ஈழப் போர் இறுதி தினங்கள்! புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்! (சிறப்பு தகவல்கள்)

22 May,2018
 

 


 
ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன.
நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் – இத்தனைக்குப் பிறகும் 40 ஆயிரம் தமிழர்களைப் பலிகொண்ட ஈழப் போர் இறுதி தினங்களில் என்ன நடந்தது என்பது மர்மமாகவே நீடிக்கிறது.
அவ்வப்போது இந்த இருள் பிரதேசம் மீது அடிக்கப்படும் வெளிச்சம் சில விசயங்களை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
சில பல விவாதங்கள், விசாரணைகள்ஸ மீண்டும் இருள்.
தற்போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருகோண மலை மாவட்ட பொறுப்பாளராக இருந்த எழிலன் என்ற சின்னத்துரை சசிதரன் மனைவி அனந்தி, இலங்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவும் விசாரணையில் அவர் தெரிவித்த செய்திகளும், 6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும், ஈழப் போர் இறுதி தினங்கள் குறித்த சில முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளது.
உண்மையில் நடந்தது என்ன?
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான இறுதி யுத்தம், கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்ட கடைசித் தினங்களில் மேற்கொள்ளப்பட்ட சரணடையும் முயற்சி மீது நம்பிக்கை வைத்து, ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட தனது கணவர் உட்படச் சிலரை காணவில்லை என்று, அனந்தி சசிதரனும் மற்றும் நான்கு போராளிகள் உறவினர்களும் இலங்கை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதன் மீதான விசாரணையின் போது சாட்சியமளித்த அனந்தி, ‘இறுதி தினங்களில் விடுதலைப் புலிகள் சரணடைவானது இந்தியா மற்றும் சர்வதேச ஏற்பாட்டில் இடம்பெற்றது.
அப்போது எனது கணவர் எழிலனும் சரணடைந்தார். அதன்முன்பு, சரணடைவது தொடர்பாகத் தமிழகத்தின் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழியுடன், தொலைபேசியில் எழிலன் உரையாடினார்.
அதனை நான் கணவர் அருகில் இருந்து கேட்டேன். மேலும் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டவர்களுடனும் கனிமொழி பேசினார்.
முள்ளிவாய்க்காலில் வைத்து கனிமொழியுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரே 2009 மே 16ஆம் திகதி காலை 8 மணியளவில் எனது கணவர் இராணுவத்திடம் சரணடைந்தார்’ எனக் கூறியுள்ளார். அதன்பின்னர் பல ஊடகப் பேட்டிகளிலும் இதனை உறுதிப்படுத்தினார்.
கனிமொழி
அனந்தியின் இந்தப் பேச்சை கனிமொழி மறுத்துள்ளார். ‘யாரையும் இலங்கை அரசாங்கத்தின் சார்பிலோ இந்திய அரசாங்கத்தின் சார்பிலோ சரணடையும்படி கூறும் அதிகாரம் எனக்கு இல்லை.
மேலும், எனக்குச் சசிதரன் யார் என்றே தெரியாது. இந்நிலையில், நான் தொலைபேசி மூலம் அவருக்கு ஆலோசனை கூறியதாகச் சொல்வது முற்று முழுதிலும் தவறானது.
யுத்தம் அதி உச்சகட்டத்தில் இருக்கும் போது, ஒருவரை இலங்கை இராணுவத்திடம் சரணடையும்படி யாராவது கூறுவார்களா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால், ‘கனிமொழி இதனை மறுப்பார் என எனக்கு முன்னரே தெரியும். அவர் கூறியதற்கான சாட்சியம் என்னிடம் இல்லை. அதனை வைத்து அவர் தான் கூறவில்லையெனக் கூறலாம். ஆனால், அவரது மனசாட்சிக்குத் தெரியும்.
மேலும், இறுதிகட்டப் போரின்போது நடந்தது என்னவென்று சர்வதேசத்துக்குத் தெரியும். பல நாடுகள் இணைந்து இறுதி மோதல்களை முடித்து வைத்தன.
ஆனால், இன்று சர்வதேசம் இதிலிருந்து ஒதுங்கப் பார்க்கின்றது’ என்கிறார் அனந்தி.
விடுதலைப் புலிகள் சரணடைவு புதிய செய்தியல்ல. வெள்ளைக்கொடி பிடித்துக்கொண்டு சரணடைய முன்வந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் போன்றவர்கள் சரவதேச யுத்த நெறிமுறைகளுக்கு மாறாக இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
சரணடைவு பேச்சுவார்த்தைகளில் யார் யார் ஈடுபட்டனர், இலங்கை அரசு ஏன் தன் உறுதிமொழியை மீறியது என்பது குறித்து ஏற்கெனவே பல செய்திகள் வெளிவந்துள்ளன.
சரணடைவு பேச்சுவார்த்தைகளில் புலிகள் தரப்பிலிருந்து ஈடுபட்டவர்களில் ஒருவரும், அப்போது புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளராக இருந்தவருமான கேபி எனப்படும் குமரன் பத்மநாபனும் இது குறித்துப் பேசியுள்ளார். தற்போது இலங்கையில் வசிக்கும் குமரன் பத்மநாபனைத் தொடர்புகொண்டோம்.
‘தற்போதைய சூழலில் தான் பேசுவது பொருத்தமானதல்ல. தனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், வழக்கு முடியும் வரையில் எதையும் பேச வேண்டாம் என்று வழக்கறிஞர்கள் கூறியுள்ளதாக’ குமரன் பத்மநாபன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் வசிக்கும் முன்னாள் போராளிகள் இதுகுறித்துப் பேசுவது சாத்தியமற்ற நிலையில், தற்போது பிரான்ஸில் வசிக்கும் எழுத்தாளரும் முன்னாள் போராளியுமான சாத்திரியை மின்னஞ்சலூடாகத் தொடர்புகொண்டோம்.
‘2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஈழத் தமிழர்களுக்காகத் தனது நாடாளுமன்றப் பதவியைத் துறப்பதற்குத் தயாராக இருப்பதாகக் கூறி தனது தந்தையிடம் கடிதம் ஒன்றை கனிமொழி கையளித்திருந்தார்.
இது கனிமொழியின் தமிழினப் பற்றுத் தொடர்பாக ஈழத் தமிழர்களிடையே நம்பிக்கையைத் தோற்றுவித்திருந்தது.
இதனையடுத்து நேரடியாகவும் சுப.வீரபாண்டியன் ஊடாகவும் கனிமொழிக்கு பா.நடேசனால் இரகசிய வாழ்த்துச் செய்தி அனுப்பி வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நடேசனுக்கும் கனிமொழிக்கும் தொடர்ச்சியான மின்னஞ்சல் தொடர்புகள் இருந்தது. இக்காலகட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் புலிகளுக்கும் இந்திய மத்திய அரசுக்குமான தொடர்பாளராகக் கனிமொழி இருந்தார்’ என்றார் சாத்திரி.
சாத்திரி
மேலும், ‘இந்தப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் தரப்பில் கலந்துகொண்ட கே.பி. மற்றும் உருத்திரகுமாரன் (இன்றைய நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர்) தரப்பினர் ஆமோதிப்புடன், உலக நாடுகளால் முன்மொழியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவு – சரணாகதி திட்டத்தை அதிகாரபூர்வமயப்படுத்தும் அறிக்கை ஒன்று, 03.02.2009 அன்று இணைத்தலைமை நாடுகளால் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இதே நிலைப்பாட்டுடன் 05.02.2009 அன்று இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரால் ஊடக அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன.
07.04.2009 அன்று முற்பகல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கான பதிலை கனிமொழி அனுப்பியிருந்தார்.
ஆங்கிலத்தில் அனுப்பி வைக்கப்பட்ட அந்தக் கடிதத்தின் தமிழ் வடிவம், ‘நடேசன் அண்ணன், நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை நான் அறிவேன்.
நீங்கள் அனுப்பிய மடல் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட எல்லோருடனும் பேசிவிட்டேன். குடியரசுத் தலைவரின் உரையில் தெரிவிக்கப்பட்டமை போன்று ஆயுதங்களைக் கீழே போடுவதற்கான ஒப்புதலை நீங்கள் வெளியிட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
தயவுசெய்து அதைச் செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால் உங்களுக்கு இந்திய அரசாங்கம் உதவக்கூடும் போல் தோன்றுகின்றது. நான் சொல்வதைச் செய்ய முடியாதுவிட்டால் தயவுசெய்து டில்லியுடனேயே கதையுங்கள்.
மக்களைப் பற்றி உள்துறை அமைச்சரும் கரிசனையாக உள்ளார். கிடைக்கும் செய்திகள் கவலையளிக்கும் வகையிலும் தீர்க்கமானவையாகவும் உள்ளன. தயவுசெய்து தவறான வழிகாட்டல்களைப் பின்பற்றாதீர்கள்’ என்றிருந்தது.
‘இலங்கை என்ற நாட்டைப் பிரித்து ஈழம் அமைவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. புலிகள் அந்த நிலைப்பாட்டில் இருக்கும் வரை எம்மால் உதவவும் முடியாது.
புலிகள் தற்போதைக்கு அந்த நிலைப்பாட்டைக் கைவிடத் தயாரா என்பதை நடேசனிடம் கேட்டுச் சொல்லுங்கள். அதன்பின், என்ன செய்ய வேண்டும் என்பதற்கு எம்மிடம் ஒரு திட்டம் உள்ளது’ என்றார் ப.சிதம்பரம்.
இந்தத் தகவல், பா.நடேசனிடம் தெரிவிக்கப்பட்டது. கிளிநொச்சி முற்றாக ராணுவத்திடம் வீழ்ந்து, விடுதலைப் புலிகள் கிளிநொச்சி மாவட்டத்தையே கைவிட்டு வெளியேறி, முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் மட்டும் இருந்த நாட்கள் அவை.
முல்லைத்தீவு மாவட்டத்துக்குள்ளும் நுழைந்த ராணுவம், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களைக் கைப்பற்ற நெருங்கிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில், தலைவர் பிரபாகரன், பா.நடேசன், தீபன், சூசை மற்றும் சில முக்கியத் தளபதிகள் கலந்துகொண்ட அவசர ஆலோசனைக் கூட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் நடந்தது.
அப்போது தீபன், ‘ராணுவம் முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளைக் கைப்பற்றாமல் இன்னமும் சில வாரங்களே தடுக்க முடியும்.
அதன்பின் அவர்கள் கைப்பற்றி விடுவார்கள்’ என்ற நிஜ கள நிலைமையைத் தெரிவித்தார். ஆலோசனையில் கலந்துகொண்ட இரு தளபதிகள் அதை மறுத்து, முல்லைத்தீவை தக்க வைத்துக்கொள்ளும் பலம், புலிகளிடம் இருப்பதாகத் தெரிவித்தனர்.
நீண்ட ஆலோசனையில், ‘எம்மால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையைக் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான சமாதான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில், அண்டன் பாலசிங்கம் தெரிவித்திருந்தது, ஒரு தளபதியால் குறிப்பிடப்பட்டது.
‘இப்போதும் அப்படியொரு நிலைப்பாட்டை எடுக்கலாம். ஈழம் கொள்கையைக் கைவிட்டால் இந்தியாவால் எந்தவிதத்தில் உதவ முடிகிறது என்று பார்க்கலாம்’ என்பது சில தளபதிகளின் கருத்து.
இந்நிலையில், ‘ஈழம் கொள்கையைக் கைவிடுவது தொடர்பான எமது அறிவிப்பை (அல்லது ப்ரபோசலை) புதுடில்லியே தயாரிக்கட்டும். அதை அவர்கள் எமக்கு அனுப்பி வைத்தால், நாம் படித்துப் பார்த்துவிட்டு, ஏற்றுக்கொள்ளும் வகையில் அது இருந்தால் வெளியிடலாம்’ என்று பிரபாகரன் தன் முடிவை அறிவித்தார்.
ப. சிதம்பரம்
இதையடுத்து, புலிகள் வெளியிடுவதற்கான ப்ரபோசலை டில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாமே தம் கைப்படத் தயாரித்தார்.
மிக ரகசியமாகத் தயாரிக்கப்பட்ட அந்த ஆவணத்தைக் கொடுப்பதற்கு முன், சிதம்பரம் விதித்த நிபந்தனை, ‘இந்த ப்ரபோசலை புலிகள் ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி, இந்த ஆவணத்தில் உள்ள விபரம் குறித்து எக்காரணம் கொண்டும் இந்தியாவில் உள்ள யாருக்கும் தெரிவிக்கக்கூடாது’ என்பதுதான்.
சிதம்பரம் நிபந்தனையைப் பா.நடேசன் சீரியசாக எடுக்கவில்லையா அல்லது தமிழகத்தில் உள்ள தமக்குத் தெரிந்தவர்களுக்குக் கூறினால் தப்பில்லை என்று நினைத்தாரா தெரியவில்லைஸ விஷயத்தை வைகோவிடம் கூறிவிட்டார்.
இந்த விஷயங்கள் 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தன. அதே ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் நடக்கவிருந்தன.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியும், மத்தியில் பா.ஜ.க. கூட்டணியும் அமோக வெற்றிபெறும் என்ற விதத்தில் இருந்தன.
இந்நிலையில் வைகோ, ‘நீங்கள் எக்காரணம் கொண்டும் காங்கிரஸ்காரர்களை நம்ப வேண்டாம். அவர்கள் ஆட்சியில் இருக்கப் போவதே இன்னமும் சில மாதங்கள்தான். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வரப்போகிறது.
தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிப் பெறப்போகிறது. ஜெயலலிதா, ஈழத்துக்கு ஆதரவாக உள்ளார். இந்த நேரத்தில் ‘ஈழம் கொள்கையைக் கைவிடுகிறோம்’ என்று கூறி எல்லாவற்றையும் கெடுத்து விடாதீர்கள். மத்தியில் ஆட்சி மாறட்டும். மறுநாளே யுத்தத்தை நிறுத்திவிடலாம்’ என்றார். குழம்பிப் போனார் நடேசன்.
நடேசன் அடுத்துப் பழ.நெடுமாறனை தொடர்புகொண்டார். அவரும் வைகோ சொன்னதையே சொன்னார். இவர்கள் இருவரது கருத்தும் பிரபாகரனிடம் சேர்க்கப்பட்டது.
அப்போது, இலங்கை ராணுவம் முல்லைத்தீவை கைப்பற்றாமல் இன்னும் சில மாதங்களுக்கு (இந்திய லோக்சபா தேர்தல் முடிவு வரும்வரை) தாக்குப்பிடிக்க முடியும் என்ற கருத்து சில தளபதிகளால் சொல்லப்பட்டது. பிரபாகரன் அதையே நம்பியதாகத் தெரிகிறது.
சில நிமிடங்கள் யோசித்த பிரபாகரன், தனது உதவியாளர் ஒருவரை அழைத்து, சிதம்பரம் தயாரித்துக் கொடுத்த ஆவணத்தில், ‘நிராகரிக்கப்பட்டது’ என எழுதி, கையெழுத்திட்டு, நடேசனிடம் கொடுத்தார்.
ப. சிதம்பரம் தயாரித்த ப்ரப்போசலின் ஆயுள் அத்துடன் முடிந்தது.
இதற்கிடையே அமெரிக்கத் திட்டம் ஒன்றும் ப்ரபோசல் அளவில் இருந்தது. இந்திய திட்டம், ‘ஈழம் கோரிக்கையைக் கைவிட வேண்டும்’ என்ற அளவில் இருந்தது.
அமெரிக்கத் திட்டமோ, ஒரு படி அதிகமாகி, ‘புலிகள் சரணடைய வேண்டும்’ என்ற வகையில் இருந்தது. அமெரிக்கா கப்பல் கொண்டுவந்து பிரபாகரனையும் தளபதிகளையும் வெளியேற்றும் அந்த ‘அமெரிக்கத் திட்டத்தை’யும் பிரபாகரன் நிராகரித்திருந்தார்.
யுத்தம் துரிதகதியில் நடந்து கொண்டிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நகரங்கள் ஒவ்வொன்றாக ராணுவத்திடம் வீழ்ந்தன. புலிகள், சிறிய பகுதி ஒன்றுக்குள் முடக்கப்பட்டார்கள்.
அந்தப் பகுதியையும் ராணுவம் நெருங்கி வரத்தொடங்கியது. இந்த நிலையில், புலிகள் மீண்டும் இந்தியாவைத் தொடர்புகொள்ள முயன்றார்கள். இந்தியாவுடன் மீண்டும் பேசிப் பார்க்கும்படி கேபியிடம் பிரபாகரன் சொன்னார்.
வைகோ
26.04.2009 அன்று ஒருதலைப்பட்சமான முறையில் போர் நிறுத்தத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்தனர். அதனை இலங்கை அரசு நிராகரித்தது.
இதற்கிடையே பா.நடேசனுடன் தொடர்பில் இருந்த வைகோ, “இன்னும் இரண்டு வாரங்கள் தாக்குப் பிடியுங்கள். மத்தியில் அரசு மாறிவிடும். ஆட்சி மாறினால், மறுநாளே யுத்த நிறுத்தம்’ என்றார்.
இரண்டு வாரங்கள் தாக்குப் பிடிப்பதே சிரமம் என்ற நிலை வன்னியில் இருந்தது. இந்திய லோக்சபா தேர்தல் முடிவுகள் மே 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் கூட்டணியே மீண்டும் ஜெயித்தது.
அதன்பின்னர் தமிழகத்தோடு மட்டுமல்ல இந்தியாவில் யாரோடும் தொடர்புகொள்வதில் பிரயோசனம் இல்லை என்கிற நிலைமை. அடுத்த 48 மணி நேரத்துக்குள் மே 18ஆம் தேதி விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு வந்தது.
இலங்கை ராணுவத்தின் 53ஆம் டிவிஷனின் கீழ் செயல்பட்ட 4ஆம் விஜயபாகு ரெஜிமென்ட் படைப்பிரிவு, லெப்டினென்ட் கர்னல் ரொஹித அலுவிஹர தலைமையில் தேடுதலை மேற்கொண்டபோது, நந்திக்கடல் ஓரம், கோரைப் புற்களில் சிக்கிய நிலையில் பிரபாகரனின் உடல் கிடைத்ததாக இலங்கை ராணுவம் மே 19ஆம் தேதி அறிவித்தது.
இதன்முன்னர், இறுதி நேரத்தில் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவில் இருந்தவர்கள், தங்களை யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்கிற அங்கலாய்ப்பில் உலகத்தில் தங்களுக்குத் தெரிந்தவர்களோடு எல்லாம் தொடர்புகளை ஏற்படுத்தினார்கள். அப்படிச் சிலர் கனிமொழியோடும் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கலாம்.
பழ. நெடுமாறன்
புலிகள் சரணடையும் தீர்மானம் எடுத்தபோது முதலில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தையும் பேச்சுவார்த்தைக்கு அனுசரணை வழங்கிய நோர்வே, ஐ.நா. சபையின் தென்கிழக்காசிய பிராந்திய பிரதிநிதி ஆகியோரைத்தான் தொடர்புகொண்டார்கள்.
புலிகள் தலைமை சரணடையும் முடிவு, 2009 மே 15ஆம் தேதி அன்றைய சர்வதேச தொடர்பாளர் கே.பி. மூலமாக நோர்வேக்குத் தெரிவிக்கப்பட்டது.
அடுத்தடுத்த நாட்கள் விடுமுறை நாட்கள். ‘ஐநா சபை அதிகாரிகளோடு அலுவலகத்தில் தொடர்புகொள்ள முடியாது; எனவே இந்திய அரசோடு தொடர்புகொள்ளலாம் என நோர்வே அரசு வழங்கிய ஆலோசையின்படி அன்றைய மத்திய அமைச்சர் சிதம்பரத்தோடு தொடர்புகொள்ள முயன்றார்கள்.
அப்போது புலிகளுக்கும் இந்திய மத்திய அமைச்சருக்கும் இடையில் தொடர்பாளராக கனிமொழி இருந்தார்.
இந்நிலையில் இப்போது சிலர் கனிமொழி சொன்னபடிதான் புலிகள் சரணடைந்தார்கள் என்பது போலச் செய்திகளைப் பரப்புகிறார்கள். அவர் புலிகளைச் சரணடையும் படி சொல்லவும் முடியாது. அதற்கான அதிகாரமும் அவருக்கு இல்லை.
கனிமொழியை நம்பி சரணடையும் முடிவை எடுக்கும் அளவுக்குப் புலிகள் அமைப்பும் இல்லை. ஒரு நாட்டின் உள்நாட்டு யுத்தத்தை அடுத்த நாட்டின் முதலமைச்சரோ அவரின் வாரிசோ அடுத்த நாட்டின் மத்திய அமைச்சரோ தடுத்து நிறுத்திவிட முடியாது. இவையெல்லாம் தெரிந்தும் அனந்தி சசிதரன் அண்மைக்காலமாகப் பேசி வருபவை தேர்தல் அரசியலைக் குறி வைத்ததாகவே தெரிகிறது’’ என்கிறார் சாத்திரி.
யுத்தத்தின் இறுதி நாட்கள் பேச்சுவார்த்தையில் புலிகள், இந்திய அரசு இரண்டு தரப்புக்கும் இடையே தொடர்பில் இருந்த பேராசிரியர் சுப. வீரபாண்டியன், அருட் தந்தை ஜகத் கஸ்பார் இருவரும்கூட ‘அனந்தி சசீதரன் பேச்சு தேர்தல் அரசியலை மையமாக வைத்தே நகர்த்தப்படுகிறது’ எனப் புதிய தலைமுறையிடம் தெரிவித்தனர்.
சுப. வீரபாண்டியன்
சுப. வீரபாண்டியன், ‘போர் நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்ய முடியுமா என மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகளில் என் பங்களிப்பு இருந்தது.
கனிமொழி தூண்டுதலில் ப. சிதம்பரம் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார். அதனடிப்படையில் ஓர் ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு அதில் புலிகள் தரப்பில் கையெழுத்துப் போடுவார்களா என என்னிடம் கேட்டார்கள். அதனை நான் புலிகளுக்குத் தெரிவித்தேன்.
ஆனால், முயற்சி தொடரவில்லை. பின்னால், தமிழகத்தில் இருந்து சில தலைவர்கள் அதனைத் தடுத்துவிட்டார்கள் எனக் கேள்விப்பட்டேன்.
மே 17, 18இல் மீண்டும் 48 மணி நேரத்துக்காவது போர் நிறுத்தம் செய்ய முடியுமா என முயற்சி மேற்கொண்டோம். ஆனால், அந்த முயற்சியும் இப்போது குறிப்பிடப்படுவதுபோல் சரணடைவதற்கான முயற்சி அல்ல, போர் நிறுத்தத்துக்கான முயற்சிதான்.
மூன்று தலைமுறைகளாக நடைபெற்றுவரும் போராட்டம் அது. அந்தப் போராட்டத்தில் கனிமொழி முடிவு எடுக்க முடியுமா? ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் திமுகவுக்கு எதிராக எதாவது ஒன்று உருவாக்கப்படும்.
இப்போது அனந்தி மூலம் அது தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டு அரசியலுக்கு இன்னமும் ஈழ அரசியல் பயன்படுகிறது என்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறது’ என்றார்.
ஜெகத் கஸ்பர், ‘ஜனவரி 28, 29, 30 தேதிகளையொட்டியும் மே 17,18 இறுதி நாட்களிலுமாக இரண்டு முறை போர் நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஜனவரி கடைசித் தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்த முயற்சியில், இரண்டு பக்கமும் அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்களுடன் எனக்கு இருந்த தொடர்புகள் மூலம் ஒரு சிறு பங்களிப்பை நான் செய்தேன்.
அப்போது, இந்தியத் தரப்பில் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான விருப்பம் முன்வைக்கப்பட்டு அதனை இரு தரப்புமே ஒப்புக்கொள்ளப்பட்டு ஒரு வரைவு தயாரிக்கப்பட்டது.
இந்நிலையில் திடீரென இந்த முயற்சி மேற்கொண்டு நகராமல் நின்றுவிட்டது. அப்போது, புலிகள் தன்னிச்சையாகப் பேச்சுவார்த்தையைத் துண்டித்துக்கொண்டார்கள் என இந்தியத் தரப்பில் சொல்லப்பட்டது. இதற்கு அனந்தபுரம் சமர் மீது புலிகள் வைத்திருந்த ஒரு நம்பிக்கைக் காரணமாக இருக்கலாம் என நான் அனுமானித்தேன்.
ஜெகத் கஸ்பர்
அனந்தபுரம்தான் இறுதி யுத்தத்தில் கடைசித் திருப்புமுனையாக அமைந்தது. அந்த யுத்தத்தில் இலங்கை ராணுவம் ரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தியதை புலிகள் எதிர்பார்க்கவில்லை.
அந்த யுத்த்த்தில் புலிகளின் முக்கியமான தளபதிகள் பலரும் இறந்துவிட்டார்கள். இதனால், அனந்தபுரத்துடன் கிட்டத்தட்ட போர் முடிவுக்கு வந்துவிட்டது.
அதுவரைக்கும் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த முயற்சி என்பது அதன்பிறகு புலிகள் சரணடைவதற்கான முயற்சியாக மாறிவிட்டது. ஏனெனில், சண்டையை நிறுத்த வேண்டிய தேவை இலங்கை அரசுக்கு இருக்கவில்லை.
கடைசித் தினங்களில் சரணடையும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது பிரபல போர்ச் செய்தியாளர் மேரி கொல்வின், இலங்கை முன்னாள் எம்பி சந்திரா நேரு, விஜய் நம்பியார் உட்படப் பலர் அதில் ஈடுபட்டிருந்தார்கள்.
அதன் அடிப்படையில்தான், வெள்ளைக்கொடிகளைக் காண்பித்து நடேசன், புலித்தேவன் போன்றவர்கள் சரணடைய முன்வந்தார்கள். பொதுவாக இதுபோன்ற சரணடையும் சம்பவங்களில் ஐநா பிரதிநிதி ஒருவர் இருக்க வேண்டும்.
விஜய் நம்பியார்
விஜய் நம்பியார் அப்போது கொழும்பில்தான் இருந்தார். ஆனாலும், ஐநா பிரதிநிதி ஒருவர்கூடக் களத்துக்கு வரவில்லை. ஐநா பிரதிநிதி இல்லாததைப் பார்க்கும்போது இதில் ஒரு சதி இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.
இலங்கை அரசைப் பொருத்தவரைக்கும் தமிழருக்காகப் பேச எவருமே உயிரோடு இருக்கக்கூடாது. நடேசனும் புலித்தேவனும் சரணடைந்து கைது செய்யப்பட்டாலும் அவர்கள் யுத்த கைதிகளாகவே நடத்தப்பட வேண்டும்.
நாளை அனைத்துலக ஏற்பாட்டில் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் போது புலிகள் தரப்பிலும் பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென உலக நாடுகள் நிச்சயம் வலியுறுத்தும்.
அத்தகு சூழலில் தகுதியோடு தமிழரை பிரதிநிதித்துவப்படுத்த எவருமே இருக்கக்கூடா தென்பதுதான் அவர்கள் கணக்கு’ என்று புதிய தலைமுறையிடம் தெரிவித்தார்.
ஆனால், இந்தியத் தரப்பில் முன்னெடுக்கபட்ட போர் நிறுத்த முயற்சிகளை வைகோ ஆலோசனைபடிதான் புலிகள் நிராகரித்தார்கள் என்ற செய்தியை ஏற்கெனவே வைகோ மறுத்துள்ளார்.
இது குறித்துக் குமரன் பத்மநாபன் கூறியிருந்ததற்கு மறுப்புத் தெரிவித்திருந்த வைகோ, ‘போர் நிறுத்தம் ஏற்பட்டால் என்னைவிட, பழ.நெடுமாறனை விட நிம்மதி அடைகிறவர்கள் யாரும் இருக்க முடியாது.
எவ்வகையிலாவது போர் நிறுத்தம் ஏற்பட்டுவிடாதா என்று நாங்கள் துடித்தோம். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் புலிகள் அமைப்புக்கும், அவர்கள் அங்கே எடுக்க வேண்டிய நிலைப்பாட்டைப் பற்றி, எந்தக் காலத்திலும் நாங்கள் யோசனை கூறியது கிடையாது.
ஈழத்தின் நிலைமைக்கு ஏற்ப, அம்மக்களின் நலனுக்கு ஏற்ற முடிவுகளைப் பிரபாகரன் மேற்கொள்வார்’ என்று கூறியுள்ளார்.
மேரி கொல்வின்
இந்நிலையில், ஈழப் போராட்டம் குறித்துத் தொடர்ந்து எழுதிவரும் சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் (பெயர் வெளியிட விரும்பவில்லை), ‘இறுதி யுத்தத்தில் சரணடையும் முடிவை போராளிகளுக்குச் சொன்னது மேரி கொல்வின் தரப்பும் மேற்குலகமும்தான்.
அப்போது நடைபெற்ற புலிகளுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் இடையிலான பரிமாற்றங்கள் பல வழிகளில் நடந்தது.
அதில், கனிமொழி தரப்பு மட்டுமல்லாமல் புலிகளின் நெருங்கிய நண்பர்களாகத் தமிழகத்தில் இருந்த பல அரசியல் தலைவர்களும் ஈடுபட்டதோடு சில கடிதப் பரிமாற்றங்களையும் மேற்கொண்டனர்.
அவர்கள் இன்று மவுனமாக உள்ளனர். அவர்கள் மவுனம் கலைத்தால் பல விஷயங்கள் வெளிவரலாம்’ என்று புதிய தலைமுறையிடம் தெரிவித்தார்.
தமிழகத் தலைவர்கள் மவுனம் கலைப்பார்களா?
————————————————————————————————————————–
விடுதலைப்புலிகளும் சரணடைவும்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கியப் பணியாற்றிய ஒருவர், முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் புலிகள் சரணடைவு குறித்து, தெரிவித்தவை இவை.
‘புலிகளின் சரணடைவு மூன்று நான்கு வகையில் நிகழ்ந்தது.
சண்டை நடந்து கொண்டிருக்கும்போதே உதிரிகளாக ஒரு தொகுதிப் புலிகள் படையினரிடம் சரணடைந்தார்கள். இவர்கள் கடல் மார்க்கமாகவும் தரை வழியாகவும் புலிகளுக்கே தப்பி, படையினரிடம் சரணடைந்தனர்.
குறிப்பாக, தங்கள் குடும்பத்தினருடன் இணைந்த நிலையில் இந்தச் சரணடைவு நடந்தது.
அடுத்தது, யுத்தத்தின் இறுதியின்போது நடந்த சரணடைவு. வெள்ளைக்கொடியுடன் நடந்த இதில் புலித்தேவன், நடேசன், ரமேஸ் என்ற இளங்கோ மற்றும் நடேசனின் குடும்பத்தினர் என ஒரு தொகுதியினர் சரணடைந்தனர்.
மூன்றாவது, யுத்தம் முடிந்த பிறகு அல்லது யுத்த ஓய்வுடன் நடந்த சரணடைவு.
இதன்போது புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒரு தொகுதியினர் (ஏறக்குறைய 100 பேருக்கு மேல்) சரணடைந்தனர்.
இதில்தான் எழிலன், நீதித்துறைப் பொறுப்பாளர் பரா, கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை, அரசியற்துறை துணைப் பொறுப்பாளர் தங்கன், அரசிற்துறை முக்கியஸ்தர் இளம்பரிதி, விளையாட்டுத் துறைப் பொறுப்பாளர் பாப்பா, நிதர்சனம் நிறுவனப் பொறுப்பாளர் மிரேஸ்,
தமிழீழத் தொலைக்காட்சிப் பொறுப்பாளர் திலகன், தமிழீழப் போக்குவரத்துக் கழகப் பொறுப்பாளர் குட்டி, நகை வாணிபப் பொறுப்பாளர் பாபு, தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளரும் பிரபாகரனின் நெருங்கிய சகாவுமான பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன்), புலிகளின் முக்கியஸ்தர் யோகரட்ணம் யோகி எனப் பலர் சரணடைந்தனர்.
இவர்களைப் பற்றிய எந்த விவரமும் இன்றுவரை இல்லை. இவர்கள் முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் கிறிஸ்தவ மதகுருவான பிரான்ஸிஸ் யோசப்புடன் இணைந்து படையினரிடம் சரணடைந்திருந்தனர்.
முக்கியமான விடயம் என்னவென்றால், புலிகளின் தலைமைக்குரியவர்கள் – தளபதிகள் எல்லோரும் கொல்லப்பட்டு விட்டனர் அல்லது தங்களைத் தாங்களே மாய்த்துக்கொண்டனர். மிஞ்சிய முக்கியஸ்தர்கள்தான் மதகுருவுடன் சென்றனர்.
இதனை அடுத்தத் தொகுதியினர் பொதுவாகவே சரணடைந்தவர்கள். இவர்கள்தான் அதிகம். ஏறக்குறைய 10 ஆயிரத்துக்கு மேல். இன்னொரு தொகுதியினர் சரணடையாமல் மக்களோடு மக்களாக அகதி முகாம்களுக்குச் சென்றனர்.
இவர்களைப் பிற போராளிகளும் மக்களும் காட்டிக் கொடுத்தனர். எப்படியோ இவர்களைப் படையினர் முகாம்களில் வைத்துக் கைது செய்துகொண்டு சென்றனர்.
மற்றொரு தொகுதியினர் படையினரின் பகுதிக்கு மக்களோடு வந்தனர். ஆனால், படையினரிடம் சரணடையாமல் அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டுத் தப்பிச் சென்றனர். ஏனையவர்கள் இடைநிலையாளர்கள். தப்பிச் சென்றவர்களும் இடைநிலையாளர்களே.
விதிவிலக்காக ஒரு சரணடைவு நடந்தது. ஈரோஸ் இயக்கத்தின் தலைவராக இருந்து பின்னர்ப் புலிகளுடன் இணைந்து கொண்ட வேலுப்பிள்ளை பாலகுமாரனின் சரணடைவு.
இவர் தனியாக மக்களுடன் இணைந்து சரணடைந்தார். இவருடன் இவருடைய மகன் சூரியதீபனும் பாலகுமாரனின் உதவியாளரும் கூடவே சரணடைந்தனர். இவர்களைப் பற்றிய விவரங்களும் இன்றுவரை இல்லை.
, 25-06-2015 இதழில் வெளியான கட்டுரையிது. போர் முடிந்து 9ம் வருட நினைவு நாளைமுன்னிட்டு   இக்கட்டுரை மீள்பிரசுரிக்கப்படுகிறது)

 Share this:

NEAR REJSE. DK

ayngaran.dk

.

DENMARK

Kommende Film danmark

DANMARK TAMIL FILM

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk

Denmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014 புதன் திறப்புவிழா

NAER CAR RENTAL SERVICES

swees travels

தொலைபேசி எண்: 22666542 dk

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

திருமண நல் வாழ்த்துக்கள்

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

இணையத்தளங்கள் இணைப்புக்கள்

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies