கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2)
உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருக்கும் குருபகவான் அக்.4ல் 3ம் இடமான விருச்சிகத்திற்கு பெயர்ச்சியாகிறார். குரு 3ம் இடத்தில் சாதகமற்று இருந்தாலும் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. எந்த இடையூறையும் முறியடித்து முன்னேறுவீர்கள். சனிபகவான் தற்போது 4-ம் இடத்தில் இருப்பதால் வீண் விரோதம் உருவாகலாம். சனி சாதகமற்று இருந்தாலும் அவரது 3-ம் பார்வை மூலம் நன்மை கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு 11-ம் இடமான கடகத்தில் இருப்பது சிறப்பானதாகும். பொருளாதார வளம் தருவார். 2019 பிப். 13ல் ராகு உங்கள் ராசிக்கு 10ம் இடமான மிதுனத்திற்கு மாறிய பின் நன்மை குறையும். கேது தற்போது 5-ம் இடமான மகரத்தில் இருப்பதால் அரசு வகையில் பிரச்னை உருவாகலாம். அவர் 2019 பிப்.13ல் 4-ம் இடமான தனுசு ராசிக்கு வருகிறார். அவரால் உடல்நல பாதிப்பு வரலாம்.
இனி பொதுவான பலனைக் காணலாம். பணப்புழக்கத்துக்கு குறை இருக்காது. குருவின் பார்வையால் அனுகூலம் உண்டாகும். வீடு, மனை வாங்க யோகம் கூடி வரும். சிலர் கடன் வாங்கி வீடு கட்டவும் வாய்ப்புண்டு. வாகன யோகமும் உண்டாகும். குடும்பத்தில் வசதி பெருகும். குருவின் 7ம் பார்வையால் திருமணத்தடை நீங்கும். சுபநிகழ்ச்சிகள் மனம் போல விமரிசையாக நடந்தேறும். புதுமணத்தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 7 ம் இடத்திற்கு குருபார்வை கிடைப்பதால் மனைவியின் ஆரோக்கியம் மேம்படும். 2019 மார்ச் 10க்கு பிறகு கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு மறையும்.
பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால் வருமானத்திற்கு குறைவிருக்காது. நிர்வாகத்தினரிடம் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பணி விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும்.
கல்வி தொடர்பான பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆசிரியர் பணிக்கு முயற்சி செய்பவர்களுக்கு விரைவில் விருப்பம் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சரிவில் இருந்து மீள்வீர்கள். குருவின் 5,7 மற்றும் 9-ம் இடத்துப் பார்வையும், சனியின் 3-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக இருப்பதால் பணமழை கொட்டும். அதிர்ஷ்டவசமாக திடீர் வருமானம் வரும். புதிய வியாபார முயற்சி வெற்றி பெறும். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை பலப்படும். புதிய பங்குதாரரால் தொழில் மேம்படும். வெளியூர் பயணத்தால் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். 2019 மார்ச் 10க்கு பிறகு அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும்.
கலைஞர்களுக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். வருமானத்திற்கு குறைவிருக்காது. குருவின் பார்வை பலத்தால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டு வரும். சிலர் அரசிடம் இருந்து விருது கிடைக்க வாய்ப்புண்டு. அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சுமாரான பலனைக் காண்பர். தொண்டர்களுக்காக அதிகப் பணம் செலவழிக்க வேண்டாம். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் இழுபறி நிலை நீடிக்கும். எதிர்கால நன்மை கருதி மக்கள்சேவையில் ஈடுபடுவீர்கள்.
மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சிக்கான சூழ்நிலை அமையும். கடினமான பாடத்தைக் கூட விரைவில் புரிந்து கொள்வீர்கள். குருவின் பார்வை சிறப்பாக இருப்பதால் உயர்கல்வி யோகம் உண்டாகும். மேல்படிப்பிற்காக விரும்பிய நிறுவனத்தில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். 2019 மார்ச் 10க்கு பிறகு அக்கறை தேவை. விவசாயிகள் நல்ல வளம் காண்பர். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றி பெறும். கறுப்பு நிற தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும்.
பெண்களுக்கு குருவின் பார்வையால் தேவை பூர்த்தியாகும். சகோதர வழியில் நன்மை உண்டாகும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். ஆடை, ஆபரணம் சேரும். ஆனால் யாருக்காகவும் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம். அக்கம்பக்கத்தினரிடம் பணவிஷயத்தில் விழிப்புடன் இருக்கவும். 2019 மார்ச் 10க்கு பிறகு கணவருக்காக விட்டுக் கொடுப்பது நல்லது. உறவினர்களிடம் நெருக்கம் வேண்டாம். உடல்நிலை திருப்தியளிக்கும். 2019 மார்ச் 10க்கு பிறகு உடல்நலனில் கவனம் தேவை.
பரிகாரம்:
● சனிக்கிழமையன்று பெருமாளுக்கு துளசி மாலை
● சங்கடஹர சதுர்த்தியன்று விநாயர் வழிபாடு
● வியாழக்கிழமையில் குருபகவானுக்கு அர்ச்சனை
குரு பெயர்ச்சி பலன்கள் (4.10.2018 முதல் 27.10.2019 வரை) -சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1)
குருபகவான் ராசிக்கு 3-ம் இடமான துலாமில் இருந்து அக். 4ல் 4-ம் இடமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். மறைவு ஸ்தானத்தை விட்டு குரு சுகஸ்தானத்திற்கு வருவது சிறப்பான விஷயமே. தொழில் ஸ்தானமான ரிஷபத்தின் மீது குருவின் 7ம் பார்வை படுவதால் முடங்கிக் கிடந்த தொழில் வளர்ச்சிமுகமாக மாறும். ‘பிசினசில் டாப்பராக’ திகழ்வீர்கள். சனிபகவான் தற்போது 5-ம் இடமான தனுசு ராசியில் உள்ளார். இதனால் குடும்பத்தில் குழப்பம் உருவாகும் என்றாலும் அவரது 7-ம் இடத்து பார்வை மூலம் நன்மை காண்பீர்கள். ராசிக்கு 12ம் இடமான கடகத்தில் உள்ள ராகு, 2019 பிப்.13ல் இடம் மாறி 11-ம் இடமான மிதுனத்திற்கு செல்கிறார். இங்கு அவரால் மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்கள் உறுதுணையாக செயல்படுவர். கேது 6-ம் இடமான மகரத்தில் இருப்பதால் பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். செயலில் வெற்றி உண்டாகும். 2019 பிப். 13ல் 5-ம் இடமான தனுசு ராசிக்கு பெயர்ச்சியான பின் அரசு வகையில் பிரச்னை ஏற்படலாம்.
இனி பொதுவான பலனைக் காணலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு தாய்வழியில் பூர்வீகச் சொத்து கிடைக்க வாய்ப்புண்டு. வீடு, வாகனத்தை புதுப்பிக்கவோ அல்லது புதிதாக வாங்கவோ யோகமுண்டு. கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். பெண்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். உடல்நிலை சூப்பராக இருக்கும். நோய் நொடிகளில் இருந்து முற்றிலும் விடுபடுவீர்கள்.
பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உழைப்புக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடை இருக்காது. பணியிடத்தில் சக ஊழியர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். கடந்த காலத்தில் சந்தித்த தடையனைத்தும் விலகும். நிர்வாகத்திடம் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். 2019 மார்ச் 10க்கு பிறகு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறலாம். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேருவர்.
தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபார ரீதியாக அடிக்கடி வெளியூர், வெளிநாடு செல்ல நேரிடும். கடந்த காலத்தில் ஏற்பட்ட நஷ்டம் தற்போது கிடைக்கும் லாபத்தால் ஈடுகட்டப்படும். முதலீட்டை அதிகப்படுத்த புதிய பங்குதாரர்கள் முன்வருவர். சிலர் வங்கி நிதியுதவி மூலம் தொழிலை விரிவுபடுத்துவர். எதிரிகளால் குறுக்கிட்ட முட்டுக்கட்டை அகலும். கோயில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். ஏதாவது ஒருவகையில் வருமானம் வந்து கொண்டேயிருக்கும். வெளிநாட்டில் கலைநிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு கிடைக்கும். ரசிகர்களின் மத்தியில் நற்பெயர் உருவாகும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் முன்னேற்றம் காண்பர். சிலருக்கு உயர் பதவி கிடைக்க வாய்ப்புண்டு. அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கு அடைவர். மாணவர்களுக்கு குருவின் பார்வை பலத்தால் வெளிநாட்டில் படிக்கும் யோகம் உண்டாகும். 2019 மார்ச் 10க்கு பிறகு கல்வியில் சாதனை படைப்பர். ஆசிரியர்கள், பெற்றோர் மத்தியில் நற்பெயர் ஏற்படும். போட்டி பந்தயங்களில் பங்கேற்று வெற்றி காண்பர்.
விவசாயிகள் ஊடுபயிர் சாகுபடி மூலம் நல்ல விளைச்சல் காண்பர். கால்நடை வளர்ப்பிலும் அதிக ஆதாயம் கிடைக்கும். 2019 மார்ச் 10க்கு புதிய சொத்து வாங்குவதற்கான காலம் கனிந்து வரும். வழக்கு விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் சமரச தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு. கைவிட்டுப்போன பொருள் மீண்டும் கிடைக்கும். பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் காண்பர். விலகிச் சென்ற உறவினர்களும், விரும்பி வந்து உறவாடுவர். ஆடை, ஆபரணம் சேர வாய்ப்புண்டு. பணியாற்றும் பெண்கள் செல்வாக்குடன் திகழ்வர். குழந்தைகளின் வளர்ச்சி கண்டு சந்தோஷம் காண்பர். 2019 மார்ச் 10க்கு பிறகு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும். சுய தொழில் புரியும் பெண்கள் தொழிலில் சேமிக்கும் விதத்தில் அதிக ஆதாயம் கிடைக்கப் பெறுவர்.
பரிகாரம்:
● வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை
● வெள்ளிக்கிழமை ராகுகால துர்க்கை வழிபாடு
● சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு நெய் தீபம்
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)
குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடமான துலாமில் இருந்து அக்.4ல் 5-ம் இடமான விருச்சிகத்திற்கு செல்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பொற்காலமாக அமையும். வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். சனிபகவான் 6-ம் இடமான தனுசு ராசியில் நின்று நன்மை தந்து கொண்டிருக்கிறார். முயற்சி வெற்றி பெறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அபார ஆற்றல் பிறக்கும். எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவீர்கள். ராகு தற்போது உங்கள் ராசியில் இருக்கிறார். இது சுமாரான நிலையே. 2019 பிப். 13ல் ராகு 12-ம் இடமான மிதுனத்திற்கு செல்கிறார். இதுவும் சுமாரான நிலைதான்.
தற்போது 7ல் உள்ள கேதுவால் வீண் அலைச்சல் உருவாகலாம். எதிரிகளால் பிரச்னை ஏற்படலாம். உடல் நலம் சுமாராக இருக்கும். 2019 பிப். 13ல் அவர் 6-ம் இடமான தனுசு ராசிக்கு வருகிறார். அங்கு சனியோடு இணைந்து நற்பலன் தருவார். பின்தங்கிய நிலை அடியோடு மறையும். மேலும் பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும்.
இனி பொதுவான பலனைக் காணலாம். குரு குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். தடைபட்ட திருமணம் இனிதே கைகூடும். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். சகோதரர்கள் ஆதரவுடன் செயல்படுவர். 2019 மார்ச் 10க்கு பிறகு பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகலாம். உறவினர் வகையில் அனுகூலம் இருக்காது.
பணியாளர்களுக்கு பொன்னான காலகட்டமாக இருக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேறும். அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். விரும்பிய இடம், பணிமாற்றம் பெறலாம். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். 2019 மார்ச் 10க்கு பிறகு வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய வேண்டியதிருக்கும்.
வியாபாரிகள் பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவர். உங்கள் ஆற்றல் பன்மடங்கு மேம்பட்டு விளங்கும். தொழில் வளர்முகமாக இருக்கும். பணப்புழக்கம் சேமிக்கும் விதத்தில் மிக அதிகமாக இருக்கும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். புதிய வியாபாரம் நல்ல அனுகூலத்தை கொடுக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். பகைவர் தொல்லை, அரசு வகையில் இருந்த அனுகூலமற்ற போக்கு முதலியன மறையும். 2019 மார்ச் 10-ந் தேதிக்கு பிறகு சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். சிலர் தொழில் விஷயமாக குடும்பத்தை பிரிய நேரிடலாம்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறுவர். அரசு வகையில் பரிசு, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூக நலசேவகர்கள் எதிர்பார்த்த பலன் பெறுவர். நீண்டகாலமாக இருந்த நாற்காலி கனவு பலிக்கும். பொது மக்களிடையே நற்பெயர் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பர். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு துணைநிற்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். படித்து முடித்தவர்களுக்கு வேலை கிடைக்கவும் யோகமுண்டு. 2019 மார்ச் 10க்கு பிறகு கூடுதல் அக்கறை தேவைப்படும். விவசாயிகள் மஞ்சள், கேழ்வரகு, சோளம் காய்கறி, பழவகைகள் போன்றவை மூலம் நல்ல வருமானத்தை காணலாம். கால்நடை செல்வம் பெருகும். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு, விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். கைவிட்டு போன பொருள் மீண்டும் கிடைக்கும்.
பெண்களுக்கு மனசு போல சுபநிகழ்ச்சிகள் இனிதே கைகூடும். கணவன் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் மதிப்பு உயரும். புதிதாக திருமணமானவர்கள் குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறுவர். பிள்ளைகள் வகையில் இருந்த பிரச்னை மறையும். பொன், பொருள் சேரும். ஆடை, ஆபரணம் வாங்கி குவிப்பர். விருந்து, விழா என சென்று மகிழ்வர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். அதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் பெண்கள் அதிக ஆதாயம் காண்பர். வங்கி கடன் மூலம் விரிவாக்கம் செய்ய வாய்ப்புண்டு. உடல்நிலை சிறப்பாக இருக்கும். கேதுவால் அவ்வப்போது பாதிப்பு வந்தாலும் நொடிப்பொழுதில் மறைந்துவிடும்.
பரிகாரம்:
● வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை
● சனியன்று ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை
● அஷ்டமியன்று பைரவருக்கு நெய் விளக்கு
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)
குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு செல்வது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது. பொதுவாக 6-ம் இடத்தில் உடல்நலம் பாதிக்கலாம். மனதில் தளர்ச்சி உண்டாகும். ஆனாலும் குருவின் 5,7,9ம் இடத்து பார்வைகள் சாதகமாக உள்ளதால் எந்த இடையூறையும் சமாளிக்கும் வல்லமை உண்டாகும். மேலும் குருபகவான் 2019 மார்ச் 13ல் அதிசாரமாக தனுசு ராசிக்கு மாறுகிறார். அதனால் சுபநிகழ்ச்சி நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
ராகுபகவான் ராசிக்கு 2-ம் இடமான கடகத்திற்கு 2019 பிப்.13ல் மாறுகிறார். இதுவும் சுமாரான நிலையே. இதனால் மன உளைச்சல், வீண் அலைச்சல் ஏற்படலாம். முயற்சிக்குரிய பலன் இல்லாமல் போகலாம். இதே நாளில் 8-ம் இடத்தில் உள்ள கேது 7 இடத்திற்கு மாறுவதால் மனைவியால் பிரச்னையை சந்திக்க நேரிடலாம். சனிபகவான் தற்போது 7-ம் இடமான தனுசு ராசியில் இருப்பதும் சிறப்பானது அல்ல. வெளியூரில் தங்கும் சூழ்நிலை உருவாகும். தீயோர் சேர்க்கையால் அவதியுறலாம்.
இனி பொதுவான பலனைக் காணலாம். குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். சொந்த வீடு வாங்கவோ அல்லது புதுவீடு கட்டவோ யோகமுண்டாகும். வருமானம் அதிகம் இருந்தாலும் அதற்கேற்ப செலவும் கூடும். மற்றவர் வம்புக்கு வந்தாலும் வாக்குவாதம், சண்டையை தவிர்க்கவும். இல்லா விட்டால் நிம்மதி இழக்க நேரிடலாம். முக்கிய விஷயங்களில் பெரியோர் ஆலோசனையை பின்பற்றுவது நன்மை தரும். குருபகவானின் 5,7,9ம் பார்வையால் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். 2019 மார்ச் 10க்கு பிறகு பெண்களால் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் கணவன், மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். குருவின் பார்வை 2ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் படுவதால் குதூகலமான வாழ்வு அமையும். ராகுவால் அவ்வப்போது கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும் பாதிப்பு வராது. புத்தாடை, அணிகலன்கள் சேரும். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை சேர்ப்பர்.
பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படும். கடந்த காலத்தில் நிர்வாகத்தின் எதிர்ப்பை சந்தித்தவர்கள் அதிலிருந்து விடுபட்டு நிம்மதி காண்பர். சிலருக்கு விரும்பிய பணிமாற்றம், இடமாற்றம் கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள் 2019 மார்ச் 10க்கு பிறகு பணியில் திருப்தி காண்பர். சக ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
தொழில், வியாபாரத்தில் அமோக வளர்ச்சி உண்டாகும். கடந்த காலத்தில் குறுக்கிட்ட தடைகள் விலகி ஆதாயம் அதிகரிக்கும். விரிவாக்கப்பணிக்காக வங்கியில் பெற்ற கடன் முழுவதுமாக அடைபடும். வெளிநாடுகளில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழிலில் நல்ல ஆதாயம் கிடைக்கும். 2019 மார்ச் 10 க்கு பிறகு கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். பகைவர் தொல்லை மறையும். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவர்.
கலைஞர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழில்ரீதியான வெளியூர், வெளிநாட்டு பயணம் வெற்றி பெறும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் புதிய பதவி கிடைக்கப் பெறுவர். ஆனால் எதிர்பார்த்த பொருளாதார உயர்வு கிடைக்க வாய்ப்பு இல்லை. 2019 மார்ச் 10க்கு பிறகு தொண்டர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.
மாணவர்கள் போட்டி கடுமையாக இருந்தாலும் அதில் வெற்றி காண்பர். இந்த கல்வி ஆண்டு முழுவதும் சிறப்பானதாக இருக்கும். குருவின் பார்வை பலமாக இருப்பதால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். சிலர் வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பை பெறுவர்.
விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் அதற்கு ஏற்ப வருமானம் கிடைக்காமல் போகலாம். அதிகம் செலவு பிடிக்கும் பணப்பயிர்களை தவிர்க்கவும். வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்காது. நிலத்தை குத்தகைக்கு விட்டு வருமானம் பெறுவது நல்லது.
பெண்கள் குடும்பத்தில் உற்சாகமாக காணப்படுவர். கடந்த கால சேமிப்பு மூலம் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். குழந்தைகளின் செயல்பாடு கண்டு பெருமிதம் கொள்வர். விருந்து, விழா என அடிக்கடி சென்று வருவர். கணவன், மனைவி உறவில் அன்பு மேலோங்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வேலை தேடும் பெண்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். அது அரசு வேலையாகவும் இருக்கலாம். குருவின் பார்வை பலத்தால் ஆரோக்கியம் மேம்படும்.
பரிகாரம்:
● வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி வழிபாடு
● வெள்ளியன்று துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு
● சங்கட சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல்
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2)
குருபகவான் அக்.4ல் 7-ம் இடத்திற்கு செல்கிறார். இது மிக உயர்வான நிலை. குருவின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. எனவே குரு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ராகு 2019 பிப். 13ல் 2-ம் இடமான மிதுனத்திற்கு செல்வதால் குடும்பத்தில் பிரச்னை, தூரதேச பயணம் ஏற்படும். கேதுவால் 2019 பிப்.13க்குப் பிறகு உடல்நலக்குறைவு வரலாம். ஆனால் குருபார்வையால் பெரிய பாதிப்பு உண்டாகாது. சனி பகவான் தற்போது 8-ம் இடத்தில் இருப்பதும் நல்லதல்ல. முயற்சிகளில் தடைகளை உருவாக்குவார்.
இனி பொதுவான பலனைக் காணலாம். குருபகவானின் பார்வை பலத்தால் அஷ்டமத்துச்சனியின் கெடுபலன் ஓராண்டுக்கு ஏற்படாது. பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். மனதில் பக்தி எண்ணம் மேம்படும். திருமண முயற்சியில் நல்ல முடிவு கிடைக்கும். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை சேர்ப்பர். புத்தாடை, அணிகலன்கள் சேரும். உறவினர் வருகையால் நன்மை உண்டாகும் குருபகவானின் 5-ம் இடத்து பார்வை மூலம் பொருளாதார வளம் மேம்படும். 2019 மார்ச் 10க்கு பிறகு குடும்ப பிரச்னை வரலாம். கணவன்-, மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.
பணியாளர்கள் செல்வாக்குடன் திகழ்வர். அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவர். 2019 மார்ச் 10க்கு பிறகு வேலைப் பளுவும், அலைச்சலும் அதிகமாகும். கோரிக்கை நிறைவேறுவதில் தாமதம் ஆகலாம். முக்கிய பொறுப்புகளை மற்றவரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது.
தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலத்தைப் பாதுகாக்கவும். சீரான வருமானம் கிடைக்கும். விரிவாக்க முயற்சியில் அகலக்கால் வைக்க வேண்டாம். பணவிஷயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் கடன் வாங்குவதை தவிர்ப்பது அவசியம். 2019 மார்ச் 10க்கு பிறகு வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். லாபம் கிடைக்க கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். 8 ம் இடத்தில் சனி, கேது சேர்க்கை உண்டாவதால் 2019 மார்ச் 10க்குப் பிறகு ரிஸ்க் எடுக்கும் விஷயத்தில் இறங்க வேண்டாம். எதிரி தொல்லை வரலாம்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டு கிடைக்கும். சிலர் அரசிடம் இருந்து விருது கிடைக்கப் பெறுவர். சககலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். 2019 மார்ச் 10க்கு பிறகு புதிய ஒப்பந்தம் பெறுவதில் சற்று முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். அரசியல் ஆதாயம் கருதி தொண்டர்களுக்காக அதிக பணம் செலவழிக்க வேண்டாம். விரும்பிய பதவி கிடைப்பதில் இழுபறி நிலையே நீடிக்கும்.
மாணவர்களுக்கு குருபலம் இருப்பதால் முயற்சிக்குரிய பலன் கிடைக்காமல் போகாது. போட்டிகளில் விடாமுயற்சியால் வெற்றி பெறுவர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும். 2019 மார்ச் 10க்கு பிறகு நண்பர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. விவசாயிகள் நவீன முறைகளைப் பின்பற்றி அதிக விளைச்சல் காண்பர். வருமானம் உயரும். குறிப்பாக பழ வகைகள், நெல், கோதுமை, சோளம், மஞ்சள், பயறு வகைகள் போன்ற பயிர்கள் மூலம் லாபத்தை காண்பர். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் இல்லை. வழக்கு, விவகாரங்களில் சமரச பேச்சு மூலம் தீர்வு காண்பது நல்லது.
பெண்களுக்கு தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் உண்டாகும். விரைவில் குழந்தைப்பேறும் கிடைக்கும். குழந்தைகளின் வளர்ச்சி கண்டு பெருமை கொள்வர். விலையுயர்ந்த நகை, பணத்தை கடனாகவோ, இரவலாகவோ யாருக்கும் தர வேண்டாம். பணிபுரியும் பெண்கள் ஓரளவு முன்னேற்றம் காண்பர். தொழில் புரியும் பெண்கள் விரிவாக்க முயற்சியில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
2019 மார்ச் 10க்கு பிறகு அக்கம் பக்கத்தினர் வகையில் விரோதம் ஏற்படலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொறுமை. உடல்நிலை திருப்தியளிக்கும். 2019 மார்ச் 10க்கு பிறகு தீவிர கவனம் தேவை.
பரிகாரம்:
● சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
● சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள் தீபம்
● பவுர்ணமியன்று சிவனுக்கு வில்வார்ச்சனை
குரு பெயர்ச்சி பலன்கள் (4.10.2018 முதல் 27.10.2019 வரை) -மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்)
குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்து நன்மை தந்திருப்பார். இப்போது 8-ம் இடமான விருச்சிகத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்துப் பார்வைக்கு விசேஷ சக்தி உண்டு. வாழ்வில் கோடி நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். அவர் 2019 மார்ச் 13ல் அதிசாரம் பெற்று 9-ம் இடத்திற்கு செல்வதால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்ததை
வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் கூடும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. 2019 மே19 ல் மீண்டும் குரு விருச்சிகத்திற்கு திரும்புகிறார். சனிபகவான் தனுசு ராசியில் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது பார்வைபலத்தால் நன்மை கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
இனி பொதுபலனைக் காணலாம்.
குருபகவான் விரய ஸ்தானமாகிய மீனத்தைப் பார்ப்பதால் சுபச்செலவு அதிகரிக்கும். ஆனால் அதை ஈடுகட்டும் வகையில் குருபகவானின் 7-ம் இடத்துப் பார்வை மூலம் வருமானமும் பெருகும். இதுவரை உள்ள சேமிப்பு மூலம் வீடு, நிலம் என அசையாச் சொத்து வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்து மூலம் கிடைக்கும் பணத்தில் சிலர் புதுவீடு கட்டவும் வாய்ப்புண்டு. நவீன சொகுசு கார் வாங்க யோகமுண்டாகும். குருபகவான் 2019 மார்ச் 13க்கு பிறகு ஆடம்பர வசதிகள் பெருகும். சுபநிகழ்ச்சிகள் இனிதே கைகூடும். தாய் வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். பணி, தொழில் ரீதியாக பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரும் சூழ்நிலை உருவாகும். உறவினர் வகையில் நல்ல அனுகூலமான போக்கு காணப்படும். விருந்து, விழா என அடிக்கடி சென்று வருவீர்கள். உறவினர்களுடன் ஆன்மிகச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
பணியாளர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதே நேரம் சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு குறைவிருக்காது. விரும்பிய பணி, இடமாற்றத்தை எதிர்பார்க்கலாம். 2019 மார்ச் 10க்கு பிறகு வேலையின்றி இருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். சனியால் திடீர் பொறுப்பு ஏற்பட்டாலும் அதற்கான பலன் கிடைக்காமல் போகாது. அவரது 10-ம் இடத்துப் பார்வையால் இடையூறுகள் அடியோடு மறையும்.
கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். 2019 மார்ச் 10க்கு பிறகு சிலர் வியாபாரத்தை விரிவுபடுத்துவர். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் செய்யலாம். வியாபார விஷயமாக வெளிநாடு செல்ல இடமுண்டு. வக்கீல்கள் தொழிலில் சிறந்து விளங்குவர். சிறு தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்துவர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசு வகையில் விருது, பாராட்டு கிடைக்கும். எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், நடனக் கலைஞர்கள், நாடக, சினிமா நடிகர்கள் நற்புகழ் பெறுவர்.
மாணவர்களுக்கு குருவின் பார்வை பலத்தால் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும். 2019 மார்ச் 10க்கு பிறகு சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். மேற்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் அயல்நாடு சென்று படிக்க வாய்ப்புண்டு. விவசாயத்தில் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். 2019 மார்ச் 10க்கு பிறகு அரசு வகையில் சலுகை கிடைக்க வாய்ப்புண்டு. கூடுதலாக சொத்து வாங்க இடமுண்டு.
பெண்கள் வசீகரமான பேச்சால் உறவினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். வீட்டுச் செலவு விஷயத்தில் சற்று சிக்கனத்தை பின்பற்றுவது நல்லது. ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். கன்னியருக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். குருவருளால் விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும். வேலைக்கு செல்லும் பெண்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர்.
பரிகாரம்:
● வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை
● சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை
● வளர்பிறை சஷ்டியன்று முருகனுக்கு விரதம்