கெட்ட குமாரன்

23 Mar,2018
 




எங்கள் பள்ளிக்குள் நுழைய மொத்தம் 37 வழிகள் இருந்தன!

அதில் ஹெட்மாஸ்டருக்குத் தெரிந்த அதிகாரபூர்வ வழிகள் மூன்றுதான். கனகராஜ், சாலமன் போன்ற பள்ளியின் பியூன்களுக்குத் தெரிந்தது எட்டு வழிகள். மீதம் உள்ள 26 வழிகளும் எங்களைப் போன்ற மாணவர்கள் மட்டுமே அறிந்தது. ஒவ்வொரு திருட்டு வழியும் கண்டுபிடிக்கப் படும்போதெல்லாம், இன்னொரு ரகசிய வழி திறக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். எங்கள் நகரின் மையத்தில் பிரமாண்டமாக நிலைகொண்டிருக்கும் எனது பள்ளிக்கும் அதன் மாணவர்களுக்குமான அந்தரங்க சிநேகிதம் அது.

தினமும் காலை மிகச் சரியாக 8.50-க்குப் பள்ளியின் பிரதான நுழைவாயில் இழுத்து மூடப்படும்போது, பள்ளிக்கு வெளியில் குறைந்தது  50 மாணவர்களாவது பிரேயர் வரிசையில் நிற்க முடியாமல் சிக்கிக்கொள்வது உண்டு. அந்த எண்ணிக்கை, சில சமயங்களில் குறையும் அல்லது கூடும். எப்படி இருந்தாலும், நானும் இளங்கோவும் நிச்சயம் அதில் இருப்போம்.

அந்த நீண்ட பிரேயர் மீட்டிங் முடிந்து, வரிசைப்படி எல்லா மாணவ, மாணவிகளும் அவரவர் வகுப்புகளுக்குச் சென்ற பிறகுதான் அந்தச் சொர்க்கவாசல் திறக்கப்படும். தாமதமாக வந்த மாணவர்கள் அனைவரும் தலையைக் குனிந்தபடி நடந்து செல்ல, பலி ஆடுகளைப் போல தலைமை ஆசிரியர் அறைக்கு முன் நிறுத்தப்படுவார்கள். தண்டனை அளிப்பதற்கு என்றே சிறப்புப் பயிற்சி பெற்ற சில ஆசிரியர்கள் அங்கே காத்திருப்பார்கள். பிரம்படி, வெயிலில் முட்டி போடுதல், கிரவுண்டைச் சுற்றி ஓடுதல்... என அவர்களின் மனநிலைக்கு ஏற்ப, எங்களுக்கான தண்டனைகள் முடிவு செய்யப்படும்.

p74c.jpg

ஒன்பதாம் வகுப்புக்கு வந்தவுடன், இதுபோன்ற தண்டனைகள் எல்லாம் எங்களின் தன்மானத்துக்குச் சவால்விடுவதாக மாறிவிட்டன. ஒருமுறை, உடற்பயிற்சி ஆசிரியரிடம், ''சார், அடிக்கிறதுனா தனியாக் கூட்டிட்டுப் போய் அடிங்க. பொண்ணுங்க முன்னாடி அடிக்கிற வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க!'' என்று இளங்கோ பொங்கி எழுந்தவுடன், தண்டனையின் வீரியமும், தன்மானத்தின் அளவுகளும் வெகுவாக அதிகரித்துவிட்டன. அதிகாரவர்க்கத்தில் எங்களுக்கு எதிரான சூழலும், எப்போது எங்களைப் பார்த்தாலும் கெக்கேபிக்கே எனச் சிரித்துவைக்கும் சில பெண்களும் சேர்ந்து, இதற்கான ஒரு தீர்வைப் பற்றி எங்களை வெகுவாகச் சிந்திக்கவைத்தார்கள்.

அன்று மாலை, லட்சுமி டீக்கடையில் வடை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதுதான் இளங்கோ, ''நாமதான்டா இப்படித் தினமும் அடி வாங்கிட்டு இருக்கோம். பெரிய பசங்க எல்லாம் வேற, வேற வழியில உள்ள போயிடுறாங்க'' என்ற அந்த அதிர்ச்சித் தகவலைச் சொன்னான்.

''எப்படிடா முடியும்? எல்லா கேட்லயும் கனகராஜும் சாலமனும் நிப்பாங்களேடா?'' என்று கேட்டதற்கு,

''அதெல்லாம் நம்மைப் போல கேட் வழியாப் போறவங்களுக்குத்தான். மத்தவனுக்கு எல்லாம் ஸ்கூலைச் சுத்தி கேட்'' என்றான்.

