ராஜீவ் கொலை வழக்கு: மக்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்

25 Feb,2014
 

ராஜீவ் கொலை வழக்கு: மக்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்


ராஜீவ் கொலையில் சதி செய்த குற்றத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு, 23 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டுக் கிடந்த 7 பேரை உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து தமிழக அரசு விடுதலை செய்ய முன் வந்ததும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பது நியாயம்தானா?


நாட்டின் பிரதமரைக் கொன்றவர்களையே விடுதலை செய்தால், சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்புக் கிடைக்கும் என்கிறார், ராகுல் காந்தி. தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்கிறார் சுப்ரமணியசாமி.

மக்களின் சிந்தனைக்கு சில கேள்விகளை முன் வைக்க வேண்டியது நியாயத்தின் பக்கம் நிற்பவர்களின் கடமையாகிறது.

- ராஜீவ் காந்தி கொலையில் சி.பி.ஐ. 41 பேரை குற்றவாளிகள் என்று அடையாளம் கண்டது. இதில் நேரடி தொடர்புடையவர்களான தணு, சிவராசன், சுபா உள்ளிட்ட 12 பேர் ஏற்கனவே தேடுதல் வேட்டையில் இறந்துவிட்டார்கள்.

- 26 பேர் குற்றம்சாற்றப்பட்டு, 'தடா' நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். பூந்தமல்லி 'தடா' நீதிமன்றம் 26 பேருக்கும் தூக்கு தண்டனை அறிவித்தது. இந்த 26 பேரும் கொலையில் நேரடி தொடர்புடையவர்கள் அல்ல; சதிக்கு உதவி செய்தார்கள் என்பதுதான் குற்றச்சாற்று.

- 'தடா' சட்டத்தின் கீழ் குற்றம்சாற்றப்பட்டவரிடமிருந்து பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியும். அதற்காகவே 'தடா'வின் கீழ் குற்றம்சாற்றி குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு சித்திரவதை செய்தார்கள். அப்படிப் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தையே அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தினார்கள். 'தடா' நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. காங்கிரஸ்காரர்கள் ‘தர்மம் வென்றது’ என்று மகிழ்ச்சிக் கூத்தாடினார்கள்.

- 'தடா' சட்டம் மனித உரிமைகளைப் பறிக்கும் அடக்குமுறைச் சட்டம் என்பதை ஏற்றுக்கொண்டு 1995இல் நாடாளுமன்றத்திலே அதை நீக்கம் செய்தது காங்கிரஸ் ஆட்சிதான். அதே 'தடா' சட்டம் ராஜீவ் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்டதை காங்கிரஸ் ஆதரித்தது. - 'தடா' சட்டம் பயன்படுத்தப்பட்டதால் விசாரணை ரகசியமாக நடந்தது. 50 நாட்கள் வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 3 மாத காலம் எடுத்துக் கொண்டார்கள். அரசின் சாட்சிகள் இரகசியமாக வைக்கப்பட்டனர். நீதிமன்றத்தில் சாட்சி கூற வரப் போகிறவர் யார் என்பது அப்போதுதான் தெரியும். எனவே குற்றம்சாற்றப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் திறமையாக குறுக்கு விசாரணை நடத்த முடியாமல் தடுக்கப்பட்டனர். தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்யும் உரிமையும் தடுக்கப்பட்டது. குற்றம்சாற்றப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் வைத்து வாதாடும் வசதி இல்லாதவர்கள் என்பதால் 26 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து கதையை முடித்துவிடலாம் என்று திட்டமிட்டார்கள்.


 
- தமிழகத்தில் இந்த அநீதிகளுக்கு எதிரான மனித உரிமை இயக்கங்கள் வராமல் போயிருந்தால், இதே 26 பேரும் உச்சநீதிமன்றத்தை அணுகியிருக்கவே முடியாது. அப்போதே தூக்கிலேற்றப்பட்டிருப்பார்கள்.

- உச்சநீதிமன்றம் வழக்கை விசாரித்து, 19 பேரை விடுவித்தது. அது மட்டுமல்ல, இந்த வழக்கு 'தடா' சட்டத்தின் கீழே நடத்தப்பட்டதே தவறு என்று கூறி விட்டது. நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் என்ற நால்வருக்கு மட்டும் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.

- தூக்குத் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.டி.தாமஸ் பதவி ஓய்வு பெற்றவுடன், மனம் திறந்தார். இவர்கள் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வெளிப்படையாகவே அறிவித்தார். சி.பி.ஐ. விசாரணைக்கு தலைமையேற்ற அதிகாரி கார்த்திகேயன், புலனாய்வுப் பொறுப்பை ஏற்ற அதிகாரி ரகோத்தமன் அனைவருக்குமே 'மனசாட்சி' உறுத்தியது. தூக்குத் தண்டனை வேண்டாம் என்று கூறினார்கள்.

- எந்த சாட்சியத்தின் அடிப்படையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதோ, அந்த சாட்சியத்தைப் பதிவு செய்த ஐ.பி.எஸ். அதிகாரி தியாகராசனும் மனம் திறந்தார். “நான் சாட்சியத்தை சரியாகப் பதிவு செய்யவில்லை, பேரறிவாளன் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கக்கூடிய அவரது கூற்றை நீக்கிவிட்டு அவர் வாக்குமூலத்தை பதிவு செய்தேன்” என்று வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார்.குண்டு வெடித்தபோது ராஜீவ் காந்திக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதா என்பதை விசாரிக்க காங்கிரஸ் ஆட்சியில் நீதிபதி வர்மா கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தை செயல்படவிடாமல் காங்கிரசாரே, பாதியில் முடக்கிவிட்டனர்.


- ராஜீவ் கொலையில் அந்நிய சதி இருக்கிறதா என்பதைக் கண்டறிய நீதிபதி ஜெயின் தலைமையில் மற்றொரு கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் செயல்படவும் காங்கிரஸ் கட்சி ஒத்துழைக்கவில்லை. ஜெயின் ஆணையமே காங்கிரசாரை குற்றம்சாற்றி பணியை முடித்துக் கொண்டுவிட்டது.

- இப்படி ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய எந்த முயற்சியும் எடுக்காமல், அதற்கு ஒத்துழைக்காமல் கையில் சிக்கியவர்களை தூக்கில் போட்டு வழக்கை முடித்துவிட துடித்த காங்கிரஸ் கட்சிதான் இப்போது துள்ளி குதிக்கிறது.

- இந்திரா கொல்லப்பட்டபோது டெல்லியில் 3000 சீக்கியர்கள் இதே காங்கிரஸ் கட்சிக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டார்களே! இதுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லையே! அதில் காங்கிரஸ் எந்த ஆர்வமும் காட்டவில்லையே! மறக்க முடியமா?

- அமெரிக்காவின் 'யூனியன் கார்பைடு' நிறுவனத்தின் அலட்சியத்தால் நள்ளிரவில் போபால் விஷவாயு கசிந்து பல்லாயிரம் ஏழை எளிய மக்கள் பலியானார்கள். போபாலே மயான பூமியானது! ஆயிரக்கணக்கில் ஊனமுற்றார்கள். அப்போது அந்த நிறுவனத்தின் தலைவரை பத்திரமாக வெளிநாட்டுக்கு விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தது - இதே காங்கிரஸ் கட்சிதானே மறக்க முடியுமா?  காந்தி கொலையில் சதிக் குற்றம்சாற்றப்பட்டு ஆயுள் தண்டனை பெற்ற கோட்சேயின் தம்பி கோபால் கோட்சேயை 1964 ஆம் ஆண்டு விடுதலை செய்ததே மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் ஆட்சிதானே! இல்லை என்று கூற முடியுமா?


- ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் கொலை செய்யப்பட்டபோது எந்த ஒரு காங்கிரசாரும் அவர் பாதுகாப்புக்கு உடனிருக்கவில்லையே ஏன்? இதுதான் இவர்களின் ராஜீவ் விசுவாசமா? இத்தனைக்கும் ராஜீவ் பங்கேற்கும் ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்துக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி கூட்டம் நடக்கவிருந்த அதே நாளில், சென்னையில் ஆளுநர் பீஷ்ம நாராயணனை சந்தித்து, மனு கொடுத்தவர்கள்தான் காங்கிரஸ்காரர்கள். ஆபத்து குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தும் ராஜீவ் காந்திக்கு பாதுகாப்பு வழங்காமல் ஒதுங்கி நின்றவர்களே, இவர்கள் தானே? இதுதான் இவர்களின் தலைவர் விசுவாசமா?

- குற்றத்தில் நேரடியாக தொடர்புடையவர்கள் மரணமடைந்த பிறகும், தீர்ப்பளித்த நீதிபதியே விடுதலை செய்யக் கோரிய பிறகும், 'தடா' சட்டத்தைப் பயன்படுத்தி முறையற்ற விசாரணைகளை நடத்திய பிறகும், வாக்குமூலங்களை தவறாகத் திருத்தி எழுதிய பிறகும், 23 ஆண்டுகாலம் இந்த இளைஞர்கள் சிறையில் வதைபட்ட பிறகும் விடுதலை செய்யக்கூடாது என்று அலறுகிறார்களே, இது நியாயம்தானா? மனிதம்தானா?

- சிறைச்சாலை அதிகாரிகளே பாராட்டும் நன்னடத்தையோடு நடந்து கொண்ட இந்த இளைஞர்களின் முழு வாழ்வையும் சிறைச்சாலைக்குள்ளேயே புதைத்துவிடவேண்டுமா? ராஜீவ் காந்தியை கொழும்பு நகரத்தில் துப்பாக்கிக் கட்டையால் அடித்துக் கொலை செய்ய முயன்றான் ஒரு சிங்கள இராணுவ சிப்பாய். அந்தப் பேர்வழியைப் பாதுகாத்து வரும் இலங்கை அரசுடன் நட்பு கொண்டாட துடிக்கிறதே காங்கிரஸ், இது நியாயம்தானா?


மரண தண்டனையை ஆதரிக்கவில்லை என்று கூறும் ராகுல், மரணமடையும் வரை இந்த இளைஞர்களை சிறையில் அடைத்து வைக்கச் சொல்வது மரண தண்டனையை விட கொடிய தண்டனை அல்லவா?

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடுத்த முடிவில் என்ன தவறு?
தமிழர்களே! மனித உணர்வுகளின் இந்த நியாயங்களை சீர்தூக்கிப் பாருங்கள்!Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம்india

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Kommende Film danmark

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies