தாய்லாந்தில் பலத்த மழை எதிர்பார்ப்பு: சிறுவர்கள் சிக்கிய குகையில் வெள்ளம் உயருமா?
05 Jul,2018
தாய்லாந்தில் இன்னும் சில நாள்களில் பெரும் மழை எதிர்பார்க்கப்படுவதால், 12 சிறுவர்களும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் சிக்கிக் கொண்டுள்ள குகையில் வெள்ள நீர் மட்டம் மேலும் உயரும் அபாயம் நிலவுகிறது.
வெள்ள நீர் உயரும்பட்சத்தில் குகைக்குள் சிறுவர்களும், பயிற்சியாளரும் ஒதுங்கியுள்ள திட்டுப் பகுதியில் நீர் புகும் என்பதால், மீட்புப் படையினர் வானிலையோடு போராடவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக இந்த குகை அமைந்துள்ள சாங் ராய் பிரதேசத்தில் வெயில் அடித்துவருகிறது.
குகையில் சிக்கியுள்ளவர்களைப் பாதுகாப்பாக வெளியே கொண்டு வருவது தொடர்பாக மீட்புக்குழுவினர் சிரத்தையோடு செயல்பட்டு வருகிறார்கள்.
"அவர்களை விரைவாக சென்றடைந்து விட வேண்டுமென கண்டுபிடிப்பதற்கு வேகமாக செயல்பட்டோம்" என்று வியாழக்கிழமை காலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த சாங் ராய் பிரதேச ஆளுநர் நரோங்சாக் ஒசோதானாகோரன் "இப்போது நீர் அதிகரிப்பதற்கு முன்னால் மீட்டுவிட போராடி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
உயிர் காக்கும் மேலாடையை பயன்படுத்தி, சிறார்களை நீரில் நீந்தி வரச்செய்து குகையில் சிக்கியுள்ளோரை காப்பாற்றுவதற்கான சத்தியக்கூற்றை கடலில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தாய்லாந்து கடற்படைப்பிரிவு ஆராய்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
குகையில் சிக்கியுள்ளோர் அவர்களின் குடும்பத்தினருடன் பேசுவதற்காக பொருத்தப்படும் தொலைபேசி இணைப்பு, இவர்கள் சிக்கியிருக்கும் இடம்வரை கொண்டு செல்ல வேண்டியுள்ளது என்றும் நரோங்சாக் கூறினார்.
முன்னதாக கொண்டு சென்ற கருவி தண்ணீரில் விழுந்து செயலிழந்துவிட்டதால், புதிய தொலைபேசி குகைக்குள் கொண்டு செல்லப்படுகிறது.
மழை சற்று நீண்டகாலம் நின்றுவிட்டால், தாம் லுயாங் குகையில் சிக்கியுள்ளோர் அந்த பகுதியை நடந்தே கடந்து வரலாம் அல்லது மிதந்து வெளிவரலாம். முக்குளித்து வர வேண்டிய அவசியம் ஏற்படாது.
குகை பகுதியில் இருந்து 128 மில்லியன் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டு்ளளது.
இந்த குகையில் சிக்கியிருப்போரை சென்றடைய, போவதற்கு 6 மணிநேரமும், திரும்பி வர 5 மணிநேரமும் என்று மொத்தம் 11 மணிநேரம் ஆகிறது.
குகையில் சிக்கியுள்ளோரில் பலருக்கு நீச்சலடிக்க தெரியாது. இந்த பாதையில் அவர்கள் வெளிவருவதற்கு அவர்களுக்கு முக்குளிப்புக்கான அடிப்படைகள் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.