மேஷம்
நிதானமே பிரதானம்
அஷ்டமத்து குரு என்ற சிரமமான காலத்திற்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். இத்தனை நாட்களாக குருவின் பார்வை பலத்தினைப் பெற்றிருந்த உங்களுக்கு வரவிருக்கும் ஒரு வருட காலமும் குருவின் பார்வை இல்லாததால் கடிவாளமற்ற குதிரையாக ஓட வேண்டியிருக்கும். சுயக்கட்டுப்பாடும், நிதானமும் இருந்தால் வெற்றி நிச்சயம். இந்த ஒரு வருடத்திற்கு மற்றவர்களின் பிரச்னைகளில் தலையிடாதீர்கள். உங்களது தைரியம்தான் உங்களை வழிநடத்திச் செல்கிறது என்றாலும் ஓவர் கான்ஃபிடன்ட் உடம்பிற்கு ஆகாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தன்னம்பிக்கையும். தைரியமும் பெற்றிருந்தாலும் அதிகமாக உணர்ச்சிவசப்படாதீர்கள். எப்பொழுதும் நிதானத்தையே பிரதானமாகக் கொண்டு செயல்பட்டு வருவதுதான் உங்களுக்கு நல்லது. நெருங்கி வந்த கல்யாண யோகம் தடைபடலாம். அதே நேரத்தில் குழந்தை பேறுக்காகக் காத்திருப்போருக்கு காலம் கனிந்து வரும்.
வியாபாரத்தில் முன்னேற்றமும், பணவரவும் சீராக இருந்து வரும். குடும்பத்தில் செலவிற்கேற்ற வரவு தொடரும். அசையா சொத்துக்கள் வாங்குவதில் ஈடுபாடுகள் தோன்றும். வெளியில் கொடுத்த பணத்தினை வசூல் செய்வதில் அதிக அலைச்சலைக் காண்பீர்கள். உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தோள்வலி, முதுகுவலி, கழுத்துவலி ஆகியவை பாடாய்ப்படுத்தும். குழந்தைகளின் மேற்படிப்பிற்காக அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். தொழில்முறையில் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் அதிக அலைச்சலைக் காண்பீர்கள். உத்யோக ரீதியாக இடம் மாற்றம் ஏற்படலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு வரும். வண்டி, வாகனங்களை புதிதாக மாற்றம் செய்ய வாய்ப்புகள் தோன்றும். முடிந்த வரை புதிதாக எந்தவித முயற்சியும் மேற்கொள்ள வேண்டாம்.
எந்த ஒரு செயலை செய்யும் முன்னர் நிதானமாக யோசனை செய்து, அனுபவம் மிக்கவர்களிடம் நன்கு கேட்டறிந்து செய்வதே நல்லது. தொழிலில் முன்னேற்றம் உண்டாக கடுமையான முயற்சியும் பொறுமையும் தேவை. சுயதொழில் செய்வோர் எதிர்பார்க்கும் லாபத்தினைக் காண சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். பணவரவு சிறப்பாக இல்லாவிட்டாலும் சீராக இருக்கும். தொழில் முறையில் வாங்கிய கடனை அடைக்கத் தேவையான வரவினை நிச்சயம் காண்பீர்கள். வெளிநாட்டு பணிக்காகக் காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். ஏற்கெனவே நிலுவையில் உள்ள சொத்து தொடர்பான வழக்குகள் சமாதானத்திற்கு வரும். வெகு நாட்களாக விலகியிருந்த சொந்தம் ஒன்று உறவு நாடி வரக்கூடும். பெண்கள் தங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே சண்டை, சச்சரவுகள் வரக்கூடும்.
விட்டுக்கொடுத்து செல்வதுடன், நிதானமாகப்பேசி காரியத்தினை சாதித்துக்கொள்வது நல்லது. வீட்டில் உள்ள முதியோர்களின் அனுபவ அறிவை பெற்று செயல்பட்டால் நன்மை கிடைக்கும். தாய்வழி உறவும், சகோதரர்களுடனான உறவும் நல்ல முறையில் அமையும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் தேவை. திருமண வயது உடைய பிள்ளைகளுக்கு திருமண யோகம் வந்து சேரும். உத்யோகத்தில் உள்ள பெண்களுக்கு அதிக அலைச்சல் ஏற்படும். வீடு, மனை வாங்குவதற்கான முயற்சியினை தள்ளிவையுங்கள். நகை, உடைகளுக்கு அதிகம் செலவழிக்காமல் நேரத்தினை உணர்ந்துகொண்டு சேமிப்பில் ஈடுபடுங்கள். பொதுவாக இந்த குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சற்று சிரமத்தினைத் தந்தாலும் பொறுமையுடன் இருந்தால் பூமியினை ஆளலாம் என்பதையே நினைவூட்டுகிறது.
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமை தோறும் வீட்டினில் ஸ்கந்த குரு கவசத்தினைப் படித்து வாருங்கள். வருகின்ற குரு பெயர்ச்சி நாளில் சாம்பார் சாதம் நைவேத்யம் செய்து அருகில் உள்ள ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். நேரம் கிடைக்கும்போது திருவண்ணாமலை திருத்தலத்திற்குச் சென்று அருணாசலேஸ்வரர் ஆலய வளாகத்திற்குள் அமைந்திருக்கும் கம்பத்து இளையனார் சந்நதிக்குச் சென்று தரிசித்து அர்ச்சனை செய்துகொள்ளுங்கள். நிதானத்தால் வெற்றி காண்பீர்கள்.
ரிஷபம்
மங்கள வாழ்வு மலரும்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏழாம் இடத்திற்கு வரும் குரு பகவான் சிறப்பான நற்பலன்களை அள்ளித்தர உள்ளார். தங்களது பேச்சுத்திறனால் அனைத்து காரியங்களையும் வெகு சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இந்த குரு பெயர்ச்சி மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். திருமண யோகம் வருவதால் விரைவில் கெட்டிமேளம் கொட்டும். பணவரவு சிறப்பாக அமையும். ஆடை, ஆபரணங்கள் வந்து குவியும். இத்தனை நாட்களாக இருந்து வந்த இடைஞ்சல்கள் விலகும். வீடு கிரஹப்ரவேசம் செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். சொந்தமாக தொழில் செய்பவர்கள் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். கலைத்துறையினர் நல்ல லாபத்தினைக் காண்பர். இதுநாள் வரை நோய்வாய்ப்பட்டிருந்தவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். நிலுவையில் இருந்து வந்த முன்னோர் வழிச் சொத்துக்கள் வந்து சேரும். சொத்து சம்பந்தமான பிரச்னைகளில் இருந்து நல்லதொரு முடிவைக் காண்பீர்கள். சொந்த, பந்தங்களுடனான உறவுகள் சிறப்பாக அமையும். உடன்பிறந்தவர்களுடனான மனஸ்தாபம் மறைவதுடன் நெருக்கமான உறவு அதிகரிக்கும். அரசாங்க உத்யோகத்திற்காக காத்திருப்போருக்கு வேலைவாய்ப்பு கைகூடும். உத்யோகத்தில் உள்ளவர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. நினைத்ததை நினைத்தபடி செய்வதற்கான நேரமிது. புது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பணவரவு தாராளமாக வந்து சேரும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கு வாய்ப்புகள் தேடி வரும்.
ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் கொள்வீர்கள். நல்ல நேரத்தினைப் பயன்படுத்திக் கொண்டு அநாவசியமாக செலவழிக்காமல் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். குருவின் சாதகமான பார்வை இருந்தாலும் அஷ்டமத்துச் சனியின் காலம் தொடர்வதையும் நினைவில் கொள்ளுங்கள். அந்நிய தேசம் செல்ல நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கைகூடும். குழந்தைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக அமையும். குடும்ப முன்னேற்றம் சிறப்பாக அமையும். கணவன், மனைவிக்கிடையே அவ்வப்போது மனஸ்தாபங்கள் தோன்றி மறையும். இரவினில் தூக்கமின்மை காரணமாக அவஸ்தைப்படுவீர்கள். வண்டி, வாகனங்களை புதிதாக மாற்றிக் கொள்வதற்கான யோகம் உண்டு.
மாணவர்கள் குருவின் அருளால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். எழுத்துப் பயிற்சியில் ஈடுபடுவது கூடுதல் மதிப்பெண்களைப் பெற்றுத் தரும். பெண்களுக்கு குரு பெயர்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது. திருமணத் தடை கண்டு வந்தவர்களுக்கு வெகு விரைவில் கெட்டிமேளம் கொட்டும். குழந்தைப் பேறுக்காகக் காத்திருப்போர் வம்சவிருத்தி காண்பர். குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் மறைந்து மகிழ்ச்சி நிறைந்திருக்கும். குழந்தைகளின் செயல்களில் திருப்தி அடைவீர்கள். உத்யோகத்தில் உள்ள பெண்கள் பதவி உயர்வு காண்பார்கள். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்னைகள் காணாமல் போகும். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களின் வாழ்வினில் மகிழ்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் விதமாக அமைந்துள்ளது.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமை தோறும் பெண்கள் பஞ்சமுக குத்துவிளக்கினை ஏற்றி வைத்து மஹாலக்ஷ்மி பூஜை செய்து வாருங்கள். ஆண்கள் காமதேனு படத்தினை வைத்து பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பசுமாட்டிற்கு அகத்திக்கீரை வாங்கித்தந்து வழிபடுங்கள். நேரம் கிடைக்கும்போது புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள திருக்கோகர்ணம் திருத்தலத்திற்குச் சென்று அரைக்காசு அம்மனை தரிசித்து அர்ச்சனை செய்து கொள்ள மனநிம்மதி காண்பீர்கள்.
மிதுனம்
ஆறில் குரு ரோக நிவாரணம்
கடந்த ஒரு வருட காலமாக குரு பகவானின் சாதகமான சஞ்சாரத்தினாலும், பார்வை பலத்தினாலும் குறிப்பிடத் தகுந்த நன்மையைக் கண்டு வந்த உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சற்று சிரமத்தினைத் தரக்கூடும். இதுநாள் வரை ஐந்தாம் இடத்தில் வாசம் செய்து வந்த குரு பகவான் வரும் 04.10.2018 முதல் ஆறாம் இடத்திற்கு வர உள்ளார். சகட யோகம் என்று சொல்லப்படக்கூடிய குருவின் ஆறாம் இடத்து சஞ்சாரம் இறங்கிய காரியங்களில் தடங்கல்களை ஏற்படுத்தும். எந்த ஒரு விஷயமும் எளிதில் முடிவடையாது இழுபறியைத் தோற்றுவிக்கும். எடுத்த காரியங்கள் எளிதில் முடிவடையாது தாமதமாவதால் சிறிது மன சஞ்சலத்தைக் காண்பீர்கள். உங்களுடைய சிந்தனைகளில் சிறிது மாற்றத்தை உணர்வீர்கள். செயல்திட்டங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். கொள்கைகளில் சிறிது விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டியிருக்கும்.
ஆறில் குரு பகவான் அமர்வது சிரமம் என்றாலும் அவரது சிறப்புப் பார்வை தன ஸ்தானத்தின் மீது விழுவதால் பொருளாதார நிலையில் பிரச்னை ஏதுமின்றி தனவரவு என்பது தொடர்ந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பேசும் வார்த்தைகளில் இனிமையை உணர்வீர்கள். ஆறாம் இடத்து குரு ஆத்ம ஞானத்தைத் தருவதோடு, ஆன்மிகப் பணிகளிலும் ஈடுபடுத்துவார். நியாய, தர்மங்களை அலசி ஆராய்ந்து அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும் திறன் வளரும். மந்திரப் பிரயோகம் என்பதை ஆறாமிடத்து குரு தருவார் என்பதால் ஆன்மிக விஷயங்களில் கவனத்தைக் கொண்டு செல்வீர்கள். உங்களது பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். ஆறாம் இடத்தில் குருவின் வாசம் உடல்நிலையை சற்று அசைத்துப் பார்க்கும். சர்க்கரை வியாதிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
அதே நேரத்தில் நீண்ட நாட்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் சரும வியாதிகள், ஆஸ்துமா, அலர்ஜி போன்ற ரோகங்களிலிருந்து விடுதலை பெறுவீர்கள். ஆறாம் வீட்டு குருபகவான் நீண்ட நாள் ரோகத்திலிருந்து நிவாரணம் தருவார். அதிகப்படியான உழைப்பின் காரணமாக அவ்வப்போது உடல் அசதியால் அவதிப்பட நேரிடும். நிலுவையில் இருந்து வரும் கடன்பிரச்னைகள் முடிவிற்கு வந்தாலும் புதிதாக கடன் வாங்குவதற்கான சந்தர்ப்பம் உண்டாகலாம். சயன சுக ஸ்தானத்தின் மீதான குருபகவானின் பார்வை இரவினில் நிம்மதியான உறக்கத்தினைத் தரும். உத்யோக ரீதியாக அதிக அலைச்சலை சந்திக்க வேண்டி இருந்தாலும் பொறுமையுடன் இருந்தால் வெற்றி நிச்சயம். பத்தாம் இடமாகிய ஜீவன ஸ்தானத்தின் மீதும் குருபகவானின் சிறப்புப் பார்வை தொடர்வதால் தொழில் ரீதியாக எவ்விதத் தடங்கலும் இருக்காது. உத்யோகஸ்தர்கள் பதவி உயர்வோடு விரும்பிய இடமாற்றத்தினையும் அடைவார்கள்.
மற்ற பணியாளர்களின் ஆதரவின்றி தனித்து செயல்பட வேண்டிய சூழல் உருவாகும் என்பதால் சற்று அதிகப்படியான உழைப்பினை வெளிப்படுத்த வேண்டியிருக்கும்.2019 பிப்ரவரி மாத வாக்கில் நீங்கள் கடுமையாக உழைப்பதுடன் 10 பேர் செய்ய வேண்டிய பணியை தனியொரு மனிதனாக செய்து முடித்து சாதிப்பீர்கள். வெளிநாட்டு உத்யோகத்திற்கு காத்திருப்பவர்களுக்கு மார்ச் மாத வாக்கில் சாதகமான தகவல்கள் வந்து சேரும். ஆடிட்டிங், வங்கி, இன்ஸ்யூரன்ஸ் போன்ற துறைகளில் பணிபுரிபவர்களும், உணவுப் பொருட்களை வியாபாரம் செய்பவர்களும் இந்த வருடத்தில் நல்ல நிலையினை அடைவார்கள். வியாபாரிகள் தங்கள் தொழிலில் தனித்திறமையின் மூலம் நற்பெயரை அடைவார்கள். உழைப்பிற்கேற்ற ஊதியத்தினை உடனுக்குடன் கண்டு வருவீர்கள். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி அதிர்ஷ்ட வாய்ப்புகளைக் குறைத்தாலும், தன் முயற்சியால் வெற்றி காண வழிவகை செய்யும்.
பரிகாரம்:
பிரதி புதன்கிழமைதோறும் தவறாமல் அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது. குரு பெயர்ச்சி நாளில் வெண்பொங்கல் நைவேத்யம் செய்து அருகில் உள்ள ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்ய நன்மை உண்டாகும். நேரம் கிடைக்கும்போது சுசீந்திரம் திருத்தலத்திற்குச் சென்று ஆஞ்சநேய ஸ்வாமியை வழிபட்டு பிரார்த்தனை செய்ய தடைகள் விலகி வெற்றி கிடைக்கும்.
கடகம்
ஐந்தில் குரு ஐஸ்வர்யம் தரும்
உங்கள் ராசிக்கு பூர்வ புண்ய ஸ்தானத்திற்கு அதிபதியான குரு பகவான் நான்காம் இடமாகிய சுக ஸ்தானத்திலிருந்து ஐந்தாம் இடத்திற்கு இடம் பெயர உள்ளார். ஐந்தாம் இடம் என்பது சிந்தனையைப் பற்றிச் சொல்லும் ஸ்தானம் என்பதால் அங்கு வர உள்ள குரு பகவான் மனதில் நற்சிந்தனையைத் தோற்றுவிப்பார். மேலும் குருவின் சிறப்புப் பார்வையும் ராசியின் மீது விழுவதால் மனதில் தோன்றும் நல்லெண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். தன்னால் முடியுமா என்ற தயக்கம் மறைந்து தனித்துச் செயல்பட்டு சாதிப்பீர்கள். தனிப்பட்ட முறையில் உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும். பெயர் கெட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தால் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கத் தயங்குவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவிடும் வகையில் பரோபகார சிந்தனைகள் மனதினை அதிகம் ஆக்கிரமிக்கும். ஐந்தாம் இடத்து குருவினால் சாதுக்கள், சந்யாசிகள், அறிவிற் சிறந்த சான்றோர்களுடனான சந்திப்பு உண்டாகும்.
மனதில் சாந்தமும், வாழ்வியலில் நிம்மதியும் காண்பீர்கள். எதிரிகள், போட்டியாளர்கள், பொறாமைக்காரர்கள் ஆகியோர் உங்களுக்கு வழிவிட்டு விலகி நிற்பார்கள். ராசியின் மீது விழும் குருவின் பார்வை உங்களை மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்படச் செய்யும். உங்கள் கருத்துக்களில் உறுதியாய் நிற்பீர்கள். குருபலனின் அனுக்ரஹத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். உங்கள் ஆலோசனைகள் அடுத்தவர்களுக்கு மிகுந்த உதவியாய் அமையும். மனதிற்குப் பிடித்தமானவற்றை அனுபவிக்கும் வாய்ப்புகள் நாடி வரும். குடும்பத்தினரின் மனமகிழ்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்படுவீர்கள். உறவினர்களால் அனுகூலம் காண்பீர்கள். மாணவர்களின் கல்வித்தரம் உயரும். நல்ல மதிப்பெண்களைப் பெற்றுத் தேர்ச்சி பெறுவதோடு உயர்கல்வி மாணவர்கள் நினைத்த பாடப்பிரிவினில் இடம் கிடைக்கக் காண்பார்கள்.
வீடு, மனை போன்ற அசையாச் சொத்துக்கள் சேரும். விலகியிருந்த சொந்தக்காரர் ஒருவர் தன் தவறினை உணர்ந்து மனம் திருந்தி உங்களை நாடி வருவார். சேமிப்பாக வைத்திருந்த சொத்து ஒன்றினை விற்று தனலாபம் அடைவீர்கள். உறவுமுறையில் இதுநாள் வரை நிலுவையில் இருந்துவந்த கடன்தொகைகள் வசூலாகும். ஐந்தாம் இடத்தில் அமர்ந்திருக்கும் குருவின் அனுக்ரஹத்தால் கடந்த காலத்தில் திருமணத்தடை கண்டவர்கள் இந்த வருடத்தில் மணவாழ்வினில் அடியெடுத்து வைப்பார்கள். குருபலத்தின் காரணமாக இல்லத்தில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். முக்கியமாகப் பிள்ளைப்பேற்றிற்காகக் காத்திருப்போரின் இல்லங்களில் மழலைச்சத்தம் கேட்கும். பிள்ளைககளின் வாழ்வியல் தரம் உயர்வடையும். குருவின் பார்வையால் அலுவலகத்தில் உங்கள் கடமையைச் சரியாக செய்துமுடித்து மேலதிகாரிகளிடம் மிகுந்த நற்பெயரை அடைவீர்கள்.
பல் மருத்துவர்கள், எலும்புமுறிவு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், சாப்ட்வேர் துறையைச் சேர்ந்தவர்கள் இவ்வருடத்தில் சிறப்பானதொரு நிலையினை அடைவார்கள். சமையல் கலைஞர்கள் வாழ்வினில் தங்களது தரத்தினை உயர்த்திக்கொள்வார்கள். தொழில் ரீதியாக இடமாற்றத்தினை சந்திக்க நேர்ந்தாலும் பதவி உயர்வால் இடமாற்றம் குறித்த வருத்தம் காணாமல் போகும். அயல்நாட்டுப் பணிக்காகக் காத்திருப்போருக்கு நேரம் சாதகமாக இருக்கும். வெற்றியைப் பெற்றுத் தரும் 11ம் இடத்தின் மேல் குருவின் நேரடிப்பார்வை விழுவதால் எடுத்த காரியங்கள் அனைத்திலும் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். கலைஞர்கள் தங்களுக்குரிய அங்கீகாரமும் விருதும் வந்து சேரக் காண்பார்கள். வியாபாரிகள் வருகின்ற ஒரு வருட காலத்திற்கு சீரான தனலாபம் அடைவார்கள். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு நற்பலன்களைத் தரும் வகையில் அமையும்.
பரிகாரம்:
திங்கட்கிழமைதோறும் அருகில் உள்ள அம்பிகையின் ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது நன்மை தரும். மாதந்தோறும் வரும் பௌர்ணமி நாட்களில் கற்கண்டு பால் சாதம் நைவேத்யம் செய்து அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். நேரம் கிடைக்கும்போது திருக்கடையூர் திருத்தலத்திற்குச் சென்று அபிராமி அன்னையை தரிசித்து வணங்க வாழ்வினில் வளம் பெறுவீர்கள்.
சிம்மம்
நான்கிலே குரு நல்லறிவு கிட்டும்
கடந்த ஒரு வருட காலமாக இருந்து வந்த குரு பகவானின் மூன்றாம் இடத்துச் சஞ்சாரம் முடிவிற்கு வந்து நான்காம் இடமாகிய சுகஸ்தானத்தில் குருபகவானின் அமர்வைப் பெற உள்ளீர்கள். இதனால் வாழ்வியல் நிலையில் நிம்மதியான சுகத்தினை உணர்வீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நன்கு ஆலோசித்து செயல்படும் திறன் ஓங்கும். குடும்பத்தில் ஒற்றுமையுணர்வு அதிகரிக்கும். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள். கௌரவம், அந்தஸ்து ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பதால் அதிகப்படியான செலவினத்திற்கு ஆளாவீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். நான்காம் இடத்து குருவினால் ஆடை, ஆபரணங்கள் சேரும். சுக சௌகர்யங்கள் நிறைந்து விளங்கும். தாயார் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். முன்னோர்கள் இழந்த சொத்துக்களை மீட்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். சதா உங்களைச் சுற்றி மனிதர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள்.
நீங்கள் இட்ட பணியைத் தட்டாமல் செய்யும் வகையில் பணியாளர்கள் அமைவார்கள். பணியாளர்களின் நலனுக்காக அதிகம் செலவழிப்பீர்கள். செலவுகளை ஈடுசெய்யும் வகையில் வரவு நிலையும் அதிகரிக்கும். குடும்பத்தில் செல்வமும், சுகமும் நிறைந்து விளங்கும். தனிப்பட்ட முறையில் உங்கள் அந்தஸ்து உயர்வதோடு அதிகாரமும் செல்லுபடியாகும் நிலை குருவின் சஞ்சாரத்தால் உருவாகிறது. எதிலும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் சிம்ம ராசிக்காரர்கள் குருவின் அருளால் நல்லறிவினைப் பெறுவதோடு நான்குபேர் மத்தியில் நல்லவன் என்ற பெயரினையும் பாராட்டினையும் பெறுவார்கள். குருவின் சாதகமான நிலையால் மாணவர்களின் கல்வித்தரம் உயரும். நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெறும் மாணவர்கள் உயர்கல்வியில் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவினில் இடம் கிடைக்கக் காண்பார்கள். வண்டி, வாகனங்கள் புதியதாய் சேரும்.
இன்னும் ஒரு வருட காலத்திற்கு அவ்வப்போது திடீர் பிரயாணங்கள் செய்ய நேரிட்டாலும் நல்ல வாகன சுகம் உண்டு. தாயார் வழி சொத்துக்கள் சேரும் அதே நேரத்தில் அவரது உடல்நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. விரய ஸ்தானத்தின் மீது விழும் குரு பகவானின் பார்வை அநாவசிய செலவுகளைக் குறைக்கும். குறிப்பாக இந்த வருடத்தில் மருத்துவ செலவுகள் அதிகம் இராது. 12ம் இடமாகிய சயன சுக ஸ்தானம் குருவின் அனுக்ரஹத்தினைப் பெறுவதால் இரவினில் நிம்மதியான உறக்கம் கொள்வீர்கள். மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். தம்பதியருக்கிடையே உள்ள தனிப்பட்ட பிரச்னைகளில் அந்நியர்களின் தலையீட்டினை எக்காரணம் கொண்டும் அனுமதிக்காதீர்கள். அந்நியர்களின் தலையீட்டால் குடும்ப உறவு பாதிப்பிற்கு உள்ளாகக்கூடும். 10ம் இடமாகிய ஜீவன ஸ்தானத்தின் மீது விழும் குருபகவானின் நேரடிப்பார்வை தொழில்முறையில் உங்களுக்கு மிகவும் சாதகமான நிலையை உருவாக்கித் தரும்.
அந்நிய தேசத்தில் நீண்ட நாட்களாகப் பணிபுரிந்து தாய் நாட்டிற்குத் திரும்ப விரும்பும் நபர்கள் அதற்கான வாய்ப்பினைப் பெறுவார்கள். உண்மையான உழைப்பினை வெளிப்படுத்த வேண்டிய காலம் என்பதால் தொழில் நிலையில் தொடர்ந்து ஓய்வற்ற நிலையையே சந்தித்து வருவீர்கள். அலுவலகத்திலும் சரி, இல்லத்திலும் சரி உங்கள் புகழ் பாடியே நன்றாக வேலை வாங்கிக் கொள்வார்கள். ஆயினும் புன்னகையோடு எடுத்த காரியத்தை முழு மூச்சுடன் செய்து முடிப்பீர்கள். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உடனடியாகத் தேடி வரும். உத்யோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றத்தினை அடைவார்கள். குருபார்வை கிடைப்பதால் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, விரும்பிய இடமாற்றங்கள் போன்ற சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். பலசரக்குக் கடை, ஹோட்டல் தொழில், ஸ்வீட் ஸ்டால், வித்தியாசமான தின்பண்டங்களை விற்பனை செய்தல் ஆகிய தொழில்களை செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள். வியாபாரிகளின் தொழில் நிலை சிறக்கும். நவீன வியாபார உத்திகள் தொழில் முறையில் நல்ல வளர்ச்சியை உண்டாக்கும். பொதுவாக இந்த குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது.
பரிகாரம்:
ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலையில் சரபேஸ்வரர் வழிபாட்டினைச் செய்து வாருங்கள். சரபேஸ்வரர் படத்தினை பூஜையறையில் வைத்து வணங்கி வருவதும் நல்லது. நேரம் கிடைக்கும்போது கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருபுவனம் திருத்தலத்திற்குச் சென்று சரபேஸ்வரரை தரிசித்து அர்ச்சனை செய்துகொள்ள எதிரிகள் காணாமல் போவதோடு நினைத்ததை சாதிக்கும் திறனையும் பெறுவீர்கள்.
கன்னி
முயற்சி திருவினையாக்கும்
கடந்த ஒரு வருட காலமாக சிறப்பான நற்பலன்களைக் கண்டு வந்த நீங்கள் தற்போது நடைபெற உள்ள குரு பெயர்ச்சியின் மூலம் சிறிது சிரமங்களையும், தடைகளையும் காண உள்ளீர்கள். சுக ஸ்தானத்திற்கு அதிபதியான குருபகவான் தன ஸ்தானத்திலிருந்து மூன்றாம் இடத்திற்குப் பெயர இருப்பது பொருளாதார ரீதியாக சற்று சுமாரான பலன்களையே உண்டாக்கும். ஆயினும் மன உறுதியும், தைரியமும் கூடும். ஒவ்வொரு விஷயத்திலும் எதிர்பாராத விதமாக அலைச்சல்களை சந்திக்க நேரிடும். எந்த ஒரு காரியத்தைத் துவக்கினாலும் முதலில் ஒரு தடங்கலும் அதன்பின் உங்களது விடாமுயற்சியால் அதில் வெற்றியும் கண்டு வருவீர்கள். குருவின் மூன்றாம் இடத்து சஞ்சாரம் மனோதிடத்தினை உங்களுக்கு அளித்தாலும், முக்கியமான பிரச்னைகளில் எளிதில் முடிவெடுக்க இயலாது சிரமத்திற்கு உள்ளாவீர்கள்.
எப்படிப்பட்ட விளைவையும் சந்தித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருந்து வந்தாலும் ராசிநாதன் புதன் என்பதால் ஒருவித எச்சரிக்கை உணர்வோடு செயல்பட்டு வருவீர்கள். செயலைத் துவங்கும்போது உண்டாகும் தடங்கல் சற்றே மனசஞ்சலத்தை உருவாக்கினாலும் மதிநுட்பத்தால் நிதானமாக யோசித்து செயல்திட்டத்தை மாற்றி வெற்றி காண்பீர்கள். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள். புதிய நண்பர்கள் சேருவார்கள். இக்கட்டான நேரங்களில் உடன்பிறந்தோரின் உதவியால் வெற்றி காண்பீர்கள். பல புதிய மனிதர்களுடனான சந்திப்பு பல்வேறு அனுபவப் பாடங்களைக் கற்றுத் தரும். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் சிறிது சிரமத்தினைக் காண்பார்கள். ஞாபகமறதியினால் தேர்வு நேரத்தில் அவதிப்பட வேண்டியிருக்கும்.
பாடங்களை எழுதிப்பார்ப்பது நன்மை தரும். படித்து மனப்பாடம் செய்வதைவிட எழுதிப்பார்ப்பதே சிறந்தது என்பதை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் குறைவாகக் காணப்பட்டாலும் தன்முயற்சியினால் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள். தம்பதியருக்குள் அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றி மறையும். எனினும் ஏழாம் இடத்தின் மீதான குரு பகவானின் பார்வையால் வாழ்க்கைத் துணையோடு இணைந்து செய்யும் செயல்களில் வெற்றி காண்பீர்கள். வெற்றியைப் பெற்றுத் தரும் 11ம் இடத்தின் மேல் குருவின் சிறப்புப்பார்வை விழுவதால் அடுத்தவர்களுக்காக செய்யும் காரியங்கள் அனைத்திலும் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் கடமையைச் சரியாக செய்துமுடித்து மேலதிகாரிகளிடம் மிகுந்த நற்பெயரை அடைவீர்கள். உத்யோக ரீதியாக அவ்வப்போது தற்காலிக இடமாற்றத்தினை சந்திக்க நேரிடும். விடாமுயற்சியும் தனித்திறமையுடன் கூடிய செயல்பாடுகளும் அலுவலகத்தில் உங்களுக்கு நற்பெயரைப் பெற்றுத் தரும்.
பெயர் கிடைத்தாலும் அதற்குரிய தனலாபம் கிடைக்கவில்லையே என்ற மன வருத்தம் இருந்து வரும். இயந்திரங்கள், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் பணிபுரிபவர்கள் மிகுந்த முன்னேற்றம் காண்பார்கள். தொழில் ரீதியாக அடிக்கடி வெளியூர்ப் பிரயாணங்கள் செல்ல நேரிடும். அதிக அலைச்சல் உடல்நிலையை சோதித்துப் பார்க்கும் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. வெளிநாட்டுப் பயணத்திற்காகக் காத்திருப்போருக்கு அதற்கான காலம் கனிந்து வரும். தொழில் ரீதியாக அதிக வேகத்துடன் செயல்படுவீர்கள். பல புதிய நண்பர்களை ஆங்காங்கே உருவாக்கிக்கொண்டு உங்கள் தொழிலினை அபிவிருத்தி செய்துகொள்ள வாய்ப்புகள் உருவாகும். வியாபாரிகள் தொழில் நிலையில் முன்னேற்றத்தைக் கண்டு வந்தாலும் எதிர்பார்க்கும் லாபத்தினை அடைய காத்திருக்க வேண்டியிருக்கும். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி விடாமுயற்சியின் பேரில் வெற்றி தரும் வகையில் அமையும்.
பரிகாரம்:
புதன்கிழமை தோறும் ஸ்ரீ ஹயக்ரீவர் சந்நதியில் விளக்கேற்றி வழிபட்டு வருவது நல்லது. பூஜையறையில் ஹயக்ரீவரின் படத்தினை வைத்தும் வணங்கி வரலாம். மன சஞ்சலம் அடையும் காலத்தில் ஹயக்ரீவரை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள். குழப்பத்திற்கான தீர்வு கிடைக்கும். நேரம் கிடைக்கும்போது கடலூரை அடுத்த திருவஹீந்திரபுரம் திருத்தலத்திற்குச் சென்று ஹயக்ரீவப் பெருமானை வழிபட்டு அர்ச்சனை செய்துகொள்ள மனவலிமை கூடும்.
துலாம்
சொல்வாக்கு செல்வாக்கு பெறும்
கடந்த ஒரு வருட காலமாக உங்கள் ஜென்ம ராசியில் அமர்ந்து நல்வழி காட்டிய குரு பகவான் தற்போது இரண்டாம் இடமாகிய தனஸ்தானத்தில் வந்து அமர உள்ளார். பொதுவாக ஜென்ம ராசியை விட தன ஸ்தானத்தில் குரு பகவானின் செயல்பாடு உங்களுக்கு மிகுந்த நற்பயனைத் தரும். வரும் ஒரு வருட காலத்தில் தடையில்லாத தன வரவின் காரணமாக பொருளாதார நிலை நல்ல இலக்கை எட்டும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தினை நிறைவேற்றுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவீர்கள். குரு பகவானின் அருளால் குடும்பத்தில் இந்த ஆண்டு சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். இல்லற வாழ்வினில் இன்பத்தினைக் காண்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் கையில் எடுப்பதற்கு முன்னால் மிகவும் யோசிப்பீர்கள். அதில் உள்ள நன்மை தீமைகளை முதலிலேயே ஆராய்ந்து செயலில் இறங்குவதால் நிச்சயமாக வெற்றி காண்பீர்கள். நேரத்திற்குத் தகுந்தாற்போல் செயல்படும் புத்திசாலித்தனம் அதிகரிக்கும்.
இக்கட்டான நேரத்தில் உங்கள் புத்திகூர்மை வெளிப்படும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற மிகவும் சிரத்தை எடுத்துக் கொள்வீர்கள். வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் மற்றவர் காதிற்கு இனிமையானதாக இருக்கும். நீங்கள் கூறும் நல்லாசி அடுத்தவர் மனதிற்கு ஆறுதலாக இருக்கும் என்பதால் பலர் உங்கள் பேச்சினைக் கேட்க உங்களை நாடி வருவார்கள். சத்ரு ரோக ருண ஸ்தானமாகிய ஆறாம் வீட்டின் அதிபதி குரு பகவான் தன ஸ்தானத்தில் அமர்வதால் கடன் பிரச்னைகள் தீர்வடையும். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் வங்கி சார்ந்த கடனுதவி கிட்டும். நிலுவையில் உள்ள வழக்குகள் சாதகமான தீர்வினைக் காணும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் சிறிது சலசலப்பு தோன்றும். சிறந்த அறிவுத்திறன் வளர்வதால் மாணவர்களின் கல்விநிலை சிறப்பாக இருந்து வரும். குருவின் பார்வை ஆறாம் இடத்தின் மீது விழுவதால் எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.
உடல்நிலை நன்றாக இருந்து வரும். சர்க்கரை வியாதிக்காரர்கள் மட்டும் தங்கள் உடல்நிலையை கவனத்தில் கொள்வது நல்லது. நிலுவையில் உள்ள பாக்கித் தொகைகள் வசூலாகும். அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்த முயல்வீர்கள். இந்த நேரத்திய சேமிப்பு எதிர்காலத்திற்கு பயன் தரும் என்பதால் சேமிப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பது நல்லது. வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்க கால நேரம் சாதகமாக அமையும். பூர்வீக சொத்துக்களைப் பிரித்துக் கொள்ளும் பிரச்னையில் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். பெற்றோரின் உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை. பல வருடங்களாக தொடர்பு விட்டுப்போயிருந்த சொந்தம் ஒன்று உங்களைத் தேடி வரும் வாய்ப்பு உள்ளது. சாதுக்கள், சந்யாசிகள், ஆன்மிகப் பெரியோர்களுடனான சந்திப்பு உங்கள் மனதிற்கு புத்துணர்ச்சியைத் தரும். தொழில் ரீதியாக பணிச்சுமை கூடும். தொடர்ந்து வேலைப் பளு அதிகரித்தவாறே இருக்கும்.
அலைச்சலுக்கு அஞ்சாதவர்கள் என்பதால் நன்றாக அலைந்து திரிந்து தொழில்திறமையினை வளர்த்துக் கொள்வீர்கள். 10ம் இடமாகிய ஜீவன ஸ்தானத்தின் மீது விழும் குரு பகவானின் சிறப்புப் பார்வை உங்கள் வாழ்வியல் தரத்தை உயர்த்தும். உத்யோக ரீதியாக சிறப்பான நிலையைக் காண்பீர்கள். அரசுப்பணிக்காக காத்திருப்போருக்கு சாதகமான நிலை உருவாகும். உத்யோக முறையில் ஸ்திரமில்லாமல் இங்குமங்கும் அலைச்சலை சந்தித்தவர்கள் உத்யோகம் ஓரிடத்தில் நிலைபெறக் காண்பார்கள். நேர்மையும், நாணயமும் அலுவலகத்தில் உங்களுக்கு நற்பெயரைப் பெற்றுத் தரும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெற்று பதவி உயர்வைக் காண்பீர்கள். 2019 மே மாத வாக்கினில் எதிர்பார்த்த இடமாற்றத்திற்கான வாய்ப்பும் உண்டு. உணவுதானிய வியாபாரம் அபிவிருத்தி அடையும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்கள் கைகொடுக்கும். சுயதொழில் செய்வோர் சீரான லாபத்தினை அடைவார்கள். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும்.
பரிகாரம்:
பிரதி வெள்ளிக்கிழமைதோறும் மகாலக்ஷ்மியை வழிபட்டு வாருங்கள். மாதந்தோறும் வருகின்ற சுவாதி நட்சத்திர நாளில் நரசிம்மர் சந்நதியில் விளக்கேற்றி வழிபட்டு வருவது நல்லது. வீட்டுப் பூஜையறையில் நரசிம்மர் படத்தினை வைத்து வழிபடுவதும் பலன் தரும். நேரம் கிடைக்கும்போது உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பரிக்கல் திருத்தலத்திற்குச் சென்று நரசிம்மரை தரிசித்து அர்ச்சனை செய்துகொள்ள நலம் உண்டாகும்.
&n
Share this: