மனசும் மனசும்

19 Jul,2018
 


 
 
 வெளியே அடித்த வெயில் பார்வதியின் அறைக்குள்ளும் லேசாய் எட்டிப் பார்த்தது. உள்ளே வந்த கௌரி ஓடிக் கொண்டிருந்த ஃபேனின் அளவைக் கூட்டினாள். பிறகு கொஞ்சம் கஷ்டப்பட்டு படுக்கையிலிருந்து பார்வதியை நிமிர்த்தினாள். உட்கார வைத்து ஒரு கையில் தாங்கி பிடித்துக் கொண்டாள். கௌரி பார்வதியின் முதுகை உற்றுப் பார்த்தாள். ஆங்காங்கே சிவப்பாய் தெரிந்தது. மெல்ல அந்த இடங்களில் பவுடரைத் தூவினாள். விரல்களால் மெதுவாய் தேய்த்த போது வந்த எரிச்சலில் பார்வதியின் முகத்தில் இருந்த ரேகைகள் நெளிந்தது. "ஒண்ணுமில்லம்மா.. எல்லாம் சரியாயிடும்..'' என்று கௌரி ஆறுதலும் சொன்னாள். அப்படியே பார்வதியிடம் அந்த விஷயத்தையும் சொன்னாள்:
 "உங்கள ஒரு முதியோர் இல்லத்தில சேர்த்து
 விடலாமென உங்க வீட்டில முடிவெடுத்துட்டாங்க.. அதற்கான வேலைகள்தான் வேகமா நடந்துட்டிருக்கும்மா...'' என்றாள்.
 கேட்டதும் பார்வதிக்கு உடம்பே பற்றி கொண்டு எரிகிற மாதிரி இருந்தது. ஏற்கெனவே அரைகுறையாக சுற்றிக் கொண்டிருந்த அவளது உலகம் முற்றிலும் நின்றுவிட்டதாய் உணர்ந்தாள். பார்வதிக்கு பேச்சு வர ஒன்றிரண்டு நொடிகள் தேவைப்பட்டன.
 "என் பையன் என்ன சொன்னான் கௌரி ?'' என்றாள் மெதுவாய்.
 ""பொண்டாட்டி சொன்னதுக்கு மீறி உங்க பையன் பேசி நான் கேட்டதில்லம்மா...'' என்றாள்.
 பார்வதிக்கு சட்டென அழுகை வந்தது.
 "என் பையன் அப்படியெல்லாம் அம்மாவை அனுப்ப வேண்டாம்னு ஒரு வார்த்தைகூட சொல்லலையா..''
 "இல்லம்மா.. அந்த மாதிரி ஹோம் எங்காவது இருக்கான்னு எங்கிட்டகூட கேட்டாரும்மா.. எனக்கும் சம்பளம் கொடுத்து கட்டுபடி ஆகலையாம்.. மருமக சொன்னாங்க.. அதுக்கும் ஐயா ஆமாம்னு மண்டைய மட்டும் ஆட்டினாரு... இதையெல்லாம்.. நான் சொன்னேன்னு அவங்கிட்ட கேட்டறாதீங்க.. இந்தாங்க சாப்பிடுங்க..'' என்று தட்டிலிருந்து இட்லியை பிய்த்து நீட்டினாள்.
 பார்வதிக்கு சுத்தமாய் சாப்பிட பிடிக்கவில்லை. பிடிவாதமாய் மறுத்தாள். கௌரியை கிளம்பச் சொன்னாள். அடித்த பவுடரின் நெடி இன்னும் அறையெங்கும் மிதந்தது. பார்வதிக்கு தனியாய் இருந்து அழவேண்டும் போலிருந்தது. கௌரி கிளம்பியதும் கொஞ்சம் தண்ணீர் மட்டும் குடித்தாள். சகுந்தலாவைப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. நடப்பதை உடனே சொல்ல வேண்டும். அவளிடம் பேசினாள் தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ நிச்சயம் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும்.
 சகுந்தலா அதே தெருவில்தான் குடியிருக்கிறாள். ஆஞ்சநேயர் கோயிலில் கிடைத்த வரம். ஆறேழு வருட நட்பு. சகுந்தலா படித்தவள். தலைமை ஆசிரியராய் இருந்து ஓய்வு பெற்றவள். எந்தப் பிரச்னையை எந்த விதத்தில் அணுகலாம் என்பதை தன் அனுபவத்தில் தெரிந்து கொண்டவள். அவள் வீடு இன்னும் அவள் சொல்படிதான் தான் இயங்குகிறது. யாரும் கொஞ்சமும் அசைத்து பார்க்க முடியாத மகாராணி அவள். சகுந்தலா தோழியாக இருப்பது பார்வதிக்கு எப்போதும் பெருமைதான்.
 பார்வதி சகுந்தலாவுக்கு போன் செய்தாள். வார்த்தைக்கு முன் அழுகை வந்தது. "என்னாச்சு'' என்றவளிடம் ""வீட்டிற்கு வா எல்லாம் சொல்கிறேன்'' என்றாள். போனை வைத்தாள். கண்களைத் துடைத்தபடி வெளியே பார்த்தாள். அசைவற்று நின்றிருந்தது வேப்பமரம். பார்வதிக்கு வெளியே எதுவும் இயங்குவதாக தோன்றவில்லை. சுத்தமாய் காற்றும் இல்லை. வழக்கமாய் வரும் அந்த வயதான காகத்தையும் காணவில்லை. சகுந்தலா மாதிரியே பகலில் வரும் இன்னொரு தோழி அது. பார்வதி நல்லபடியாய் நடமாடிய போது சோறு வைத்த உறவு. இப்போது அதற்கு உணவளிக்க முடியவில்லை என்றாலும் நன்றியுடன் தொடர்ந்து வருகிறது. அதுபாட்டுக்கு வரும். குரல் கொடுக்கும். அதுபாட்டுக்கு போகும்.
 
 சகுந்தலா பத்து நிமிடத்தில் வந்துவிட்டாள். ஜன்னலில் சாவியை வாங்கிக் கொண்டாள். கதவைத் திறந்து உள்ளே வந்தாள். அவளைப் பார்த்ததும் பார்வதிக்கு மீண்டும் அழுகை வந்தது. சகுந்தலா ஆறுதலாய் பார்வதியின் அருகில் அமர்ந்தாள். மெல்ல அவளது தோளை தட்டித்தந்தாள்.
 "என்ன நடந்துச்சு.. சொல்லு பார்வதி..?'' என்றாள்
 பார்வதி கண்களைத் துடைத்துக் கொண்டாள். மெதுவாய் நடந்ததைச் சொன்னாள். பாதி அழுகையும் பாதி வார்த்தைகளும் மாறி மாறி வந்தது.
 "இங்க பாரு.. நீ அழுதது போதும்.. நீ சொல்றத பார்த்தா அவங்க முடிவு பண்ணி நாளாச்சுன்னு தோணுது.. இனி சமாதானம் பேசி பிரயோஜனமில்ல.. அதிரடியா ஒரு முடிவு எடுக்கறது தவிர வேற வழியில்ல..'' என்றாள் சகுந்தலா.
 "என்ன செய்யலாங்கற..? என்னால இனி என்ன செய்ய முடியும்..சகுந்தலா..?''
 ""நினைச்சா என்ன வேணாலும் செய்யலாம்.. நீ நினைக்கறத தைரியமா செய்யணும்.. அவ்வளவுதான்..''
 ""புரியல..''
 ""பெற்றோர் மற்றும் முதியோர் நலச்சட்டம் 2007 பத்தி உனக்கு தெரியுமா..'' என்றாள் சகுந்தலா.
 "நீ படிச்சவ.. எனக்கென்ன தெரியும்..? நீயே சொல்லு..?'' என்றாள் பார்வதி.
 " 2007 -இல்ல அந்த சட்டம் வந்தாலும் 2009 -இலதான் அதுக்கான விதிகளை உருவாக்கினாங்க. சட்டத்தின் 125-இன் கீழ் பெத்தவங்கள கவனிக்காத பிள்ளைகள் மேல கேஸ் தரலாம். ஜீவனாம்சம் கோரலாம். மாவட்ட சமூக நல ஆணையமே ஒரு சமூக ஆர்வலரை உனக்காக அனுப்பி பேச்சு நடத்தும். அதுக்கும் உன் பையன் சரி பட்டு வரலைன்னா அவரு மேல கோர்ட்ல மேல் முறையீடு செய்யலாம். அதுக்கும் சரிபடலன்னா சத்தியமா ஜெயில்தான்.. இப்போதைக்கு நீ போலீஸ்ல ஒரேயொரு கம்ப்ளைண்ட் மட்டும் கொடு.. அப்புறம் பாரு என்னெல்லாம் நடக்குதுன்னு..''
 கேட்டதும் பார்வதி அதிர்ந்து போனாள். சட்டென வியர்த்துக் கொண்டது. பதட்டமாகி சகுந்தலாவைப் பார்த்தாள்.
 "அப்படியெல்லாம் சட்டம் இருக்காயென்னா..?''
 "இருக்கு பார்வதி.. தினம் தினம் கொஞ்ச கொஞ்சமா ஏன் சாகற..? போதும் பார்வதி.. கோழையாவே செத்துப் போகாதே.. நீ எடுக்கற முடிவு எல்லாருக்கும் ஒரு பாடமா இருக்கட்டும்..''
 
 பார்வதி தயக்கத்தோடு பார்த்தாள்.
 ""நான் வரும் போதெல்லாம் எதுக்கு உன் பையன் கவனிக்கறதில்ல.. மருமகள் கண்டுக்கிறதாலன்னு புலம்பற..? நீ எல்லாத்தையும் சகிச்சிக்கிறதுனாலதான் அவங்க இன்னைக்கு உன்னை ஒரு முதியோர் இல்லத்தில சேர்க்கிற முடிவுக்கு வந்திருக்காங்க.. இதுக்கெல்லாம் ஒரு தீர்வு வேண்டாமா? இந்த முடிவு எடுக்கப்போற முதல் ஆளு நீயல்ல.. இந்த சட்டம் வந்த பிறகு எத்தனையோ பேர் தங்கள கவனிக்காத புள்ளைகளுக்கு தண்டனை வாங்கி தந்திருக்காங்க..? சமீபத்துலகூட ஒரு நடிகர் போலீஸ் ஸ்டேசன் வரைக்கும் போய் தன் மகன் மேல புகார் கொடுத்தத நீ பேப்பர்ல படிக்கல..?''
 "சரி.. கம்ப்ளைண்ட் கொடுத்ததுக்கப்புறம் எங்க நிலைமை..?''
 "ஒண்ணும் பிரச்னை இல்ல.. உன்னை அப்படியே விட்றமாட்டாங்க. ஒரு நல்ல ஹோம்ல சேர்க்கறதும்.. தேவையான வசதிகளை செய்து தரவேண்டியதும் அரசாங்கத்தோட கடமைதான்.. இதை நான் சொல்லல.. அதையும் அந்த சட்டம்தான் சொல்லுது..''
 பார்வதி இன்னும் புரியாமல் சகுந்தலாவைப் பார்த்தாள்.
 "இங்க பாரு பார்வதி அவங்ககிட்டயிருந்து தெரியாம நீ எதையும் எடுத்துக்கல.. உன்னோட உரிமையை நீ மீட்குற அவ்வளவுதான். இதிலென்ன யோசனை..? நீ உணர்ச்சியிருக்கற ஒரு மனுசி.. அடிச்சா வலிக்கும்ங்கறது எல்லார்க்கும் தெரிய வேண்டாமா? நல்லா யோசனை பண்ணு.. இது போலீஸ் ஸ்டேஷன் நம்பர்..'' என்றபடி நம்பரை ஒரு பேப்பரில் எழுதி பக்கத்தில் வைத்தாள். போனை கொஞ்சம் அவள் அருகில் நகர்த்தினாள்.
 "நல்லதா ஒரு முடிவெடு.. பயமா இருந்தா சொல்லு போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு நான் வர்றேன்.. உன் பக்கத்தில இருக்கேன்.. தைரியமா போன் பண்ணு.. எங்க சாட்சிக்கு கூப்பிட்டாலும் உனக்காக நான் வர்றேன்.. ஓகேவா..'' என்றபடி சகுந்தலா கிளம்பிக் கொண்டாள்.
 பார்வதிக்கு அப்போதே உடம்பெல்லாம் உதறுகிற மாதிரி இருந்தது. வியர்க்க ஆரம்பித்தது. வீட்டில் யாருமில்லை. எல்லாவற்றையும் தெளிவாய் சொல்லிவிட்டு போய்விட்டாள் சகுந்தலா. எல்லாம் சாத்தியம்தானா? ஒன்றும் புரியவில்லை பார்வதிக்கு. ஜன்னலுக்கு வெளியே வெய்யில் உக்கிரமாய் அடித்துக் கொண்டிருந்தது. உடம்பு இன்னும் வியர்த்தது. தாகமாய் இருந்தது. சற்று தள்ளி இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தாள். எழுபது வயதின் முதிர்ச்சியும் தளர்ச்சியும் மனதின் பதட்டமும் ஒன்றாய்ச் சேர்ந்தது. நடுங்கும் கைகளில் தண்ணீரை குடித்தாள். பாதி தண்ணீர் உடம்பில் ஓடியது. மெதுவாய் தலையணையில் சாய்ந்து கொண்டாள். யோசனைகள் பல்வேறு திசைகளில் ஓட ஆரம்பித்தன. கண்களிலிருந்து மகன் திவாகரனை எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வளர்த்தோம் என்ற நினைவுகள் கண்களில் துளித்துளியாய் வழிந்துக் கொண்டிருந்தது.
 
 திடீரென தன் கணவன் மாரடைப்பில் இறந்த காட்சி. திசைகளற்று நின்ற தருணம். சுற்றிலும் இருந்த சொந்தங்கள் மெல்ல மெல்ல நழுவிக் கொண்ட காலம் அது. திவாகரனுக்கு படிப்பும் பெரியதாய் இல்லை. ஒரே பையன் நன்றாய் வளர்க்க வேண்டிய வைராக்கியம். அதற்காகவே கல்யாண வீடுகளில் காய்கறி நறுக்கி தர வேலைக்கு போன அந்த நாட்கள். அவனை ஒரு நல்ல பள்ளியில் படிக்க வைத்தது. ஒரு நல்ல வேலையும் வாங்கித் தர பட்ட கஷ்டங்கள் வரை எல்லாமே பார்வதியின் ஞாபகத்தில் வந்தது.
 யாரோ கதவை திறந்துக் கொண்டு வருகிற சத்தம் கேட்டது. நினைவு துண்டிக்கப்பட்டது. பேரனாக இருக்க வேண்டும். பத்தாவது படிக்கிறான். தன் அறையிலிருந்து எட்டிப் பார்த்தாள். அவனேதான். புத்தகத்தை தூக்கி போட்டான். ஷூவை கழட்டி எறிந்தான். கிரிக்கெட் பேட்டை தூக்கிக் கொண்டு விளையாட கிளம்பிவிட்டான். அவனோடு பேசி எவ்வளவு நாளாயிற்று. "என்னாச்சு பாட்டி? எப்படி இருக்கீங்க?'' நாலு வார்த்தைகள்தானே? கேட்டதில்லை அவன்.
 சின்னதாய் ஒரு ஏக்கம் பார்வதிக்குள் வந்து போனது. பாவம் அவன் சின்னப்பையன். என்ன செய்வான். வீட்டில் பெரியவர்களே அப்படி இருக்கும்போது இவனை எப்படிக் குற்றம் சொல்ல முடியும்? பார்வதிக்கு கண்களிலிருந்து வந்த கண்ணீர் இன்னும் அதிகமானது.
 ஜன்னலுக்கு வெளியே வேப்பமர காகம் வந்து கத்த ஆரம்பித்தது. "இவ்வளவு நேரம் எங்கே போனே.'' என்று பார்வதிக்கு அந்த காகத்தின் மீது கோபம் பாய்ந்தது. அது மெதுவாய் கத்த ஆரம்பித்தது. அதன் குரல் உடைந்திருந்தது. அதற்கும் வயதாகாதாயென்ன? அதன் நடையில் லேசாய் தடுமாற்றம் தெரிந்தது. பார்வதி அந்த காகத்தையே பார்த்தாள். "உனக்கு யார் இருக்கிறார்கள்? உனக்கு முடியாமல் போனால் எங்கு போவாய்? யாரும் கவனிப்பதில்லை என்ற கவலை உனக்கும் வருமா? வந்திருக்கிறதா? யாரும் பேசுவதில்லை என்ற வருத்தம் உனக்கும் இருக்கிறதா? உன் பிரச்னைகளை எப்படித்தான் தீர்த்துக் கொள்கிறாய்? பதில் சொல். பார்வதி மனதின் வழியாக அதனிடம் பேசிப் பார்த்தாள். பதிலுக்கு அது "கா... கா..'' என்றது. அது என்னவோ சொல்ல முயற்சிப்பதாய் தோன்றியது. பார்வதிக்கு ஒன்றும் புரியவில்லை. அது பார்வதியை மீண்டும் ஒரு முறை உற்றுப் பார்த்துவிட்டு சட்டென பறந்து போனது.
 
 திவாகரனின் கல்யாணம் வரை எல்லாம் சரியாகத்தான் இருந்தது. வேலைக்கு போகும் மருமகள். குழந்தையும் பிறந்தது. மகனும் மருமகளும் சேர்ந்து வீடு வாங்கினார்கள். நினைத்தபடி எல்லாம் நடந்தது. பார்வதிக்கு சந்தோசமாகத்தான் இருந்தது. ஆனால் மெல்ல மெல்ல எல்லாம் மாறத் தொடங்கியது. பார்வதியின் வார்த்தைகளுக்கு வேலையில்லாமல் போக ஆரம்பித்தது. திவாகரனுக்கும் பார்வதிக்குமான இடைவெளி அதிகமாகிக் கொண்டே போனது. அவள் ஓர் அறைக்குள் தனித்துப் போனாள். திவாகரனிடமிருந்து பேச்சே இல்லை. தூரத்தில் தெரிகிற அவனைப் பார்த்து பார்த்து சந்தோசப்படுவதோடு சரி. சாப்பாடு கடமைக்கு வந்தது. அது பிடிக்குமா பிடிக்காதா என்ற கேள்வியே இல்லை. எதை வைத்தாலும் சாப்பிட்டு கொள்ள வேண்டும். சில சமயம் சாப்பிட பிடிக்காமல் மறுத்துவிடுவாள். இரவில் பசி அடிவயிற்றில் கிள்ளும். பக்கத்தில் பிஸ்கட் பாக்கெட் கூட இருக்காது. கூப்பிட தயங்கி தண்ணீரை மட்டும் வயிறு நிறைய குடித்துவிட்டு படுத்துக் கொள்வாள்.
 வீட்டில் உள்ளவர்களிடம் ஆளுக்கொரு சாவி இருந்தது. பார்வதியிடமும் ஒன்றை கொடுத்திருந்தார்கள். அவர்கள் வீட்டிற்குள் எப்போது வருகிறார்கள். எப்போது போகிறார்கள் என்பதெல்லாம் பார்வதிக்கு தெரியாது. அவர்களாக வருவார்கள். அவர்களாக போவார்கள். அவர்களுக்குள் பேசிக் கொள்வார்கள். அவர்களுக்குள் சிரித்துக் கொள்வார்கள். பார்வதிக்கு எல்லாம் மங்கலாய் தெரியும். நான் யார்? எங்கு இருக்கிறேன்? எதற்கு இருக்கிறேன்? என்ற கேள்விகள் பார்வதியை அழுத்த தனிமையின் வெப்பம் அவளைத் தகிக்க ஆரம்பித்தது. ஏற்கெனவே வாழ்க்கை முழுவதும் உழைத்த உடம்பு தளர்ந்திருந்தது. சமீபத்தில் பாத்ரூமிற்குள் போய் வழுக்கி விழுந்ததும் சேர்ந்து கொள்ள முற்றிலும் ஓர் அறைக்குள் முடங்கிப் போனாள். ஹாஸ்பிடல். பிஸியோதெரபி என செலவு இழுத்துப் போனது. வீட்டில் பார்வதியின் மீதான வெறுப்பின் அளவு உயர்ந்தது. கவனிப்பின் சலுகைகள் மேலும் குறைந்தன.
 
 வேலைக்கு கௌரியை அமர்த்தினார்கள். பெரும்பாலும் காலையில் வருவாள். பெட்டை சுத்தம் செய்வாள். வாரத்திற்கு மூன்று நாள் பார்வதியை குளிக்க வைப்பாள். உடம்பிற்கு பவுடர் போடுவாள். சாப்பாடு தருவாள். படுக்க வைப்பாள். அவசரமாய் அவசரமாய் எல்லாம் முடித்துவிட்டு அடுத்த வீட்டுக்கு போய் விடுவாள். சம்பளத்துக்கு செய்கிற சேவை. அவள் எல்லை அவ்வளவுதான். ஆனால் அவ்வவ்போது மட்டும் வந்து எட்டிப்பார்க்கும் மகன். எப்பொழுதாவது வந்து போகும் மருமகள். எட்டியே பார்க்காத பேரன் என்ற சூழ்நிலையைத்தான் பார்வதியால் தாங்க முடியவில்லை. ""திவாகரா வா வந்து பேசு.. உன்னிடம் வார்த்தைகள்தானே கேட்கிறேன்..'' ஒரு நாள் பொறுக்க மாட்டாமல் பார்வதி மகனிடம் கேட்டே விட்டாள்.
 "எல்லாத்துக்கும் ஆயிரத்தெட்டு வேலை இருக்கும்மா.. உங்கிட்ட வந்து சும்மா பேசிட்டெல்லாம் இருக்க முடியாது.. நல்லா சாப்பிடு.. தூங்கு.. டி.வி இருக்குல்ல பாரு.. சங்கரா கோவிந்தான்னு கூப்பிடு பொழுது போயிடும்.. வயசானா எல்லாரும் அப்படித்தானே இருக்காங்க..?'' என்றபடி கோபமாய் வெளியே போனான்.
 பிறகு திவாகரன் பார்வதியின் அறைக்குள் வருவதை குறைத்துக் கொண்டான். அதற்கு பிறகு தனிமை பார்வதியை மெல்ல மெல்ல கொல்ல ஆரம்பித்தது. பார்வதிக்கு டி.வி பார்ப்பது பிடித்ததில்லை. ஜன்னலே உலகமானது. பகலில் சூரியனும், இரவில் நட்சத்திரங்களும் பல கதைகள் சொல்லிச் சென்றன. துணைக்கு அந்த வேப்பமர காகம்தான் வந்து வந்து போகும். ஏதேதோ பேசும். பிறகு அதன் வேலையைப் பார்க்க போய்விடும். அடுத்த ஆறுதல் சகுந்தலாதான். அழுது புலம்ப பார்வதிக்கு கிடைத்த அற்புத காதுகள். ஆறுதலாய் மருந்து தடவும் அவளது வார்த்தைகள். அரவணைத்துச் செல்லும் அவளது கைகள். சகுந்தலா மட்டும் வரவில்லையென்றால் இந்நேரம் தன் போட்டோவிற்கு மாலை போட்டிருப்பார்கள் அல்லது தன் காலில் சங்கிலி போட்டிருப்பார்கள் என்று தோன்றியது.
 சமீபத்தில் வீட்டில் வேறு விதமான பேச்சுக்களும் வர தொடங்கியிருந்தன. வேலைக்காரிக்கு இவ்வளவு சம்பளம் தரமுடியாது என்றாள் மருமகள். அதுதவிர பேரனும் வளர்ந்திருந்தான். அவனுக்கும் தனியாய் ஓர் அறை தேவைப்படுகிறது. அவனது கோரிக்கையும் பரிசீலனையில் இருக்கிறது. பார்வதியின் நிலை வீட்டில் விவாதத்திற்கு வந்திருந்தது. அவர்களுக்குள் குழப்பமே இல்லை. அதுதான் ஒரு மனதாக தீர்மானித்திருக்கிறார்கள். பார்வதியை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம். அந்த வேலையைத்தான் திவாகரன் வேகமாய்ச் செய்து கொண்டிருக்கிறான். ஆபிஸ் முடிந்ததும் அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறான். இன்றோ நாளையோ எப்போது வேண்டுமானாலும் அது நடந்துவிடக்கூடும். பார்வதிக்கு மேலும் பதட்டம் வந்தது. இவ்வளவுதானா மனிதர்கள்? இதுதான் வாழ்க்கையின் எதார்த்தமா? அன்பென்றாலென்ன? நன்றி என்பதற்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? எல்லாம் பதில் தெரியாத கேள்விகளாகிவிட்டன.
 பார்வதிக்கு மீண்டும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது. சட்டென இனி அழக்கூடாதெனத் தோன்றியது. கண்களைத் துடைத்துக் கொண்டாள். அழுத்தமாய் ஒரு முடிவுக்கு வரத் தொடங்கினாள். ஏதோவொரு நொடியில் நிமிராமல் ஒரு நியாயத்தை தொட முடியாது என்று அழுத்தமாய் நினைத்துக் கொண்டாள்.
 கொஞ்ச நேரத்தில் சொன்னபடியே சகுந்தலா வீட்டிற்கு வந்தாள்.
 
 "என்ன பண்ணலாம்.. என்ன முடிவு எடுத்திருக்கே..?'' என்றாள்.
 ""நிச்சயமா எனக்கொரு நியாயம் கிடைக்கணும் சகுந்தலா..''
 சகுந்தலாவின் முகம் சந்தோசமானது.
 "ம்.. அப்றமென்ன தயக்கம்.. நம்பரை போடு..''
 பார்வதி மீண்டும் ஒரு முறை மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள். இருந்தாலும் போனை எடுத்த போது கை நடுங்கவே செய்தது. போலீஸ் ஸ்டேஷனின் நம்பரை சுழற்றினாள். கடைசி எண்ணைப் போடவில்லை. காட்சிகள் கற்பனையில் விரிந்தன...
 கொஞ்ச நேரத்திலெல்லாம் வாசலில் போலீஸ் ஜீப் வந்து நிற்கிறது. இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு பெண் போலீஸ்காரர்கள் இறங்கினார்கள். கூடவே சூட் போட்ட ஒரு சமூக ஆர்வலரும் வந்தார். வீதியே வெளியே வந்து பரபரப்பாய் பார்த்தது. வீட்டிற்குள் தடதடவென போலீஸ்காரர்கள் நுழைந்தார்கள். திவாகரனை தேடி சூழ்ந்து கொண்டார்கள். நழுவும் வேஷ்டியை திவாகரன் இழுத்துப் பிடித்துக் கொண்டு அதிர்ந்து போகிறான். முகத்தை கழுவிவிட்டு பாத்ரூமிலிருந்து வந்த மருமகள் மொத்த போலீள்ஸயும் பார்த்து மிரண்டு போகிறாள். வார்த்தைகள் வராமல் பதறுகிறாள். பேரன் பயத்தில் அம்மாவை கட்டிக் கொள்கிறான். போலீஸ் டிபார்ட்மெண்ட் நடந்ததை விசாரிக்கிறது. மேலும் விசாரிக்க திவாகரனை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்கிறார்கள். அவன் அவசரமாய் சட்டையை மாற்றிக் கொள்கிறான். ஜீப்பில் ஏற்றுகிறார்கள். மருமகள் ஓடி வந்து பார்வதியின் காலைக் கட்டிக் கொள்கிறாள். புருசனை காப்பாற்றச் சொல்லி கதறுகிறாள். பார்வதி சலனமற்று பார்க்கிறாள். பிறகு விசாரணை தொடர்கிறது. திவாகரன் எதற்கும் ஒத்து வராத காரணத்தால் அவன் மீது மாவட்ட ஆட்சியரே வழக்கு தொடுக்கிறார். நடந்த கேஸின் தீர்ப்பு பார்வதிக்கு சாதகமாகிறது. திவாகரன் புழல் ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறான். ஜெயிலில் அவனது உடை மாறுகிறது. மணி அடித்தால் மட்டுமே உணவு வருகிறது. கம்பிக்கு இடையே மருமகளும் பேரனும் கண்கலங்குகிறார்கள். பார்வதி எல்லாவற்றையும் பார்க்கிறாள். அவளால் எதையும் தாங்க முடியவில்லை. ""திவாகரா'' என கண் கலங்குகிறாள்..
 ""பார்வதி..'' என சகுந்தலா கத்துவது காதில் விழுகிறது.
 
சட்டென பார்வதி நிதானத்திற்கு வந்தாள். போன் அப்படியே கையில் இருக்கிறது. எதிர்புறம் ஏதோவொரு குரல் கேட்டபடி இருக்கிறது.
 ""பார்வதி பேசு.. போலீஸ்தான் பேசறாங்க.. என்னன்னு சொல்லு..'' என்று சகுந்தலா மீண்டும் உரக்கச் சொல்கிறாள்.
 பார்வதி பேசாமல் போனை வைத்தாள். அழுகை பொத்துக் கொண்டு வந்தது.
 "என்னாச்சு பார்வதி.. ஏன் பேசல..?''
 ""சாரி.. சகுந்தலா.. என்னால முடியல..'' என்றபடி பார்வதி மீண்டும் அழுதாள்.
 ""ச்சே.. நீ இவ்வளவு கோழையா இருப்பேன்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கல.. போதும் பார்வதி.. நாம பேசினதெல்லாம் போதும்.. இனி உன்னோட எந்த கஷ்டத்தையும் எங்கிட்ட சொல்லாதே.. நான் கிளம்பட்டா..'' என்றபடி சகுந்தலா கோபமாய் எழுந்தாள். பார்வதி சட்டென அவளது கையை பிடித்துக் கொண்டாள். மீண்டும் கண் கலங்கியது. பேச ஆரம்பித்தாள்.
 "சகுந்தலா.. தயவு செஞ்சு என்னை புரிஞ்சுக்கோ.. என் பையன் மேல எனக்கு கோபமெல்லாம் இருக்கு.. ஆனா.. அவனை ஜெயிலுக்கு அனுப்பிச்சுட்டு அதுக்கப்புறம் என்னால நிம்மதியா வாழ முடியுமான்னு தெரியல.. என்னை மன்னிச்சுரு சகுந்தலா.. இவ்வளவு நாள் ஓட்டிட்டேன்.. இன்னும் கொஞ்ச நாள்தானே.. இந்த உசுரு இங்கயோ.. எங்கயோ அதுபாட்டுக்கு போகட்டும்.. இங்க வர்ற காக்கா மாதிரி எந்த எதிர்பார்ப்பும் இல்லாம வாழ பழகிக்கறேன்.. என் பையனுக்கு என்ன பிடிக்குதோ அதை செய்யட்டும்.. என் பையன் நல்லா இருந்தா சரி..'' என்றபடி பார்வதி முகத்தை பொத்திக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
 சகுந்தலா எதுவும் பேசவில்லை. பார்வதியின் முதுகைத் தட்டிக் கொடுத்தாள். அந்த அறையை விட்டு வெளியே வந்தாள். ஜன்னலில் சாவியைத் தந்தாள். நடக்க ஆரம்பித்தாள். பார்வதியின் அழுகை வாசல் வரை கேட்டுக் கொண்டிருந்தது.
 சாயந்திரம். திவாகரன் வந்தான். பார்வதியின் அறைக்குள் வந்து பக்கத்தில் அமர்ந்தான். பார்வதி அழுத கண்ணீரின் உப்பு படிவை வேகமாய் துடைத்துக் கொண்டு திவாகரனை பார்த்தாள்.
 
 "அம்மா.. உங்கிட்ட கொஞ்சம் பேசணும்..'' என்றான்.
 "என்னப்பா சொல்லு..'' என்றாள்.
 "நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவ சொல்றேன். உன்னை வீட்டில வச்சு பார்க்க எங்க ரெண்டு பேராலயும் முடியல. அதுதான் ஒரு நல்ல ஓல்ட் ஏஜ் ஹோம்மா பார்த்திருக்கேன். மேடவாக்கத்தில இருக்கு. இங்க இருக்கறத விட அங்க நல்ல வசதி இருக்கு. நர்வ்ஸல்லாம் வச்சு நல்லா பார்த்துக்கறாங்க. நானும், அவளும் மாசத்துக்கு ரெண்டு தடவ வந்து பார்த்துக்கறோம்.. நாளைக்கே அங்க கிளம்ப வேண்டி இருக்கும்மா.. வேற வழி தெரிலம்மா.. என்னை தப்பா எடுத்துக்காத..'' என்றான்.
 "இதுல என்னப்பா தப்பு இருக்கு..? நீ என்ன சொல்றயோ அத கேட்டுக்கறேன்.. நான் ரெடியா இருக்கேன். நீ எப்ப சொல்றயோ அப்ப கிளம்பிறலாம்ப்பா..'' என்றாள். இதைச் சொன்ன போது பார்வதியின் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை.''Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies