்கு தீங்காக மாறியது என்று யாரும் கருதக் கூடாது என்பதற்காக புத்தர் பின்வருமாறு கூறியிருக்கிறார் “எனது வாழ்நாளில் நான் அருந்திய இரண்டு உணவுகள் மகத்தானவை. ஒன்று சுஜாதை சமைத்துத் தந்த பாலமுது, மற்றது நந்தன் சமைத்துத் தந்த பன்றிக்கறி” என்று.
 
எனவே, புத்தர் எங்கேயும் புலால் உணவை நிராகரிக்கவில்லை. இதை இன்னும் திருத்தமாகச் சொன்னால் சனாதன மரபில் இருந்த புலால் உண்ணாமை என்ற ஒழுக்கத்தை புத்தர் உடைத்தார் என்பதே உண்மையாகும். ஆனால் இலங்கைத் தீவிலே புத்தரின் பெயரால் இறைச்சிக்காக மாடு வெட்டுவதை தடுக்கும் ஒரு நிலைமை வரப்போகிறதா?
 
இலங்கைத் தீவில் அதிகம் மாட்டிறைச்சியை நுகர்வது முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தான் என்று ஒரு கணிப்பு உண்டு. எனினும் சில மாட்டு இறைச்சிக் கடைக்காரர்கள் தரும் தகவல்களின்படி தீபாவளிப் பண்டிகைக் காலங்களில் அதிகம் மாட்டிறைச்சி விற்கப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
 
எனவே, இந்துக்கள் மத்தியிலும் மாட்டு இறைச்சி நுகர்வு கணிசமான அளவுக்கு உண்டு. ஏனைய இறைச்சி வகைகளுடன் ஒப்பிடுகையில் மாட்டிறைச்சி மலிவானது என்ற ஒரு கருத்தும் உண்டு. தவிர இலங்கைத் தீவில் மாட்டு இறைச்சி வியாபாரத்தில் அதிகமாக ஈடுபடுவது முஸ்லிம்களே என்றும் ஒரு அவதானிப்பு உண்டு.
 
இந்நிலையில், இறைச்சிக்காக மாடு வெட்டுவதைத் தடுத்தால் அது நேரடியாக முஸ்லிம் வர்த்தகர்களின் வயிற்றில் அடிக்கும். அதேசமயம் அதை உண்பவர்களின் வயிற்றிலும் அடிக்கும். இவ்வாறு உள் நாட்டு மாட்டு இறைச்சி தடுக்கப்பட்டால் வெளிநாடுகளில் இருந்து மாட்டு இறைச்சியை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். அது ஹலால் செய்யப்பட்ட உணவாக இருக்குமா என்பதும் பிரச்சினைக்குரியது.
 
எனவே, மாட்டிறைச்சியை நுகரும் முஸ்லிம்களைப் பொறுத்தவரை இது உணவுக்கு எதிரான போர்தான். ஒரு இனத்தை அவமதிப்பதற்கும் கீழ்மைப் படுத்துவதற்கும் இங்கு உணவு ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றதா? அதுமட்டுமல்லாது பெரும்பாலான வெளிநாட்டு உல்லாசப் பயணிகளும் மாட்டிறைச்சியை விரும்புவதுண்டு என்று  அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கும் இறக்குமதி செய்யப்பட்ட மாட்டு இறைச்சியைத்தான் சமைக்க வேண்டியிருக்கும்.
 
இவ்வாறு இறைச்சிக்காக மாட்டை வெட்டக்கூடாது என்று தடுத்தால் அது  தனியே முஸ்லிம்களுக்கு எதிரானது மட்டுமல்ல. அதற்கும் அப்பால் அது இந்தியாவில் உள்ள இந்துத்துவவாதிகளோடு கூட்டுச் சேர்வதாகவும் அமையும். இந்த விடயத்தில் இந்துத்துவவாதிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் சமிக்ஞைகளை அனுப்புவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா?
 
மாட்டிறைச்சி விடயத்தில் மட்டுமல்லாது ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் ஏற்கனவே உருவாக்கப்பட்ட விசேட செயலணிகளிலும் தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இடமில்லை. தேர்தலுக்கு முன்னதாக இந்த விடயத்தை டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். தமிழ் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக கவனம் எடுக்கப்படும் என்று அவருக்கு வாக்குறுதி வழங்கப்பட்டது. அதை அவர் மக்களுக்கும் சொன்னார். ஆனால் தேர்தல் முடியும் வரை அது நடக்கவில்லை. தேர்தலுக்குப் பின்னரும் அது நடக்கவில்லை.
 
இந்நிலையில், அதற்குப் பொருத்தமான ஒருவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று டக்ளஸ் தேவானந்தா ஊடகங்களுக்குத் தெரிவித்தார். தமிழ் மக்கள் மத்தியில் உள்ள தொல்பொருளியல் நிபுணர்கள் அந்தச் செயலணியில் இணைவதற்குத் தயாராக இல்லை என்றும் அவர் சொன்னார். மேலும் இவ்வாறு துறைசார் அறிஞர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவது என்பது ஒரு விதத்தில் ஆயுதப் போராட்டத்தின் விளைவுதான் என்றும் அவர் விமர்சித்தார்.
 
அவர் இவ்வாறு கூறிய சில நாட்களின் பின் மருத்துவ நிபுணரான முரளி வல்லிபுரநாதன் அந்த செயலணியில் இணைவதற்கு தயார் என்று அறிவித்தார். தன்னோடு சேர்த்து ஒரு முஸ்லிம் பெண் அறிஞரையும் இணைத்துக் கொள்ளலாம் என்று அவர் சிபாரிசு செய்தார். இது விடயத்தில் அவர் நேரடியாகவே டக்ளஸ் தேவானந்தாவோடும் அவருடைய அமைச்சின் செயலாளரோடும் உரையாடியிருக்கிறார். தான் ஒரு மருத்துவராக இருந்த போதிலும் அந்தச் செயலணியில் இணைவதற்கு தயார் என்றும் அவர் கூறுகிறார்.
 
மொத்தம் 11 பேர் கொண்ட செயலணியில் மூன்று பேர் மட்டுமே துறைசார் நிபுணர்கள் ஆகும். ஏனைய எட்டுப் பேரும் படைத்தரப்பு, காவல்துறை, மகாசங்கம் போன்றவற்றிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்தான். அந்த பதினோரு பேரில் ஒரு மருத்துவ நிபுணரும் உண்டு. எனவே தன்னையும் அதில் இணைத்துக் கொள்ளலாம் என்று முரளி வல்லிபுரநாதன் விண்ணப்பித்திருந்தார். கடந்த புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று அவருக்கு கூறப்பட்டிருக்கிறது. முடிவு இக்கட்டுரை பிரசுரிக்கப்படும் பொழுதோ அல்லது அதற்கு சற்று பின்னரோ தெரியவரலாம்.
 
முரளி வல்லிபுரநாதன் ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியவர். கொரோனா தொற்றுக் காலத்தில் அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் நிலையங்களில்தான் குறுக்கு தொற்று அதிகம் ஏற்படுகிறது என்று விமர்சித்து அதன்மூலம் சர்ச்சைக்கு உள்ளானவர். அவருக்கு எதிராக மருத்துவ சங்கம் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
 
ஒருபகுதி தமிழ் மருத்துவர்கள் அவரை ஆதரித்தார்கள். அதேசமயம் தென்னிலங்கையில் அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இவ்வாறு துணிச்சலான ஒரு மருத்துவ நிபுணர் ஜனாதிபதியின் தொல்பொருட் செயலணியில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதை ஜனாதிபதியின் செயலகம் எவ்வாறு அணுகப் போகிறது?
 
இன்னும் சில வாரங்களில் யாப்பின் இருபதாவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு விடும். அப்பொழுது ராஜபக்ஷக்களுக்கு அரசர்களுக்கு நிகரான பலம் கிடைத்துவிடும். வம்ச ஆட்சிக்கு இருந்த தடைகளும் நீங்கி விடும். இவ்வாறு அதிகரித்த நிறைவேற்று அதிகாரங்களை அடையப்போகும் ராஜபக்ஷக்கள் சிறிய தேசிய இனங்கள் தொடர்பாக சகிப்புத் தன்மையோடு நடந்துகொள்ள மாட்டார்கள் என்பதைத்தான் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான நிலைமைகள், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரான நிலைமைகளும் காட்டுகின்றன.
 
சில சமயம் அவர்களுடைய தமிழ் நண்பர்கள் மேலும் ஒன்றைக் கூறக்கூடும். அதாவது “நடக்கவிருக்கும் மாகாணசபைத் தேர்தல் வரையிலும் அவர்கள் இவ்வாறுதான் காணப்படுவார்கள். அந்தத் தேர்தலிலும் இன அலை ஒன்றை  உற்பத்திசெய்து பெரும்பாலான மாகாண சபைகளைக் கைப்பற்றிய பின் சில சமயம் அவர்கள் பல்லினத் தன்மை மிக்க இலங்கைத் தீவை கட்டியெழுப்பக் கூடும்” என்று.
 
ஆனால், இன அலையை எழுப்பி அதன் மூலம் மக்கள் ஆணையைப் பெற்றுவிட்டு அதிலிருந்து திரும்பிப்போக முடியாது என்பதே இலங்கைத் தீவின் கொடுமையான அரசியல் யதார்த்தமாகும். அதுதான்  ராஜபக்ஷக்கள் கூறும் ஒரே நாடு; ஒரே தேசம்; ஒரே இனம்; ஒரே சட்டம் ஆகும்.Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம்india

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Kommende Film danmark

Tamilnews.cc-facebook

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Kashmir Tour 09N in- 3* Hotel

Maldives Special

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies