L T T பசங்ககிட்ட சொன்னா உன்னை ஒரு நொடியில தட்டிட்டு போய்டுவாங்க. நடராஜன் மிரட்டல்?

02 Jul,2014
 

             


திரை மறைவு அரசியல்... அ.தி.மு.க-வில் செலுத்திய ஆதிக்கம்... மன்னார்குடி குடும்பக் குழப்பங்கள்... என்று சர்ச்சைக்குரிய விஷயங்கள் அத்தனையில் இருந்தும் விலகி அமைதியாக இருக்கிறார் ம.நடராஜன். அவரை மீண்டும் பரபர சர்ச்சைகளுக்குள் இழுத்துவிட்டுள்ளார் கராத்தே ஹுசைனி.

''துப்பாக்கியால் சுட்டுவிடுவதாகவும் விடுதலைப் புலிகளைவைத்து காலி செய்துவிடுவதாகவும் சொல்லி என்னை நடராஜன் மிரட்டினார்'' என்று சென்னை காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார் ஹுசைனி.

இந்த விவகாரத்தின் பின்னணியை ஆராய கராத்தே ஹுசைனியிடம் பேசினோம்.

''2011-ம் ஆண்டு ஒரு நாள் என்னுடைய அலுவலகத்துக்கு வந்த ம.நடராஜன், நான் செய்து வைத்துள்ள சிற்பங்களைப் பார்த்துவிட்டு என்னைப் பாராட்டினார். 'இதுபோல் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது, செய்து கொடு’ என்று சொன்னார். 'அந்த வேலைகளைச் செய்வதற்கு ஒரு கோடி ரூபாய் செலவாகும். எனக்குச் சம்பளமாக ஒரு கோடி ரூபாய் வேண்டும்’ என்று பேசிவிட்டு, வேலைகளைத் தொடங்கினேன். இதற்காக அவர்கள் என் கையில் கொடுத்தது வெறும் 23 லட்ச ரூபாய் மட்டும்தான். இப்படி வேலைகள் நடந்தபோது, நடராஜன் கைது செய்யப்பட்டார். அத்துடன் அவருடன் கட்சிக்காரர்கள் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று மேடம் (ஜெயலலிதா) அறிக்கையும் கொடுத்தார்கள். அதனால் நான் அவர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டு, வாங்கிய பணத்துக்கான வேலைகளை மட்டும் செய்து கொடுப்பது என்று முடிவெடுத்தேன். அவர் ஜெயிலில் இருந்தபோதும் சரி, விடுதலையான பிறகும் நான் போய் அவரைப் பார்க்கவில்லை.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை காலை என்னுடைய அலுவலகத்துக்கு வந்த ஏர்போர்ட் மூர்த்தி, இளவழகன் ஆகியோர் என்னிடம், 'சிற்பங்களை எப்போது கொடுப்பீர்கள்?’ என்று கேட்டனர். நான், 'இன்னும் மீதித் தொகை 23 லட்சம் மற்றும் எனக்கான சம்பளத்தைக் கொடுத்தால் உடனே கொடுத்துவிடுவேன்’ என்று சொன்னேன். அவர்கள் இங்கிருந்து கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில், என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட இளவழகன், 'ஐயா உன்னை வீட்டுக்கு வரச் சொல்கிறார்... உடனே கிளம்பி வாருங்கள்’ என்றார். நான் உடனடியாக அங்கு போனேன். என்னை நடராஜன் அசிங்க அசிங்கமாகத் திட்டினார். அத்துடன், 'என்னிடம் நீ எந்தப் பணமும் வாங்கவில்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டுப் போ’ என்றார். நான் மறுத்தேன். 'இதுவரை வாங்கிய பணம் உங்களிடம்தான் வாங்கினேன். மீதித் தொகையையும் நீங்கள்தான் தரவேண்டும்’ என்று சொன்னேன். அதற்கு மீண்டும் அசிங்க அசிங்கமாகப் பேசியபடி வாட்டர் கேனை எடுத்து என் மீது எறிந்தார். 'நீ கராத்தேகாரன் என்றால் பெரிய இவனா? உன்னை துப்பாக்கியால் சுட்டுப் பொசுக்கிவிடுவேன். எல்.டி.டி.இ பசங்ககிட்ட சொன்னா உன்னை ஒரு நொடியில தட்டிட்டு போய்டுவாங்க’ என்றார்.

அதன் பிறகு நான் அங்கிருந்து வெளியேறினேன். அதுபற்றி புகார் கொடுக்க முடிவு செய்தேன். ஆனால், திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஏற்கெனவே நடராஜன் மீது ஒரு புகார் கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நேராக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போய் புகார் கொடுத்தேன். அத்துடன் சிற்ப வேலைகளை முடிப்பதற்கு அவர்கள் தருவதாகச் சொன்ன தொகையில் 23 லட்ச ரூபாய் வரவேண்டும். அதுபோக வாய்மொழி ஒப்பந்தமாகப் போடப்பட்டுள்ள என்னுடைய சம்பளத் தொகை ஒரு கோடி ரூபாய் வரவேண்டும். அதைக் கொடுத்தால்தான் இப்போது ஃபைபரில் செய்து வைத்துள்ள இந்தச் சிற்பங்களை மெட்டலுக்கு மாற்றித்தர முடியும். அதைக் கொடுத்துவிட்டு இந்தச் சிற்பங்களை அவர்கள் எடுத்துப் போகலாம்'' என்றார்.

ஹுசைனியின் புகாரின் பேரில் நடராஜன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது திருவான்மியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து நடராஜன், தனது தரப்பு வழக்கறிஞர் ஜெயசீலன் கூறியதாவது:

''கராத்தே ஹுசைனி முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு சிற்பங்கள் செய்வதாகச் சொல்லி முள்ளிவாய்க்கால் முற்றம் அறங்காவலர் குழுவிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார். ஆனால், இதுவரை அவர் வாங்கிய தொகைக்கான வேலைகளையே முடிக்கவில்லை. மொத்தம் 75 லட்ச ரூபாய் வாங்கி உள்ளார். அதில் ஒன்பது  கைகளை மட்டும் வெறும் ஃபைபரில் செய்து வைத்துள்ளார். 'இதற்கு 75 லட்சமும் செலவாகிவிட்டது. மற்ற வேலைகளை முடிக்க இன்னும் 25 லட்சம் வேண்டும்’ என்கிறார். இவரை நம்பி எப்படி மீதித் தொகையைக் கொடுக்க முடியும்?

இதைக் கேட்கப் போன இளவழகன், ஏர்போர்ட் மூர்த்தி, கார்த்திக் என்பவர்களுடன் தகராறு செய்துள்ளார். ஹுசைனியின் இடத்தில் இருந்து வெளியேறிய அவர்கள் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். பயந்துபோன ஹுசைனி இரவு 10 மணிக்கு மேல் போய் கமிஷனர் அலுவலகத்தில் நடராஜன் பெயரையும் சேர்த்து பொய்ப் புகார் கொடுத்துள்ளார். இதில் நடராஜன் பெயரை ஏன் இழுத்தார் என்பதே எங்களுக்குப் புரியவில்லை.

ஏனென்றால், அவர் சம்பவத்தன்று வேறொரு முக்கியமான வேலை தொடர்பாக வெளியூரில் இருந்தார். அவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகச் சொல்லி உள்ளது மிகப்பெரிய காமெடி. போலீஸ் கஸ்டடியில் இருக்கும்போது நடராஜன் அவர்களுடைய துப்பாக்கி போலீஸில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இது தெரியாமல் ஹுசைனி ஏதேதோ உளறியிருக்கிறார். உரிய ஆதாரங்களைச் சமர்ப்பித்து இந்தப் பிரச்னையை சட்டப்படி நாங்கள் சந்திப்போம்'' என்றார்.

இதையடுத்து ஹுசைனியின் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு முக்கியமான நபர்களான இளவழகன், ஏர்போர்ட் மூர்த்தி ஆகியோர்கள் கூறியது:

''ஒரு பொருளைச் செய்து தருகிறேன் என்று சொல்லி 75 லட்ச ரூபாய் வாங்கியவர், பொருளையும் தரவில்லை... பணத்தையும் தரவில்லை என்றால் கேட்போமா, இல்லையா? அதைத்தான் செய்தோம். இத்தனைக்கும் எங்கள் இடத்தில் வைத்து கேட்டிருந்தால் நாங்கள் மிரட்டியதாகச் சொல்லலாம். நாங்கள் போய் கேட்டது அவருடைய இடத்தில். அங்கு அவர்தான் கத்திகள், ஆயுதங்களை அடுக்கிவைத்து ஒரு அச்சமூட்டும் தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தார். கொடுத்த தொகைக்கு இதுவரை எந்தக் கணக்கும் அவர் கொடுக்கவில்லை. இதைக் கேட்டபோது வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து நாங்கள் உடனடியாக வெளியேறி திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். நாங்கள் புகார் கொடுத்ததைத் தெரிந்துகொண்டு இவர் ஒரு பொய்ப் புகாரை தயார் செய்து டி.ஜி.பி அலுவலகம், கமிஷனர் அலுவலகம் என்று ஓடுகிறார். இவர் திருவான்மியூர் காவல் நிலையத்தில்தானே புகார் கொடுக்க வேண்டும்? இங்கு ஒரு புகார்கூட அவரால் கொடுக்க முடியாது. காரணம், பாஸ்போர்ட் விவகாரத்தில் கைதானது, இப்போது அவர் இருக்கும் வீட்டை அபகரித்தது, மேலும் பெண் விவகாரம் உள்பட பல விவகாரங்களில் முறைகேடு செய்தது என இவர் மீது ஏற்கெனவே பல புகார்கள் உள்ளன. அதனால்தான் கமிஷனர் அலுவலகம் ஓடுகிறார். இதில் நடராஜன்  பெயரைச் சேர்த்தால்தான் தன்னுடைய புகாருக்கு ஒரு வெயிட் இருக்கும் என்பதால், அன்று இந்த ஊரிலேயே இல்லாத அவரையும் புகாரில் சேர்த்துள்ளார்'' என்றனர்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர் கார்த்திக், ''மூன்றரை லட்சம் மதிப்பில் செய்யக்கூடிய ஃபைபர் பொம்மைகளை செய்துவிட்டு, அதற்கு 75 லட்சம் செலவாகிவிட்டது என்று சொல்கிறார். அதற்குக் கணக்கு வழக்குகளைக் காட்டுங்கள் என்றால் அதுவும் இல்லை. இந்தப் பொம்மைகளும் சென்னை சங்கமத்துக்காக செய்யப்பட்டு அதில் காட்சிப்பொருளாக இடம் பெற்றவை. 75 லட்சம் ரூபாயை வாங்கி, சென்னை சங்கமத்தில் பயன்படுத்தப்பட்ட பொம்மைகளை எங்களிடம் தள்ளிவிடப் பார்க்கிறார் ஹுசைனி. இந்த விவகாரத்தில் அவர் தானாகவே வந்து நன்றாக மாட்டிக்கொண்டுள்ளார்'' என்றார்.

முற்றத்தை சுற்றி இன்னும் எத்தனை சர்ச்சைகள் எழப்போகிறதோ?



Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம்india

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Kommende Film danmark

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies