ஹிலாரி கிளின்டன் மீது ஷூ வீசிய பெண்
11 Apr,2014
ஹிலாரி கிளின்டன் மீது ஷூ வீசிய பெண்
அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர், ஹிலாரி கிளின்டன் மீது, ஷூ வீசிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர், ஒபாமாவின் அமைச்சரவையில், வெளியுறவு அமைச்ராக இருந்தவர் ஹிலாரி கிளின்டன். முன்னாள் அதிபர், கிளின்டனின் மனைவியான ஹிலாரி, இரண்டாவது முறை ஒபாமா அதிபரானதும், மீண்டும் அமைச்சர் பதவி வகிக்க மறுத்து விட்டார். இதையடுத்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சராக, ஜான் கெர்ரி நியமிக்கப்பட்டார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில், மறுசுழற்சி முறையில் பொருட்களை பயன்படுத்தும் தொழிற்சாலை நிர்வாகிகளின் கூட்டத்தில் அவர், நேற்று முன்தினம் உரையாற்றினார். அப்போது, பார்வையாளர் பகுதியிலிருந்து, ஒரு பெண், ஹிலாரி மீது ஷூவை தூக்கி எறிந்தார். அதிருஷ்டவசமாக அந்த ஷூ, ஹிலாரி மீது படவில்லை. இந்த சம்பவத்தால், பதற்றமடையாத ஹிலாரி, தொடர்ந்து உரையாற்றினார். அப்போது அவர் வேடிக்கையாக குறிப்பிடுகையில், ''சிலர், எதை எதையோ என் மீது வீசுகின்றனர். இது என்ன சர்க்கஸ் வித்தையா? பழைய பொருட்களால் இது போன்ற விபரீதம் ஏற்படும் என, எனக்கு தெரியாமல் போய்விட்டது,'' என்றார். ஹிலாரி மீது ஷூ வீசிய பெண், பின்பக்க வழியாக தப்பி செல்ல முயன்ற போது, கைது செய்யப்பட்டார்.