மன்னார்குடியில் இரு குழந்தைகள் கழுத்து அறுத்துக் கொலை: ஆசிரியை உயிருக்குப் போராட்டம்
09 Jul,2015

மன்னார்குடியில் இரு குழந்தைகள் கழுத்து அறுத்துக் கொலை: ஆசிரியை உயிருக்குப் போராட்டம்
மன்னார்குடியில் வெள்ளிக்கிழமை அதிகாலை இருக்குழந்தைகள் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டனர். குழந்தைகளின் தாய் ஆசிரியை கத்திக்குத்து காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழஇரண்டாம் தெருவைச் சேர்ந்தவர் மீனாட்சிச்சுந்தரம் (45). இவரது மனைவி பெனிடா (38). இவர்களது குழந்தைகள் கவின்முகில் (13), தமிழிசை (9). மீனாட்சிசுந்தரம் பழனியில் தங்கியிருந்து அரசு கல்லூரி பேராசிரியராகவும், பெனிடா குழந்தைகளுடன் மன்னார்குடியில் மாடிவீட்டில் தங்கியிருந்து கோட்டூர் அருகே நெம்மேலி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை விடிந்தும் நீண்ட நேரமாக கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த கீழ்வீட்டைச் சேர்ந்தவர்கள் மாடிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது கவின்முகில், தமிழசை ஆகிய இருவரும் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் படுக்கையில் சடலமாக கிடந்துள்ளனர்.
பெனிடா கத்திக்குத்து காயங்களுடன் குளியல் அறையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்துள்ளார். உடனடியாக மன்னார்குடி நகரக் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் அங்கு வந்து பெனிடாவை மீட்டு தஞ்சாவூர் கொண்டு சென்று தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவ இடத்தை ஆய்வு செய்ய மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். கொலை மற்றும் சம்பவத்துக்கான காரணம் தெரியவில்லை. போலீஸாரின் தொடர் விசாரணைக்குப் பிறகு தெரியவரும்.