100 ஆண்டுகளுக்கும் முன்பாக, எங்கள் சிறிய நகரம் பெருமளவு, கல்வியறிவு இல்லாது இருந்ததைக் கண்ட டென்மார்க் தேசத்தினர், இங்கு வந்து தொடங்கிய பள்ளி அது. சுற்றிலும் மதில் சுவற்றுடன், பெரிய பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்த அந்தப் பள்ளியைச் சுற்றித்தான், எங்கள் நகரம் தனது தெருக்களால் அணைத்தபடி வளர்ந்திருந்தது.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை, நானும் இளங்கோவும், எங்கள் பள்ளியின் ரகசிய வழிகளைக் கண்டுபிடிக்கும் சாகசப் பயணத்தைத் தொடங்கினோம். அதுவரை, பள்ளியின் உள்பக்கம் இருந்துதான் அந்தக் கோட்டை போன்ற உயரமான மதில் சுவற்றைப் பார்த்திருக்கிறேன். இப்போது, அதன் மேலே இருந்து பார்க்கும்போதுதான் ஒன்றல்ல... இரண்டல்ல... பல திறப்புகள் பள்ளிக்குள் செல்வதற்கு இருந்தன என்பது தெரிய வந்தது. இதுக்குப் பேர்தான் பறவைப் பார்வையோ?!

தியாகி அண்ணாமலை நகர் பக்கம் இருந்து, ஆர்.டி.ஓ. அலுவலகம் உள்ளிருந்து, மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் உள்ளிருந்து, லட்சுமி நகர் பக்கம் இருந்து, காந்தி நகர் பக்கம் இருந்து, கார்கானாத் தெருவில் இருந்து... என புதுப்புது வழிகள் தென்பட்டுக்கொண்டே இருந்தன.

இளங்கோவிடம், ''இத்தனை நாளாக, இது தெரியாமல் இருந்திருக்கோங்கிறதை நினைச்சா வெட்கமா இருக்குடா!'' என்றேன்.

''விடுறா... ஸ்கூல் காம்பவுண்டுலயே இருக்க நம்ம ஹெட்மாஸ்டருக்கே இதெல்லாம் தெரியாம இருக்கு. நாம வேற ஏரியாக்காரங்கதானே!'' என்று சமாதானம் சொன்னான்.

''மச்சான்... இனிமே பிரச்னை இல்லைடா. இதுல ஏதாவது ஒண்ணுல புகுந்து உள்ளே போயிட வேண்டியதுதான்'' என்றேன்.

''டேய்... இதெல்லாம் அந்தந்த ஏரியாப் பசங்க கண்டுபிடிச்சு வெச்சிருக்கிற வழி. இதுல அவங்களைத் தவிர வேறு யாரையும் விட மாட்டாங்க. நமக்குனு, நாமதான் தனியா ஒரு வழியைக் கண்டுபிடிக்கணும்'' என்ற புதிய விதியைச் சொன்னான். எங்களுக்கான வழியைத் தேடி, கார்கானாத் தெருவில் இருந்து மீண்டும் எங்களின் மதில் சுவர் சுற்றுப்பயணம் தொடங்கியது.

p74b.jpgகார்கானாத் தெருவுக்குச் சரி பாதியில், மிகச் சிறிய தெரு ஒன்று இருப்பதையும், அதன் பெயர் ஆறுமுகனார் தெரு என்பதையும் நான் பள்ளியில் படிக்கத் தொடங்கி நான்கு வருடங்களுக்குப் பின்பு அன்றுதான் அறிந்துகொண்டேன். அந்தத் தெருவின் ஒரு வீட்டின் பின்பக்க மாடி பால்கனியில் இருந்து, ''என்னடா பண்றீங்க?'' என்று குரல் கேட்டுத் திரும்பினோம். அப்போது, நாங்கள் மிகச் சரியாக அந்த வீட்டுக்கும் எங்கள் பள்ளிக்குமான குறுகிய இடத்தில் நின்றுகொண்டிருந்தோம்.

எங்கள் வீட்டுக்கு அருகில் வசித்த கஸ்தூரி அக்கா திருமணமாகி, அந்த வீட்டின் மாடி போர்ஷனில் வாழ வந்திருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னைப் பார்த்ததில் அவருக்கு ரொம்பச் சந்தோஷம்.

''வீட்டுக்குள்ள வாடா...'' என்று அழைத்தார்.

பெரிதாகச் சிரமப்படாமல், ஒரு சின்னத் தாவலில் அவருடைய வீட்டுக்குச் சென்றோம். அதிரசம், முறுக்கு எல்லாம் சாப்பிட்டுக்கொண்டே எங்களுடைய திட்டத்தை விவரித்தோம்.

''டேய்... நீங்க எவ்வளவு லேட்டா வந்தாலும், நேரா இங்க வந்திருங்கடா. மாமா சைக்கிள் விடுற இடத்திலேயே, உங்க சைக்கிளை விட்டுட்டு, இப்படியே எங்க வீட்டு வழியாவே உங்க ஸ்கூலுக்கு உள்ளே போயிடுங்க'' என்றார்.

மறுநாள் திங்கட்கிழமை, பள்ளிக்கு, பிரேயருக்கு முன்னாடியே வந்துவிட்டோம். இருந்தும், நேராக கஸ்தூரி அக்காவின் வீடு இருக்கும் தெருவுக்குச் சென்று, சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு அவரின் வீட்டுக்குள் சென்றோம். பின்கட்டுக்குச் சென்று அங்கே இருந்த துணி துவைக்கும் கல்லில் கால் வைத்து ஏறும்போதுதான், அந்த வீட்டின் மாடியைப் பார்த்தேன். அங்கு ஒரு பால்கனி இருந்தது. இளங்கோவுடன், மாடிக்குச் சென்று பால்கனியில் இருந்து பார்க்கும்போதுதான் எனக்குப் புரிந்தது, நான் நின்றுகொண்டிருந்தது எனது வகுப்பறைக்கு நேர் மேலே இருந்த ஒரு பெரிய அறையின் கம்பி இல்லாத ஜன்னல் அருகே என்று!

அக்கா வீட்டு பால்கனியில் இருந்து, சின்னத் தாவல் ஒன்றில் எங்கள் பள்ளிக் கட்டடத்தின் மாடி அறைக்கு வந்தோம். அந்த அறைக் கதவினைத் திறந்து, அங்கு இருக்கும் படிக்கட்டு வழியாகக் கீழ் இறங்கினோம். நம்பினால் நம்புங்கள், நாங்கள் நேராக வந்தடைந்தது, பிரேயருக்கு வரிசையில் நின்றிருக்கும் எங்கள் வகுப்பு வரிசையின் கடைசி வாலுக்கு. எனக்கு ஆனந்தத்தில் கண்கள் கலங்கிவிட்டன. வரிசையின் முதலில் நின்றிருந்த வகுப்புத் தலைவன், திரும்பி எங்களைப் பார்த்தான். இளங்கோ, தனது விரலைக் காட்டித் 'தொலைச்சுடுவேன். திரும்புடா அந்தப் பக்கம்’ என்ற முரட்டுச் சைகையில் அப்படியே திரும்பிக்கொண்டான்.

அடுத்த சில மாதங்கள்... நாங்கள் ஏறக்குறைய சொர்க்கத்தில் இருந்தோம். வீட்டில் இருந்து புறப்பட்டு, சீக்கிரமாகவே பள்ளிக்கு வந்தால்கூட, நாங்கள் நேராகச் செல்வது கஸ்தூரி அக்கா வீட்டுக்குத்தான். அங்கே பத்திரமாக சைக்கிள் பார்க்கிங். பிறகு வயிறு நிறையப் பானைத் தண்ணீர் குடித்துவிட்டு, அந்த வீட்டு மாடியில் இருந்து எங்களின் தனிப்பட்ட வழியில் உள்ளே புகுந்து கீழ் இறங்கி பிரேயருக்குள் நுழைந்தால், அங்கே வில்சன் தன்ராஜ் சார், தனது உருக்கமான குரலில், 'இயேசு... என் ரட்சகனே! எங்கள் இதயத்தில் நிறைந்தவனை, துதி, நிதம்!’ எனப் பாடிக்கொண்டிருப்பார். உண்மையிலேயே இயேசு வருவதாக இருந்தால்கூட எங்களுடன் அந்த வழியில்தான் வருவார். அத்தனை சொகுசான வழி!

ஒருநாள், வழக்கம்போல பிரேயர் தொடங்கி கேட் மூடப்பட்டுவிட்டது. கஸ்தூரி அக்காவின் தெருவுக்குச் செல்லும் வழியில் எங்கள் பள்ளியைக் கடந்து சென்றோம். அப்போது அந்த வருடம் புதிதாக எங்கள் வகுப்பில் சேர்ந்திருந்த தனது தெரு நண்பன் ஒருவன், கேட்டுக்கு வெளியில் நிற்பதைப் பார்த்துவிட்டான் இளங்கோ. 'யாம் இருக்கக் கவலையேன்?’ என்றபடி அவனையும் ''வாடா என்னோட'' என்று அழைத்து வந்துவிட்டான்.

அன்றைக்கு எங்களுக்கு இன்னுமொரு சோதனையும் காத்திருந்தது. அக்கா வீட்டு மாடியில் இருந்து தாவியபோதுதான் அதைக் கவனித்தோம். அந்த ஜன்னல், ஒரு பெரிய அட்டையால் அடைக்கப்பட்டு இருந்தது. ஆனால், கை வைத்தவுடன் உடைந்து கீழே விழக்கூடிய காட் போர்டு அட்டை அது. அதைக் கையால் தள்ளிவிட்டு உள்ளே சென்று பார்த்தால், அந்த அறையில் பாதி அளவுக்குப் பேப்பர் பண்டல்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. அந்த அறை வழக்கத்துக்கு மாறாக வெளிப்புறமும் பூட்டப்பட்டிருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல், சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்துவிட்டு, பிறகு வந்த வழியே வெளியில் வந்து, நேராக மீனாட்சி தியேட்டருக்குக் காலைக் காட்சி சினிமாவுக்குப் போய்விட்டோம். பிறகு, அந்த அறையின் பூட்டு திறக்கப்படும் வரை நேர் வழியில் ஒழுங்காகப் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தோம்.

அடுத்த வாரத்தில் பள்ளியில் எந்நேரமும் ஏதோ ஒரு சலசலப்பு. எனது வகுப்புக்கு நேர் எதிரில் இருந்த தலைமை ஆசிரியர் அறையில், எப்போதும் ஏதாவது விசாரணை நடந்துகொண்டே இருந்தது.

ஹெட்மாஸ்டரின் பியூன் கனகராஜிடம் கேட்டேன்.

''10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான கொஸ்டீன் பேப்பர்ஸ் திருடு போயிடுச்சி...'' என்றார்.

''எங்க வெச்சிருந்தாங்கண்ணா?'' என்றேன்.

என் தலைக்கு மேலே இருந்த எங்கள் ரகசிய அறையைச் சுட்டிக்காட்டினார்.

களவையும் கள்ளக் காதலையும் தனியாகச் செய்யணும்; கூட்டாளி வைத்துக் கொள்ளக் கூடாது என்ற பழமொழியை அந்த வயதில் நான் கேள்விப்பட்டிருக்க வில்லை.

நாங்கள் ஒரே ஒரு முறை கூட்டாளி வைத்ததற்கு, உடனே பலன் கிடைத்துவிட்டது. ''நிச்சயம் அந்தப் பையன்தான் எடுத்து இருக்கணும்'' என்று இளங்கோவிடம் சொன்னேன்.

''அவனைக் காட்டிக் கொடுத்தா நாமும் சேர்ந்து மாட்டுவோம். மேட்டர் ரொம்பப் பெருசு. அமைதியா வாயை மூடிட்டு இரு!'' என்று சொல்லிவிட்டான்.

ரகசியங்கள், கால் வைத்து நடப்பது இல்லை; காதுகளின் வழி புகுந்து வாய் மூலமாகத்தான் நடந்து செல்கின்றன. வினாத்தாளை எடுத்துச் சென்ற எங்கள் வகுப்புப் பையனிடம் இருந்து, அவனது அண்ணன் அதைப் பிடுங்கிச் சென்று, அதைத் தனது 10-ம் வகுப்புக் காதலி ஒருத்திக்குத் தந்திருக்கிறான். அவள் அந்த மகிழ்ச்சியை உடன் படிக்கும் தோழி ஒருத்திக்குப் பகிர, அவள் தனது காதலனுக்குச் சொல்லிவிட, அந்தக் காதலன் எங்கள் பள்ளி ஆசிரியர் ஒருவனின் மகனாக இருந்துவிட்டான். பிரச்னை ஒரு சிக்கலான நூற்கண்டு வடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வந்தது. அவர், அதன் ஏதோ ஒரு முனையை மட்டும் கண்டுபிடித்து இழுக்கத் தொடங்க, அது நேராக எங்கள் வகுப்பறையை வந்து அடைந்தது.

p74a.jpg''இந்த ஒன்பதாம் வகுப்பு 'ஏ’ பிரிவைச் சேர்ந்த யாரோ ஒரு மாணவன் மூலமாத்தான், 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு அரசு அனுப்பியிருந்த சில வினாத்தாள்கள் திருடப்பட்டு, வெளியே போயிருக்கு. திருடியது யாருன்னு கண்டுபிடிச்சு, அத்தனை வினாத்தாள்களையும் மீட்காவிட்டால், மாவட்ட கல்வி அதிகாரி விஷயத்தை போலீஸுக்குக் கொண்டுபோயிடுவார். பிறகு, நமது பள்ளியின் பெயரும் கெட்டு, ஹெட்மாஸ்டரின் மீது நடவடிக்கையும் எடுப்பாங்க. எனவே, உங்களில் யார் அந்தக் காரியத்தைச் செய்ததுனு மரியாதையாச் சொல்லிடுங்க'' என்று ஏறக்குறைய பள்ளியின் அத்தனை ஆசிரியர்களும், எங்கள் வகுப்பறைக்கு வந்து எங்களை மிரட்டிப் பார்த்தார்கள்.

