பெண்களின் வயதைக் காட்டிக்கொடுக்கும், பல சமயங்களில் வயதை அதிகப்படுத்திக் காட்டும் ஒரு பாகம், கழுத்து. சுருக்கம், மடிப்பு, எண்ணெய்ப் பிசுக்கு, கருமை எனக் கழுத்துப் பகுதியின் அழகைக் குறைத்து காண்பிக்கும் பல காரணங்கள் இருக்கின்றன.
அவற்றுக்கெல்லாம் தீர்வு சொல்கிறார், அரோமே தெரபிஸ்ட் கீதா அசோக்.
* தலையணையை மாத்துங்க!
உயரமான தலையணை, ஒரு தலையணைக்கு மேலே இன்னொரு தலையணை எனத் தூங்கும் பெண்களுக்குத்தான் சீக்கிரமே கழுத்தில் கோடுகள், சுருக்கங்கள் விழும். சிலருக்கு டபுள் சின் ஏற்படும். இப்படிப்பட்டவர்கள், ‘பெட்டர் லேட் தென் நெவர்’ என மனதை தேற்றிக்கொண்டு, இன்று முதல் தலையணைக்கு குட்பை சொல்லிவிட்டுத் தூங்க ஆரம்பியுங்கள். படிப்படியாகக் கழுத்துச் சுருக்கம் குறைய ஆரம்பிக்கும். முகத்துக்கு அதிக ரத்த ஓட்டம் கிடைப்பதால், முகம் எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
* தலையை உயர்த்தி எச்சில் விழுங்குங்க!
ஒரு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, உங்கள் கழுத்தைப் பின்பக்கமாக சாய்த்துக்கொண்டு, எச்சிலைக் கூட்டி விழுங்குங்கள். இப்படிச் செய்யும்போதே, கழுத்தில் இறுக்கமாக உணர்வீர்கள். இந்தப் பயிற்சியைத் தினமும் 10 முறையாவது செய்துவந்தால், மெல்ல மெல்லக் கழுத்தின் சுருக்கங்கள் குறைய ஆரம்பிக்கும். கழுத்துச் சுருக்கம் இல்லாதவர்களும் செய்யும்போது, வராமல் தடுக்கும்.
* தண்ணீரும் கழுத்தை அழகாக்கும்!
ஒரு சேரில் உட்கார்ந்துகொண்டு, வாய் நிறையத் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். பிறகு, தலையை அப்படியே பின்பக்கமாக சாயுங்கள். இப்படி சில நிமிடங்கள் இருந்துவிட்டு, நார்மல் பொஸிஷனுக்கு வந்துவிடுங்கள். இந்தப் பயிற்சியைத் தினமும் 10 தடவை செய்துவந்தால், கழுத்துச் சுருக்கங்கள் குறைய ஆரம்பிக்கும். இல்லாதவர்களுக்கு வராமல் தடுக்கும்.
* கட்டில் விளையாட்டு!
நாம் குழந்தையாக இருந்தபோது, கட்டிலின் மீது மல்லாந்து படுத்துக்கொண்டு, தலையை மட்டும் கட்டிலின் விளிம்பில் தொங்கவிட்டு விளையாடுவோம் இல்லையா? அந்த விளையாட்டை இப்போதும் தினமும் கொஞ்ச நேரம் விளையாடுங்கள். கழுத்தில் கோடுகளாவது, சுருக்கங்களாவது. ஒன்றும் வராது. சுருக்கம் இருந்தாலும் படிப்படியாக சரியாகிவிடும். டபுள் சின் பிரச்னையும் இந்த விளையாட்டு சரி செய்துவிடும்.
* ஜவ்வரிசி கஞ்சி பேக்!
ஜவ்வரிசியைப் பொடித்து, முல்தானிமிட்டியுடன் கலந்து, அந்தக் கலவை இறுக்கமாவதற்குள் கழுத்தில் அப்ளை செய்யுங்கள். அப்படிச் செய்யும்போது, கீழிருந்து மேல் நோக்கிச் செய்துவிட்டு, கழுத்தைச் சற்று தூக்கியபடி வைத்துக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்துகொள்ளுங்கள்.
இந்த பேக் தடவிக்கொண்ட பிறகு, பேசவோ, சிரிக்கவே, நடக்கவோ கூடாது. அப்படிச் செய்தால், கழுத்துச் சுருக்கம் அதிகமாகிவிடும். பேக் போட்டதும் அமைதியாக உட்கார்ந்துகொள்ளவும். ஜவ்வரிசி பேக் காய்ந்து இறுக்கமானதும், குளிர்ந்த நீரால் கழுத்தை கழுவுங்கள். இந்த பேக், கழுத்தின் தோல் மற்றும் தசையை இறுக்கமாக்கும்.
* ஸ்பைருலினா பேக்!
ஸ்பைருலினா பவுடருடன் முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து, கழுத்தில் மேல் நோக்கித் தடவுங்கள். காயும் வரை கழுத்தை சற்று தூக்கியபடி நாற்காலியில் உட்கார்ந்துகொள்ளுங்கள். காய்ந்ததும், குளிர்ந்த நீரால் கழுத்தை கழுவுங்கள். இந்த பேக், கழுத்தில் இருக்கும் மெல்லியக் கோடுகளையும் சரிசெய்து, வழுவழுவென வனப்பாகக் காட்டும்.
* சோள மாவு பேக்!
ஒரு டீஸ்பூன் சோள மாவுடன் கால் டீஸ்பூன் தேன், கால் டீஸ்பூன் கிளிசரின் சேர்த்து, கழுத்தில் மேல் நோக்கி அப்ளை செய்து, காய்ந்ததும் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இப்படிச் செய்துவந்தால், கழுத்தில் கோடுகள், சுருக்கங்கள் இல்லாமல் இளமையாக இருக்கும்.
* அடிக்கடி டோனர் பயன்படுத்துங்க!
நேரம் கிடைக்கும்போதெல்லாம், டோனரில் முக்கியெடுத்த பஞ்சினால், கழுத்தை அடிக்கடி துடைத்து வந்தாலும் சுருக்கங்கள் வராது.
* ஆம்சூர் பவுடரும் தக்காளியும்!
ஒரு டீஸ்பூன் ஆம்சூர் பவுடர், ஒரு டீஸ்பூன் தக்காளி அரைத்த விழுது, ஒரு டீஸ்பூன் கடலை மாவு, 10 சொட்டு எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, கழுத்தில் பேக்காக போட்டுவந்தால், கழுந்துப் பகுதியின் கருமை, எண்ணெய்ப் பிசுக்கு, அழுக்கு நீங்கி, அழகாகவும் இளமையாகவும் இருக்கும்.
* தேங்காய் எண்ணெய்யும் உதவி செய்யும்!
தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயைக் கழுத்தில் தடவி, மேல்நோக்கி பரபரவென தேய்த்துவந்தால், கருமை மற்றும் சுருக்கம் இல்லாமல் அழகாக இருக்கும்.