கருப்பி 1 பகுதி by.நிலா

19 Dec,2010
 

 நீங்க சொன்ன பைவ்ஸ்டார் பில்டிங் வந்தாச்சு... எந்தப்பக்கம் போகனும்?
அப்படியே நேரா போடுங்க... என்று சாரதிக்கு திசை காட்டினான் மணிவண்ணன்.

ஓகே ஓகே நிறுத்து நிறுத்து...
அவசர அவசரமாக கதவைத்திறந்து கொண்டவன்
எவ்வளவு ஆச்சு ..
28 ரூபா சார்..
ஓகே இந்தா பிடி..
சார் காலங்காட்டியும் முதல் சவாரி 50 ரூபாய்க்கு சில்லறை இல்லையே...
ஓகே பரவால நீயே வைச்சுக்கோ.... என்று மிகுதிப்பணத்தை விட்டுவிட்டு அவசர அவசரமாக அந்த கட்டிடத்தை நோக்கி ஓடினான் மணிவண்ணன்..

இன்னும் ஐந்து நிமிடம் தான்... ஐயோ போகனுமே...
அவன் மனது துடிதுடித்துக்கொண்டே அந்த வரவேற்புப் பகுதியை அடைந்தது..

எக்ஸ்க்யுஸ் மீ... வெல்கம் க்ரூப் இன்டர்வியு எங்க நடக்குது சொல்லமுடியுமா...
இரண்டாவது மாடியில ரூம் நம்பர் ஆறு...
ஓகே.. தாங்க்ஸ்

அவசர அவசரமாக அவளுக்கு நன்றி கூறிவிட்டு லிப்ட் நோக்கி ஓடலானான் மணிவண்ணன்..

அந்த நேரம் பார்த்து..
சார் .. சார் என்று கத்திக்கொண்டே ஓடி வந்தான் அந்த டாக்ஸி ட்ரைவர்..

இவன் ஏன் ஓடி வாறான்... ஒரு கணம் தரித்து நின்றான் மணிவண்ணன்..
சார்..அவசரத்துல இந்த பேப்பர்கள் விழுந்து இருக்கிறத பாக்காம வந்திருக்கிங்க... உள்ள உங்க டிகிரி சர்டிபிகேட் ... அதான் கொடுத்திட்டு போகலாம் என்று வந்தன்...

ஓ மை காட்.. இது இல்லாம இன்றைக்கு இன்டர்வியுவா... ம் .. ரொம்ப தாங்க்ஸ்.... என்று அவனுக்கு நன்றி கூறிவிட்டு .. அடுத்த மூன்று நிமிடங்களில் இரண்டாம் மாடியில் ஆறாம் அறையருகே மணிவண்ணன்...

ஓ... எனக்கு முதலே இங்க இத்தனை பேரா? ஓரு பத்து பேர் இருப்பாங்களா..
அங்கே வரிசையில் கதிரையில் அமர்ந்திருந்தவர்களை தன் மனதுக்குள்ளேயே எடை போட்டவாறு காலியாக இருந்த அந்தக் கதிரையில் அமர்ந்து கொண்டான் மணிவண்ணன்.

ஓடி வந்த களைப்பு பதட்டம் எல்லாம் சேர்த்து அவனுக்கு நன்றாக மூச்சு வாங்கியது..

என்ன சார்? இவ்வளவு களைச்சு வந்திருக்கிங்க .. அருகில் இருந்தவன் மெதுவாகக் குரல் கொடுத்தான்

கொஞ்சம் தண்ணி கிடைக்குமா அவனை எதிர் கேள்வி கேட்டான் மணிவண்ணன்

அதோ அங்க இருக்கே என்று அந்த தண்ணீர் போத்தலை அவன் காட்ட.. நன்றி கூறிவிட்டு எழுந்து சென்ற மணிவண்ணன் ஒரு கப் தண்ணீரை அருந்திக்கொண்டான்..

இப்போது அவன் மனது மெதுவாக அமைதி கண்டது.. ஆனாலும் சிந்தனைகள் சிதறத்தொடங்கின

கருப்பி.. என்னால நம்பவே முடியலயே .. ஒரு பெருமூச்சுடன் கடவுளே.. என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்..

மிஸ்டர் மணிவண்ணன்.. மிஸ்டர் மணிவண்ணன் என்று அந்த க்ளார்க்கின் குரல் இரண்டு தடவை கேட்டது

சுதாரித்துக்கொண்ட மணிவண்ணன் அவசர அவசரமாக திரும்பி யெஸ்.. என்றான்

உள்ளே வாங்க.. அவனுக்கான அழைப்பு
தன் சிதறிப்போன சிந்தனைகளை ஒருமுகப்படுத்திக்கொண்ட மணிவண்ணன் அந்த அறைக்குள் நுழைந்தான்

கடிகார முற்கள் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தன
சுமார் அரை மணி நேரம் இருக்கும் ...
அந்த அறையின் கதவு திறக்கப்பட்டது

அப்படி கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ... மணிவண்ணன் பணிக்கப்பட்டான்.

மீண்டும் வந்து கதிரையில் அமர்ந்து கொண்டான் மணிவண்ணன்.
அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் அவனருகே வந்த அந்த க்ளார்க் ..
மிஸ்டர் மணிவண்ணன் இந்த விசிடிங் கார்டுல இருக்கிற அட்ரசுக்கு உடனடியா கிளம்புங்க.. அங்க உங்களுக்கான செகன்ட் இன்டர்வியு இருக்குது..

இன்னும் ஒரு இன்டர்வியுவா
அவனுக்குள்ளேயே ஒரு கேள்வி ..
எலெக்ட்ரிகல் என்ஜினியரிங் மாஸ்டர்ஸ் முடிச்சுருக்கன்...
ஒரு பைசாக்கு பிரயோசனமில்லை
என்னதான் செய்ய என்று தன்னைத்தானே உள் மனதில் நொந்து கொண்டவன் வெளிப்புறத்தில் சிரித்தபடி அந்த விசிடிங் கார்டை பெற்றுக்கொண்டான்

கட்டிடத்தை விட்டு வெளியே வந்தவுடன் தான் வெயிலின் அகோரமே தெரிய ஆரம்பித்தது

அப்பப்பா என்னே வெயில் என்னே வெயில்.. அங்கே அவன் எதிரே வந்த ஆட்டோ வண்டியை நிறுத்தி ஏறிக்கொண்டான்...

பாதையெங்கும் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும் வாகனச்சத்தங்கள்..
நெருக்கடியான போக்குவரத்துக்கு மத்தியிலும் புகுந்து கொண்டு வேகமாக முன்னேறும் அந்த ஆட்டோ...

அப்போது அந்த சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தது..
வந்த வேகத்தில் சடார் என ஓரு ப்ரேக்...

ஆட்டோவிற்குள் ஏதோ ஒரு வகை வாடையடிக்கிறது.. மணிவண்ணன் தயங்கவில்லை

என்னப்பா.. ஏதோ வாடையடிக்குதே
பக்கத்துல உள்ள லாரிக்காரன் சார்
தலையை வெளியே விட்டுப்பார்த்தான் மணிவண்ணன்
அருகில் நின்று கொண்டிருந்த அந்த லாரி... கரும்புகையைக் கக்கிக்கொண்டிருந்தது..
மெதுவாகத் தலையை உள்ளே எடுத்தவன் ஆட்டோவின் இருக்கையில் உட்புறமாக தன்னை இழுத்துக்கொண்டான்...

இப்போது அவன் மனதில் ஒரு வெறுமை தோன்றியது..
ஆனால் அந்த வெறுமை நெடுநேரம் நீடிக்கவில்லை

அவன் முகத்தில் காறித்துப்பாத குறையென்றாலும் கருப்பியின் ஞாபகம் அவனை விட்டுப் போகவில்லை

பற்களைக்கடித்துக்கொண்டான்
தலையைக் கோதிக்கொண்டான்
சிறியதாக ஒரு பெருமூச்சுடன் அந்த நினைவுகளுக்குள் மூழ்க நினைத்தான்..

சார் முன்னால ஏதோ ஆக்சிடன்ட்... அவ்வளவுதான் வண்டி போகாது..
பாத்தா ஏதோ அவசரமா போற மாதிரி இருக்கு... பேசாம நடந்தே போங்க
ஆட்டோக்காரனின் தயவான குரல் அவனை தட்டியெழுப்பியது

வெளியே எட்டிப்பார்த்தான் மணிவண்ணன்...
அப்போது அவன் செல்போன் அலற ஆரம்பித்தது

ஹலோ
மிஸ்டர் மணிவண்ணன் எங்கயிருக்கிங்க இன்னுமா போகல
சார் ட்ராபிக் ஜாம்..
நோ நோ எனக்கு எந்த எக்ஸ்ப்ளனேசனும் தேவையில்லை.. அடுத்த பத்து நிமிசத்துல நீங்க அங்க இருக்கலயோ உங்க அப்பொயின்ட்மன்ட் கேன்சல்..

கண்டிப்பாக வந்த அந்த குரலைக்கேட்டு நடுநடுங்கிப்போன மணிவண்ணன் ஆட்டோவை விட்டிறங்கி ஓடினான்.. சிறுது நடந்தான்.. மீண்டும் ஓடினான்..

இதோ பார்க்லேன் வந்துவிட்டது...
இலக்கம் 210 ... யெஸ் அதோ இருக்கிறது...
மீண்டும் வேகமாக நடந்தான்

உள்ளே சென்றதும் மணிவண்ணனுக்கு அந்த அறையைத்திறந்து விட்டார்கள்...
இங்க வெயிட் பண்ணுங்க

சரியென்று கூறிய மணிவண்ணன்.. எதற்கும் என்று நினைத்தவனாக
நான் யாரைப் பார்க்கனும் ... என்று அந்தப் பணிப்பெண்ணிடம் கேட்டான்
அதோ அந்தக் கண்ணாடிக்குள்ளால தெரியுறாரே... அவர்தான் எங்க எம்டி..
நீங்க அவரைத்தான் சந்திக்கனும்..

ஓகே நன்றி என்று கூறிக்கொண்ட மணிவண்ணன் மெதுவாக அமர்ந்துகொண்டான்..
கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தான் .. நேரம் 12.30 ஆகியிருந்தது..

அங்கிருந்த ஒவ்வொருவராக எழுந்து லன்ச் ப்ரேக்... போய் வருகிறார்கள்..
மணிவண்ணனின் அடிவயிற்றில் மெதுவாக .. பசி எட்டிப்பார்த்தது..
ஆனால் அந்தக் கண்ணாடி அறையில் அந்த எம்டி இருக்கிறார்.. அவர் எங்கும் போகவில்லை.. திடீரென்று கூப்பிட்டுவிட்டால்... ம் இன்று ஒரு நாள் பசியில் இருந்தால் என்ன..

தன்னைத்தானே திடப்படுத்திக்கொண்ட மணிவண்ணன் காத்திருந்தான்..
அவன் அமர்ந்திருந்த அறையில் காணப்பட்ட அத்தனை போட்டோக்களையும் பார்த்துவிட்டான்.. வெளியில் எட்டிப்பார்த்தான்... மீண்டும் அமர்ந்துகொண்டான்... அங்கே இருந்த பழைய புதிய பத்திரிகைகள்...சஞ்சிகைகள் அத்தனையும் வாசித்து முடிந்துவிட்டது...

தாகம்... தண்ணீராவது குடிக்க வேண்டும்...
இப்போது வெளியே சென்றான்
அந்தப்பெண்ணிடம் கொஞ்சம் தண்ணீர் வாங்கிப் பருகிக்கொண்டவன் மீண்டும் வந்து அமர்ந்து கொண்டான்...

கடிகாரம் 3 மணியைத் தாண்டிவிட்டது...
இவன் இன்னும் அழைக்கப்படவில்லை
மணிவண்ணனுக்கு வெறுப்பாக இருந்தது..
ஆனாலும் அவன் மனதுக்குள் ஏதோ ஒரு விறைப்பு... கட்டாயம் இந்த வேலையைப் பெற்றே ஆக வேண்டும் என்ற விறைப்பு...

அவனை அறியாமல் ஒரு வகை அசதி அவனை ஆட்கொள்கிறது..
ஆனாலும் போராடித்தன் கண்களை திறந்து கொள்கிறான்...

நேரம் 5 மணி 20 நிமிடம்...
என்ன நடந்தது என்று தெரியவில்லை .. அவன் கண்ணை ஒரே ஒரு நிமிடம் மூடித்திறந்தது போன்றுதான் அவனுக்கு ஞாபகம் ..
அங்கு யாரையும் காணவில்லை...

எம்டியின் அரையை எட்டிப்பார்த்தான்...
வெளியில் வருவதற்கு அவரும் தயாராகிக்கொண்டிருக்கிறார்..

தூங்கிவிட்டேனா... தன்னைத்தானே கேள்வி கேட்டவன் பதிலைத் தெரிந்து கொள்வதற்குள் ... அவனருகே எம்டி..

ஓகே... மிஸ்டர் மணிவண்ணன்... இன்னைக்கு என்ன திகதி தெரியுமா?
ஆமா சார் 26...

ஓகே ஒண்ணாந்திகதியிலயிருந்து நீங்க இங்க வேலை பாக்கிறிங்க... ஆர் யு ஹப்பி...
மணிவண்ணனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை... சந்தோசத்தில் பூரிப்படைந்தான்

இவ்வளவு நேரம் உங்களை இங்கே தனியாக இருக்க வைத்ததுக்கு மன்னிச்சுக்கொள்ளுங்க... பட் எனக்கு பொறுமை சாலிகளைத்தான் ரொம்பப் பிடிக்கும்... என்று அவன் தோளைத் தட்டிக்கொடுத்தார் எம்டி

இடையில் கொஞ்ச நேரம் தூங்கியிருந்தாலும் தன் பொறுமைக்கு வெற்றி கிடைத்திருப்பதை உணர்ந்து கொண்டான் மணிவண்ணன்

ஓகே... இதோ இவர்தான் மிஸ்டர் ராஜ்... இவரோட நீங்க போங்க .. மத்த விசயங்கள இவரே பேசிக்கொள்வார் என்று ராஜை அறிமுகப்படுத்திவிட்டு எம்டி கிளம்பிச் சென்றார்...

மணிவண்ணனைக் கூட்டிச்சென்ற ராஜ்... அவனுடைய தொழில் சம்பந்தமான விளக்கங்கள் .. ஆலோசனைகள் என்ற பெயரில் இரவு 9.10 வரை இழுத்துவிட்டடார்....

எப்படியோ இப்போதாவது தப்பிப் பிழைத்தோம் என்று மனதுக்குள் எண்ணியவனாய் அவசர அவசரமாக வெளியே வந்த மணிவண்ணன்... மனது இப்போது துடிதுடித்தது...

ஆம்... கருப்பியைப் பார்க்கனும்
இப்பவே பார்க்கனும்

அவன் மனது துடிதுடித்தது....

உடனடியாக ஒரு ஆட்டோ பிடித்து கருப்பியை இன்று காலை கண்டிருந்த அந்தக் கோவில் அருகே வந்திறங்கினான் மணிவண்ணன்...

இன்டர்வியுவுக்கு அணிந்திருந்த அதே ஆடையுடன்... டையைக் கூட இன்னும் கழற்றவில்லை...

அவன் மனது அங்கலாய்த்துக்கொண்டிருந்தது...

அப்போது அந்தக் கோவில் வாசலின் அருகே ஒரு பிச்சைக்காரனைக் கண்டுவிட்டான் மணிவண்ணன்..

அது ஒரு வயோதிபர் என்பதை கண்டுகொண்டவன்....

பெரியவரே .. இங்க கருப்பின்னு ஒரு பொண்ணு இருப்பாவே தெரியுமா...
இதைக்கேட்டு அவனை மேலும் கீழும் பார்த்த அந்த வயோதிபர்...

என்ன கேள்விப்பா கேட்கிற.. கருப்பி சிவப்பினா யாருக்குத் தெரியப்போகுது...
நம்மள்ல முக்கால்வாசிப்பேர் கருப்புதானுல.. என்று தன் பொக்கை வாயைத்திறந்து சிரித்தார்...

இப்போது மணிவண்ணனுக்கு சிரிப்பு வரவில்லை... ஆனாலும் யாரோடும் போராடும் திடம் அவனிடம் இல்லை...

மெதுவாக அந்த இடத்தை விட்டு அகன்றான்...
கால் போன போக்கிலே நடந்து கொண்டிருந்த அவன் கண்களில் ...

அந்த மெதுவான வெளிச்சமும் ... அந்த வெளிச்சத்தில் தட்டித்தடுமாறும் ஒரு கொழுத்த உருவமும் தெரிந்தது...

சரி அவனிடம் கேட்கலாம் என்று அந்த இடத்தை நெருங்கிச்சென்றான்...

கட்டியிருந்த லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு .. நேராக நிற்க முடியாமல் தள்ளாடிக்கொண்டிருக்கிறான் அந்த மனிதன்...

அவன் கைகால்கள் வீசுகின்றன.. எதையோ பிடித்து இழுக்கிறான் வருதில்லை போன்று அவன் சைகைகள்....

மணிவண்ணனும் அவனை நெருங்கி விட்டான்...

அப்போது அவன் எதிர்பார்க்கவில்லை... ஆனால் அந்த பெருத்த ஆசாமி நாலடி தட்டுத்தடுமாறி பின்னால் வந்து சற்று வேகமாக கீழே விழுந்தான்..

யாரோ தள்ளிவிட்டது போல் இருந்தது...

இப்போது அவன் கத்துவதும் மணிவண்ணனின் காதில் கேட்கிறது...

ஏய்... நில்லுடி... நில்லுடி... தள்ளிட்டா ஓடுற... ஏய்
20 ரூபா சுளையா கறந்துட்டல... ஏய் நில்லுடி...

இப்போது .. அங்கு தெரிந்த அந்த லேசான மஞ்சள் நிற வெளிச்சத்தினை ஊடறுத்தவாறு... அந்த சத்தமும் அந்தப்பெண்ணின் உருவமும் தெரிந்தது...

ஆமா ஆமா 20 ரூபா கொடுத்துட்டு ஆயிரம் ரவுண்டு வேணும்...
போயா போ போய் எங்கயாவது பாறாங்கல்லுல தேச்சுக்கோ...

சத்தம் வந்த அதே வேகத்துடன் .. கீழே குனிந்து எதையோ தூக்கிக்கொண்டவளாய்... அரையும் குறையுமாய் அவிழ்ந்து விழும் துணியையும் பற்றிப்பிடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிப்போகிறாள் அவள்...

நெருங்கிச்சென்ற மணிவண்ணன் அவளைக் கண்டுகொண்டான்...
கருப்பி... ஆம் அது கருப்பியேதான்...

இங்கே அந்த ஆசாமி...
சே. .. என்ன கோலம் இது .. தூரத்தில் பார்க்கும் போது கையில் லுங்கியுடன் நின்று கொண்டிருந்தவன் போல் தெரிந்தான் இப்போது அதுவும் இல்லை....

அந்த ஒரு கணத்துக்குள் இங்கே என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்து கொண்டான் மணிவண்ணன்...

அந்தச் சிறு இடைவெளியில் .. தூரத்தே தன் அழுக்குக் கொண்டையைக் மேலிழுத்துக் கட்டியவாறே... இடுப்பில் குழந்தையைத்தாங்கிக்கொண்டு... அவள் நடந்து செல்கிறாள்....

மணிவண்ணனுக்கு இதயம் கனத்தது...
ஓ...மை..காட்...

ஒரு ஐந்தடி தூரம் நடந்து சென்றவன் அருகில் இருந்த அந்த மரத்தில் சாய்ந்தான்...

பூமியில் முழந்தாளிட்டு ... தன் தலையைக் குனிந்துகொண்டான்...
அழுகிறான்... ஆம் அவன் அழுகிறான்...அழுது கொண்டே தன் தலையை அந்த மரத்தில் சாய்த்து கண்களை மூடிக்கொண்டான்...

அப்போது... அங்கே...

நிறுத்து நிறுத்துயா... அங்க பாரு..
ப்ரேக் கட்டை அரைவாசியும்.. அந்த பூட்ஸ் கால்கள் அரைவாசியுமாய் தேய்ந்து.. மண்ணில் புழுதி கிளப்பியபடி அந்த சைக்கிள் வண்டி நின்றது...

ஏய்..யாரு..யாரது..
அதிகாரக்குரலில் கர்ஜித்தபடியே சைக்கிளில் இருந்து இறங்கினார் அந்த போலீஸ்காரர்..

சைக்கிளை மிதித்து வந்தவரும் ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு வந்து இணைந்துகொண்டார்...

புழுதியில் கால்படிய அந்த மரத்தில் சாய்ந்திருக்கும் மணிவண்ணனின் தாடையை கஷ்டப்பட்டு தேடிப்பிடித்துக்கொண்டது அந்த போலீஸ்காரரின் கைத்தடி..

தன் பலத்தால் அவன் முகத்தை நிமிர்த்த முனைந்தார் அவர்..

இதையெல்லாம் கவனத்திலெடுக்கும் நிலையில் மணிவண்ணனின் சூழ்நிலையில்லை..

யாருப்பா இவன்.. முழு ட்ரவுசர் வேற போட்டிருக்கான்.. கையில பைல் ..
முன்னாலிருப்பவரை விலக்கிக்கொண்ட மற்றவர் ..
தம்பி...ஹலோ... யார் அது.. எழுந்திரு எழுந்திரு என்று அதிகாரமாகவே அழைத்துப்பார்த்தார்..

மணிவண்ணனிடம் இருந்து எந்தவித பதிலும் இல்லை..

ஒருவேளை லூசா இருக்குமோ.. இந்த ராத்திரியில ஏதோ வெளியூர் போற மாதிரி உடுத்துக்கிட்டு... என்று ஒருவர் கிசுகிசுக்க... இல்லைண்ணே... ஒரு வேளை ஏதாச்சும் லவ்வு கிவ்வு பெய்லியராச்சோ...

என்னப்பா இவன்.. எதற்கும் தன் தடியால் மேலும் பலமாக அவன் தாடையை நிமிர்த்த முனைந்தார்..

இந்தத்தடவை அவர்களுக்கு எந்தவித கஷ்டமும் இருக்கவில்லை..
மணிவண்ணன் நிமிர்ந்தான்...

வெறிச்சோடிய முகத்துடன் அவர்களைப் பார்த்தான்...
பின்பு தன் நிலையை உணர்ந்துகொண்டவனாக மெதுவாக எழும்ப முற்பட்டான்...

தடுமாறிய அவன் கைகளைத்தாங்கி அவனைத் தூக்கிவிட்டார்கள் அந்த போலீஸ்காரர்கள் இருவரும்..

தாங்க்ஸ் சார்...

நாகரிகமான அவன் பதிலைப்பார்த்து வியந்துபோன போலீஸ்காரர்களில் ஒருவர்... என்ன தம்பி.. பாத்தா படிச்சபுள்ள மாதிரி இருக்கிங்க..இந்த ராத்திரி நேரத்துல அதுவும்.. இது ரொம்ப மோசமான இடமாச்சே .. இங்க என்ன பண்றிங்க..

அவர் கேட்ட கேள்வியில் ஏதோ ஒரு நியாயம் இருக்கிறது.. ஆனால் அதை வெளியில் சொல்ல மணிவண்ணனால் முடியவில்லை..

ஒன்றுமில்லை சார்.. மன்னிச்சுக்கங்க..

மன்னிப்பெல்லாம் எதுக்குப்பா.. அவ்வளவு நல்ல ஏரியா இல்லை ... நல்ல வேளை எங்க கண்ணுல பட்டிங்க... உள்ளதையெல்லாம் சுருட்டிருவாங்க இங்க உள்ளவங்க... சரி சரி .. என்னவோ தெரியல.. சீக்கிரமா கிளம்புங்க...
தயவாக அவர் அவனுக்கு அறிவுரை வழங்கினார்....

இதைக்கேட்ட மணிவண்ணனின் முகத்தில் லேசாக ஒரு புன்முறுவல்...
ஒரு இரண்டடி எடுத்து வைத்திருப்பான்...

அப்போது கையில் ஒரு சிறிய நோட் புக்குடன் அவன் எதிரே வந்த போலீஸ்காரர்... உங்க பேரு என்ன தம்பி... என்று ஆரம்பித்து மணிவண்ணன் பற்றிய விபரங்கள் சிலவற்றை குறித்துக்கொண்டார்...

தள்ளாடித்தள்ளி மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தான் மணிவண்ணன்...

அதிஷ்டவசம் .. அந்தப்பகுதியால் ஒரு ஆட்டோ வந்தது..
மணிவண்ணன் நடப்பதைப்பார்த்த வண்டி.. மெதுவாக நின்றது..
தலையை வெளியே காட்டி... சார் வண்டி வேணுமா.. என்றான் அந்த ஆட்டோக்காரன்..

பதிலே பேசாத மணிவண்ணன் ஏறி அமர்ந்து கொண்டான்...
அடுத்த இருபதாவது நிமிடத்தில் அவன் வீடு...

அந்த வீட்டின் மேல்மாடியில் குடியிருக்கிறான் மணிவண்ணன்... வீட்டின் வலப்புறம் காணப்படும் மாடிப்படிகளில் மெதுவாக ஏறி.. அந்த கும்மிருட்டில் ஒருவாறு பூட்டைத்திறந்து கொண்டு உள்ளே சென்றவனுக்கு...பசியும் தாகமும் அலையாய் உருவெடுத்தது..

உடல் களைப்பை விட உள்ளக்களைப்பு அவனை வாட்டி எடுத்தது... இருந்தாலும் பசி தாங்க முடியவில்லை... மதியமும் ஏதோ ஒரு காரணத்திற்காக தியாகம்.. அவனால் மேலும் பொறுக்கமுடியவில்லை...

எழுந்தான்...
அந்த சுவரோரம் சிறிய சின்க்... முகத்தை அலம்பிக்கொண்டான்...
தனியாக வாழ்பவன்... எப்போதாவது ஒரு நாள் சமைப்பதுண்டு... வீட்டில் உணவு எதுவும் இல்லை...

ஆடை மாற்றிக்கொண்டான்...
கொஞ்சம் தண்ணீர்.... மடக் மடக் என குடித்துக்கொண்டவன்.. வெளியேறினான்..

தெருவோரம் அந்த பாஸ்ட் புட் உணவகம்.... மூன்று மணிவரை திறந்திருக்கும்...

உள்ளே சென்ற மணிவண்ணன்... ஒரு சிக்கன் புரியானி என்றான்...
இதோ அஞ்சு நிமிசம் சார் என்றவனிடம் தலையை ஆட்டிவிட்டு... காற்றோட்டத்திற்காக வெளியே வந்தான்...

சார் டைம் என்ன ஆச்சு..
கையைப்பார்த்த மணிவண்ணன்...
சாரி... என்று திரும்பினான்... கையில் கடிகாரம் இல்லை..
திரும்பிய வேகத்தில் அவன் மூச்சுக்குழாய் அடைத்துப்போகும் அளவுக்கு ஒரு மனம்....
தன்னை அடையாளங்கண்டுகொண்டான் என்பதை உணர்ந்த அவன்.. இரண்டு தடவை குனிந்து மணிவண்ணனுக்கு சலாம் போட்டுக்கொண்டான்...
குடித்திருக்கும் அவனை விட்டு தூர விலகினான் மணிவண்ணன்..

தன் அருகில் நின்றவன் விலகியதை வெட்கமாக நினைத்தவன் மணிவண்ணனுக்கு அருகில் வந்து.. என்னைக்கும் இல்லை சார்.. இன்னைக்குத்தான் சும்மா குடிச்சு பாத்தன்.. ரொம்ப நாறுதா என்றான்..

அவனின் அப்பாவித்தனத்தை உணர்ந்த மணிவண்ணன்.. என்ன குடிச்சிருக்க என்றான்..

இதோ என்று கள்ளச்சாராய போத்தலை நீட்டினான் அவன்..
சார்... இன்னைக்கு ஒரு நாள் தான் இனி குடிக்கமாட்டேன்... சத்தியமா குடிக்க மாட்டேன் ... என்றான்..

அடிக்கடி குடி குடி என்று கூறிக்கொண்டு போத்தலை நீட்டியபடி நிற்கும் அவனைப் பார்க்கும் போது மணிவண்ணனுக்கு ஏதோ தோன்றியது...

திடீரென அவன் கையில் இருந்த போத்தலைப்பிடுங்கி.... மூச்சு விடாமல் அதில் இருந்த மிகுதியை குடித்தான் மணிவண்ணன்...

மணிவண்ணனின் கண்கள் சிவந்தன... இந்தா.. இனி நீ குடிக்காதே என்று அவன் கையில் போத்தலை கொடுத்துவிட்டு .. உள்ளே சென்று சிக்கன் புரியானியைப் பெற்றுக்கொண்டவன் ... வீடு நோக்கி நடந்தான்..

கையில் இருந்த போத்தல் பறிபோன வேகத்தைக்கண்ட ஆச்சரியத்தில் இருந்து அந்தக் குடிகாரன் இன்னும் மீளவில்லை...

வீட்டுக்கதவை திறந்தான் மணிவண்ணன்...
அந்தக்கோப்பையை எடுத்துக்கொண்டு தண்ணீர் பிடிப்பதற்காக சிங்க்கில் இருந்த குழாயைத் திறந்தான்...

அப்போது...

அவனையே அறியாமல் அடிவயிற்றில் இருந்து வாரியெடுத்து வீசியது...
ப்பாக்.........
பெரியதொரு வாந்தி...
அவன் வயிறெல்லாம் எரிந்தது..
தண்ணீர் ... தண்ணீர் ...அவசர அவசரமாக தண்ணீரைக் குடித்தான்...
தலை சுற்றியது... கண்கள் இருண்டன....
அவன் மனமும் போராடிப்பார்க்கிறது....
கட்டிலில் சாய்ந்தான்..
அவன் கண்கள் சுழன்றன...
சிந்தனைகள் சிதறின...
அந்த இடைவெளியில் அவன் கண்களுக்குள் கருப்பி...
கண்ணைப் பலமாக மூடினான்...
திடீரெனத்திறந்தான்...
முடியவில்லை... அவனால் முடியவில்லை...
இப்போது அவன் உள்ளத்துக்குள் கருப்பி.... இதயத்தைத் தட்டினான்...
நெஞ்சைத்தடவினான்... கருப்பி... அவன் உதடுகள் உச்சரித்தன...
அவன் மூளை வேகமாக வேலை செய்தது....
திடீரென எழுந்தான்....
சிக்கன் புரியாணியை அள்ளி இரண்டு வாய் மென்றிருப்பான்...
அவனால் முடியவில்லை... உறக்கம் அவனை ஆட்கொண்டது....
கருப்பியின் நினைவுகளும் அவனோடு உறங்கிக்கொண்டது...


மறுநாள் காலை ... விடிந்ததே தெரியவில்லை...
கண்விழித்த மணிவண்ணனுக்கு தலையைத்தூக்க முடியவில்லை...
ஒரு விதமான வலியுணர்வு...
இருந்தாலும் ஏதோ ஒரு ஞாபகம் வந்தவனாய் எழுந்தான்...
தடால் ... புடால் சத்தங்களின் நடுவே காலைக்கடன்களை முடித்தான்...
இன்று ஒரு கசுவல் லுக்...
இதோ வெளிக்கிளம்பிவிட்டான்....

அதே கோயில் வாசல்...
மணிவண்ணனின் கண்கள் கருப்பியைத் தேடுகின்றன...
நாலாபக்கமும் சிதறி விழும் அவன் பார்வையில் ஏனோ அவள் இதுவரை சிக்கவில்லை...
திடீரென... அதோ .. அதோ ... கருப்பியின் கையில் இருந்த குழந்தை...
அந்தக்குழந்தையைக் கண்டதும் மெதுவாக அதன் அருகில் சென்றான் மணிவண்ணன்...

பாப்பா..உன் பேர் என்ன... குழந்தையை அன்பாக விசாரித்தான்...
குழந்தை அவனைப் பார்த்து சிரித்தது...
உன் பேர் என்ன பாப்பா... குழந்தை மீண்டும் சிரித்தது...
தலையை வலமும் இடமுமாக வளைத்து... தன் கண்களை விரித்து அவனைப்பார்த்தது...

அப்போது அங்கே வந்த அந்தப் பிச்சைக்காரி.... இதைக்கேட்டாள்..
அந்தப் புள்ளை ஊமைங்கோ.. அதுக்கு பேச வராது... என்று கூறிக்கொண்டே தன் பாட்டில் சென்று கொண்டிருந்தாள்..

மணிவண்ணனின் கண்கள் கலங்கி இதயம் பதைத்துப்போனது...
அந்தப்பிள்ளையை அப்படியே தூக்கி வாரி... கொஞ்சிக்குலாவ வேண்டும் போல் இருந்தது ... ஆனால் .. ஆனால்.... நான் யார்... நான் எப்படி... எப்படி தூக்குவது... ஒரு பிச்சைக் காரக்குழந்தையை நான் தூக்குவதை யாரும் பார்த்தால்... பார்த்தால் பரவாயில்லை... என்ன நடக்கும் ... மணிவண்ணனின் மூளை பல வகையில் சிந்தித்துக்கொண்டிருக்க.... மறுபுறத்தில்...

யக்கோ ... என் குழந்தையைக் கண்டியளா... கருப்பி தன் குழந்தையைத் தேடிக்கொண்டு வருகிறாள்...

இப்போதுதான் குழந்தை அருகால் சென்ற அந்தப் பிச்சைக்காரி... உன் புள்ள எவனையோ வளைச்சுப்போட்டுட்டு நிக்குதிடியோவ்.. என்று கருப்பியின் கன்னத்தில் தடவி ஒரு செல்லத்தட்டு தட்டிக்கொண்டு போனாள்...

குழம்பிப்போன கருப்பி... ஓடிவந்தாள்...
தன் குழந்தை யாரோ ஒருவனிடம்.. . இல்லை.. இல்லை.. அந்த மணிவண்ணனிடம்....

சிந்திக்க நெடுநேரம் எடுக்கவில்லை... மறு கணம்

ஐயோ... என் குழந்தை....
புள்ள புடி காரன் என் குழந்தையை தூக்குறான்.... ஐயோ காப்பாத்துங்களேன்...
யாராவது வாங்களேன்...

அனைத்தும் நொடிப்பொழுதில் நடந்தேறின...
மணிவண்ணன் சுதாரித்துக்கொள்வதற்குள்... கருப்பியின் கூக்குரல் கேட்டு கோயிலுக்கு வந்த கூட்டம் கூடியது... மணிவண்ணன் சுற்றி வளைக்கப்பட்டான்...

புரிந்துகொள்ள முடியாமல் திணறும் அவனது சட்டையில் ஓரு கை ... அவன் முன்னோக்கி இழுக்கப்படுகிறான்... பின்னந்தலையில் படீர் என்று ஒரு அறை... திரும்புவதற்குள்.. யாரோ ஒருவன் மூக்கில் குத்திவிட்டான்... வழியும் இரத்தத்தைத் துடைப்பதற்குள் வயிற்றில் இடி... காலால்...கையால்... தடியால்.. ஆம் .. மணிவண்ணன் நையப்புடைக்கப்படுகிறான்...

எதிர்க்கும் சக்தியில்லாமல் மணிவண்ணன் அப்படியே நிலத்தில் வீழ்ந்தான்...

பிச்சைக்காரக்குழந்தையைப் பிடிக்க வந்த புள்ளைபுடி காரன் என்று அவன் மீது சராமரியான எச்சில் வந்து விழுந்தது... அவனால் எழுந்திருக்க முடியவில்லை...

அனைத்தும் நடந்து முடியவும் .. அந்தப்பக்கம் ரோந்து வந்த போலீஸ் வண்டி அந்த இடத்தில் வந்து ப்ரேக் போடவும் நேரம் சரியாக இருந்தது...

தள்ளுங்க .. தள்ளுங்க.. என்று கூடியிருந்த மக்கள் விலக்கப்பட்டு மணிவண்ணன் எழுப்பப்பட்டான்...

அவன் முகத்திலிருந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது...
அந்த இரத்தக்கறைகளுக்கு மத்தியில் மெதுவாகத் திறந்த அவன் கண்களுக்கு நேர் எதிரே கருப்பி.... கையில் குழந்தை....

மெதுவாகத் தன் தலையை உயர்த்தி கருப்பியைப் பார்த்தான்....

அதற்குள் அவனை இழுத்து வண்டியில் ஏற்றிக்கொண்டார்கள்... வண்டி நகர்கிறது... மணிவண்ணனின் பார்வை கருப்பியை விட்டு அகலவில்லை...

அவன் தன்னைத்தான் பார்க்கிறான் என்பதை உணர்ந்துகொண்டாள் கருப்பி..
இடது புறம் இருந்த குழந்தையை வலப்புறம் இடுப்பு மடிப்புக்கு மாற்றிக்கொண்டாள்...

இடக்கையால்.. தன் அழுக்குப்பாவாடையில் ஒரு பகுதியை உயர்த்திஎடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டாள்....

மணிவண்ணணைப்பார்த்து ஒரு ஏளனச் சிரிப்பு சிரித்துவிட்டு..
இடக்கையை நீட்டி .. உள்ளைங்கையில் துப்பினாள்...
உள்ளைங்கையை மேலெடுத்து நெற்றியில் மேல் நோக்கி நீவினாள்..
அவள் நெற்றியெங்கும் அந்த வெற்றிலை கலந்த எச்சில் படலம் பற்றிக்கொண்டது...

திரும்பினாள்... கால்களை பூமியில் தேய்த்தவாறே நடக்கலானாள்...
மணிவண்ணனை ஏற்றிய வண்டியும் காவல் நிலையம் நோக்கி நகர்ந்தது..

 Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies