உறவைத் தேடும் உயிர் - 6
28 Dec,2013
தேடல் - 6
TKS.Tmilnanbargal.
பதிந்தவர் Sivaji dhasan
பனிமழை தன் வேகத்தைக் கூட்டி குளிரை உற்பத்திபண்ணிக்கொண்டிருந்தது...
அதை ஜன்னலின் வழியே சிந்தனையோடு வெறித்துக்கொண்டிருந்தான், வசந்தன். ராஜீவ், என்ன நடக்கிறது என்று புரியாமல் மண்டையைப் பிய்த்துக்கொண்டு குழம்பிக்கொண்டிருந்தான்.
ஷோபனா தலையைத் தொங்கப்போட்டபடி ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.
அவள், தன் எதிரே மேஜையில் இருந்த கண்ணாடிப் பொருட்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஒருவர் மேல் ஒருவரின் பார்வை அவ்வப்போது விழுந்தது. ஓல்ட்மன் புன்முறுவலோடு இவற்றைக் கவனித்துக்கொண்டிருந்தார்.
பனிமழையைப் பார்த்துக்கொண்டிருந்த வசந்தன் தன் தலையைத் திருப்பி ஷோபனாவைப் பார்த்தான். அவள் அவனைப் பார்க்கவில்லை. தன்னைக் காப்பாற்றியதற்கு நன்றி கூறவேண்டும் என்று அவன் மனது துடித்தாலும் எதற்காக இவள் என்னைக் காப்பாற்றினாள் என்கின்ற கேள்வி அவன் மனதின் ஒரு மூலையில் அரித்துக்கொண்டிருந்தது. மீண்டும் கண்ணாடியின் மேல் ஸ்பரிசித்திருந்த பனியை நோக்கினான். அச்சமயத்தில் அவள் அவனை நோக்கிப் பின் ராஜீவின் முகத்தில் பார்வையைக் கொண்டு வந்து நிறுத்தினாள். ராஜீவ் அவளைக் கேள்விக் கணைகளோடு வெறித்தான். இப்படியே நேரம் கடந்து கொண்டிருந்தது.
"என்னைத் தேடி வந்ததற்கு இன்னும் காரணம் சொல்லவில்லையே" என்றார் ஓல்ட்மன் புன்சிரிப்போடு.
ராஜீவ் அதைச் சொல்ல விழைந்தபோது வசந்தன் முந்திக்கொண்டான்.
"ஐயா! நான் இவ்வுலகிற்குப் புதியவன். என் வாழ்க்கை திசை மாறி பல கோணங்களில் சென்றுவிட்டது. வேறு வழி இல்லாமல், நிம்மதியாக இருக்க தற்கொலை செய்துகொண்டு இவ்வுலகிற்கு வந்தேன். இவ்வுலகிலாவது நிம்மதி கிட்டும் என்று எண்ணினேன். ஆனால், துன்பம் என்னை விட்டபாடில்லை. என்னுடைய நினைவுகள் அழிந்து போயிருக்கின்றன. சில நினைவுகள் மட்டுமே தங்கி இருக்கின்றன. என் காதல் தோற்றதால் வாழ்வை இழந்தேன் என்று எனக்கு நினைவு இருக்கிறது. எந்தக் காரணத்தால் அவளைப் பிரிந்தேன் என்று தெரியவில்லை. அவளின் உருவம் கூட என் மனதிலிருந்து மறைந்துவிட்டது. காரணம் தெரியாமல் தற்கொலை செய்துகொண்டேனா என்று கூட விளங்காமல் தவித்துக்கொண்டிருக்கிறேன். இப்பொழுது எனக்கிருக்கும் ஒரே சொந்தம் என் தோழி தான். எனக்கு முன்பே அவள் இவ்வுலகிற்கு வந்துவிட்டாள். அவளையும் கண்டுபிடிக்கவேண்டும். அவளின் நினைவுகள் கூட மறந்து போனதாய் உணர்கிறேன். தயவு செய்து எனக்கு உதவி புரியுங்கள்!" என்று கண்ணீரோடு வேண்டினான் வசந்தன்.
ஓல்ட்மன் அவனது கண்ணீர் வடிந்திருந்த முகத்தைச் சலனமில்லாமல் பார்த்தார்.
"நீ இங்கு வந்த மூன்று நாட்களில் இவ்வளவு பிரச்சனைகளைச் சந்தித்திருக்கிறாய். வேதனையானது தான். உன்னுடைய தோழி என்று சொன்னாய் அல்லவா? அது யார்? எப்பொழுது அவள் இறந்தாள்?"
"நான் சிறுவயதாக இருந்தபோதே இறந்துவிட்டாள்"
"எதனால் அவள் இறந்தாள்?"
"நானும் அவளும் பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது அவள் பசிக்கிறது என்றாள். நான் அவளை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு சாலையைக் கடந்து தின்பண்டம் வாங்கிவரச் சென்றேன். ஆனால், அவளும் என் பின்னால் வந்துகொண்டிருந்ததை நான் கவனிக்கவில்லை. நான் சாலையைக் கடந்தபோது அவளும் சாலையைக் கடந்திருக்கிறாள். அப்பொழுது, ஒரு வாகனம் அவள் மீது மோதியது" என்று பொங்கி எழுந்த சோகத்தை மென்று முழுங்க சிறிது நேரம் அமைதியானான்.
அனைவரின் கண்களும் அவன் மீதே இருந்தன.
"அவள் விபத்துக்குள்ளான இரண்டாவது நாள் அவளைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றேன். அவள் ஒரு அறையில் படுத்திருந்தாள். என்னைப் பார்த்ததும் அந்த நிலையிலும் ஒரு சிறு சிரிப்பை உதிர்த்தாள். அவளின் அருகே சென்றேன். அவளால் பேசமுடியவில்லை. கண்களை மட்டும் நகர்த்தி பேசினாள். என் முகத்தையே சிறிது நேரம் உற்றுப்பார்த்தாள். அவளது கண்களின் ஒளி குறைந்தது. எல்லோரும் அழத் தொடங்கினர். அந்த அழுகையின் நடுவே என்னைப் பார்த்துச் சிரிப்போடு கண்களை மூடினாள்" என்று மீண்டும் இடைவெளி விட்டான்.
"விதியின் சதியால் அவள் இறந்த அந்த நிகழ்வு என் மனதில் ஆறாத வடுவாக மாறிவிட்டது.
காலம் என்றுமே எனக்குச் சாதகமாய் இருந்ததில்லை. அது நம்மிடம் இருந்து ஒவ்வொருவராகப் பிரித்துக்கொண்டு சென்றுவிடும். முடிவில் தனிமரமாக நின்றுகொண்டிருப்போம்" என்று கூறி நிறுத்தினான்.
துக்க அமைதி அங்கே நிலைகொண்டது. அவன் தன் கண்களை மூடிக்கொண்டு கன்னங்களில் கண்ணீர்த் துளிகளைத் தவழ விட்டபடி அந்த நினைவுகளை மீட்டிக்கொண்டிருந்தான்.
"அவள் பெயர் என்ன?" என்றான் ராஜீவ் மெல்லிய குரலில்.
ராஜீவை நோக்காமல், "சாதனா" என்றான்.
"இப்பொழுது அவள் என்னை ஞாபகம் வைத்திருப்பாளா என்று தெரியாது. ஆனால் நான் இத்தனை வருடமும் அவளை நினைக்காத நாளில்லை. அந்தப் பால் முகம் மலர் போல் வாடி மரணித்தது, இன்னும் என் மனக்கண் முன்னால் நிழலாடுகிறது. அவளைப் பார்த்துவிட்டால் நான் நிம்மதியாக வாழ்வேன் என்று எனக்குத் தெரியும். அவள் கிடைப்பாள்" என்று ஏக்கத்தோடு ஓல்ட்மனைப் பார்த்தான் வசந்தன்.
"முதலில் உன் நினைவுகள் எப்படி அழிந்தது என்று கண்டுகொள்வோம். இப்படி வா" என்று வசந்தனை அழைத்தார்.
அவனும் அவரின் அருகில் சென்றான். அவனை நிற்கவைத்து அங்கிருந்த பெட்டியில் ஏதோ ஒன்றைத் தேடினார்.
"எதைத் தேடுகிறீர்கள் ஓல்ட்மன்?" என்றான் ராஜீவ்.
"ஒரு பொருள். அதைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. எங்கே வைத்திருக்கிறேன் என்று தெரியவில்லையே"
"வயதானாலே ஞாபகமறதி அதிகமாக இருக்குமே" என்று ஏளனத் தொனியில் கூறினான் ராஜீவ்.
ஓல்ட்மன் ராஜீவைக் கூர்மையாகப் பார்த்தார். அவன் வாயில் ஒரு பசை ஒட்டிக்கொண்டு பேசவிடாமல் தடுத்தது.
ராஜீவ் துடித்தான். பசையை எடுக்கப் போராடினான். ஆனால் முடியவில்லை.
"உன்னைக் காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வந்தால், என்னிடமே உன் வேலையைக் காட்டுகிறாயா?" என்று செல்லமாகக் கடிந்துகொண்டார்.
பின்னர், ஞாபகம் வந்தவராய், "அட! இங்கே தான் மறைத்து வைத்திருக்கிறேன்" என்று கண்களை மூடினார்.
அவர் இதயத்திலிருந்து ரத்தச் சிவப்பாக ஒளி உண்டானது. அந்த ஒளி அவரின் கைகளில் தவழ்ந்து வந்து உள்ளங்கையில் வந்து நின்றது. அதைப் பார்ப்பதற்கு சிறு மின்னல் போல் பளிச்சிட்டது. வசந்தன் ஆர்வத்தோடு அதைப் பார்த்தான். அது தன் ஒளியை நிறுத்திப் பழம் போல் மாறியது.
"இந்தா தம்பி! இதைச் சாப்பிடு" என்றார்.
வசந்தன் மறுமொழி கூறாமல் அதை வாங்கிச் சாப்பிட்டான்.
அவனுக்கு மயக்கம் வந்தது. சிலை போல் ஆடாமல் அசையாமல் நின்றுவிட்டான். அவனைப் போலவே ஓர் உருவம் பச்சை நிறத்தில் அவன் அருகில் தோன்றியது. ராஜீவும் ஷோபனாவும் பிரம்மித்து அதன் அருகில் வந்து நின்று அதனை வியப்போடு பார்த்தனர்.
வசந்தனின் உருவம், அங்கே இருந்த கண்ணாடிக்குள் நுழைந்தது. கிருஷ்ணர் வாய் திறந்ததும் உலகமே தெரிந்தது போல் அந்தக் கண்ணாடியின் உள்ளே ஓர் உலகம் உண்டானது. அது வசந்தனின் நினைவுகளைக் கொண்ட உலகம். அவன் மனதில் பதிந்த உருவங்கள், நேசித்த மனிதர்கள் எல்லாம் மின்னல் போல வந்து வந்து போயினர்.
ஓல்ட்மன், அவன் நினைவுகளின் உள்ளே சென்று எதையோ அவசர அவசரமாகத் தேடினார். கிடைக்கவில்லை. கடைசியாக அந்த மேகத்தில் அவன் உட்கார்ந்திருந்த காட்சி வந்தது. அதைக் கவனமாகப் பார்த்தார். அந்த ரயில் பெட்டியில் ஷோபனா இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். ஆயினும் அதை வெளிக்காட்டவில்லை. பின்னர் நடந்தவற்றை எல்லாம் அவன் நினைவுகளிலேயே கண்டுகொண்டார். ஒரு பெருமூச்சோடு அனைத்தையும் மறையச் செய்தார்.
ராஜீவ் தான் கண்ட காட்சி உண்மை தானா என்று அவனையே ஒரு முறை கேட்டுக்கொண்டான். ஷோபனா ஏன் அங்கே சென்றாள் என்று அவன் குழம்பினான்.
ஓல்ட்மன் தன் நீண்ட தாடியைத் தடவியபடி யோசனையில் ஆழ்ந்தார்.
ராஜீவ் அவரைப் பார்த்து, தான் பேச விரும்புவதாகச் சைகை காட்டினான். ஓல்ட்மன்னும் அவன் நிலையை உணர்ந்து அவனது வாயை ஒட்டிய பசையை அகற்றினார். விடுதலை அடைந்த ராஜீவ் மூச்சை நன்றாக இழுத்து விட்டபடி, "என்ன, கண்டுபிடித்தாயிற்றா?" என்றான் ஆர்வமுடன்.
அதற்கு, இல்லை என்பது போல் ஓல்ட்மன் தலையசைத்தார்.
மீண்டும் கண்ணாடியில் வசந்தனின் நினைவுகளைத் தொடரச் செய்து கண்ணாடியின் உள்ளே ஒரு திராவகத்தை ஊற்றினார். அதை ஊற்றியதும் பல உருவங்கள் அமிலம் உண்டது போல் சிதைந்து போயின.
"என்ன செய்கிறீர்கள்?" என்றான் ராஜீவ்.
கண்ணாடியை வெறித்தபடி, "அவன் ஞாபகங்களை அழிக்கிறேன்" என்றார்.
"உங்களுக்கு என்ன பித்து பிடித்து விட்டதா? எதற்கு அப்படிச் செய்கிறீர்கள்?"
"யாரோ ஒருவர் இவன் நினைவுகளை அழிக்க முற்பட்டுள்ளார்"
"அதற்குப் போட்டியாக நீங்களும் அழிக்கப் போகிறீர்களா?" என்று ஆவேசமாகக் கூறினான் ராஜீவ்.
"முட்டாள்தனமாகப் பேசாதே. நினைவுகளை அழிக்க முற்பட்டவன், இவனுடைய நினைவுகளை மொத்தமாக அழிக்கப் பார்த்துள்ளான். ஆனால், இவனுடைய மனோபலம் திடமாக உள்ளதனால் சில நினைவுகளை அவனால் அழிக்க முடியவில்லை. இப்பொழுது அவன் நினைவுகளை அழித்தவன் சாதாரணமானவன் அல்ல என்று தெரிந்துகொண்டோம் அல்லவா?" என்றார் கடுமையாக.
"நீங்கள் சொல்வது எப்படித் தெரியுமா உள்ளது? ஒருவன் விஷம் அருந்திவிட்டானாம். திடீரென்று அவனுக்கு உயிர் பயம் வந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மருத்துவரை நோக்கி ஓடி வந்தானாம். மருத்துவர், நீ குடித்த விஷத்தின் பெயரைச் சொன்னால் தான் உன்னைக் காப்பாற்ற முடியும் என்று கூறிவிட்டாராம். அந்த முட்டாளோ விஷத்தின் பெயரை மறந்துவிட்டான். அதற்கு மருத்துவர் என்ன செய்தார் தெரியுமா? பத்து விதமான விஷத்தை அவன் முன்னே வைத்து ஒவ்வொரு விஷமாக அவன் வாயில் ஊற்றி நீ குடித்த விஷம் இதுவா பார்..இதுவா பார் என்றாராம். அது போல் இருக்கிறது நீங்கள் செய்த செயல்".
"உன் வாயில் இருத்த பசையை எடுத்தது என் தவறு தான். உன் அறிவை சிறிதளவாவது உபயோகப்படுத்து. வந்த இரண்டு நாட்களில் யார் இவன் நினைவுகளை அழித்திருப்பார் என்று கண்டுபிடிக்கவேண்டும்" என்றார்.
மயக்கமாய் இருந்த வசந்தன் சுயநினைவிற்கு வந்தான். அங்கு நடக்கும் நிகழ்வுகளை நோக்கினான். தனக்கு, தொலைந்த ஞாபகங்கள் திரும்ப வந்துவிட்டனவா என்று யோசித்தான். அப்படி ஒன்றும் அவனுக்குத் தெரியவில்லை. ஏக்கத்தோடு எல்லார் முகத்தையும் நோக்கினான்.
"எனக்கு ஞாபகங்கள் வரவில்லையே" என்று ஓல்ட்மனை பார்த்துப் பரிதாபமாகக் கூறினான்.
"உன் ஞாபகங்களை என்னால் கொண்டு வர முடியவில்லை தம்பி" என்றார் ஓல்ட்மன் உடைந்த குரலில். "உன் நினைவுகளை யாரோ அழித்திருக்கிறார்கள்" என்றார்.
"அழித்திருக்கிறார்களா?" என்று அதிர்ந்தபடியே "யார்?" என்றான்.
அவர், தெரியவில்லை என்பது போல் தலையசைத்தார்.
"எனக்குத் தெரியும்" என்றான் ராஜீவ்.
அனைவரும் அவனைத் திரும்பிப் பார்த்தனர்.
"இவள் தான் செய்திருப்பாள்" என்றான் ராஜீவ் ஷோபனாவைக் கை காட்டியபடி.
"என்ன உளறுகிறாய்?" என்று ஷோபனா ராஜீவை முறைத்தாள்.
"உனக்குத்தான் விசேஷ சக்தி இருக்கிறதே! உன்னால் அவன் நினைவுகளைச் சுலபமாக அழித்திருக்க முடியும்".
ஷோபனா, "எனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம். நான் ஏன் அதைச் செய்ய வேண்டும்?" என்று பதில் கேள்வி கேட்டாள்.
"அப்பொழுது ஏன் நீ அவன் இருந்த இடத்திற்குச் சென்றாய்? அவன் வந்த வண்டியில் எதற்காக நீ வர வேண்டும்? அது மட்டும் இல்லாமல், என் வீட்டிற்கும் உன் வீட்டிற்கும் அதிகத் தூரம் இல்லை. உன்னால் தான் இதை நிச்சயமாகச் செய்திருக்க முடியும்" என்றான்.
ஷோபனா அவனை நேருக்கு நேர் முறைத்தாள். அவளுடைய பார்வை ராஜீவின் உடலில் அம்பை விடக் கூர்மையாகப் பாய்ந்தது.
ராஜீவ் பேசுவதை நிறுத்தவில்லை. "அது மட்டும் இல்லாமல் எங்களைப் பின்தொடர்ந்திருக்கிறாய் அல்லவா?" என்று மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பினான்.
"நான் எதற்கு அங்கு போனேன்? ஏன் இங்கு வந்தேன்? என்கின்ற காரணம் தெரியவேண்டுமா? சொல்கிறேன் கேள்! எல்லாவற்றையும் கவனித்திருக்கிறாயே, என் கையில் ஒரு குழந்தை இருந்ததைப் பார்க்கவில்லையா? எனது தோழியின் குழந்தை இறந்து இங்கே வந்தது. அந்தக் குழந்தையை எடுத்து வரச் சென்றேன். நான் வந்த பெட்டியில் இவர் வந்தது ஒரு தற்செயலான நிகழ்வு. மெமோரியல் உலகத்தில் நான் வேலை செய்கிறேன் என்று உனக்குத் தெரியும். அங்கிருக்கும் ஓர் உயர் அதிகாரி ஓல்ட்மனுக்கு ஒரு கடிதத்தைக் கொடுத்தனுப்பினார். அதைக் கொடுக்க வந்தேன். வழியில் நீங்கள் ஆபத்தில் சிக்கியிருப்பதைப் பார்த்தேன். அதனால் உதவி புரிந்தேன். என் இடத்தில் நீ இருந்தால் உதவி செய்வாயா? மாட்டாயா?" என்று கோபத்துடன் கேட்டாள்.
ராஜீவ் பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்தான்.
அவனுடைய பதிலை அவள் எதிர்பார்க்காமல், "இந்தாருங்கள் ஐயா! உங்கள் கடிதம்" என்று ஒரு தோல்பையை நீட்டினாள். அவரும் அதை வாங்கிப் பிரித்துப் பார்த்தார்.
"நான் வருகிறேன்" என்று கூறி அவள் நகரும் போது ராஜீவின் கையில் இருந்த மாயமீனைப் பிடுங்கிக்கொண்டு புறப்பட்டாள்.
"ஒரு நிமிடம்" என்றான் வசந்தன். அவள் வசந்தனைத் திரும்பிப் பார்த்தாள்.
"என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி!" என்றான் வசந்தன்.
அவள், அவனைச் சில கணம் நோக்கிவிட்டு கதவைத் திறந்து நடந்து காற்றில் கரைந்து மறைந்தாள்.
இம்முறை அவளின் மேல் வசந்தனுக்குக் கோபம் வரவில்லை. அவளின் திமிரை ரசித்தான்.
வசந்தன் ஓல்ட்மனை பார்த்து, "நினைவுகளை மீட்க முடியாதா? பரவாயில்லை. என் தோழியைக் கண்டுபிடிக்க வழி உண்டா?" என்றான்.
"வழி இருக்கிறது. ஆனால் அது முடியாது"
வசந்தன் கேள்விக்குறியோடு அவரைப் பார்த்தான்.
"உன் ஞாபகங்கள், உன் தோழியின் தகவல்கள் அனைத்தும் மெமோரியல் உலகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அது உனக்குக் கிடைக்காது" என்றார்.
"ஏன்?"
"அங்கு உன்னால் செல்லக்கூட முடியாது. பிறகு, எப்படி அந்த அசாத்திய சாதனை கைகூடும்?"
"தாங்கள் எனக்கு உதவக்கூடாதா?"
"என்னால் முடியாது" என்று கைவிரித்தார் ஓல்ட்மன்.
"உண்மையை நீ புரிந்துகொள்ளத்தான் வேண்டும். உனது தோழியைக் கண்டுபிடிப்பது சாதாரண காரியம் அன்று. அவள் இங்கே வந்து வெகு காலம் ஆகி விட்டது. அப்படியானால், அவள் மீண்டும் மானிடப் பிறவியாக ஜனனம் எடுத்திருப்பாள். அங்கிருந்து இங்கு வருகிறவர்கள் எல்லாம், இங்கிருந்தும் அங்கே செல்வார்கள். அவர்களின் நேரத்தைப் பொறுத்தது தான் அத்தனையும். நீ எல்லாவற்றையும் மறந்துவிட்டு நிம்மதியாக இருக்கப் பழகிக்கொள்" என்று கூறினார் ஒல்ட்மன்.
"ஒவ்வொரு நிமிடமும் அவளின் நினைவுகள் முட்களாய்க் குத்துகிறதே! எப்படி மறப்பது?" என்றான் கலங்கிய கண்களோடு வசந்தன்.
"நாம் நினைப்பதைத்தான் மனம் சொல்லும். நினைப்பது எல்லாம் நடக்காது என்கின்ற உண்மையைப் புரிந்துகொள்ள வேதனையாகத்தான் இருக்கும். ஆனால் அது தான் உண்மை".
"வேறு வழியே கிடையாதா?"
"வழியைத் தேடுவதை விட நீயே ஒரு வழியை உருவாக்கிக்கொள்"
வசந்தன் என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறி நின்றுகொண்டிருந்தான்.
"உங்களை மிகவும் நம்பி வந்தோம் ஓல்ட்மன்" என்றான் ராஜீவ்.
"உங்கள் நம்பிக்கை பொய்த்துப்போனதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். என்னால் முடிந்ததைச் செய்தேன். வேறு ஏதேனும் உதவி வேண்டுமா?"
ராஜீவ், "உங்கள் உதவி தேவை இல்லை ஓல்ட்மன். உங்களை மிகவும் நம்பியதற்கு சரியான பரிசு கொடுத்துவிட்டீர்கள். நான் அவனுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன்" என்றான் வேதனையோடு.
வசந்தன் ராஜீவை நன்றிப்பெருக்கோடு நோக்கினான்.
"நல்லது நடந்தால் சரி. ஆபத்தில் சிக்கிக்கொள்ளப்போகின்றீர்கள். நடப்பவை நல்லவையாக நினைத்து புதியதாகப் பயணத்தைத் தொடங்கினால் நல்லவையாக இருக்கும்" என்றார்.
"அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். வருகிறோம்" என்றான் ராஜீவ்.
"நல்லது, போய் வாருங்கள்!"
அவர்கள் சென்றதை உறுதிப்படுத்திக்கொண்டு , ஓல்ட்மன் மீண்டும் அந்தக் கண்ணாடியை நோக்கிச் சென்று தன் கையைக் கண்ணாடியில் வைத்தார். வசந்தனின் நினைவுகள் மீண்டும் தோன்றின. தோன்றிய காட்சிகளை உன்னிப்பாகக் கவனிக்கத் துவங்கினார்.
*** ***
ராஜீவும் வசந்தனும் பனியில் நடந்துகொண்டிருந்தனர். பனியின் குளிர்ச்சி அவர்களின் உடலில் ஈட்டியைப்போல் குத்தியது. வெண்பனிச் சாரல் அவர்களின் முகத்தைத் தழுவியது.
"நிச்சயமாக உன்னால் முடியுமா?" என்றான் வசந்தன்.
"தெரியவில்லை. முயன்று பார்க்கலாம்"
"நீ ஓல்ட்மனிடம் நிச்சயமாகக் கூறினாயே"
"ஒரு வேகத்தில் சொன்னேன். எப்படிச் செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. நிச்சயமாக என்னால் முடிந்த நல்லதை உனக்குச் செய்வேன்"
"நன்றி! ராஜீவ்" என்றான் வசந்தன்.
"நண்பர்களுக்கு நன்றி சொல்வது தான் உன் வழக்கமா?" என்றான் ராஜீவ்.
வசந்தனும் ராஜீவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அவர்களின் முகத்தில் புன்னகை அரும்பியது. வசந்தனின் தோள்களில் கைபோட்டபடி ராஜீவ் நடந்தான்.
"நம்மைக் காப்பாற்றிய அந்தப் பெண்ணிடம் நீ அப்படி நடந்திருக்கக்கூடாது" என்றான் வசந்தன்.
ராஜீவ் வசந்தனை முறைத்தான். "உனக்காக வாதாடினேன் அல்லவா? எனக்கு வேண்டும்" என்று பொய்க்கோபத்தோடு கூறினான்.
"நாம் நடந்தே தான் வீட்டிற்குப் போக வேண்டுமா?" என்றான் வசந்தன்.
"வேறுவழி? மாயமீனைத் தான் பிடுங்கிக்கொண்டு சென்றுவிட்டாளே?"
"இன்னும் எவ்வளவு தூரம் நாம் செல்லவேண்டும்?"
"சிறு தொலைவு தான். அதோ அந்த மலை இருக்கிறதல்லவா?"
"ஆமாம்"
"அந்த மலையைப் போல் நான்கு மலையைக் கடந்து சென்றால், உடனே அடைந்து விடலாம்" என்றான் ராஜீவ்.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
தேடல் தொடரும்...