
இந்த சமாச்சாரத்தை படிக்கும் முன்னர், நீங்கள் ஒரு வரலாற்றை தெரிந்து கொள்வது நன்று.
1964-1966ம் வருட காலப்பகுதியது. வல்வெட்டித்துறையில் அமைந்திருந்த வேலுப்பிள்ளை-பார்வதி அம்மாள் குடும்பத்தினரின் வீட்டுக்குச்சென்ற (பிரபாகரனுக்கு முன்பின் யார் எவர் என்று அறிமுகமே இல்லாத) வயோதிபத்தாய் ஒருவர், 1956-1958ம் வருட இனக்கலவரம் ஒன்றில் மோசமாக பாதிக்கப்பட்ட துயரச்சம்பவம் பற்றி, தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி, பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளிடம் கூறியவாறு, சீலையை விலக்கி தனது உடலிலுள்ள எரிகாயத்தழும்புகளை, பார்வதி அம்மாளுக்கு காட்டுகிறார்.
அந்த வயோதிபத்தாய், மரணத்திலிருந்து உயிர் பிழைத்து வந்திருந்த இருண்ட பயங்கரமான நாட்களை நினைத்த அச்சிறு நொடியே, கண்களிலிருந்து கண்ணீர் பொல பொலவென கொட்ட ஆரம்பித்து, குலுங்கி குலுங்கி சத்தமாக அழத்தொடங்கி விட்டார். அந்த தாயை சமாதானப்படுத்த பிரபாகரனின் தாயாருக்கு போதும் போதும் என்றாகி விட்டது.
அந்த வயோதிபத்தாயின் நெஞ்சுப்பகுதி நெருப்பில் எரிந்து உருகி கருகி, பார்க்கவே சகிக்க முடியாத கோலத்தில் இருந்தது. அச்சமயம் வீட்டில் 10-12 வயது சிறுவனாக இருந்த பிரபாகரன், அந்த அகோரக்காட்சியை ஏதேச்சையாக பார்த்து விடுகிறான்.
மறுகணமே, பிரபாகரனின் மூளையில் ஓர் எண்ண அலை உருவாகிறது.
“நாங்க ஓடிக்கொண்டே இருந்தா துரத்திக்கொண்டே இருப்பினம். குனிஞ்சுக்கொண்டே இருந்தா குட்டிக்கொண்டே இருப்பினம். முதல்ல ஓடுறத நிறுத்தணும். எதிர்த்து நிலையா நிற்கணும். அதுக்கப்புறம், வலிய தந்தவனுக்கே அந்த வலிய திருப்பிக்கொடுக்க வேணும்.”
என்று வைராக்கியம் வளர்த்துக்கொள்ளுகிறான்.
கவனியாதோர் கவனத்துக்கு:
இங்கு முக்கியமாக இரண்டு பெரும் விடையங்களை நீங்கள் கவனிக்க வேண்டும்.
ஒன்று:
அந்த வயோதிபத்தாயார் பிரபாகரனுக்கு முன்பின் யார் எவர் என்று அறிமுகமே இல்லாதவர். ஜாதி மதம் எதுவும் தெரிந்திருக்கவில்லை. மொழி மட்டுமே அதாவது, அந்த வயோதிபத்தாய், தமிழ் மொழியில் தன் தாயாருடன் உரையாடியது மட்டுமே பிரபாகரனுக்கு தெரிந்திருந்தது. அது கூட தமிழரா? இல்லை தமிழ் பேசும் முஸ்லிம் இனத்தை சேர்ந்தவரா? என்று கூடத்தெரியாது.
இரண்டு:
இத்தனைக்கும் பிரபாகரனுக்கு வயது வெறும் 10-12.
அசாத்தியமான இந்த இரண்டு பெரும் விடையங்களுமே பிற்காலத்தில், “வலியது வாழும்” என்ற அற்புதத்தை நிகழ்த்தி காட்டிய தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் எனும் தமிழர் எழுச்சியின் வடிவத்தை, ஆளுமையின் அடையாளத்தை தமிழ் தேசியத்துக்கும், ஈழதேசத்துக்கும் உவந்தளித்தது.
இனி விடையத்துக்கு வருவோம்.
அண்மைக்காலமாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழீழ தேசியத்தலைவர் பற்றியும், தமிழீழ விடுதலைப்போராட்டம் தொடர்பிலும் சர்ச்சைக்குரிய கருத்துகளைக்கூறி, கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருப்பது உங்களுக்கு தெரிந்ததே.
விக்கியின் முகத்திரையை கிழித்து அவரின் உண்மை முகத்தோற்றத்தை காட்டும் செய்திகள், ஊடகங்களில் வெளிவரும் போதெல்லாம் விக்கியிடம் ஓடோடிச்செல்லும் ஐங்கரநேசன்,
“சேர்! நீங்க இப்பிடி கதைச்சா இஞ்ச அரசியல் செய்ய முடியாது சேர். புலிகள பகைச்சா கஸ்டம். அடிச்சி துரத்தி கலைச்சு காணாமல் போகச்செய்திருவாங்கள். எங்கள பாத்தீங்களா? நாங்க எப்பிடி பேசுறம் எண்டு. எங்களப்போல நீங்க சும்மாவாச்சும், புலிகளின்ட போராட்டம் பத்தி அப்பிடி இப்பிடின்னு ஏதாவது ப்ளஸ் பொயின்டா பேசுங்க சேர். தலயில தூக்கி வைச்சி கொண்டாடுவாங்கள். புலிகளப்பத்தி அப்பிடி புகழ்ந்து கதைக்க மனசு வராட்டி, ராணுவம் பத்தியாவது ஏதாவது எதிர்மறையா பேசுங்க சேர்!” என்று கூறி,
விக்கிக்கு “தமிழ் தேசியம்” பற்றி வகுப்பெடுத்து வருகின்றார். மன்னிக்கவும், தமிழ் தேசியவாதியாக நடிக்க கற்றுக்கொடுத்து வருகின்றார்.
“தேசியம்” என்பது ஊற்றுவதா? ஊற்றெடுப்பதா?
தேசியம் என்பது யாரும் கற்றுக்கொடுத்து பேசும் மேடைப்பேச்சல்ல. படித்து எழுதி சித்தியடையும் பரீட்சையுமல்ல. அது தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களைப்போல, மனிதநேயத்துக்கு ஜாதி மதம் பார்க்காமல், உயிர்வலிக்கு நிறப்பிரிகை பார்க்காமல் இயல்பாகவே இரத்தத்தில் கலந்திருக்க வேண்டும். உணர்வில் ஊறியிருக்க வேண்டும். அப்போதுதான் அதில் ஒரு உயிரோட்டம் இருக்கும்.
மாறாக, யாரும் சொல்லிக்கொடுத்து பேசுவது என்றால், அது அவ்வப்போது கழட்டி உடுத்திக்கொள்ளும் “ஆள் பாதி ஆடை பாதி” என்ற வேசத்துக்கே ஒப்பானதாகும். நடிப்புச்சுதேசிகளுக்கே அது கைவந்த கலையாகும்.
“பொய்க்குத்தான் ஆடை தேவை
மெய்க்குத்தேவையில்லை.
தேங்கிய நீர் தான் பாசியை
உடுத்திக்கொள்கிறது.
அணைந்த நெருப்புத்தான்
சாம்பலை தன் ஆடையாக
அணிந்து கொள்ளுகிறது.”
எனும் கவிக்கோ அப்துல் ரகுமானின், முகடுடைத்து கொப்பளிக்கும் கவிதையே இவர்களுக்கு அறிவுரை!
இல்லை, இல்லவே இல்லை. நாங்கள் (வேடந்தாங்கிகளாக) போலியாக நடிக்கத்தான் போகின்றோம் என்றால்,
“உங்கள் பேச்சில் இடி மட்டும் தான் இருக்கிறது. மின்னலும் இல்லை. மழையும் இல்லை.” இதனால் பூமிக்கு என்ன பயன்? எனும் அப்துல் ரகுமானின், மற்றுமொரு கவிதையே இவர்களுக்கு சாட்டை!
இதையும் மீறி, இல்லை. இல்லவே இல்லை. நாங்கள் (வேடந்தாங்கிகளாக) போலியாக தொடர்ந்தும் நடிக்கத்தான் போகின்றோம் என்றால்,
“சீழ் நிரம்பிய கொப்புளங்களை முலை என்று சப்புவதற்கு” தமிழ் தேசிய உணர்வுள்ள மக்கள் தயாரில்லை என்பதை, காலம் வெகு விரைவாகவே இவர்களுக்கு உணர்த்தும்!
-கவரிமான்-