ஈழமும் கலைஞரும்!

16 Aug,2018
 

 

‘`அப்போது தூய தேசியவாத சிந்தனையுடனேயே செயற்பட ஆரம்பித்தோம். தமிழ் பிரச்னைகள் பற்றிப் பேசுபவர்கள் அண்ணாத்துரை, கருணாநிதி, தமிழரசுக்கட்சி என்பதே எமக்குத் தெரிந்திருந்தவை’’ - இவ்வாறு தொடங்கித் தனது சுயசரிதையை எழுதியிருப்பவர் புலிகள் இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும் புலிகளின் முதலாவது மத்தியக்குழு உறுப்பினருமான கணேசன்.
ஈழத்தில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பரந்துபட்ட இளைஞர்களிடையே முதன்மையான தமிழ் உணர்வுப் படிமம் கலைஞர் மு.கருணாநிதி. இன உணர்வு, மொழிப்பற்று, கடவுள் மறுப்பு, கலையை சமூக நீதிக்காகவும் அரசியலுக்காகவும் லாகவமாகப்  பயன்படுத்திக்கொள்வது போன்றவற்றில் அவர்  இளைஞர்களுக்கு முன்னோடியாக இருந்தார்.
உணர்வு நரம்புகளை மீட்டிவிடும் கலைஞரின் வசனங்கள் திரும்பத் திரும்ப ஈழத்துத் திரையரங்குகளில் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க, கலைஞரின் எழுச்சியுரைகள் ஒலிநாடா வழியாகவும் அவரது எழுத்துகள் பத்திரிகைகள் வழியாகவும் ஈழத்தை வந்தடைந்து கொண்டேயிருந்தன. அப்போது ஈழத்தில் அநேகமான தமிழ் மக்களின் வீடுகளில் கலைஞரின் படம் தொங்கிக்கொண்டிருக்கும்.
எழுபதுகளில், இலங்கையில் தி.மு.கவின் இருப்பு, சிங்கள இனவாதிகளுக்கும் இலங்கை அரசுக்கும் அச்சுறுத்தலாயிருந்தது. இனவாத அமைப்பான ஜே.வி.பி தன் உறுப்பினர்களுக்கு நடத்திய ஐந்து வகுப்புகளில் இரண்டாவது வகுப்பு, தமிழக தி.மு.க-வால் சிங்களவர்களிற்கு ஏற்படவிருக்கும் அபாயத்தைச் சொல்வதாக இருந்தது. கடைசியில் இலங்கை தி.மு.க தலைவர் இளஞ்செழியன்,  சிறீமாவோ பண்டாரநாயக்கவின் அரசால் கைதுசெய்யப்பட்டுக் கட்சியும்  நசுக்கப்பட்டது.
ஈழத் தமிழ்த் தேசியக் கருத்தியல் எழுச்சியில் கலைஞருக்கு ஒரு பங்குண்டு.  கடல் கடந்து ஈழத் தமிழரை  அணுக்கமாக எட்டியது அந்தக் கரகரத்த குரல். ஈழத்தில் முதலில் தனி ஈழக் கோரிக்கையை முன்வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணியினர், மேடைப்பேச்சு, முழக்கங்கள், பத்திரிகைகள், தேர்தல் சின்னம்  எல்லாவற்றையும் தி.மு.கவிடமிருந்தே பிரதி செய்தனர்.
 
காசி ஆனந்தன் போன்ற  உணர்ச்சிப் பாவலர்களும் ‘தீப்பொறி’ அந்தனிசில் போன்ற பேச்சாளர்களும் கோவை மகேசன் போன்ற பத்திரிகையாளர்களும்  கலைஞரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் அடியொற்றியே உருவானவர்கள். தந்தை செல்வா முதல் அனைத்துத் தமிழ் அரசியல் தலைவர்களுடனும் போராளி இயக்கத் தலைவர்களுடனும் கலைஞருக்கு நல்லுறவும் தோழமையும் இருந்தது. 
அப்போது, ஈழத்தில் தமிழ் மக்கள்மீது இலங்கை அரசாலும் சிங்கள இனவாதிகளாலும்  வன்முறைகள் ஏவிவிடப்பட்ட போதெல்லாம் தமிழகத்திலிருந்து எழும் முதல் வலுவான கண்டனக் குரல் கலைஞருடையதுதான். அடுத்த குரல் திராவிடர் கழகத்தினருடையது. 
இந்தக் கண்டனக் குரல்கள் வெறுமனே குரல்களாக மட்டும் நின்றுவிடவில்லை என்பதுதான் முக்கியமானது.  எந்தவொரு தமிழகத் தலைவருக்கும் முன்னாலேயே கலைஞர் தமிழ்ப் போராளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார். பிரபாகரன் தனது 23வது வயதில் 1977-ம் வருடம் கலைஞரைச் சந்திக்கிறார். அழைத்துச் சென்றவர்கள் காசி ஆனந்தனும் மாவை சேனாதிராஜாவும். 
இந்தக் காலப் பகுதியிலே பல்வேறு வழிகளில் தி.மு.கவினர் ஈழப் போராளிகளுக்கு உதவினர். தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் விடுதி, சென்னையில் புலிகளின் உறைவிடங்களாக இருந்தன. இந்த உதவிகள் தொடர்ந்தன. புலிகளிற்கு உதவியதற்காக தி.மு.கவினர் சிறைக்கும் சென்றனர்.
எதிரும் புதிருமாக நின்ற ஈழப் போராட்ட இயக்கங்களை ஒற்றுமைப்படுத்தக் கலைஞர் பலவாறு முயன்றிருக்கிறார். பாண்டி பஜார் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட போராளிகளை இலங்கைக்கு நாடுகடத்தும் முயற்சியை எதிர்த்து பழ.நெடுமாறன் கூட்டிய சர்வகட்சிக் கூட்டத்தை வரவேற்றுக் கடிதம் எழுதியது தொடங்கி எத்தனையோ தடவை கலைஞர் போராளித் தலைவர்களைச்  சந்தித்து ஒற்றுமையை வலியுறுத்தி யிருக்கிறார்; நிதி வழங்கியி ருக்கிறார்.
ஈழப் போராட்டத்துக்கான கலைஞரின் முக்கியப் பங்களிப்பு, மே 1985-ல் ‘தமிழீழ ஆதரவாளர் அமைப்பு’ என்ற டெசோவை உருவாக்கியது. டெசோ தமிழகம் முழுவதும் தமிழீழ ஆதரவுப் பிரசாரங்களை நடத்தியது.  23-8-1985-ல் ஆன்டன் பாலசிங்கம்,  சந்திரஹாசன், சத்தியேந்திரா ஆகியோரை நாட்டை விட்டு வெளியேற்ற இந்திய அரசு ஆணையிட்டபோது உடனடியாகவே கலைஞரின் தலைமையில் டெசோ கண்டனப் பேரணியையும் தமிழ்நாடு தழுவிய ரயில் மறியலையும் செய்தது. ‘பிரதமருக்குக் கறுப்புக்கொடி காட்டப்படும்’ என்றார் கலைஞர். நாடு கடத்தும் உத்தரவை இந்திய அரசு திரும்பப்பெற்றது.
கலைஞர் அரசியற் தளத்தில் தமிழீழப் போராட்டத்தை நியாயப்படுத்திப் பரப்புரை செய்துகொண்டிருந்த அதேவேளையில் திரைத்துறையிலும் தன் கைவண்ணத்தைக் காட்டினார். அப்போது அவர் எழுதிய ஒரு படத்தின் தலைப்பு ‘வீரன் வேலுத்தம்பி’, ‘பாலைவன ரோஜாக்கள்’ படத்தின் நாயகனுக்குப் பெயர் ‘சபாரத்தினம்.’ 
1986 மே. மதுரையில் கலைஞரின் தலைமையில் அனைத்திந்தியத் தலைவர்களை அழைத்து டெசோ, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடத்தியது. மாநாட்டில் ஈழப் போராளி இயக்கத்  தலைவர்களும் கலந்துகொண்டார்கள். புலிகள் சார்பில் பேபி சுப்பிரமணியமும் திலகரும் கலந்துகொண்டார்கள். மதுரையில் மாநாடு நடக்கும்போது ஈழத்தில்  ஸ்ரீசபாரத்தினம் புலிகளால் கொல்லப்பட்டார். அங்கேதான் கலைஞர் ``சகோதரப் படுகொலைகளை நிறுத்துங்கள்’’ என்றார். புலிகளை ஆதரித்த வேறெந்தத் தமிழகத் தலைவரும் அதுவரை சொல்லாத ஆழமான அறிவுரையது. ஆனால் கேட்பார் யாருமில்லை.
இந்தக் காலகட்டம்வரை சீராக இருந்த கலைஞரின் புலிகள் ஆதரவுக் குரல் சகோதரப் படுகொலைகளுக்குப் பின்பு விமர்சனக் குரலாகவும் மாறத் தொடங்குகிறது. ஈழத்திலும் தமிழ் அரசியற் தலைவர்களும் எழுத்தாளர்களும் ஜனநாயகவாதிகளும் இந்தக் காலப்பகுதியிலேயே புலிகள்மீதான தங்களது விமர்சனங்களை வைக்கிறார்கள். 
இதற்குப் பின்னான ஈழப் போராட்டம்  ஈழத்திலும் சரி இந்தியாவிலும் சரி, கொந்தளிப்பான காலத்திற்குள் நுழைகிறது. அரசியல் காட்சிகள் கற்பனைக்கும் எட்டாதவாறு தாறுமாறாக மாறுகின்றன. இந்திய அமைதிப்படை ஈழத்திற்குள் நுழைகிறது.
இந்தியப் படைகள் ஈழத்தில் நடத்திய கொடூரங்களைக்  கலைஞர் பகிரங்கமாகக் கண்டித்தார். இந்தியப் படையை இலங்கையிலிருந்து திருப்பி அழைக்க வி.பி.சிங் எடுத்த முடிவுக்குக் கலைஞரும் ஒரு காரணமாய் இருந்தார். உச்சகட்டமாக மாநில முதல்வராக இருந்தபோதும் நாடு திரும்பிய இந்தியப் படைக்கு வரவேற்பு அளிக்க மறுத்தார். மாறாக, கலைஞர் ஆன்டன் பாலசிங்கத்தைச் சென்னைக்கு வரவேற்றார்.
அப்போது கொழும்பில் தங்கியிருந்த ஆன்டன் பாலசிங்கம் சென்னைக்குச் சென்றார். கலைஞருடன் மூன்று தடவை சந்திப்பு நிகழ்ந்தது. மகாணசபை அதிகாரத்தை ஈ.பி.ஆர்.எல்.எவ்வோடு சரி சமமாகப் புலிகள் பங்கிடவேண்டும் எனக் கேட்டார் கலைஞர். பாலசிங்கம் மறுத்துவிட்டார். மாகாணசபை அதிகாரத்தை முழுவதுமாகப் புலிகளிடம் ஒப்படைத்து விடுமாறு வரதராஜப் பெருமாளையும் கேட்டார் கலைஞர். எந்தச் சமரசமும் சாத்தியமாகவில்லை.
இதற்குப் பின் சென்னையில் பத்மநாபாவும் தோழர்களும் புலிகளால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை. இத்துடன் அரசியல் அரங்கில் மிகப்பெரும் துன்பியல் சம்பவங்கள் நடக்கின்றன. இந்திய மத்திய அரசு, புலிகளை  அழித்துவிட முடிவெடுக்கிறது. அதுவரை அரசியல் நடுவர் பாத்திரமேற்றிருந்த இந்திய அரசு, இலங்கை அரசுப் பக்கம் சாயத் தொடங்குகிறது. அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதல்களை அடுத்து புலிகளையும் அழித்துவிட சர்வதேச அரசுகள் அளவிலான வலை பின்னப்படுகிறது. இதைப் புலிகள் புரிந்துகொள்ளவில்லை. 
தொடர்ந்து நடந்த கொடும் போரையும் இனப்படுகொலையையும் நிறுத்த யாருக்கும்தான் வழி தெரியவில்லை. ஆனால் கலைஞர் நிலவரத்தைச் சரியாகப் புரிந்துகொண்டார் என்றுதான் எண்ணுகிறேன். அவர் மற்றைய தமிழ்நாட்டுத் தலைவர்களைப்போல ‘போர்! போர்! வெற்றி புலிகளுக்கே’ என்றெல்லாம் அறைகூவவில்லை. பேச்சுவார்த்தையையே வலியுறுத்தினார். அவருக்கு எல்லா ஜனநாயக அரசியல்வாதிகள்போலவே புலிகளின் மீது விமர்சனமிருந்தது. ஆனால், அது ஒருபோதும் வெறுப்பாக மாறியதில்லை. புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் மறைந்தபோது கலைஞர் அஞ்சலிக் கவிதை எழுதினார்.
இறுதிப் போர் நாள்களில் கலைஞர் அதிகாரத்தில் இருந்தபோதும் அவரது அதிகார எல்லைகள் மட்டுப்படுத்தப்பட்டவையே என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. தமிழகத்தில் நடந்த எழுச்சிகளை கலைஞரின்  அரசு ஒடுக்கியது. ஆட்சியையும் கட்சியையும் பாதுகாக்க வேண்டிய நிலையில் அவர் இருந்தார். கலைஞர் ஆட்சியைத் துறந்திருந்தாலோ மத்திய அரசிலிருந்து விலகியிருந்தாலோ ஈழப் போரின் முடிவு வேறாக இருந்திருக்கவே வாய்ப்பில்லை.  உண்மையில் அது கலைஞரின் கையறு நிலைதான். 
கலைஞர் போர்நிறுத்தம் வேண்டி  சில மணிநேரமே மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தார் என்றொரு விமர்சனமுண்டு. ஆனால், கலைஞர் உண்ணாவிரதம் இருந்தபோது,   தாக்குதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்திருப்பதாகவும் கனரக பீரங்கிகள், தாக்குதல் விமானங்கள், ஏவுகணைகள் உட்பட, பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி செயலகம் அறிவித்தது. இந்த அறிவிப்பின் நகலை வெளியுறவுத்துறை அமைச்சர்  பிரணாப் முகர்ஜி கலைஞருக்கு அனுப்பிவைத்ததன் பின்னாகவே கலைஞர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் .
போரின் இறுதி நாள்களில் நிகழ்ந்த பல மர்மங்கள் இன்னும் அவிழவில்லை. ஆயினும் அந்த நாள்களில் புலிகளின் சார்பாகச் சில தி.மு.க தலைவர்கள் இந்திய அரசிடமும் சர்வதேச  மனிதவுரிமை அமைப்புகளிடமும் பேசினார்கள் என்பதும் அவர்களில் கனிமொழி முக்கியமானவர் என்பதும் இன்று பலர் அறிந்த உண்மை.
ஒரு தேர்தல் அரசியல் கட்சியினதும் அதன் தலைவரதும் எல்லைகள் வரையறுக்கப்பட்டவை. இந்த எல்லைக்குள் இருந்துதான் கலைஞர் செயற்பட்டிருக்கிறார். அவரது செயற்பாடு போராட்ட வடிவங்களாகவும் உதவிகளாகவும் இருந்தது என்பதோடு ஈழப் போராட்டத்தின் நாற்றங்காலில் கருத்தியல் நீர் பாய்ச்சியவர் அவர்.
ஈழப் போராட்ட வரலாற்றில் விமர்சனங்களிற்குத் தப்பக் கூடியவர்கள் யார்? ஆனால், அந்த விமர்சனம் ஒருவரது வரலாற்றுப் பாத்திரத்தை முழுவதுமாகக்  கவனத்தில் எடுத்தே வைக்கப்பட வேண்டும். ஈழத்தை முன்வைத்துக் கலைஞரை அணுகும் மனசாட்சியுள்ள எவருமே இதை மறந்துவிடக் கூடாது.
‘மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர்சுற்றக் கிளம்புகிறது!’ 
ஷோபாசக்தி Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies