கவலைகள் இல்லை!கணபதி இருந்தால்

25 Aug,2017
 

...............................
               
 வேழ முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் பெரியோர்கள். நமது வாழ்வு மட்டுமல்ல; நம் சந்ததியினரின் வாழ்க்கைச் செழிக்கவும் பிள்ளையார் வழிபாடு அருள் செய்யும்.
குறிப்பாக ஆவணி மாதம், அஸ்த நட்சத்திரமும் சுக்லபட்ச சதுர்த்தியும் கூடிய விநாயகர் சதுர்த்தி திருநாளில் அவரை வழிபடுவதால் விசேஷமான பலன்கள் கைகூடும்.
உன்னதமான அந்தத் திருநாளில் உள்ளன்போடு கணபதியை வழிபட ஏதுவாக, அவரது மகிமைகளை – பிள்ளையாரின் பெருமைகளை அறிந்து மகிழ்வோமா?
தத்துவப் பொருளே!
முக்காலத்துக்கும் வழிகாட்டுபவர் பிள்ளையார், தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாத தெய்வம், கணங்களுகெல்லாம் அதிபதி, நாம் செய்யும் நற்காரியங்கள் அனைத்துக்கும் அவரே ஆதாரம். அவரை வழிபடுவதால் சுகம், ஞானம், ஆனந்தம் என அனைத்தும் வாய்க்கும்.
விநாயகரின் திருவடிகள் இரண்டும் ஞானம், கிரியை எனும் சக்திகளை உணர்த்துபவை. சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்றையும் முக்கண்களாகப் பெற்றவர். துதிக்கை – படைத்தல், மோதகம் ஏந்திய திருக்கரம் – காத்தல், அங்குச கரம் – அழித்தல், பாசம் உள்ள கை – மறைத்தல், தந்தம் உள்ள கை அருளல்ஸ இப்படி, அவரது ஐந்து கரங்களும் ஐந்தொழில்களைக் குறிப்பது மட்டுமின்றி, ஐங்கரங்களும் ‘சிவாய நம’ என ஐந்தெழுத்து மந்திரத்தை உணர்த்தும் என்றும் சொல்வார்கள்.

 

எல்லா உலகங்களையும், உயிர்களையும் தன்னுள் அடக்கி, பாதுகாத்து அருள்வதை அவரது பேழை வயிறு உணர்த்துகிறது.ஆக, தத்துவப்பொருளாகி உத்தம பலன்களை நமக்கருளும் நாயகனாய் திகழ்கிறார் வித்தகக் கணபதி!
விநாயகர் சதுர்த்தி விரத மகிமை
‘சமஷ்டிப் பிரணவம்’, ‘வ்யஷ்டிப் பிரணவம்’ ஆகிய இரண்டு பிரணவ மந்திரங்களின் ஸ்வரூபமாகக் காட்சி தருபவர் விநாயகர் என்கின்றன ஞான நூல்கள்.
இவரை விநாயகர் சதுர்த்தி நாளில் மோதகம், அப்பம், அவல், பொரி கடலை, தேங்காய்ப் புட்டு, பொங்கல், எள்ளுருண்டை, தேன், சர்க்கரை, தினை மாவு, பால், மா, வாழை, கரும்பு, நாவற்பழம், விளாம்பழம், இளநீர் படைத்து வழிபடுவதால்ஸ வீட்டில் செல்வம் பெருகும், அறிவு பிரகாசிக்கும், குடும்ப ஒற்றுமை உண்டாகும், பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்றெல்லாம் அறிவுறுத்துகின்றன புராணங்கள்.
அந்தத் திருநாளுக்கு அப்படியென்ன மகிமை? முழுமுதற் தெய்வமாம் பிள்ளையார் அவதரித்த திருநாள் அது.
ஒருமுறை, ஈசனும் அம்பாளும் திருக்கயிலாயத்தில் இருக்கும் சித்திர மண்டபத்துக்கு எழுந்தருளினார்கள். அங்கேயுள்ள மந்திர மூலங்களின் மீது தங்களின் திருப்பார்வையை செலுத்தினார்கள். அப்போது ஓர் ஒளி வட்டமும் அதிலிருந்து தண்டமும் தோன்றின; தண்டம் ஒலியாக தழைத்தது. இந்த ஒளி – ஒலி இரண்டிலும் இருந்து உதித்த திருவடிவே, வரத கணபதி.
ஒளி வட்டம் – பிந்து; தண்டம் (ஒலி) – நாதம். பிந்து மற்றும் நாதத்தில் இருந்து அகர, உகர, மகரம் பிறக்கும். இந்த மூன்றும் சேர்ந்து ‘ஓம்’ என்று ஒலிக்கும். ஆக, ‘ஓம்’காரம் எனும் பிரணவத்தின் உருவமே பிள்ளையார்.
அவரை, அவர் அவதரித்த திருநாளில் வழிபட, அனைத்து கடவுளரையும் வழிபட்ட பலன் கிடைக்கும். (பிள்ளையார் அவதாரம் குறித்து வேறு சில திருக்கதைகளும் சொல்லப்படுவது உண்டு).

 

விநாயகர் சதுர்த்தியில் வழிபடுவது எப்படி?
மகள் பார்வதிக்கு இமவான் விவரித்ததாக, விநாயக சதுர்த்தி விரத வழிபாடு குறித்து விளக்குகின்றன புராணங்கள். இந்த நாளில், அதிகாலையில் நீராடி, நித்ய கர்மங்களை நிறைவேற்ற வேண்டும்.
பிறகு பூஜை நடைபெறும் இடத்தைச் சுத்தப்படுத்தி, மாக்கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். மண்ணால் பிள்ளையார் விக்கிரகம் செய்து வைத்து வழிபடுவது விசேஷம்! அழகான குடை அமைத்து, அதன்கீழ் விநாயகரை அமர்த்தி, அறுகம்புல், வெள்ளெருக்கு மாலை சார்த்தி, சந்தன-குங்குமத் திலகமிட்டு  அலங்கரிக்கலாம். நைவேத்தியமாக மோதகம், அப்பம், அவல், பொரி கடலை, தேங்காய்ப்புட்டு, பொங்கல், எள்ளுருண்டை, தேன், சர்க்கரை, தினை மாவு, பால், மா, வாழை, கரும்பு, நாவற்பழம், விளாம்பழம், இளநீர் ஆகியவற்றை தாம்பூலத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
பின்னர்ஸ
வக்ர துண்ட மஹாகாய    
      சூர்ய கோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமே தேவ
     சர்வ கார்யேஷ சர்வதாஸ
– போன்ற விநாயகர் ஸ்லோகங்கள், துதிப்பாடல்களைப் பாடி, தூப – தீப உபசாரங்கள் செய்து வழிபட வேண்டும். வழிபாடு முடிந்தபின் குறிப்பிட்டதொரு நன்னாளில், விநாயகர் விக்கிரகத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலையில் சேர்க்கலாம்.
நமது செயல்பாடுகள் சிறக்க வேண்டும் எனில் மனது செம்மையாக இருத்தல் அவசியம். மனதுக்குக் காரகன் சந்திரன். விநாயக சதுர்த்தியன்று ஆனைமுகனை வழிபடுவதால் அவரருளோடு, சந்திரனின் அனுக்கிரகமும் வாய்க்குமாம். அதன் பலனாக நம் மனம் சிறக்கும்; செயல்கள் வெற்றி பெறும். மேலும் கேது, சனி ஆகிய கிரகங்களால் ஏற்படும் தோஷங்களும் நீங்கும் என்பார்கள். 
விநாயகர் சதுர்த்தி மட்டுமின்றி, பிள்ளையாருக்கு உகந்த வேறு சில விரதங்களும் உண்டு. அவை: பிள்ளையார் நோன்பு, ஸித்தி விநாயக விரதம், செவ்வாய்க்கிழமை விரதம், வெள்ளிக்கிழமை விரதம், சங்கடஹர சதுர்த்தி.
மேலும் செவ்வாய்க் கிழமையுடன் சேர்ந்து வரும் சதுர்த்தி மிகவும் நற்பலன் தரும்.
இதைப் படித்ததும் விரத தினங்களில்தான் விநாயகரை வழிபட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. பிள்ளையாரின் மகிமையை எடுத்துரைக்கும் நோக்கில், மேற்சொன்ன விரத நாள்கள் விசேஷமாகச் சொல்லப்பட்டாலும், ஆனைமுகனை அனுதினமும் வழிபட்டு அருள்பெறலாம்.
தொட்டதெல்லாம் துலங்கும்!
விநாயகரை எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், பிரதிஷ்டை செய்யலாம். எளிதில் கிடைக்கும், எங்கும் கிடைக்கும் அறுகம்புல்லினால் 108 முறை அவரின் திருநாமத்தைச் சொல்லியும், விநாயகர் அகவல் முதலான துதிப்பாடல்களைப் படித்தும் அவரை வழிபடுவதால், நமக்குத் தேவையான நல்ல கல்வி, பட்ட மேற்படிப்பு, நிலையான வேலை என்று அனைத்தையும் தந்தருள்கிறார்.

 

அதுமட்டுமா? பெண்களின் திருமணத் தடை நீங்கும். கால சர்ப்ப தோஷத்தால் உண்டான கொடுமை நீங்கும். ஆண் – பெண் இருபாலாருக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். மழலைச் செல்வம் மடியினில் தவழும் பாக்கியம் கிடைக்கும். சொந்தபந்தங்களினால் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். இல்லறம் இனிக்கும்.
வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் நல்லபடியாக அமையும். லாபம் பெருகும். தொழில் வளர்ச்சி அடையும். தொழிலாளர்கள் நல்ல சம்பளம் பெறுவார்கள். நவகிரக தோஷங்கள் நீங்கும். பொன், பொருள் ஆபரணங்கள் சேரும். ஆடம்பரப் பொருள்கள் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் கிடைக்கும். தேவையில்லாமல் வந்த வழக்குகள் அகலும். நீதி கிடைக்கும். நிம்மதி நிலைக்கும். பிள்ளைகள் நல்வழியில் நடப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் நட்பு பலப்படும். தொட்டதெல்லாம் துலங்கும்.
இன்னும் சில வழிபாடுகள்ஸ
விநாயகர் தன் தாயாருக்குக் காவல் புரிந்த திருக்கதையைப் படித்திருப்போம். அவர் தாயன்புக்கு உரியவராகத் திகழ்கிறார். ஆகவே, அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும்  சங்கடஹர சதுர்த்தியில் அவரை வழிபடுவதால்,  அம்பிகையின் அருளையும் பரிபூரணமாகப் பெறலாம்.
சூரியனின் நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் மாலைப் பொழுதில் வீட்டிலும் ஆலயத்திலும் விநாயகரை வழிபட்ட பின், அம்பிகைக்கு ஏழு நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டால், ராகு-கேது தோஷங்களும், அதனால் உண்டான தடைகளும் நீங்கி கல்யாண வரம் கைகூடும். பிள்ளைச் செல்வம் இல்லாத தம்பதியருக்கு, பிள்ளை பாக்கியம் கிட்டும். வறுமை விலகும். ஆனந்தம் பெருகும்.
கடன் தொல்லை நீங்கும்
மாதம்தோறும் வரும் சதுர்த்தி நாள்களில் 16 கன்னிப் பெண்களுக்கு ரவிக்கைத் துணி, வளையல், மஞ்சள், குங்குமம் கொடுத்து வன்னி மரத்தடி விநாயகரை வணங்கினால், திருமணத் தடை நீங்கும்.
சதுர்த்தி திதியில் கணபதிக்குக் கொழுக்கட்டை படைத்து வழிபடுவதுடன், அந்தப் பிரசாதக் கொழுக்கட்டையைத் தானமாகக் கொடுத்தால், வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு நல்லது.

 

ஆலயங்களில் மேற்கு பார்த்தபடி அரச மரத்தடியில் அருள்பாலிக்கும் விநாயகரை, பூச நட்சத்திர நாளில் வணங்கி வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
எட்டு வகை குணங்கள்
மனிதன் காமம், குரோதம், லோபம், மதம், மாத்ஸர்யம், மமதை, மோகம், அகந்தை ஆகிய எட்டு குணங்களால் தனது சிறப்பை இழக்கிறான் என்பார்கள் பெரியோர்கள். பிள்ளையார் எட்டு ரூபங்களை எடுத்து அவற்றை அகற்றுகிறார் என்கின்றன புராணங்கள்.
வக்ரதுண்டர் – காமம்
கஜானனர் – லோபம்
மஹோத்ரதர் – குரோதம்
லம்போதரர் – மதம்
விகடர் – மாத்ஸர்யம்
விக்னராஜர் –  மமதை
தூம்ரவர்ணர் – மோகம்
சூர்ப்பகர்ணர் – அகந்தை
`மோதக’ தத்துவம்
சாதாரண நாளாயினும் சரி, சதுர்த்தி திருநாளாக இருந்தாலும் சரிஸ பிள்ளையார் வழிபாடு என்றதும் சட்டென்று நம் நினைவுக்கு வருவன மோதகமும் அறுகம்புல்லும்தான்.
நாம் பச்சரிசி மாவினால் கொழுக்கட்டை செய்கிறோம். அதற்கு வாசனையோ, சுவையோ கிடையாது. ஆனால், அதனுள் வைக்கும் பூரணம் எனும் இனிப்பே அரிசி மாவும் ருசிக்க வழிவகுக்கும்.

 

அதுபோன்று வெறுமையான மனிதன் ‘பூரணம்’ எனும் ஆண்டவனின் துணைபெறும்போதுதான் பரிபூரணன் ஆகிறான். இந்த உன்னத விஷயத்தை உணர்த்துவதே மோதகப் பிரசாதம்.
அறுகம்புல் அரசன்!
அகரம், உகரம், மகரம் இணைந்த ஓங்கார நாயகன் விநாயகன். முதல் எழுத்தான ‘அ’கரம் உருவானது போல் உலகில் முதலில் தோன்றிய புல் அறுகம்புல் ஆகும். ‘அகரம் புல்’லே ‘அறுகம்புல்’ ஆனது என்று சிறப்பித்துச் சொல்வார்கள் ஆன்றோர்கள்.
அனலாசுரனை வதம் செய்த விநாயகர் அடைந்த வெப்பத்தை, முனிவர்கள் அறுகம்புல்லைக் கொண்டு தணித்தார்களாம்.
வெப்பம் குறைந்து, அருள்பார்வை பார்த்த விநாயகரைக் கண்டு அனைவரும் மகிழ்ந்தனர். அவர்கள் அனைவருக்கும் வேண்டிய வரத்தைத் தந்தார் விநாயகரும். அன்று முதல் விநாயகருக்கு அறுகம்புல் பிடித்தமானது ஆயிற்று.

 

அறுகம்புல் குளிர்ச்சி தருவது. அறுகம்புல்லால் அர்ச்சித்தால் கல்வி, செல்வம், நீண்ட ஆயுள் ஆகியவற்றை அளித்தருள்வார் கணபதி.
மோதிரக் கையால் குட்டு
‘குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும்’ என்றொரு சொல் வழக்கு உண்டு. உடனே `தங்க மோதிரம், வைர மோதிரம் அணிந்த கையால்ஸ’ என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளக் கூடாது. உண்மையான பொருள் அதுவல்ல. ‘மோதகக் கையான் முன் தலையில் குட்டிக்கொள்ள வேண்டும்’ என்பதை வலியுறுத்த வந்த வாக்கியம் மேற்சொன்னவாறு மருவியது என்பார்கள்.
பிள்ளையாரின் திருமுன் தலையில் குட்டிக்கொண்டு வழிபடுவதற்கும் ஒரு காரணக்கதை உண்டு.
ஒருமுறை மகாவிஷ்ணுவின் சக்ராயுதத்தை விழுங்கிவிட்டாராம்  கணபதி. மகாவிஷ்ணு முதலில் எவ்வளவு முயன்றும் சக்ராயுதத்தைத் திரும்பப்பெற முடியவில்லையாம். பின்னர்,  தோப்புக்கரணம் போட்டும் தலையில் குட்டிக்கொண்டும் பலவிதமான நடன சேஷ்டைகள் செய்தும் விநாயகரை மகிழ்வித்தாராம். அதைக்கண்டு விநாயகப் பெருமான் வயிறு குலுங்க சிரித்தபோது சக்ராயுதம் வெளியே வந்தது; மகாவிஷ்ணு அதைப் பெற்றுக் கொண்டாராம்.
நாமும் விநாயகரின் திருமுன் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டால், நமது சங்கடங்கள் விலகும். விநாயகரின் மகிழ்ச்சியால் நமக்கு நலமான வாழ்க்கை அமையும்.
விநாயகரும் விருட்சங்களும்
பிள்ளையார் அமர்ந்து அருள் தரும் ஐந்து மரங்கள் மிகவும் சிறப்புடையவை. அவை `பஞ்ச பூத மரங்கள்’ எனச் அழைக்கப்படுகின்றன.

அரச மரம் – ஆகாயம்
வாதநாராயண மரம் – வாயு
வன்னி மரம் – அக்னி
முழுநெல்லி மரம் – நீர்
ஆல மரம் – மண்
இந்த மரங்களின் அடியில் அருள்பாலிக்கும் பிள்ளையாரை வணங்கி வழிபட்டால் நினைத்த காரியங்கள் நினைத்தபடி கைகூடும்.
விருட்சத்தடி விநாயகர்கள் குறித்து வேறு சில தகவல்களும் உண்டு.
வில்வ மரத்தடியில் தெற்குப் பார்த்து அருளும் விநாயகரை, சதுர்த்தி நாளில் வழிபடுவதுடன், மளிகைச் சாமான்களைப் ஏழை குடும்பங்களுக்குத் தானமாகக் கொடுத்து வில்வ மரத்தைச் வலம் வந்தால் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள்.
அரச மரத்தடியில் வீற்றிருக்கும் கணபதியைத் தினமும் வலம் வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
ஆல மரத்தடியில் வடக்குப் பார்த்து விநாயகரை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தால் கடுமையான நோய்கள் அகலும். வேப்ப மரத்தடி விநாயகரை வழிபட்டால் மனதுக்குப் பிடித்த வாழ்க்கைத் துணை அமையும்.

 

பெண் குழந்தைகள் சந்தோஷமாக இருக்கவும், பெண் குழந்தை வேண்டும் என்பவர்களும் நெல்லி மரத்தடி விநாயகரை வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும்.
மா மரத்தடியில் இருக்கும் விநாயகரை சதுர்த்தி நாளில் வழிபட்டு, மூன்று அல்லது ஐந்து சுமங்கலிகளுக்கு உணவும் வஸ்திர தானமும் கொடுத்தால் வியாபாரம் செழிக்கும்.
நாவல் மரத்தடியில் இருக்கும் பிள்ளையாரை வழிபட்டு, வெண்ணெய் தானம் செய்தால் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும். கணவன் மனைவி அன்பு வற்றாமல் இருக்கும்.
இலுப்ப மரத்தடியில் விநாயகரை பிரதிஷ்டை செய்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டு, சிறுமிகளுக்கு மஞ்சள் வஸ்திர தானம் செய்தால் சோம்பல் அகலும், விவேகம் அதிகரிக்கும், யோகம் கூடும்.
சந்தன மரத்தடியில் பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தால் விளையாட்டு வீரராக உருவாகலாம். வியாபாரப் பிரமுகர்கள் லாபம் அடைவர். நினைத்த காரியங்கள் தடை ஏதுமின்றி குறித்த காலத்தில் வெற்றிகரமாக நடந்தேறும்.
வன்னி மரத்தடி விநாயகருக்கு அவல், பொரி, பொட்டுக்கடலை படைத்து வழிபடுவதுடன் அந்தப் பிரசாதத்தை 108 குழந்தைகளுக்கு வழங்கினால், தொழிலில் லாபம் கிடைக்கும்.
வேடன் ஒருவன் வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டு வரம்பெற்ற திருக்கதையும் உண்டு.
ஏழு பிறவியின் துன்பம் போக்கும் வன்னி விநாயகர்!
முன்னொரு காலத்தில் விதர்ப்ப நாட்டை ஆண்டு வந்த சாம்பன் எனும் அரசனின் கொடுங்கோலான ஆட்சியால் மக்கள் துயரமடைந்தனர். ‘துர்புத்தி’ என்ற அமைச்சன் மன்னனின் அடாவடித்தனத்துக்குத் துணை நின்றான். அதனால், மறு பிறவியில் காகமும் ஆந்தையுமாக இருவரும் பிறந்தனர். அடுத்து பாம்பும் தேளுமாகவும், நான்காம் பிறவியில் நாயும் பூனையுமாகவும், ஐந்தாம் பிறவியில் குதிரையும் கழுதையாகவும், ஆறாம் பிறவியில் மீனும் முதலையுமாகவும், ஏழாம் பிறவியில் புலியும் மானுமாகவும் பிறந்தனர். அதற்கடுத்த பிறவியில் வேடனும் ராட்சதனுமாகப் பிறந்து ஒவ்வொரு பிறவியிலும் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டே போகும் வாழ்க்கை அமைப்பு அமைந்தது.
அப்படி, வேடனை ராட்சதன் துரத்திய நிலையில், பயத்தில் வேடன் வன்னி மரத்தில் ஏறி பதுங்கும்போது ஏற்பட்ட சலனத்தால் வன்னி மர இலைகள் உதிர்ந்தன. உதிர்ந்த வன்னி இலைகள் மரத்தின்கீழ் இருந்த விநாயகர்மீது விழுந்தன. அப்போது ராட்சதனும் அம்மரத்தில் ஏறி வேடனைப் பிடிக்க முயலுகையில், வன்னி இலைகள் மீண்டும் உதிர்ந்து விநாயகருக்கு அர்ச்சனையாக விழுந்தன. அந்த நேரம் அந்தி சாய்ந்த நேரம். சதுர்த்தி திதியுடன் உள்ள அந்தி நேரத்தில் வன்னி இலைகளால் இருவரும் அர்ச்சனை செய்த காரணத்தால் ஒருவரை ஒருவர் வீழ்த்தி கைலாயம் சென்றபோது, சொர்க்கம் அவர்களுக்குக் கிடைத்தது என்று புராணங்கள் கூறுகின்றன.
ஏழு பிறவியில் அவர்கள் அடைந்த துன்பங்கள் சங்கடஹர சதுர்த்தி வேளையில், வன்னி இலைகளால் அர்ச்சித்ததால் இறைவன் முக்தி கொடுத்தார். எனவே, எந்த ஜென்மத்தில் என்ன துன்பம் பிறருக்குச் செய்தோமோ தெரியாது என்பதால் இப்பிறவியில் விசேஷ தினங்களில் வன்னி இலைகளால் விநாயகரை வழிபட்டு துன்பங்கள் நீங்கி, இன்பகரமான வாழ்க்கையைப் பெறுவோம்.

 

மதுரை வன்னி விநாயகர்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆடி வீதி என அழைக்கப்படும் கிழக்கு ராஜகோபுர உள்பிராகாரத்தில், தென்கிழக்கில் எழுந்தருளி இருக்கும் வன்னிமரத்தடி விநாயகருக்கு யாகம் நடத்தி வழிபட்டால் ஏற்படும் புண்ணியம் கோடி கிடைக்கும். வன்னி மரத்தடி விநாயகரைச் சுற்றி ஒன்பது மரங்கள் உள்ளன. இங்கு உள்ள விநாயகர் ‘நவ மர  விநாயகர்’ என அழைக்கப்படுகிறார். வன்னி, அரசு, வேம்பு, வில்வம், மந்தாரை, அத்தி, நெல்லி, பவள மல்லி, கொன்றை என ஒன்பது மரங்கள்.
வன்னி இலை யாகத் தீக்கு இணையானது. பாவம் அகலும். வன்னி மரத்தடியிலேயே உள்ள விநாயகரை வணங்குவதன் மூலம் வன்னி யாகம் நடத்திய பலன் கிடைக்கும்.
உடுமலைப் பேட்டை பிரசன்ன விநாயகர் ஆலயப் பிராகாரத்தில் சுமார் நூறு  வருடங்களுக்கு முந்தைய வன்னி மரத்தின் நிழலில் ஆலயம் அழகுற அமைந்துள்ளது. இங்கு சென்று வன்னி மரத்தடியில் பிரார்த்தனைகள் செய்ய அனைத்து யோகமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வெள்ளெருக்கு விநாயகர்
வெள்ளெருக்கம் செடிக்கு முறைப்படி பூஜை செய்து, வேர் எடுத்து அதில் விநாயகரை வடிவமைத்து வழிபாடு செய்தால் உஷ்ண ரோகம் அகலும். மன அழுத்தம் குறையும். பெண்களுக்கு ரத்த சம்பந்தமான குறைகள் அகலும்.
பகலும் இரவும் சந்திக்கும் சாயந்திர வேளை, சந்தி நேரம் என்றழைக்கப்படும். தேய்பிறை சதுர்த்தியில் இந்தச் சந்தி நேரத்தில் விநாயகரைச் தரிசித்தால் சங்கடங்கள் அற்றுப்போகும்.
மாலை நேரத்தில் விஷ ஜந்துக்கள் நடமாடும் அதைக் கட்டுப்படுத்துபவருமான (ராகு – கேது) விநாயகரை அபிஷேக ஆராதனை செய்து ‘விநாயகர் அகவல்’, ‘விநாயகர் போற்றி’, ‘விநாயகர் காயத்ரி’ சொல்லி வழிபட்டால், அவற்றால் பாதிப்புகள் ஏற்படாது. ராகு – கேது தோஷம் நீங்கும். அதனால் தடைபட்ட திருமணங்கள் கைகூடும்.
பொதுவாக, சங்கடங்கள் பணப்பற்றாக்குறையால் ஏற்படுகிறது. எனவே, தாராளமான பொருளாதார வசதிகள் கிடைக்கும். நீர் கிரக தோஷம் நீங்க, நீர் மாதமான ஆடியில் பஞ்சபூத நாயகனான விநாயகரை வழிபடுவதால் ரத்தச்சோகை, மூத்திரத் தாரை நோய்கள், நீரிழிவு நோய், இதயநோய் குறையும். கண் நோய் அகலும். மூச்சு இரைப்பு நோய் குணமாகும். (ஆஸ்துமா) கடக ராசி, சந்திர திசை, சந்திர புத்தி நடக்கும் அன்பர்கள் தவறாமல் விநாயகர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

 

பிடித்துவைத்தால் பிள்ளையார்!
பிள்ளையார் மிகவும் எளிமையாக இருப்பவர். அவரை நாம் மஞ்சள் அல்லது சாணத்தில் பிடித்து வைத்தாலே, அதில் அமர்ந்து அருள் தருபவர்.
‘சாமி பொய் என்றால் சாணத்தைப் பார். சாஸ்திரம் பொய் என்றால்  கிரஹணத்தைப் பார்’ என்பார்கள். அந்த அளவுக்கு இறைவன் சாணத்திலும் எழுந்தருளி வரம் தருகின்றார். மேலும், சாணத்தை விநாயகராகப் பிடித்து வைத்தால் அந்தச் சாணத்தில் புழு உண்டாகாமல், அப்படியே இருப்பது இறைவனின் தனிக்கருணை.
மஞ்சள் பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்வது நமக்குத் தெரியும். பின்வரும் பொருள்களால் பிள்ளையார் சதுர்த்தியில் பிடித்து வழிபட்டால், அதன் பலன்களும் சேர்ந்து கிடைக்கும்.
மஞ்சள் பிள்ளையார் – திருமணத் தடை நீங்கும்
மண் பிள்ளையார் – ராஜ பதவி கிடைக்கும்
புற்றுமண் பிள்ளையார் – வியாபாரம் பெருகும், லாபம் கிடைக்கும்
வெல்லப் பிள்ளையார் – சௌபாக்கியம் உண்டாகும்
உப்புப் பிள்ளையார் – எதிரிகள் வசியமாவர்
வேப்பமரப் பிள்ளையார் – ஜெயம் உண்டாகும்
வெள்ளெருக்கம் பிள்ளையார் – ஞானம் கிடைக்கும்
பசுஞ்சாணப் பிள்ளையார் – எண்ணிய காரியம் கைகூடும்
பச்சரிசி மாவுப் பிள்ளையார் – விவசாயம் பெருகும், விளைச்சல் அதிகரிக்கும்
வெண்ணெய் பிள்ளையார் – வியாதி அகலும்.
பிள்ளையார் அவதாரங்கள்!
வக்ரதுண்டர், சிந்தாமணி கணபதி, கஜானனர், விக்ன விநாயகர், மயுரேச கணபதி, பாலசந்திரர், தூமகேது, கணேசர், கணபதி, மகோற்கடர், துண்டி கணபதி, வல்லப கணபதி என பன்னிரண்டு அவதாரம் எடுத்துள்ளார் விநாயகர். சதுர்த்தி நாளில் பன்னிரண்டு அவதாரப் பெயர்களைச் சொல்லி, வீட்டிலுள்ள படத்தின் முன் பிரார்த்தனை செய்தால் பரிபூரண அருள் கிடைக்கும்.
நவகிரக தோஷம் நீக்கும் நாயகர்
சனி பகவான் தனது கோட்சார அமைப்பில் ஏழரை சனியாக வருவது வழக்கம். விநாயகரையும் ஒருமுறை பிடிக்க வந்தார். அவரோ, ‘இன்று போய் நாளை வா’ என்று கூறி சனி பகவான் தன்னைப் பிடிக்காதவாறு செய்துவிட்டார். விநாயகரை வழிபட்டால், அவரது புத்திசாலித்தனம், நமக்கும் செயல்பட ஆரம்பிக்கும். சனியின் பாதிப்பு நம்மை அணுகாது.

 

கேதுவும்  விநாயகரும்
நவகோள்களில் கேது ஞானக்காரகன். விநாயகரோ அவருக்குக் காரகன். ஜாதகக் கட்டத்தில் கேது பன்னிரண்டில் அமர்ந்து முக்தியைத் தருகிறார். மற்ற ஸ்தானங்களில் இருப்பது நன்றன்று. விநாயகர் வழிபாடு, துன்பத்தைத் தருவதற்கு உள்ள நிலைகளில் இருந்து நமக்கு விடுதலையைத் தரும்.
கனவு மெய்ப்பட வேண்டும்!
பொதுவாக, ஓர் அழகிய வீடு வேண்டும் என்பது அனைவரும் விரும்புவதுதானே. இருந்தாலும், பெண்கள் விரும்பினால்தான் அந்தக் குடும்பத்துக்கு மனை யோகமே கிடைக்கும். ஆகவே, விநாயகர் சதுர்த்தி நாளில் பெண்கள் அதிகாலையிலே குளித்து விரதமாக இருந்து கொழுக்கட்டை, சுண்டல் முதலான பிரசாதப் பொருள்களைத் தயார் செய்ய வேண்டும்.
பின்பு, புற்று மண்ணினால் விநாயகர் பிடித்து வைத்து மல்லிகை, முல்லை, ரோஜா, தாமரை மலர்களாலும் மருத இலை, மருவு, எருக்கன், வில்வம், அரளி, வன்னி, முழுநெல்லி இலைகளால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் நல்ல மனையும் அழகிய வீடும் அமையும். நீண்டகாலக் கனவாக இருந்து வரும் கட்டடக் கனவு நிறைவேறும்.
மேலும், விநாயகரை விநாயகியாக பாவித்து ‘விக்னேஷ்வரியே போற்றி’ என 108 எருக்கம் பூவால் அர்ச்சித்தால் பிரிந்து சென்ற கணவன் வீடு திரும்புவார். மனைவியைப் பிரிந்து வெளிநாட்டில் கஷ்டப்படும் கணவர், உள்நாட்டில் உன்னத வேலை செய்து அருகில் இருந்து கவனிப்பார்.

 

விநாயகர் பூஜை செய்வதன் மூலம் குடும்ப ஒற்றுமை நிலைக்கும். பூமிகாரகன் செவ்வாய், விநாயகரை வழிபட்டுதான் கிரக அந்தஸ்து பெற்றார். திருமணமாகாத பெண்கள் விநாயகரை மனம் உருகி வழிபடும்போது, செவ்வாயின் அனுக் கிரகமும் கூடுதலாகக் கிடைக்கும். செவ்வாய் தோஷம் நீங்கும். நல்ல வரன் கிடைக்கப்பெறுவர்.
கன்னிமூலை கணபதி
இன்று ‘ரெக்கமண்டேஷன்’ எனும் பரிந்துரைக்காக நாம் ஒவ்வொருவரும், ‘இவர் சொன்னா கேட்பார்’, ‘அவர் சொன்னா கேட்பார்’ என்று சொல்கிறோம். கன்னிமூலையில் உள்ள கணபதியை வழிபட்டால், அத்தனைப் பேருக்கும் பரிந்துரை செய்து நமக்கு வேண்டியதைத் தருவார் அவர்.
விநாயகர் கன்னிமூலையில் இருப்பதன்மூலம் வாஸ்து சாஸ்திரத்தில் கன்னிமூலைக்குச் சிறப்பு. தந்தை சிவனுக்கும் தாய் பார்வதிக்கும் மட்டுமல்லாமல் நவகோள்களுக்கும் தலையாய இடத்தில் விநாயகர் இருப்பதால், அனைத்து தெய்வங்களும் நமக்கு நன்மை செய்ய பரிந்துரை செய்கின்றார். இதனால்தான் முழுமுதற் கடவுளாக நாம் விநாயகரைப் போற்றுகிறோம்.
கும்பகர்ணப் பிள்ளையார்
கும்பகர்ணனைக் காலால் உதைத்துவிட்டதால் இந்தப் பெயர் விநாயகருக்கு ஏற்பட்டது. கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழியாக, திருவாரூர் செல்லும் பாதையில் திருக்கடுவாய்க் கரைப்புத்தூரில் இந்த விநாயகர் கோயில் உள்ளது.
இவரின் நீண்ட பெருங்காதுகள் பக்தர்கள் எங்கிருந்து, எப்போது தங்களது குறைகளை முறையிட்டாலும் அவற்றை எல்லாம் பரிவுடன் ஏற்று அருள்புரியும் பேராற்றல் கொண்டவர் விநாயகர். இப்படிப்பட்ட விநாயகரை மூன்று முறை குட்டிக்கொண்டு தோப்புக் கரணம் போட்டு வழிபட்டால், வேண்டுவனவற்றைக் கொடுத்துப் பாதுகாப்பார்.
கற்பக விநாயகர்
கடவுள்களில் பெரும் செல்வாக்கு பெற்றுள்ள விநாயகர், காரைக்குடி அருகில் உள்ள பிள்ளையார்பட்டியில் எழுந்தருளும் கற்பக விநாயகர். இவரை சதுர்த்தி நாளில் வழிபட்டால், வேண்டுவன கிடைக்கும். மகிழ மரங்கள் சூழ்ந்த இடத்தில், தெற்கே  உயர்ந்த மலையை உடையதான இந்தக் கோயிலில் குடவரை சிற்பமாக விநாயகர் இருக்கிறார். விநாயகருக்கென்று தனித்தன்மை கொண்ட கோயில் இது. மேலும், வாஸ்துபடி தெற்கே மலை, வடக்கே குளம், வடக்கு நேர் தெருத் தாக்கம் என்று வாஸ்து யோகத்தன்மையுடன் காட்சி தருகிறார் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர். வாஸ்து குற்றம் உள்ளவர்கள் இங்கே வந்து வழிபாடு செய்து சென்றால் குறைகள் நீங்கி, ஆனந்தம் அடைய வழி பிறக்கும்.
இதேபோல, பிள்ளையாருக்காகவே உள்ள ஆலயம் திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயில். மேலும் கோவை அருகில் உள்ள ஈச்சனாரி விநாயகர் கோயில், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பிரசன்ன விநாயகர் கோயில் ஆகியவையும் விநாயகருக்கான தனிப்பெரும் ஆலயங்கள். இங்கெல்லாம் சென்று வழிபடும்போது திருமணத் தடை நீங்கும். தொழில் வளர்ச்சி அடையும். குடும்ப ஒற்றுமை, மேன்மை உண்டாகும். கல்வி கேள்வியில் சிறந்து விளங்குவர்.
விக்னேஷ்வரி
மத்தியப்பிரதேசத்தில் ஜபல்பூரை அடுத்துள்ள ‘பேடா காட்’டில் பெண் வடிவில் உள்ள விக்னேஷ்வரியைக் காணலாம். இந்த விநாயகி சிலை, தொல்பொருள் ஆராய்ச்சிப் பதிவேட்டில் இடம்பிடித்துள்ளது. தமிழகத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் சிதம்பரம் நடராஜர் கோயிலிலும் புலிக்கால் விக்னேஷ்வரியைத் தரிசிக்கலாம். சுசீந்திரம் தாணுமாலயப் பெருமாள் கோயிலிலும் நாகர்கோயில் வடிவீஸ்வரத்திலும் வீணை தாங்கிய விநாயகியைத் தரிசிக்கலாம். நெல்லை மாவட்டம், வாசுதேவநல்லூர் கோயில் தேரில் போர்க்கோலத்தில் அருளும் கணேசாயினியைத் தரிசிக்க, சத்ரு பயம் நீங்கும் என்பது ஐதீகம்.
கண்திருஷ்டி கணபதி
திருஷ்டி என்றால் பார்வை. இதில் சாந்தம், கொடூரம் என்ற இரு பிரிவு உண்டு. அதில் கொடூர குணம் கொண்ட ‘கண்திருஷ்டி’ என்ற அரக்கனை அழிக்க, அகத்திய மாமுனியால் அழைக்கப்பட்டபோது, முப்பத்தி மூன்றாவது மூர்த்தமாக சர்வ வல்லமையுடன் தோன்றிய விநாயகர் இவர். கண்திருஷ்டி அசுரனை அழித்ததால் அன்று முதல் கண்திருஷ்டி கணபதி ஆனார். ஸ்ரீபரஞ்சோதி முனிவரும் அகத்தியரும் வழிபட்ட கண்திருஷ்டி கணபதியை சதுர்த்தி நாளில் வழிபட திருஷ்டிகள் அகலும் சாந்தம் உண்டாகும்.   
வலம்புரி விநாயகர்
தும்பிக்கை வலது பக்கம் திரும்பி இருக்கும் விநாயகர் வலம்புரி விநாயகர் என அழைக்கப்படுகிறார். இவர் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் ஓங்கார வடிவம் பெற்று இருப்பதால் இவரை மனதில் தியானித்து வணங்கினால் கவலைகள் தீரும். கடன் குறையும். திருமண யோகம் கூடும். நல்மக்கட்செல்வம் கிடைக்கும். தொழில் அபிவிருத்தி உண்டாகும். வேலை கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். நோய் அகலும். மனதுக்கு உற்சாகம் கிடைக்கும்.
பிள்ளையார்பட்டியில் அருள்பவர் வலம்புரி விநாயகரே!
இவர் வலது தந்தம் நீண்டும் இடது தந்தம் குறுகிய நிலையிலும், வலக்கரத்தில் மோதகம் வைத்துக்கொண்டும் பத்மாசனம் போட்டு அமர்ந்தும் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார்.
முக்குறுணி விநாயகர்
மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் தெற்கு கோபுர வாசல் வழியாகச் சென்றால், நேர் எதிரே இருப்பவர் முக்குறுணி விநாயகர். இவருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று ‘முக்குறுணி கொழுக்கட்டை’ படைக்கப்படுகிறது. ஒரு குறுணி என்றால் ஆறு படி, முக்குறுணி என்றால் பதினெட்டு படி. பதினெட்டு படி பச்சரிசியை மாவாக்கி, ஒரே கொழுக்கட்டையாகச் செய்து படைத்து, அனைவருக்கும் பிரசாதமாகத் தருவார்கள்.
ஆதியந்தப் பிரபு!
குழந்தை பிறந்தவுடன் அழும் சத்தத்துக்கு ‘ஜீவன் எழுச்சி’ என்று பெயர். இதற்கு அதிபதி கணபதி. இதுமட்டுமின்றி உலக விஷயங்கள் அனைத்துக்கும் துவக்கம் அவர். அதேபோல் காரிய வெற்றியின் நிறைவாகத் திகழ்பவர் ஆஞ்சநேயர் என்பது தத்துவம்.
இவ்விருவரும் இணைந்த விக்கிரகமான ஆதியந்தப் பிரபுவை, சென்னை அடையாறில் உள்ள மத்திய கயிலாசம் கோயில் சென்று தரிசித்தால் அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும்.Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம்india

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Kommende Film danmark

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies