தேர்தல் கட்டவுட்டுக்கள்
டென்மார்க்கில் எதிர்வரும் நவம்பர் 19ம் திகதி நகரசபைகளுக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது, இதற்கான பிரச்சார கட்டவுட்டுக்களை மின்கம்பங்களில் கட்டும் தினம் நேற்றிரவாகும்.
நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வீதியால் சென்றபோது ஆங்காங்கு வாகனங்களை நிறுத்தி மின்விளக்குக் கம்பங்களில் பலர் இவற்றைக் கட்டிக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது.
மிகவும் ஆபத்தான பணி, போதையில் கார்களில் வருபவர்களின் கண்களுக்கு இவர்கள் நிற்பது தெரிவதற்கு வாய்ப்பில்லை என்றாலும் கட்டிக்கொண்டிருந்தார்கள்.
மழையும், இருளும் நிறைந்த நள்ளிரவுப் பொழுதில் இவைகளை கட்டியது உயிராபத்தான பணி என்று பலரும் எச்சரித்துள்ளனர்.
அதேவேளை இந்தக் கட்டவுட்டுக்கள்; நகரத்தின் அழகான தோற்றத்தை மாற்றிவிடுவதாகவும், இயற்கை அழகு குலைந்துவிட்டதாகவும் கருத்தக்கணிப்பில் பலர் கூறியுள்ளனர்.
அதைவிட முக்கியம் கடந்த 30 வருட காலத்தில் நடைபெறும் தேர்தல்களில் தொங்கும் கட்டவுட்டுக்களில் யாதொரு புதுமையும் காணப்படவில்லை, வேட்பாடளர்களின் முதுமைதான் தெரிகிறது.
சுய சிந்தனை இல்லாமல் செக்குமாட்டு சிந்தனையுடன் இவர்கள் செயற்படுகிறார்கள் என்பதும், இவர்களால் புதுமை எதுவும் நடக்கப்போதில்லை என்பதை உணரவும் இந்த மாற்றமில்லாத பஞ்சாங்கத்தனமான கட்டவுட்டே சாட்சியமாக உள்ளதாகவும் வேறு சிலர் கூறியுள்ளார்கள்.
பூச்சிகள் அதிகமாகப் பறக்கும் இடங்களில் சிலந்தி கூடு கட்டுவதைப்போல மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் போட்டி போட்டு இவர்கள் கட்டவுட்டுக்களை நிறைத்துள்ளமையானதுஸ
மக்களும் மாற்றமின்றி ஒரே ஏமாற்று நெருப்பில் காலகாலமாக வீழ்ந்து மடியும் விட்டில் பூச்சிகளே என்பதையும் உணர்த்துகிறது.
இருந்தாலும் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதற்கு இரண்டு உதாரணங்களை இன்னொரு ஆய்வு வெளியிட்டுள்ளது.
வென்ஸ்ர பின்னணி உள்ளவர்களுக்கு கீழ்ப்படிவு வேண்டும்.. இருந்தால் அதிக வாக்குகள் கிடைக்கும்.
சோசல்டெமக்கிரட்டி பின்னணி உள்ளவர்களுக்கு செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை தரும் உடல் உறுதி வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
எது எப்படியோ கட்டவுட்டுக்களில் இருக்கும் வேட்பாளர்களை பார்த்தபடி வழிப்போக்கரின் மேல் கார்களை ஏற்றாவிட்டால் போதும் என்கிறார் இன்னொருவர்.
இருப்பினும் முன்னேற்றமில்லாத செக்குமாட்டு டேனிஸ் அரசியலில் நமது தமிழ் வேட்பாளர்கள் புது நம்பிக்கையுடன் வலம் வருகிறார்கள், அவர்களுக்கு வாக்களித்து உற்சாகம் கொடுப்பது நமது கடமையாகும்.
டேனிஸ் அரசியல்வாதிகளின் திறமைக்குறைவைப் பார்த்து தமிழ் வேட்பாளரையும் அப்படியே கருதிவிடக்கூடாதம்மாஸ
கடந்த ஆறு ஆண்டு காலத்தில் டென்மார்க்கில் சரியான வைத்தியச் சிகிச்சை கிடைக்காத காரணத்தால் மரணமடைவோரின் தொகையில் வீழ்ச்சியேற்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் மரணமடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட தொகையில் சுமார் ஒன்பது வீதமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆறு ஆண்டு காலத்தில் வைத்தியச் சிகிச்சையால் காப்பாற்ற முடியாது மரணிப்போர் தொகை 14 வீதம் வீழ்ச்சிகண்டுள்ளது.
மரணமடைவோர் தொகை குறைவடைவதை வைத்தியசாலைகளின் மரணிப்போர் பதிவேட்டுப்புள்ளிவிபரம் தெளிவாகவே காட்டுகிறது என்கிறார் ஆய்வை மேற்கொண்ட விசேட வைத்தியர் மெற்ற நோகோட்.
இந்த வீழ்ச்சியின் பின்னணியில் மருத்துவத்துறையில் ஏற்பட்டுவரும் முன்னேற்றமே முக்கிய பாத்திரம் வகிக்கிறது.
இரத்தக்குழாய்களில் இரத்த அடைப்பு ஏற்படாமல், இரத்தத்தை இளகச் செய்து ஓட வைக்கும் மாத்திரைகள் பலரது உயிர்களைக்காப்பாற்றியுள்ளன.
மேலும் புற்றுநோய் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் புற்றுநோயால் மடிவோரின் குறுகிய ஆயுளை குறுகிய காலத்தில் முடியவிடாது நீட்டிப்பு செய்கின்றன, இதனாலும் மரண விகிதம் குறைகிறது.
ஆனால் தவறான மருந்தைக் கொடுப்பதில் யாதொரு முன்னேற்றமும் ஏற்பட்டதாகக் கூறமுடியாது.
காரணம்ஸ
சர்க்கரைவியாதியுள்ளவர்கள் ஏற்றும் இன்சுலினில் பிழையான இன்சுலின் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பா முழுவதும் 3 மில்லியன் பேருடைய இன்சுலின்கள் திருப்பியெடுக்கப்பட்டுள்ளன, டென்மார்க்கிலும் இந்தத் தவறு நடந்துள்ளதாக மருத்துவத்துறை அறிவித்துள்ளது.
சரியான மருந்து கொடுத்து பரலோகம் போவேரை காப்பது அதிகமா இல்லை தப்பான மருந்தால் பரலோக யாத்திரை அனுப்படுவோர் அதிகமா என்ற பட்டிமன்றம், அல்லது பாட்டுமன்றம் நடாத்தப்பட வேண்டிய தேவை இருக்கிறது.
சர்க்கரை வியாதிக்காரருக்கு தப்பான இன்சுலின் எச்சரிக்கை
டென்மார்க்கில் சர்க்கரை வியாதிக்கு நோவோ நோடிஸ்க் இன்சுலின் மருந்து எடுப்போரில் பலருக்கு தப்பான மருந்து வழங்கப்பட்டிருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மருந்துகளான நோவோ மிக்ஸ்(ஆர்) 30, பிளக்ஸ்பென்(ஆர்) NovoMixஈ30 FlexPenஈ ஆகியவற்றில் 0,14 வீதமான உற்பத்திகளில் தவறு நடந்துள்ளது.
இந்த மருந்துப்புட்டிகளில் ஒன்று மருந்தின் அளவு குறைவாக இருக்கும், இல்லை அதிகமாக இருக்கும்.
இவற்றைப் பாவித்தால் ஒன்று இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும், அல்லது குறையும்.
சிலவேளை 50 வீதம் இருக்கும், தவறின் 150 வீதம் இருக்கும், சரியான அளவு (100 வீதம்) உள்ளடக்கப்படவில்லை என்பது இதனுடைய கருத்தாகும்.
இன்சுலின் பாவிப்போரை வைத்தியரின் அறிவுறுத்தல் இல்லாமல் நிறுத்தும்படி சொல்லவில்லை ஆனால் தம்மிடம் உள்ள மருந்தில் பின்வரும் சீரியல் நம்பர்கள் இருக்கிறதா என்று அவதானிக்கவும், அப்படி இருந்தால் மருந்துக்கடையில் அதை ஒப்படைத்தல் வேண்டும்.
அதேவேளை இரத்தத்தில் சர்க்கரை அளவை அளந்துகொள்ளவும் வேண்டும்.
tks.s.durai