அது 1984-ம் ஆண்டு. இப்போது போல இத்தனை தொலைக்காட்சிகள், செய்தி ஊடகங்கள் அற்ற காலம். எனவே, முக்கியமான விஷயமாக இருந்தாலும்கூட, அனாவசியப் பரபரப்புகள் இன்றி நிதானமாக விசாரிக்க முடிந்தது.

எங்கள் ஹெட்மாஸ்டர் அருள்தாஸ் சார்தான், அந்த வருடம் எங்களின் ஆங்கில ஆசிரியர். சற்று பருமனான உருவம், வெள்ளை பேன்ட், வெள்ளை ஷர்ட், கறுப்பு பெல்ட் அணிந்து பள்ளியில் மிடுக்காக நடந்துவரும்போது, மாணவர்கள் யாரும் அவரைக் கண்டு மிரள மாட்டோம். ஏனெனில், எங்கள் பள்ளியில் மாணவர்களின் தோள் மீது கை போட்டுப் பேசிக்கொண்டு செல்லும் அன்பான மனிதர் அவர். பலத்த விசாரணைகளுக்கு இடையே, அவ்வப்போது எங்களுக்கு வகுப்புகளும் நடந்துகொண்டு இருந்தன.

ஒருநாள், காவல் துறை ஜீப் ஒன்று வந்து ஹெச்.எம். அறையின் முன்பு நின்றதைப் பார்த்ததும், எனக்கு வியர்த்துக் கொட்டியது.

இளங்கோ, அவனது நண்பனிடம் சென்று, ''டேய்... நீ எடுத்திருந்தாச் சொல்லிடு. விஷயம் தலைக்கு மேல போயிடுச்சு!'' என்று கெஞ்சிப் பார்த்தான்.

அவன் அமைதியாக உட்கார்ந்திருந்தான். இப்போது, அவன் யாரிடமும் எதுவும் பேசுவது இல்லை. எடுத்தது அவன்தான் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. எனவே, நான் அவனிடம் பேசுவதை நிறுத்திவிட்டேன்.

அன்று மதியம் பைபிள் வகுப்புக்கு வழக்கமாக வரும், எங்கள் வகுப்பு ஆசிரியருக்குப் பதிலாக எங்கள் ஹெட்மாஸ்டர் அருள்தாஸ் சார் வந்தார். அனைவரும் எழுந்து நின்றோம். எங்களை அமரச் சொல்லிக் கை அசைத்தார். பல நாட்களுக்குப் பிறகு அப்போதுதான் அவர் எங்கள் வகுப்புக்கு வருகிறார். அப்போது கனகராஜ், நீண்ட பிரம்பு ஒன்றை எடுத்துவந்து மேசை மீது வைக்க, தனது பார்வையினாலேயே அதைத் திரும்பக் கொண்டுபோகச் சொன்னார். எப்போதுமே மழுமழுமென ஷேவ் செய்து பளிச்சென இருக்கும் அவரின் முகத்தில் முடிகள் முளைத்திருந்தன. கண்கள் சிவந்திருக்க, சோர்வடைந்து, தோற்றுப்போன ஓர் அரசனின் முக பாவத்துடன் வந்து அமர்ந்தார். உண்மையில், எனக்கு அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த பைபிளை எடுத்தார். நடுவில் ஒரு பக்கத்தைப் பிரித்துப் பார்த்துவிட்டு, அதை மீண்டும் மேசையின் மீதே வைத்து எங்களை நிமிர்ந்து பார்த்தார். மௌனத்தால் வகுப்பறையே உறைந்திருந்தது. ''பிள்ளைகளே... இந்த மதிய நேரத்தில் உங்களுக்கு நான் ஒரு கதை சொல்லப் போகிறேன். தேவகுமாரன் இயேசுபிரான் சொன்ன கதை அது. வழிவழியாக அவரது வம்சத்தினர் அந்தக் கதையை தங்கள் குமாரர்களுக்குச் சொன்னதுபோல, எனது அப்பா எனக்குச் சொன்னார். அதை எனது பிள்ளைகளாம் உங்களுக்கும் இன்று நான் சொல்லப்போகிறேன்'' என்று அந்தக் கதையை ஆரம்பித்தார்.

''ஒரு செல்வந்தருக்கு, இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். இளையவன், தான் சுதந்திரமாக வாழ எண்ணி, தனது சொத்தைப் பிரித்துத் தரும்படி தகப்பனிடம் கேட்டான். தகப்பனும் அதன்படியே பிரித்துக்கொடுக்க, அதை எடுத்துக்கொண்டு தூர தேசத்துக்குச் சென்று ஆடம்பரக் கேளிக்கைகளில் ஈடுபட்டு, அனைத்து சொத்துகளையும் இழந்து நிர்கதியாக நின்றான்.

உணவுகூட இல்லாத நிலையில், பன்றித் தொழுவம் ஒன்றில் கூலி வேலைக்குச் சேர்ந்தான். அங்கே, பன்றிகளுக்குக்கான உணவாக வைக்கப்பட்டிருந்த தவிட்டைச் சாப்பிடும்போது, எஜமானால் வகையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போதுதான் அவனுக்குத் தோன்றியது, தனது தந்தையிடம் பணிபுரியும் வேலைக்காரர்கள்கூட இதைவிட நல்ல உணவை உண்ணும்போது, நாம் வந்து இப்படிச் சீரழிந்துகிடக்கிறோமே என்று. உடனே, அங்கிருந்து புறப்பட்டு, தனது தந்தையிடமே சென்று சேர்கிறான்.

பிள்ளைகளே... இங்கே கவனியுங்கள்!

அவனது தந்தை கெட்டுப்போய்த் திரும்பி வந்த அவனை வெறுக்கவில்லை. வரவேற்று அழைத்துச் செல்கிறார். வேலையாள்களை அழைத்து அவனது கைகளுக்கு மோதிரமும், கால்களுக்குச் செருப்பும் அணிவிக்கச் சொல்கிறார். இருப்பதிலேயே, கொழுத்த கன்றை அடித்து விருந்து வைக்கச் சொல்கிறார். அவரது மூத்த மகன்கூட அவருடைய செயல்களைக் கண்டு வெறுத்து நிற்கும்போது அவனைச் சமாதானப்படுத்த அவனிடம், 'மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய். என்னுடையவை எல்லாம் உன்னுடையவையே. ஆனால், உன் தம்பி இறந்துபோயிருந்தான். தற்போது அவன் மீண்டும் உயிர் பெற்றுள்ளான்’ என்று அவனைத் தேற்றினார்.

p74.jpgபிள்ளைகளே... அந்தத் தகப்பனைப் போலத்தான் நானும் இருக்கிறேன். ஆண்டவர் சொல்வதைப் போல, எப்போது எல்லாம் ஒருவன் நேர்வழியில் இருந்து விலகிச் செல்கிறானோ, அப்போது எல்லாம் அவன் மரித்துப்போகிறான். மீண்டும் திருந்தி, நல்ல பாதைக்கு வந்தால், ஆண்டவர் முதலில் அவனைத்தான் கட்டித் தழுவி வரவேற்பாராம்.

உங்களில் ஏதோ ஒரு மாணவன், சிறு தவறு ஒன்று செய்துவிட்டதனாலேயே, அவனை நான் ஒருபோதும் வெறுக்கப்போவது இல்லை. மாறாக, எனது எண்ணம் எப்போதும் அவனை நல்வழிப்படுத்துவதிலேயே இருக்கும். அவன் அறியாமல் செய்துவிட்ட தவறுக்காக, ஒருபோதும் நான் தண்டிக்க மாட்டேன். அவன் என்றேனும், மனம் திருந்தி நேர்வழிக்கு வந்தால் போதும்!'' - பைபிளின் கெட்டகுமாரன் கதையை எங்களிடம் சொல்லிவிட்டு, அவர் அமைதியாகத் தலைகுனிந்து எங்களுக்காக ஜெபிக்கத் தொடங்கினார்.

மொத்த வகுப்பும் உறைந்துபோய் இருந்தது. எனது உடல் நடுங்கியது. எங்கள் யாரையும் அவர் நிமிர்ந்து பார்க்காமல், தலை குனிந்தபடி வகுப்பைவிட்டு வெளியேறினார். அவர் சென்ற நீண்ட நேரத்துக்குப் பின்பும் எங்கள் அனைவரின் கண்களும், அவர் நின்றிருந்த இடத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. அவர் சொல்லிச் சென்ற வேதத்தின் சொற்கள் மந்திரம் போல, அந்த இடத்தை நிறைத்து நின்றிருந்தன. அந்த வகுப்பு முடிய மீதம் இருந்த கொஞ்ச நேரமும் எனக்கு ஒரு யுகமாக விரிந்து நின்றது.

இப்போது அவன் எழுந்து நின்றான். இளங்கோவிடம் சென்று ஏதோ சொல்லிவிட்டு, வேகமாக வெளியே சென்றான். இளங்கோவும் அவன் பின்னரே தொடர்ந்து செல்ல, நானும் எழுந்து வெளியே வந்தேன். அவன் நேராக, தலைமை ஆசிரியரின் அறைக்குள் நுழைவதைப் பார்த்தோம்.

இளங்கோ என்னருகே வந்து, ''ஹெச்.எம்., பேசினதுல கலங்கிப்போயிட்டான். அவன்தான் எடுத்தான்னு ஒப்புக்குவான். கவலைப்படாதே. நம்மைப் பற்றி எதுவும் சொல்ல மாட்டேன்னு என்கிட்ட சத்தியம் பண்ணிட்டுத்தான் போயிருக்கான்'' என்றான்.

அவன் எங்களையும் சேர்த்துக் காட்டிக்கொடுத்தால்கூடப் பரவாயில்லை என்று அப்போது எனக்குத் தோன்றியது.

அன்று மாலை, பள்ளி முடிந்து அனைவரும் சென்றிருந்தனர். டி.ஈ.ஓ., தலைமை ஆசிரியரின் அறையில் விசாரணையை நடத்திக்கொண்டு இருந்தார். நானும் இளங்கோவும் ஜன்னல் ஓரம் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். முக்கியமான ஆசிரியர்கள் பதற்றம் இன்றி அங்கும் இங்கும் நடந்துகொண்டு இருந்தனர். நாங்கள் நின்றிருந்த இடத்தில் இருந்து, நடப்பதைத் தெளிவாகக் கேட்கவும் பார்க்கவும் முடிந்தது.

தலை குனிந்தபடி தனது விசாரணை அறிக்கையை எழுதிக்கொண்டிருந்த டி.ஈ.ஓ நிமிர்ந்து அவனைப் பார்த்து, ''தம்பி, நீ மொத்தம் எத்தனை கொஸ்டீன் பேப்பர் எடுத்துட்டுப் போனே?'' என்று கேட்டார்.

அவன் ஏதோ முணுமுணுத்தான்.

''பயப்படாமச் சொல்லுப்பா... எத்தனை?'' என்றார்.

இவன் ''மூணு சார்...'' என்றான்.

அந்த அறை முழுக்கப் பதற்றம். டி.ஈ.ஓ., தனது கோப்புகளைப் புரட்டிப் பார்த்தபடி அவனிடம், ''எத்தனை எடுத்தாலும் தண்டனை ஒண்ணுதான். பயப்படாம, உண்மையைச் சொன்னா, தண்டனையைக் குறைக்கச் சொல்லலாம்'' என்றார்.

இவன் மீண்டும், ''மூணுதான் சார் எடுத்துட்டுப் போனேன். அந்த மூணும் இதோ ஹெச்.எம். சார் டேபிளில் இருக்கு'' என்றான்.

யாரோ ஓர் ஆசிரியர் அவனை அடிக்கப் பாய்ந்தார். அந்தப் பையன், ஹெச்.எம் பின்னால் பதுங்க, கூச்சல் இன்னமும் அதிகரித்தது.

''கொஞ்சம் எல்லாரும் அமைதியா இருங்க'' என்று சத்தமிட்ட டி.ஈ.ஓ., தனது உதவியாளரிடம், ''மொத்தம் எத்தனை கொஸ்டீன் பேப்பரைக் காணோம்?'' எனக் கேட்டார்.

அதற்கு அவர் ''13'' என்றார்.

நானும் இளங்கோவும் அப்படியே நடுங்கிப்போய் நின்றுவிட்டோம். இவன், சற்று சத்தமாக... ''சார்... எங்க அம்மா மேல சத்தியமா நான் மூணுதான் எடுத்துட்டுப் போனேன்'' என்றான்.

தலைமை ஆசிரியர், அவரது எதிர்புறத்தில் சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவின் மரச்சிலையை உற்றுப் பார்த்தபடி அமைதியாக இருந்தார்.

டி.ஈ.ஓ., தனது விசாரணையைத் தொடர்ந்தார். ''சரி... நீ அந்தக் கட்டை எப்படிப் பிரிச்ச? அதுக்குக் கத்தியோ, பிளேடோ தேவைப்படுமே?'' என்று கேட்டார்.

அவன், அமைதியாகச் சொன்னான், ''சார்... அந்தக் கட்டு ஏற்கெனவே பிரிச்சித்தான் இருந்துச்சு. வெளியில் நீட்டிக்கிட்டு இருந்த மூணு கொஸ்டீன் பேப்பரை மட்டும்தான் நான் எடுத்தேன்'' என்றான்.

அவனை யாரும் நம்பவில்லை. மேலும் கேள்விகள்... மேலும் மிரட்டல்கள்!

நான் இப்போது அவனை முழுமையாக நம்பினேன். எனக்கும் நன்றாக நினைவில் இருக்கிறது. நானும் பார்த்திருந்தேன். அந்தக் கட்டுகளில் ஒன்று நாங்கள் பார்க்கும்போதே, பிரிக்கப்பட்டுதான் இருந்தது. இளங்கோவிடம் கிசுகிசுத்தேன். அவனும் அதைப் பார்த்திருக்கிறான். எங்கள் இருவரில் ஒருவரேனும் அவனுக்காகச் சாட்சி சொல்ல செல்கிறோமோ என இயேசுபிரான் சுவற்றில் இருந்து எங்களைப் பார்த்தபடி இருந்தார். நாங்கள் இருவரும், அப்போதும் வாய் மூடி மௌனமாகவே இருந்தோம். குழப்பம் அதிகரித்த நிலையில், பேச்சுக்குரல்கள் உச்சகட்டத்தில் ஒலிக்கத் தொடங்கின. குறிப்பாக, ஓர் ஆசிரியர் மட்டும் மிகவும் பதற்றத்துடன் அவனைத் திரும்பத் திரும்ப அடித்துக்கொண்டிருந்தார்.

யாரும் எதிர்பாராத ஒரு தருணத்தில், ''சைலன்ஸ்!'' என்றபடி, ஹெட்மாஸ்டர் தனது இருக்கையில் இருந்து எழுந்தார். ''நான் இந்தப் பையனை நம்புறேன். இவன் மூணுதான் எடுத்திருக்கான். டி.ஈ.ஓ., சார், நீங்க என் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கலாம். நடந்த தவறுக்கு நானே முழுப் பொறுப்பு'' என்றபடி, தனது மாணவனை அருகில் அழைத்து, அவனது தோளை இறுக அணைத்துக்கொண்டார்.

அங்கு இருந்த அனைவருக்கும், அவர்கள் முன் நடப்பதை நம்ப முடியவில்லை. மனம் திருந்தி வந்த மைந்தனை, அவனது தகப்பன் எதிர்கொண்டு சென்று கட்டித் தழுவிக்கொண்ட காட்சி அது. அதில் 2000 வருட கால சத்தியம் உறைந்திருந்தது.

நடந்ததைப் பார்த்த டி.ஈ.ஓ-வும் நெகிழ்ந்துவிட்டார். அவர் எழுந்து தனது கோப்புகளை எல்லாம் சேகரித்தபடி ஹெச்.எம்-மிடம், ''சார், நடந்தது நடந்துபோச்சு. இதை இப்படியே விட்டுடலாம். நான் புது பேட்ச் கொஸ்டீன் பேப்பர்ஸ் அனுப்பி வைக்கிறேன். இனிமேல் அதை உங்க ரூம்லேயே வெச்சுப் பத்திரமாப் பார்த்துக்கங்க'' என்றபடி, அந்தப் பெரிய குற்றத்தை இலகுவாக முடித்துவைத்தார். அனைவரும் ஏதேதோ, பேசியபடி கலைந்து வீட்டுக்குச் சென்றனர்.

அவன் வெளியில் வருவதற்காக நானும் இளங்கோவும் மட்டும் அறை வாசலிலேயே காத்திருந்தோம். இரவு நன்கு கவிழ்ந்திருந்தது. நீண்ட நேரம் கழித்து, ஹெச்.எம். தனது அறையைவிட்டு வெளியே வந்தார். அவரது உணவுப் பைகளை எடுத்துக்கொண்டு பியூன் கனகராஜும் உடன் வந்தார். பின்னாலேயே, கை கட்டியபடி அவனும் வந்தான். சற்று தூரம் நடந்துசென்ற ஹெச்.எம்., நின்று பின்னால் வந்த அவனை அருகே அழைத்தார். விசும்பியபடி, அவன் அவர் அருகில் சென்றான்.

அவனது தோளில் கை போட்டுக்கொண்டு, தனது பியூனை அருகில் அழைத்து, ''கனகராஜ்... நாளையில இருந்து கேட்டுக்கு வெளியில் நிக்கிற பசங்களை என் ரூமுக்குக் கொண்டுவர வேண்டாம். அவங்க நேரா கிளாஸுக்குப் போகட்டும். தகுந்த காரணங்கள் இருந்தா, மாணவர்கள் மாசத்துக்கு சில முறை மட்டும், பள்ளிக்குத் தாமதமா வரலாம். இதை அப்படியே, சம்பத்திடம் சொல்லி ஒரு சர்க்குலர் போட்டு அனுப்பச் சொல்லிடு'' என்றார்.

எங்கள் பள்ளியின் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமை ஏறிய, சிவப்புக் கட்டடத்தின் முன் நின்று, ஓர் இரவுப்பொழுதில் எங்கள் ஹெச்.எம். இட்ட அந்த ஒரு வாய்மொழி உத்தரவு, அதுவரையிலும், எங்கள் பள்ளியைச் சுற்றிலும் இயங்கிவந்த அத்தனை அதிகாரபூர்வமற்ற வாயில்களையும் அந்த நிமிடம் முதல் நிரந்தரமாக மூடிவிட்டது.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies