2007-ம் ஆண்டு மார்ச் 25-ம் திகதி அதிகாலை.
கட்டுநாயக்கா விமானப்படை தளத்தின்மீது விடுதலைப்புலிகளின் முதலாவது விமானத்தாக்குதல் நடந்தது. புலிகளின் இரண்டு சிறிய விமானங்கள் கட்டுநாயக்க விமானப்படை முகாம் வான்பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தன.
அப்பொழுது இலங்கை வான்படையின் பயன்பாட்டில் இருந்தது இந்திய ராடர்கள். புலிகளின் விமானங்கள் வந்த விவகாரம் இந்திய ராடர்களிற்கு தெரிந்திருக்கவேயில்லை.
புலிகளின் விமானங்கள் குண்டுவீசியதையடுத்து, இருண்ட வானத்தை நோக்கி விமானப்படையினர் துப்பாக்கிகளால் சுட்டார்கள். சாதாரண துப்பாக்கிகள், கலிபர்கள் கொண்டு தாக்குதல் நடத்தினார்கள். இரவு நேரமாகையால் விமானத்தை அடையாளம் கண்டு தாக்குதல் நடத்த முடியவில்லை.
வான்புலிகளிற்கும் குண்டுவீசுவதல் சிக்கல்கள் இருந்தன. அவர்களிற்கு இது முதலாவது தாக்குதல். வன்னியிலிருந்து நீண்டதூரம் பயணித்து வந்து தாக்கும் பதட்டம், இலக்கை துல்லியமாக அடையாளம் காணும் தொழில்நுட்ப வசதிகள் இல்லாமை போன்ற காரணங்களால் அவர்களிற்கும் விமானங்கள் தரித்து நிற்கும் பகுதியை (ஹங்கர்கள்) அடையாளம் காண்பதில் சிக்கலிருந்தது.
வான்புலிகளின் அந்த இரண்டு விமானங்களையும் ஓட்டியவர்கள் கரன், சிரித்திரன். இவர்கள் இருவரும் கடைசியாக கொழும்பில் தாக்குதல் நடத்த முயன்றபோது, 2009 இல் உயிரிழந்திருந்தனர். அதுதான் புலிகளின் கடைசி வான் தாக்குதல்.
விடுதலைப்புலிகளின் கேப்பாபிலவு ஓடுதளத்தில் பிரபாகரனும் தளபதிகளும்
விடுதலைப்புலிகள் ஒரு விமானம் வீசிய இரண்டு குண்டுகள் விமானப்படை பொறியியல்பீடத்தின் கட்டிடத்தின் மீது விழுந்தது. மற்றைய விமானம் வீசிய இரண்டு குண்டுகளும் ஹெலிகொப்டர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹங்கரின் மீது விழுந்தது. இதில் 3 விமானப்படையினர் கொல்லப்பட்டனர். சிலர் காயமடைந்தனர். விமானத்தளத்தின் கட்டிடங்களிற்கு சேதம் ஏற்பட்டதே தவிர, விமானங்களிற்கோ, ஹெலிகொப்டர்களிற்கோ சேதம் ஏற்படவில்லை.
இந்த தாக்குதலின் பின் புலிகளின் இரண்டு விமானங்களும் பத்திரமாக வன்னியில் வந்து தரையிறங்கி விட்டன. புலிகளின் விமானம் பாதி தூரம் வந்ததன் பின்னர்தான் இலங்கை விமானப்படை மிகையொலி விமானங்களான கிபிர் விமானங்கள் விரட்ட தொடங்கின. ஆனால் புலிகளின் விமானங்கள் பத்திரமாக புதுக்குடியிருப்பில் தரையிறங்கி விட்டன.
புலிகளின் விமானங்கள் எந்த ரகம் என்று இலங்கை விமானப்படையினரால் அடையாளம் காண முடியவில்லை. மறுநாள் புலிகள் ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர். அப்பொழுதுதான் புலிகளிடம் என்ன விமானம் இருக்கிறதென்பது உலகத்திற்கு தெரிய வந்தது. தாக்குதலிற்கு உபயோகித்த விமானத்தின் படத்தையே வெளியிட்டு கெத்து காட்டியிருந்தனர் புலிகள்.
புலிகள் உருவாக்கிய Electrical Bomb Release சிஸ்டம்
புலிகள் காண்பித்த விமான ரகங்கள் குண்டுவீச்சிற்குரியவை அல்ல. அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களால் EBR (Electrical Bomb Release) வசதி அமைக்கப்படுவதில்லை. புலிகள் பின்னர் விமானங்களில் EBR சிஸ்டத்தை அமைத்து, குண்டு வீச்சு விமானங்களாக மாற்றியிருந்தனர்.
புலிகளின் வான்படை பற்றிய ஆராய்ச்சியில் மொத்த உலகமும் இறங்கியிருக்க, வான்படையினர் வேறு ஒரு ஆய்வில் இறங்கினர். புலிகளின் விமானங்கள் எந்த வழியால் கொழும்புக்கு வந்தன என்பதை கண்டறிய வேண்டும். அந்த பாதையை அறிந்தால் போதும். மீண்டும் வரும்போது இலகுவாக குறிவைக்கலாம். எதிர்பாராத விதமாக திடீரென வந்துவிட்டாலும், திரும்பி போகும்போது தாக்கலலாம்.
புலிகளின் சிறிய, வேகம் குறைந்த விமானங்கள் இலங்கையின் நவீன தொழில்நுட்பத்திற்கு ஈடுகொடுக்க முடியாதவை. இது புலிகளிற்கும் தெரியும். நன்றாக கவனித்தவர்களிற்கு புரியும், ஒருமுறை தாக்குதல் நடத்திய இடத்தில் புலிகள் இரண்டாவது முறை தாக்குதல் நடத்தியதில்லை. புதிய புதிய இலக்குகளைதான் தாக்கினார்கள். ஒருமுறை கொழும்பை தாக்கினால் அடுத்தமுறை அதற்கு நேர் எதிர்திசையில் பலாலியில் தாக்குதல் நடத்தினார்கள். அடுத்தமுறை திருகோணமலையில் தாக்குதல் நடத்தினார்கள். இப்படியே போக்குகாட்டிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், யுத்தத்தின் இறுதி சமயத்தில் மீண்டும் கொழும்பிற்கு வந்தார்கள். அதாவது முதல் தாக்குதல் நடத்திய இடத்திற்கு. தம்மிடமிருந்த விமானங்களை வைத்து ஏதாவது அழிவை ஏற்படுத்த வேண்டுமென திட்டமிட்டதால் இந்த தாக்குதல் முயற்சியை மேற்கொண்டார்கள். இந்த சமயத்தில்தான் இரண்டு விமானங்களும் வீழ்த்தப்பட்டன.
அதாவது புலிகளிற்காக காத்திருந்த அரசின் பொறிக்குள் இரண்டு விமானங்களும் விழுந்தன. அது எப்படி?
விமான பயணங்கள் திட்டமிடப்படுவது முழுக்க முழுக்க பிளைட் பிளான் (Flight Plan) அடிப்படையில். இதை இரண்டு வழியில் உருவாக்குகிறார்கள். ஒன்று manual flight plan. அதாவது மனிதர்களின் மூளையை வைத்து உருவாக்கப்படுவது. அடுத்தது கணினி மூலம் உருவாக்குகிறார்கள். இப்பொழுது வர்த்தக விமானங்கள் அனைத்தும் கணினி மென்பொருள் மூலம் உருவாக்கப்படும் பிளானைதான் பயன்படுத்துகின்றன. (வான்புலிகள்
manual flight plan பாவிப்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால், இதில் அனுபவமுள்ள ஒருவரால் பயணப்பாதையை ஓரளவு ஊகிக்க முடியும். நல்ல தேர்ச்சியுள்ளவர்கள் என்றால் 98 சதவீதம் துல்லியமாக ஊகிப்பார்கள். இலங்கை விமானப்படையினரும் புலிகளின் பிளைட் பிளானை ஊகித்தார்கள்!
இந்த தாக்குதல்களிற்காக புலிகள் எப்படியான ரன்வேயை பயன்படுத்தியிருப்பார்கள் என பலவித ஆய்வுகள் நடந்தன. கிழக்கு – மேற்கு திசையை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்ட ரன்வேயாக இருக்காது. வடக்கு – தெற்கை பேஸ் ஆக வைத்தோ, வடகிழக்கு – தென்மேற்கு அல்லது வடமேற்கு – தென்கிழக்கை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்ட ரன்வேயாக இருக்கும் என பலவித ஆய்வுகள் வந்தன.
ஆனால் முதல் தாக்குதலிற்காக புலிகள் அமைத்த ரன்வே ஒன்றையும் பாவிக்கவில்லையென்பதே உண்மை. இறுதியாக 2009 இல் புறப்பட்ட விமானங்கள் இரண்டும் மாத்தளன் உப்பேரி கரையிலிருந்துதான் ரேக் ஓவ் ஆகின. முதல் தாக்குதலில் விடத்தல்தீவிற்கு அண்மையாக கிறவல் பாதையொன்றில் ரேக் ஓவ் ஆகின. அங்கிருந்து சிறிய பயணப்பாதையில் மேற்கு கரையால் கடலை கடந்து கட்டுநாயக்காவை கடந்து சென்று, கட்டுநாயக்கா விமானப்படை தளத்தை கடந்து சென்று, இடதுபுறமாக வட்டமடித்து, இன்னொரு இடது வட்டமடித்து மேலும் மூன்று நிமிட பயணதூரத்தில் விமானத்தளத்தின் தலையுச்சிக்கு வந்தன.( இது தமிழ் பக்கத்தின் காப்புரிமை பெற்ற தொடர்) கட்டுநாயக்காவில் தாக்குதல் நடத்திவிட்டு, நேராக பறந்தால், கடலோரமாக பாதுகாப்பாக மன்னாரிற்கு வந்து விடலாம். இடையில் உள்ள அநுராதபுரம், ஹிங்குராங்கொட, சிகிரியா விமானப்படை தளங்களை கடக்க வேண்டிய அபாயமில்லை.
ராடரின் கண்ணில் மண்ணைதூவ புலிகளின் விமானங்கள் உயரம்குறைவான பறத்தலை செய்திருந்தன. தரையில் விமானத்தின் சத்தம் தெளிவாக கேட்டதாக மக்கள் சொல்ல தொடங்க, அதை வைத்து பிளைட் பிளானை கணிக்க புலனாய்வு அமைப்புக்கள் முயன்றன.
கொழும்பில் முதலாவது தாக்குதலை முடித்து விட்டு வான்புலிகளின் விமானங்கள் திரும்பிய பின்னர், விமானங்கள் எந்த வழியால் வந்தன, எந்த வழியால் திரும்பின, எங்கிருந்து புறப்பட்டன, எங்கு தரையிறங்கின என்ற விபரங்களை அறிய புலனாய்வுத்துறை களமிறங்கியது.
ஆனால் இது அவ்வளவு சாதாரண விடயமல்ல.
வான்புலிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்பதை விமானப்படையினர் எதிர்பார்த்திருக்கவில்லை. அதனால் இரண்டு இடங்களில் கோட்டை விட்டிருந்தனர். முதலாவது, தாக்குதல் நடத்திய புலிகளின் விமானங்களை விமானப்படையின் விமானம் விரட்டி சென்றது. எவ்வளவு நேரத்தின் பின் விரட்டி சென்றது தெரியுமா?
தாக்குதல் நடந்து 20 நிமிடங்களின் பின்னர். இதை விரட்டி செல்வதென சொல்ல முடியாதுதான். நள்ளிரவில் வன்னிக்கு சென்று வந்தார்கள் என சொல்லலாம்!
20 நிமிடமென்பது புலிகளின் வேகம் குறைந்த புலிகளின் விமானமே தரையிறங்க போதுமான நேரம். நள்ளிரவில் வன்னி வானில் சுற்றிய விமானப்படை விமானம், புலிகளின் விமானங்கள் தரையிறங்கிய தடயங்கள் தெரிகிறதா என தேடியது. இரவில் விமானங்கள் தரையிறங்கும்போது லான்டிங் லைற் எரியவிடப்படும். இரணைமடு, கேப்பாபிலவு ரன்வேயில் லான்டிங் லைற் எரிகிறதா என அந்த விமானம் தேடியது. அந்த பகுதியில் ஒரு நுளம்புத்திரி எரிந்த தடயம் கூட தெரியவில்லை!
புலிகளின் விமானங்களை 20 நிமிடத்தின் பின்னர் விரட்டி சென்றாலும், விமானப்படை அதிகாரிகள் என்ன நினைத்திருந்தார்கள் தெரியுமா? ஏதோ காற்றில் பலூனில் மிதப்பதை போல போய்க்கொண்டிருப்பார்கள், பின்னால் போய் பிடறியில் போடலாம் என்றுதான் நினைத்திருந்தார்கள்.
புலிகளின் விமானங்களை ஆகாயத்தில் பின்தொடர்ந்திருந்தால் மாத்திரமே தரையிறங்கிய இடத்தை கண்டறிந்திருக்க முடியும். விமானப்படை இதில் கோட்டை விட்டு விட்டது.
விமானப்படை கோட்டை விட்ட அடுத்த சந்தர்ப்பம், புலிகள் தாக்குதலிற்கு சென்ற சமயத்தில் நடந்தது.
கட்டுநாயக்காவில் தாக்குதல் நடத்த புலிகளின் விமானங்கள், வன்னியிலிருந்து ரேக் ஓவ் ஆகி, வவுனியா-மன்னார் வீதியை கடந்தன. (கடந்த பாகத்தில் விடத்தல் தீவிலிருந்து ரேக் ஓவ் ஆகியதாக எழுதியிருந்ததே என குழம்புகிறீர்களா? நீண்டகாலமாக இராணுவத்தை குழப்பிய விவகாரத்தில் இரண்டு வாரம் நீங்கள் குழம்பகூடாதா?) அங்குள்ள படைமுகாமில் சென்ரியில் இருந்த சில சிப்பாய்கள் வானில் வித்தியாசமான சத்தத்தை அவதானித்தனர். அது ஒரு விமானமாக இருக்கலாமென்றும் அவர்கள் ஊகித்தார்கள்.
ஆனால் யாருடைய விமானம் என்பதில் குழப்பமிருந்தது.
விமானப்படையிடம் இருந்ததெல்லாம் ஜெட் விமானங்கள்.அவைதான் வன்னிக்கு தாக்குதலுக்கு சென்று வந்தன. மிகச்சில சந்தர்ப்பங்களை தவிர, இரவில் அவை பறப்பதில்லை. ஜெட் விமானங்களின் சத்தமும், புலிகளின் இலகுரக விமானங்களின் சத்தமும் வேறுவேறு. அதனால் சிப்பாய்களிற்கு சந்தேகம் வந்தது. ஆனால் புலிகளின் விமானமாக அவர்கள் யோசிக்கவில்லை. ஏனெனில், அதுதான் புலிகளின் முதலாவது தாக்குதல் பறப்பு.
இதனால், ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்கிறதென்ற மாதிரி மேலிடத்திற்கு விடயத்தை சொன்னார்கள். அதுவும் மிக தாழ்வாக பறந்து சென்றதையும் குறிப்பிட்டார்கள். அண்ணளவாக எத்தனை அடி உயரத்தில் பறந்தது என்று பதில் கேள்வி வர, சிப்பாய்களால் அதைசொல்ல முடியவில்லை. இரவில் எத்தனை அடி உயரத்தில் விமானங்கள் பறக்கின்றன என்பதை விமானங்கள் சம்பந்தமான துறையில் இருப்பவர்களால் மாத்திரம்தான் கணிக்க முடியும்.
தகவல் விமானப்படைக்கு சென்றது. அந்த வான்பாதையில் தமது விமானங்கள் பறக்கவில்லையென்றார்கள். இதன்பின் குழப்பம் அதிகரிக்க, கட்டுநாயக்காவில் இயங்கிய central air traffic control tower ஐ தொடர்பு கொண்டு, அந்த பகுதியில், அந்த நேரத்தில் ஏதாவது விமானங்கள் பறக்கின்றனவா என கேட்டனர். ஏதாவது வர்த்தக விமானங்கள் பறக்கலாமென்ற சந்தேகம் விமானப்படையிடம் இருந்தது.
central air traffic control tower இலிருந்து வந்த பதில்- இல்லையென்பது!
இராணுவத்திற் வந்த சந்தேகமும், central air traffic control tower இன் பதிலும் பொருந்தாமல் இருந்தது. அப்படியானால் அந்த இரைச்சல்?
இதற்கு இன்றுவரை பதிலில்லை. இரண்டு விசயங்கள் நடந்திருக்கலாமென விமானப்படை கருதுகிறது. முதலாவது, வேறு ஏதோ சத்தத்தை கேட்டு, அதை விமான சத்தமாக படையினர் நினைத்திருக்கலாம். இரண்டாவது, இராணுவத்தின் கவனத்தை திசைதிருப்ப புலிகள் ஏதாவது உத்தியை பாவித்திருக்கலாம். அதாவது கொழும்பு நோக்கி புலிகளின் விமானமொன்று சென்று கொண்டிருந்தபோது, வேறொரு பிளைட் பாத்தில் புலிகளின் இன்னொரு விமானம் வன்னியை நோக்கி வந்திருக்கலாம். அதாவது, கொழும்பிற்கு தாக்குதலிற்கு புறப்பட்ட விமானத்திற்கு முதல் இன்னொரு விமானம் கிளம்பி, புத்தளத்திற்கு அண்மையாக மீண்டும் தரைக்குள் திரும்பி, வன்னிக்கு வந்திருக்கலாம்.
முக்கியமாக கவனிக்கவும்- இது இரண்டும் ஊகம்தான். இன்றுவரை உறுதிசெய்ய முடியாமல் போன விசயங்கள்.
இராணுவமும், விமானப்படையும் உசாரடைவதற்கு முன்னர் வான்புலிகள் பத்திரமாக விமானத்தை தரையிறக்கி விட்டனர். இதன் பின்னர்தான் விமானப்படை விமானமொன்று விரட்டலில் ஈடுபட்டது.
இப்பொழுது உங்களிற்கு ஒரு சந்தேகம் வரலாம். கட்டுநாயக்காவில் இயங்கிய central air traffic control tower ராடரில் வான்புலிகளின் விமானம் ஏன் பதிவாகவில்லை?
மிக சுலபமான பதில். ராடரின் கண்ணில் படாமல் புலிகள் பறந்திருக்கிறார்கள்!
தரையிலிருந்து சற்று உயரத்தில், மரங்களிற்கு சற்று உயரமாக பறந்தார்கள். கட்டுநாயக்காவில் இருந்த central air traffic control tower ராடர் சிவில் பாவனைக்கானது. அதை புலிகள் ஏமாற்றினார்கள்.
இதில் இன்னொரு நுணுக்கமான விடயமும் உள்ளது. அதை தாக்குதல் நடந்த சில நாட்களிலேயே விமானப்படையினர் கண்டுபிடித்து விட்டனர். வடக்கிலிருந்து மேற்காக கொழும்பு நோக்கி வர்த்தக விமானங்கள் செல்லும் பாதையை வான்புலிகள் தவிர்த்திருந்தனர். ஏனெனில், இந்த பாதையை central air traffic control tower ராடரில் 24 மணிநேரமும் கவனித்துக் கொண்டிருப்பார்கள். இந்த Airway க்குள் நுழைந்தால், கொன்ரோல் ரூமில் இருப்பவர்கள் எச்சரிக்கையடைந்து விடுவார்கள் என்பது புலிகளிற்கும் தெரியும்.
அதென்ன Airway? எங்கு அமைக்கப்பட்டுள்ளதென யாராவது கேட்டாலுமென்பதற்காக அது பற்றியும் சொல்லிவிடுகிறேன். இலங்கைக்குள் வர்த்தக விமானங்கள், பயணிகள் விமானங்கள் பறப்பில் ஈடுபடும் பாதைதான் இது. இலங்கையில் தரிக்காமல் செல்லும் விமானங்களின் பாதை வேறு. அது 30,000 அடிக்கு மேலேயுள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் பல ஒரே திசையில் இயங்கிக்கொண்டிருக்கும். விபத்தை தவிர்ப்பதற்காக 30,000 அடி உயரத்திற்கு மேல் ஒரு பாதை. அதற்கு கீழே ஒரு பாதை. அதையும் மேல் கீழாக இரண்டாக, மூன்றாக பிரிப்பார்கள்.
இந்த Airway 18 கிலோமீற்றர் அகலமானது. இதில் இரண்டு விமானங்கள் பயணிக்க வேண்டுமெனில், 9 கிலோமீற்றர் அகலத்தில் பாதையை இரண்டாக்குவதல்ல. உயரத்தின் அளவின் மூலமே பாதையை தீர்மானிப்பார்கள். ஒரு விமானத்திற்கு 20,000 அடி உயர பாதை வழங்கினால், அடுத்த விமானத்திற்கு 21,000 அடிக்கு மேலே வழங்கப்படும்.
இந்த 18 கிலோமீற்றர் பாதையில் விமானம் பறக்கும்போது, இரண்டு பக்கமும் 8 கிலோமீற்றர் அகலத்தை பேண வேண்டும்.
இலங்கை Airway கள் அவ்வளவு பிசியாக இருப்பதில்லை. ஒரே பாதையில் இரண்டு விமானங்கள் பறப்பதே ஆச்சரியம்தான்.
புலிகளின் விமானங்கள் எந்த வழியால் வந்து தாக்கின என்பது படையினருக்கு புரியாத புதிராக இருந்தது. மேற்கு கடற்கரையால் மன்னாரிற்கு அண்மையாக கடலை கடந்து, கடலின் மேலாக பறந்து கட்டுநாயக்காவிற்கு வந்திருக்கலாம், அல்லது முல்லைத்தீவிலிருந்து புறப்பட்டு வவுனியாவிற்கு கிழக்காக பறந்து சிகிரியாவிற்கு அண்மையாக வலது பக்கம் ரேர்ன் பண்ணி கட்டுநாயக்காவிற்கு வந்து, தாக்கி விட்டு, மீண்டும் வலது பக்கம் ரேர்ன் பண்ணி மன்னாருக்கு போயிருக்கலாமென பல ஊகங்களுடன் தலையை பிய்த்து கொண்டிருந்த பாதுகாப்பு தரப்பினர், இறுதியில் புலனாய்வு பிரிவினரை களத்தில் இறக்கினர்.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியேயுள்ள எல்லைப்புற கிராமங்களிற்கு சென்று விமானத்தின் சத்தம் கேட்டதா என ஆராய தொடங்கினார்கள். வவுனியாவில் சத்தம் கேட்டதென சொன்னார்கள், வில்பத்து காட்டோர கிராம மக்களும் சத்தம் கேட்டதென்றார்கள், புத்தளத்தில் சிலர் சத்தம் கேட்டதென்றார்கள். இதெல்லாம் விமானம் செல்லும்போது கேட்ட சத்தங்கள். தாக்குதலின் பின்னர் திரும்பி வரும்போது யாரும் சத்தத்தை கேட்கவில்லை. இதன்மூலம் புலிகள் பிளைட் பாத்தை வேறுவேறாக வைத்து குழப்பியிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.
கொலன்னாவவில் தாக்குதல் நடத்திய புலிகளின் விமானம்
விமானங்களுடன் தொடர்புடைய ஆட்களிற்கு தெரியும், இன்னொரு வழியிலும் முயன்று பார்க்கலாமென்பது. அது விமானத்தின் த்ரஸ்ட் ரிவர்சர் (airplane thrust reverser) மூலமாக ஏற்படும் ஓசையை வைத்து தரையிறங்கும் இடத்தை ஓரளவு கண்டுபிடிக்கலாம்.
த்ரஸ்ட் ரிவர்சர் பற்றி கொஞ்சம் சொல்லிவிடுகிறோம். விமானம் ஓடுபாதையில் தரையிறங்கும்போது வேகம் அதிகமாகவே இருக்கும். வேகத்தை முடிந்தவரை குறைத்து விமானத்தை தரையிறக்குவதே இது. விமானத்தின் இயந்திரத்தை எதிர்ப்புறமாக ஓட விடுவதன்மூலம் வேகத்தை குறைப்பார்கள். இதன்போது வித்தியாசமான ஓசையொன்று ஏற்படும். சாதாரணமாக விமானம் பறக்கும்போது எழும் சத்தம் போல இல்லாமல், கொஞ்சம் விசித்திரமாக இருக்கும்.
சாதாரண மக்களிற்கு இந்த ஓசை வித்தியாசங்கள் புரியாது. அதை புரிய வைப்பதற்காக விமானம் பறக்கும் போது வரும் சத்தத்தையும், த்ரஸ்ட் ரிவர்சர் இயக்கப்படும் சமயத்தில் வரும் சத்தத்தையும் ஒலிப்பதிவு செய்து எல்லைக்கிராமத்தில் உள்ளவர்களிற்கு போட்டு காட்டினார்கள். ஆனால் இதற்கும் பலன் கிடைக்கவில்லை.
பாதுகாப்பு தரப்பு சத்தத்தையும் வைத்து தேடுதல் நடத்தும் என்பதை புலிகள் முன்னரே ஊகித்து, த்ரஸ்ட் ரிவர்சர் முறையை தவிர்த்து, கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பிறேக் மூலம் விமானத்தை நிறுத்தியிருக்கலாம் என்ற அபிப்பிராயமும் விமானப்படை அதிகாரிகள் சிலரிடம் இருந்தது. இது கிளைடிங் லாண்டிங் (airplane gliding landing) எனப்படும்.
புலனாய்வுப்பரிவு, விமானப்படையினர் இப்படி பல வழிகளில் முயற்சித்து பார்த்து புலிகளின் பிளைட் பிளானை கண்டுபிடிக்க முடியாமல் தலையை பிய்த்து கொண்டிருந்தனர்.
வான்புலிகளின் தாக்குதல் முடிந்து ஒரு வாரமாகியும் பாதுகாப்பு தரப்பிடம் எந்த தகவலும் இல்லை. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் என்ன செய்வதென தெரியாமல் தளபதிகள் கையை பிசைந்து கொண்டிருந்தனர். புலிகளின் விமானம் வானத்தில் இருக்கும்போது மட்டும்தான் ஏதாவது வாய்ப்பிருக்கும் என்பதால், அடுத்த முறை வான்புலிகள் வரும்வரை காத்திருப்பதென முடிவு செய்தனர். கட்டுநாயக்கா விமானப்படை தளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன், வவுனியா, சிகிரியா போன்ற விமானப்படை தளங்களையும் உசார்படுத்தியிருந்தனர்.
கட்டுநாயக்காவில் வான்புலிகள் தாக்கதல் நடத்தியது 2007 மார்ச் 25ம் திகதி. ஒரு மாத இடைவெளியின் பின் வான்புலிகள் மீண்டும் புறப்பட்டார்கள். இம்முறை அவர்கள் கட்டுநாயக்காவிற்கு செல்லவில்லை. பலாலி விமானப்படை தளத்தை குறிவைத்தனர்!
ஆனால் புலிகளின் குறி ஜஸ்ற் மிஸ். பலாலி விமானப்படை தளத்தை குறிவைத்தன். அது தவறிவிட்டது. வேறு இராணுவ நிலைகளில்தான் விழுந்தன. சில படையினர் உயிரிழந்தனர். அவ்வளவுதான் பெரிய சேதமில்லை.
இந்த தாக்குதல் சமயத்தில் பூநகரியின் கௌதாரிமுனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கிட்டு பீரங்கிப்படையணியின் ஆட்லறிகளில் இருந்து முதலில் செல் தாக்குதல் நடத்தப்பட்டது. செல் தாக்குதல் நடந்து கொண்டிருந்தபோதே, விசுவமடுவிற்கு அண்மையில் இருந்த சுண்டிக்குளம் பகுதியில் இருந்து ரேக் ஓவ் ஆன வான்புலிகளின் விமானம் ஒன்றுதான் பலாலியில் தாக்குதல் நடத்தியது.
சுண்டிக்குளத்தில் இருந்து புலிகளின் விமானம் ரேக் ஓவ் ஆனதா என நீங்கள் குழம்புகிறீர்களா? ஆம். இதுவரை யாரும் அறியாத தகவல் அது. தமிழ் பக்கம் வாசகர்களிற்கு மட்டுமே இப்போது அந்த தகவல் தெரிந்திருக்கிறது!
இந்த தாக்குதலிற்கு ஒரு மாதத்தின் பின், ஏப்ரல் 29ம் திகதி. இலங்கை- அவுஸ்திரேலிய அணிகளிற்கிடையில் உலககிண்ண இறுதியாட்ட பரபரப்பு சமயத்தில் புலிகளின் விமானங்கள் ரேக் ஓவ் ஆகின. இலக்கு- கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், கெரவலபிட்டிய எரிவாயு நிலைய வளாகம்.
இந்த தாக்குதலில் ஒரு சிக்கல் இருந்தது. கொழும்பின் புறநகர் பகுதி கொலன்னாவ. வான்புலிகளின் முதலாவது தாக்குதல் நடந்த கட்டுநாயக்க விமானத்தளத்திற்கு சென்ற அதே பிளைட் பாத்திலேயே (flight path) கொலன்னாவவிற்கும் செல்ல வேண்டும்.
கடந்த இரண்டு அத்தியாயங்களிலும், வான்புலிகளின் பிளைட் பிளானை எப்படி ஊகித்து வைத்திருந்தார்கள் என்பதையும், பிளைட் பாத்துகளில் உள்ள சிக்கல்களையும் குறிப்பிட்டிருந்தேன்.
புலிகளின் விமானங்களை எதிர்கொள்ள இராணுவம் பாவித்த புது உத்தி. மின்சாரத்தை துண்டித்து விட்டு, தரையிலிருந்து ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்துவது
இம்முறை நிச்சயம் ரிஸ்கான சூழலை சந்திக்க வேண்டுமென்பது வான்புலிகளிற்கு தெரிந்திருந்தது. புலிகளின் பிளைட் பாத்தை ஓரளவு ஊகித்திருந்ததால், நிச்சயம் தரையிலிருந்து தாக்குதல் வரும், விமானங்களை ட்ராக் டவுன் பண்ணிவிடுவார்கள் என்பதால் விமானம் சுட்டுவிழுத்தப்படும் அபாயத்தையும் புரிந்துதான் வான்புலிகள் பறந்தார்கள். அப்படி நடந்திருக்கமானால் 2009 பெப்ரவரி 22ம் திகதி நடந்த புலிகளின் இறுதி வான்தாக்குதலில் உயிரிழந்த இரண்டு வான்புலிகளின் படங்களும், ஒன்றரை வருடங்களின் முன்னரே வெளியாகியிருக்கும். வான்புலிகளான சிரித்திரன், ரூபன் ஆகியோரை பிரபாகரன் நெருக்கமாக அணைத்து வைத்திருந்த அந்த படம் எப்பொழுது எடுக்கப்பட்டது தெரியுமா?
பலர் நினைக்கிறார்கள், இறுதி விமானத்தாக்குதலிற்கு புறப்படுவதற்கு முன்னர் அந்த படம் எடுக்கப்பட்டதாக. உண்மை அதுவல்ல. உயிரிழந்த கரும்புலிகள் பிரபாகரனுடன் நிற்பதை போன்ற புகைப்படங்கள் முன்னர் அடிக்கடி வெளிவரும். அனேகமான புகைப்படங்கள் அந்த தாக்குதலுக்கு புறப்பட முன்னர் எடுக்கப்படுவதில்லை. அனேகமாக கரும்புலி பயிற்சி முடியும் போது, அல்லது ஒரு தாக்குதலுக்கு திட்டமிடும் சமயத்தில் அந்த படங்கள் எடுக்கப்பட்டு விடும்.
வான்புலிகள் பற்றிய இந்த தொடரில் இடையீடாக ஒரு சம்பவத்தை சொல்லிவிட்டு செல்கிறேன். வான்புலிகளின் இறுதி விமானத்தாக்குதலின் பின்னர், அதில் உயிரிழந்த சிரித்திரன், ரூபன் ஆகியோரை பிரபாகரன் இறுக்கமாக அணைத்து வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகியிருந்தது. வழக்கமாக கரும்புலிகளுடன் புகைப்படம் எடுக்கும்போது பிரபாகரனின் முகத்தில் இறுக்கம் இருக்கும். ஆனால் வான்புலிகளுடன் எடுத்த புகைப்படத்தில் கலக்கமும், நெகிழ்ச்சியும் தெரியும். ஏனிந்த வித்தியாசம்?
இதற்கு இரண்டு காரணம் உள்ளது.
முதலாவது, வழக்கமாக தாக்குதலிற்கு நீண்டநாள் முன்பே பிரபாகரன் கரும்புலிகளுடன் புகைப்படங்கள் எடுத்துவிடுவார். மிகச்சில சந்தர்ப்பங்களின் போதே, தாக்குதலிற்கு புறப்படும்போது புகைப்படம் எடுப்பார்கள். இந்த புகைப்படமும் அதிலொன்று. அதனால் அவர் கலங்கியிருக்கலாம்.
இரண்டு, அதில் உயிரிழந்த சிரித்திரன் மீது பிரபாகரனிற்கு நிறைய பிரியம் இருந்தது. அச்சுவேலியை சேர்ந்தவர் சிரித்திரன். புலிகளின் மட்டக்களப்பு அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த கரிகாலனின் மனைவி எழுமதி. இப்படி சொல்வதை விட, பலருக்கு தெரிந்த வேறுமுறையிலும் சொல்லலாம். டொக்ரர் அன்ரி. விடுதலைப்புலிகளின் முக்கிய மருத்துவர். அவரது நெருங்கிய உறவுக்காரர் சிரித்திரன். இந்த உறவுமுறை தெரிவதற்கு முன்னரே, அவர் பிரபாகரனின் மெய்பாதுகாவலர் அணிக்கு வந்து பிரபாகரனுடன் நெருக்கமாகி விட்டார்.
சிலருக்கு சிலரை மிக பிடிக்கும். அது மனித இயல்பு. தனது மெய்பாதுகாவலர் அணியில் இருந்த சிலரில் பிரபாகரனிற்கு அளவுகடந்த பிரியமிருந்தது. அதில் சிரித்திரனும் ஒருவர். அவர் வான் கரும்புலியாக ஆக வேண்டும் என படையணியில் சண்டைபிடித்தே வான்புலிகளிற்கு சென்றார். அது பெரிய கதை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் அதனை கூறுகிறோம். பயிற்சியின் முடிவில் அவரை கண்டபோது பிரபாகரன் நெருக்கமாக அணைத்திருக்கலாம்.
சரி, இப்பொழுது விடயத்திற்கு வருகிறோம். புலிகள் எதிர்பார்த்ததை போலவே நடந்தது. வான்புலிகளிற்கு இருந்த ஒரேயொரு பிளைட் பாத், இராணுவத்தின் அவதானத்திற்கு உட்பட்ட பகுதிதான். மன்னாரில் கணிசமான பகுதியை இராணுவம் கைப்பற்றிவிட்டதால், முன்னர் பாவித்த பிளைட் பாத்தை பாவிக்க முடியாது. அது யுத்த வலயமாக இருந்ததால், இராணுவம் விழிப்பாக இருந்தது. விமான சத்தத்தை கேட்டதும் அலெர்ட் ஆகிவிடுவார்கள். இதனால் வவுனியா, அனுராதபுரம் என இராணுவம் எதிர்பார்த்த பிளைட் பாத்திலேயே சென்றார்கள்.
விமானம் கட்டநாயக்காவிற்கு வருவதற்கு முன்னரே, கண்காணிப்பு சிஸ்டம் அதை கண்டறிந்து அலெர்ட் பண்ணிவிட்டது. வான்புலிகள் கொழும்புற்கு சமீபமாக செல்ல, கீழிருந்து விமான எதிர்ப்பு துப்பாக்கிகளால் சுட்டார்கள். வான்புலிகளின் இலக்கு பகுதிகளில் மின்சாரத்தை கட் பண்ணும் புதிய ஐடியாவையும் அப்பொழுதுதான் நடைமுறைப்படுத்த தொடங்கினார்கள்.
மின்சாரம் இல்லாமல் இருளில் இலக்கை கண்டறியும் வசதி புலிகளின் விமானத்தில் இல்லை. அது வெகு சாதாரண பயணிகள் விமானம்.
இருளில் கொலன்னாவவை சரியாக அடையாளம் காண முடியாமல் குண்டுகளை வெளியில் வீசினர்.
கெரவலபிட்டிய எரிவாயு நிலைய வளாகத்திலும் இலக்கு தவறியது. இந்த இரண்டிலும் துல்லியமாக தாக்குதல் நடத்தியிருந்தால் பேரழிவு நிகழ்ந்திருக்கும்.
வான்புலிகளின் அடுத்த இலக்கு 2008 ஓகஸ்ட் 26ம் திகதி திருகோணமலை கடற்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கேப்பாபிலவில் இருந்து புறப்பட்ட விமானங்கள் முல்லைத்தீவில் கரையை கடந்து கடல் வழியாக திருகோணமலை செல்லும் பிளைட் பிளான் இதற்கு பாவிக்கப்பட்டது. இந்த தாக்குதலும் பெரியளவில் கடற்படைக்கு சேதத்தை ஏற்படுத்தவில்லை.
வான்புலிகளிற்கு பெரிய தலையிடியாக இருந்த விடயமொன்றையும் குறிப்பிட வேண்டும். புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்த தொடங்கியதும் இந்திரா மார்க் ii என்ற முப்பரிமாண ராடரை இலங்கைக்கு வழங்கியது இந்தியா. அந்த ராடர் வவுனியாவில் பொருத்தப்பட்டிருந்தது. வான்புலிகளின் விமானங்கள் புறப்பட்டால் உடனே கண்டறிந்து, இலங்கை முழுவதுமான பாதுகாப்பு சிஸ்டம் அலெர்ட் செய்யப்பட்டு கொண்டிருந்தது. இந்திரா ராடர் வவுனியாவில் இருக்கும்வரை தொல்லையென்பதால், அதை குறிவைத்தனர் புலிகள்.
2008 செப்ரெம்பர் 9ம் திகதி.
வவுனியா பாதுகாப்புபடை தலைமையகத்தின் மீது தரை, வான் தாக்குதலை புலிகள் நடத்தினர். (வடக்கு நடவடிக்கைக்கான தரை, விமான படைகளின் கட்டளை மையம் இதுதான்) தரைவழியாக ஊடுருவிய கரும்புலி அணியொன்று தாக்குதல் நடத்தி, அங்கிருந்த விமான எதிர்ப்பு ஆயுதங்களை அழித்த பின், வான்புலிகள் குண்டுவீசுவார்கள். கொலன்னாவவில் இரவில் குண்டுபோட முடியாமல் தடுமாறிய புலிகள், வவுனியாவில் எப்படி துல்லியமாக குண்டுவீசுவார்கள் என நீங்கள் யோசிக்கலாம்.
முதலில் இராணுவ முகாமிற்குள் கரும்புலிகள் நுழைந்து தாக்குதல் நடத்துவார்கள். கரும்புலிகளின் தாக்குதலில் முகாம் தீப்பற்றி எரியும். வான்புலிகளிற்கு இலக்கை அடையாளம் காண்பதில் சிக்கல் இருக்காதே!
வழக்கமாக புலிகளின் தாக்குதல்களில் எல்லாம் பக்காவாக திட்டமிடப்படும். ஆனால் வவுனியாவில் ஒரு சறுக்கல் நடந்தது. தரையால் சென்ற கரும்புலிகள் இராணுவத்தின் முன்னரணை இரகசியமாக கடந்து இராணுவ வளாகத்திற்குள் நுழைந்தாலும், விமானப்படையின் பிரதான முகாம் வளாகத்திற்குள் நுழைய முடியவில்லை.
கரும்புலிகள் ரூபன், சிரித்திரனுடன் பிரபாகரன்
இந்திரா ராடர், உலங்கு வானூர்திகள், UAV விமானம் என்பன நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானப்படையின் வளாகத்தை சுற்றி ஆளுயர மண்அணை அமைக்கப்பட்டு, இடையிடையே காவலரண்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் இரண்டு காவலரணை தகர்த்தாலே போதும். கரும்புலிகள் உள்ளே நுழைந்து விடுவார்கள். முகாமின் மையத்தில் உள்ள காவலரணில் இருப்பவர்கள் பொதுவாகவே கொஞ்சம் அலட்சியமாகத்தான் இருப்பார்கள். முகாமிற்கு வெளிப்புறத்தில் ஒரு பாதுகாப்பு வேலி உள்ளதென்ற துணிச்சல்தான் காரணம்!
முகாம் மீது தாக்குதல் நடத்துபவர்கள் முதலில் வெளிப்பாதுகாப்பு வேலியைதான் தாக்குவார்கள். அங்குதான் சண்டை ஆரம்பிக்குமென்பதால் உள்ளேயிருப்பவர்கள் கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள். இதொரு உளவியல் விவகாரம்.
ஆனால் அன்று புலிகளிற்கு துரதிஷ்ட நாள். வெளிபாதுகாப்பு வேலிகளை இரகசியமாக கடந்து சென்ற புலிகளின் அணியை, ரோந்து வந்த இராணுவ அணியொன்று கண்டுவிட்டது. புலிகளும் இராணுவ சீருடைதான் அணிந்திருந்தார்கள். என்றாலும், வெளிப்புறத்தில் இருந்து ஒரு அணியொன்று வந்துகொண்டிருந்தது இராணுவத்திற்கு சந்தேகத்தை கிளப்பிவிட்டது.
இராணுவத்தினர் உடனே பாதுகாப்பாக நிலையெடுத்து சங்கேத பாஷையை (code word) கேட்டனர். இந்த இடத்தில் சங்கேத பாஷை பற்றிய சிறிய அறிமுகமொன்றை தர வேண்டும்.
இராணுவதுறை சார்ந்தவர்களிற்கு சங்கேத பாஷையின் முக்கியத்துவம் தெரியும். இராணுவ தொடர்பாடல்கள் எவ்வளவுதான் வளர்ந்தாலும், இரவில் ஆட்களை அடையாளம் காணும் நைட் விஷன்கள் பாவனையில் இருந்தாலும் இன்றுவரை சங்கேத பாஷை இராணுவத்திற்குள் அதிமுக்கியத்துவம் மிக்கதாக இருக்கிறது.
இராணுவ நடவடிக்கைகள், யுத்த சமயத்தில் முகாம்கள், முன்னரங்ககளில் சங்கேத பாஷைகள்தான் உயிர்களை காப்பாற்றுபவை. இரவுநேரத்தில் நமது ஆட்களா, எதிரிகளா என அடையாளம் காண்பதற்காக உருவாக்கப்பட்டது.
முகாமிற்கோ, இராணுவ நடவடிக்கைக்கோ பொறுப்பான அதிகாரி அல்லது கட்டளை மையம் ஒவ்வொருநாளும் மாலையில் அல்லது குறிப்பிட்ட ஒரு கால ஒழுங்கில் சங்கேத பாஷையை உருவாக்கி, அதிகாரிகள் மூலமாக ஒவ்வொருவரிற்கும் தெரியப்படுத்துவார்கள். சங்கேதபாஷை அதிமுக்கியத்துவம் என்பதால் வெளிப்படையாக தொலைத்தொடர்பு கருவிகளில் கூட அறிவிக்கமாட்டார்கள். எதிரிகள் ஒட்டுகேட்டால், சங்கேதபாஷையை அறிந்து உள்நுழைந்து விடுவார்கள்.
சங்கேதபாஷையென்பது, இரண்டு தொடர்பில்லாத சொற்கள். உதாரணமாக முகில், நயன்தாரா என இரண்டு சம்பந்தமில்லாத சொற்கள் இன்று சங்கேத வார்த்தைகளாக அறிவிக்கப்படும். ஒருவர் க
Share this: