P2.பார்த்தீபன் கனவு 3-4

02 Jul,2011
 

சதியாலோசனை.3


 சற்று நேரத்துக்கெல்லாம் அருள்மொழித் தேவியும் இளவரசர் விக்கிரமனும் குடிசைக்குள் வந்து "சுவாமி!" என்று சொல்லி சிவனடியாரின் பாதத்தில் வணங்கினார்கள். சிவனடியார் விக்கிரமனைத் தூக்கி எடுத்து அணைத்துக் கொண்டு ஆசீர்வதித்தார். ஆறு வருஷத்துக்கு முன் அறியாப் பாலகனாயிருந்த விக்கிரமன் இப்போது, இளங்காளைப் பருவத்தை அடைந்து ஆஜானுபாகுவாக விளங்கினான். அவன் முகத்தில் வீரக் களை திகழ்ந்தது. உள்ளத்தில் பொங்கிய ஆர்வத்தின் வேகம் கண்களில் அலையெறிந்தது. படபடவென்று பேசத் தொடங்கினான்:- "சுவாமி! நேற்றிரவு கனவில் என் தந்தை வந்தார். என்னை அழைத்துக் கொண்டு சிராப்பள்ளி மலைக்குப் போனார். அங்கே உச்சியில் பறந்து கொண்டிருந்த பல்லவர்களின் சிங்கக் கொடியைக் காட்டினார்.... சுவாமி! இனிமேல் என்னால் பொறுத்திருக்க முடியாது. நீங்கள் என்னை ஆசீர்வதிக்க வேண்டும்" என்றான்.

என்னுடைய ஆசீர்வாதம் உனக்கு எப்போதும் இருக்கிறது. விக்கிரமா! சரியான காலம் வரையில் காத்திருக்கும்படி தானே சொன்னேன்? இப்போது காலம் வந்துவிட்டது. நீ என்ன செய்ய உத்தேசித்திருக்கிறாய் சொல்லு. வெறும் பதற்றத்தினால் மட்டும் காரியம் ஒன்றும் ஆகிவிடாது. தீர யோசித்து ஒரு காரியத்தில் இறங்க வேண்டும். உன் தந்தை உனக்குக் கொடுத்து விட்டுப்போன குறள் நூலில் தெய்வப் புலவர் என்ன சொல்லியிருக்கிறார்? "எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின் எண்ணுவம் என்ப(து) இழுக்கு" இதை நீ எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்."

"ஆம், சுவாமி! எண்ணித்தான் துணிந்திருக்கிறேன். வரப்போகும் புரட்டாசிப் பௌர்ணமியன்று சிராப்பள்ளி மலைமீது பறக்கும் பல்லவர் கொடியை எடுத்தெறிந்து விட்டு அங்கே புலிக்கொடியைப் பறக்க விடப் போகிறேன். யார் என்ன சொன்ன போதிலும் இந்தத் தீர்மானத்தை நான் மாற்றிக் கொள்ளப் போவதில்லை." "மிக்க சந்தோஷம் விக்கிரமா! உன் தீர்மானத்தை மாற்றிக் கொள்ளும்படி நானும் சொல்லப் போவதில்லை. இந்த நாள் எப்போது வரப்போகிறதென்றுதான் நான் காத்துக்கொண்டிருந்தேன். ஆனால் உன் தீர்மானத்தைக் காரியத்தில் நிறைவேற்ற என்ன ஏற்பாடு செய்திருக்கிறாய்? அதைத் தெரிந்து கொள்ள மட்டும் விரும்புகிறேன். புலிக்கொடியைப் பறக்க விட்டுவிட்டால் போதுமா? அதைக் காத்து நிற்கப் படைகள் வேண்டாமா? பல்லவ தளபதி அச்சுதவர்மன் சும்மா பார்த்துக் கொண்டிருப்பானா?"

"சுவாமி! அந்தக் கவலை தங்களுக்கு வேண்டவே வேண்டாம். சோழநாட்டு மக்கள் எல்லோரும் சித்தமாயிருக்கிறார்கள். பொன்னனைக் கேளுங்கள், சொல்லுவான். புரட்டாசிப் பௌர்ணமியில் வீரர்கள் பலர் உறையூரில் வந்து கூடுவார்கள்; புலிக்கொடி உயர்ந்ததும் அவர்கள் என்னுடைய படையில் பகிரங்கமாய்ச் சேர்ந்து விடுவார்கள். உறையூரிலுள்ள பல்லவ சைன்யத்தைச் சின்னாபின்னம் செய்து அச்சுதவர்மனையும் சிறைப்படுத்தி விடுவோம்...!"

"இந்த அபாயகரமான முயற்சியில் உனக்கு யார் ஒத்தாசை செய்கிறார்கள்? யார் உனக்காகப் படை திரட்டுகிறார்கள்? நீயோ வசந்த மாளிகையை விட்டு வெளியே போனது கிடையாதே...." "என் சித்தப்பா மாரப்ப பூபதிதான் எல்லா ஏற்பாடுகளும் செய்கிறார். அவர் இரகசியமாக ஒரு பெரிய படை திரட்டி வந்திருக்கிறார்...." மாரப்ப பூபதி என்றதுமே சிவனடியாரின் முகம் கறுத்தது. அவர் விக்கிரமனை நடுவில் நிறுத்தி "யார்? மாரப்ப பூபதியா இதெல்லாம் செய்கிறான்; அவனிடம் உன் உத்தேசத்தை எப்போது சொன்னாய்?" என்று கேட்டார்.

"சித்தப்பா முன்மாதிரி இல்லை! நீங்கள் கவலைப்பட வேண்டாம். அடியோடு புது மனிதர் ஆகிவிட்டார். என் தகப்பனார் விஷயத்தில் நடந்து கொண்டதற்காக மிகவும் பச்சாதாபப்படுகிறார். அதற்குப் பரிகாரமாக இப்போது சோழநாட்டின் விடுதலைக்கு உயிரையும் கொடுக்கக் சித்தமாயிருக்கிறார்" என்றான் விக்கிரமன்.

சிவனடியார் அருள்மொழியைப் பார்த்து, "தேவி! இது நிஜந்தானா?" என்று கேட்டார். "ஆம், சுவாமி! மாரப்ப பூபதி மனந்திருந்தியவராகத் தான் காணப்படுகிறார்" என்றாள் அருள்மொழி. மிக்க சந்தோஷம். விக்கிரமா! உன்னுடைய முயற்சி நிறைவேறட்டும். சேனாதிபதியான கார்த்திகேயர் உன்னைக் காத்து நிற்கட்டும். உன் தோளுக்கும் வாளுக்கும் பராசக்தி பலம் அளிக்கட்டும். அவசியமான சமயத்தில் மறுபடியும் வருவேன். இப்போது போய் வருகிறேன்" என்று எழுந்தார் சிவனடியார்.

"சுவாமி! என் சித்தப்பா இப்போது வருவதாகச் சொல்லியிருக்கிறாரே; அவர் தங்களைப் பார்க்க மிகவும் ஆவலாயிருக்கிறார்; தாங்கள் கொஞ்சம் இருந்து போக வேண்டும்" என்றான் விக்கிரமன். "இல்லை, விக்கிரமா எனக்கு இருக்க நேரமில்லை. எது எப்படியானாலும் நீ உன் உறுதியைக் கைவிடாதே. உன் தந்தை வாக்கை மறந்து விடாதே" என்றார்.

அருள்மொழித் தேவி அப்போது பொன்னனைப் பார்த்து, "பொன்னா! இளவரசரை அழைத்துக் கொண்டு நீ படகுக்குப் போ; இதோ நான் வந்துவிடுகிறேன்" என்று சொல்ல, பொன்னனும் விக்கிரமனும் உடனே வெளியேறினார்கள். அருள்மொழித் தேவி அப்போது சிவனடியார் பாதத்தில் நமஸ்கரித்து, அந்தப் பாதங்களைப் பிடித்துக் கொண்ட வண்ணம் சொன்னாள்:- "சுவாமி தாங்கள் யாரோ எனக்கு தெரியாது. என்னவெல்லாமோ தங்களைப்பற்றி நான் சந்தேகித்தது உண்டு. ஆனால் தாங்கள் எங்கள் நன்மையை நாடுகிறவர் என்பதில் சந்தேகப்பட்டதே இல்லை; அதனால் தங்களை யாரென்று தெரிந்து கொள்ளவும் நான் ஆசைப்படவில்லை. தாங்கள் யாராயிருந்தாலும் சரி, அடியாளுக்கு ஒரு வரந்தர வேண்டும். எனக்குத் தங்களைத் தவிர வேறு கதி கிடையாது."

சிவனடியாரின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. "என்னால் முடிகிற காரியமாயிருந்தால் கட்டாயம் செய்கிறேன், அம்மா! கேள்" என்றார். "தாங்கள் மகான், தங்களால் முடியாத காரியம் ஒன்றுமே இருக்க முடியாது. வேறென்ன நான் கேட்கப் போகிறேன்? என் பிள்ளையின் உயிரைத் தாங்கள் காப்பாற்றித் தரவேண்டும் சுவாமி! இவன் இப்போது செய்யப் போகிற காரியம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. மகா சக்தி வாய்ந்த பல்லவ சக்கரவர்த்தியை எதிர்த்து இளம் பிள்ளையால் என்ன செய்ய முடியும்? எல்லாம் தெரிந்த தாங்களும் இந்தக் காரியத்தில் இவனை ஏவி விட்டிருக்கிறீர்கள். தங்களுடைய நோக்கம் என்னவோ தெரியாது. சுவாமி! என்னவாயிருந்தாலும், அவனுடைய உயிரைக் காப்பாற்றிக் கொடுக்கும் பொறுப்பு தங்களுடையது" என்று ராணி தழுதழுத்த குரலில் கூறினாள்.

"உயிரைக் காப்பாற்றும் சக்தி வாய்ந்தவர் கடவுள் ஒருவர்தான் அம்மா! ஆனாலும் உனக்கு ஒரு உறுதி சொல்லுகிறேன். விக்கிரமனுடைய வீரத் தந்தையின் ஆத்மா அவன் பக்கத்திலிருந்து அவனைக் காப்பாற்றும். நீ கவலைப்படாதே. எழுத்திரு!" என்றார். அச்சமயம் மேற்குத் திசையில் தூரத்தில் குதிரையின் குளம்படிச் சத்தம் கேட்கவே, சிவனடியார் விரைவாக விடைபெற்றுக் கொண்டு கிழக்குத் திசையை நோக்கிச் சென்றார். சிவனடியார் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம் மாரப்ப பூபதி குதிரை மீது வந்து இறங்கினான். உடனே, "விக்கிரமா! சிவனடியார் வரப்போகிறாரென்று சொன்னாயே? வந்துவிட்டாரா?" என்று கேட்டான். "இப்போதுதான் போனார்! சித்தப்பா! போய்ச் சில விநாடி நேரங்கூட ஆகவில்லை. சற்று முன்னால் வந்திருக்கப்படாதா!" என்று விக்கிரமன் சொல்லிக் சிவனடியார் போன திசையை நோக்கினான்.

அதைப் பார்த்த மாரப்பன். "இந்தச் சாலை வழியாகத் தானே போனார்? இதோ அவர் முகத்தைப் பார்த்துவிட்டு வந்து விடுகிறேன்" என்று கூறி, மறுபடியும் குதிரை மேலேறி விரைந்து சென்றான். ஆனால், அவன் அந்த நதிக்கரைச் சாலையோடு வெகுதூரம் குதிரையை விரட்டிக் கொண்டு போயும் சிவனடியார் தென்படவில்லை. அவர் மாயமாய் மறைந்து விட்டார்

 

மாமல்லபுரம்.4


 கடற்கரைப் பட்டினமாகிய மாமல்லபுரத்தில் அன்று அல்லோலகல்லோலமாயிருந்தது. வீடுகள் எல்லாம் மாவிலைகளினாலும், தென்னங் குருத்துக்களினாலும் சிங்க உருவந் தாங்கிய கொடிகளினாலும், பல வர்ணத் தோரணங்களினாலும் அலங்கரிக்கப்பட்டு விளங்கின. தெரு வீதிகளில் சித்திர விசித்திரமான கோலங்கள் போடப்பட்டிருந்தன. தேர்கள், யானைகள், குதிரைகள், கோபுரங்கள், பலவித விருட்சங்கள், பூஞ்செடிகள் - இவை போலெல்லாம் போட்ட கோலங்கள் கண்ணுக்கு விருந்தாயிருந்தன. அதிகாலையிலிருந்து ஸ்திரீகளும், புருஷர்களும் சிறுவர் சிறுமிகளும் பட்டுப் பட்டாடைகளினாலும், பசும் பொன் ஆபரணங்களினாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டு தெருவீதிகளிலும் திண்ணைகளிலும் கூட்டங் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். எங்கே பார்த்தாலும் பேரிகை முழக்கம், மற்றும் மங்கள வாத்தியங்களின் ஒலியும் கேட்டுக் கொண்டிருந்தன. இந்த ஒலிகளுக்கிடையில் " சக்கரவர்த்தி காஞ்சியிலிருந்து கிளம்பி விட்டாராம்!" "பாதி வழி வந்தாகி விட்டதாம்!" "சக்கரவர்த்தியின் கோமகள் குந்தவி தேவியும் வருகிறாராம்!" என்றெல்லாம் ஜனங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் கலகல சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது.

மாமல்லபுரம் வாசிகள் அத்தனை அதிக உற்சாகத்துடனும் ஆனந்தத்துடனும் அன்று உற்சவம் கொண்டாடியதின் காரணம் என்னவென்றால், அந்நகருக்கு அன்று மாமல்ல நரசிம்மவர்ம சக்கரவர்த்தி விஜயம் செய்வதாக இருந்தது தான். சக்கரவர்த்தி விஜயம் செய்து, ஏழெட்டு வருஷங்களுக்கு முன்னால் நின்றுபோன சிற்பப் பணியை மறுபடியும் ஆரம்பித்து வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. சக்கரவர்த்தியுடன் கூட அவருடைய செல்வக் குமாரி குந்தவி தேவியும் வரப்போவதாகத் தெரிந்திருந்தபடியால் மாமல்லபுர வாசிகள் எல்லையற்ற குதூகலத்துடன் அந்த நாளைத் திருநாளாகக் கொண்டாடினார்கள்.

அந்தக் காலத்தில், காஞ்சி நரசிம்மவர்ம சக்கரவர்த்தியின் புகழ் எண்டிசையிலும் பரவியிருந்தது. பாரத நாடெங்கும் அவருடைய கீர்த்தி வியாபித்திருந்ததோடு, கடல் கடந்து வெளிநாடுகளுக்கும் சென்றிருந்தது. தெற்கே காவேரியாற்றங்கரையிலிருந்து வடக்கே கிருஷ்ணா நதிக்கரை வரையில் பல்லவர்களின் சிங்கக்கொடி கம்பீரமாகப் பறந்தது. அந்தப் பிரதேசத்திலுள்ள ஜனங்கள் எல்லாரும் நரசிம்மவர்மரிடம் அளவிலாத பக்தி கொண்டிருந்தார்கள். அறிவிலும் வீரத்திலும் தயாள குணத்திலும் நடுக் கண்ட நீதி வழங்குவதிலும், குடிகளின் நலங்களைக் கண்ணுங் கருத்துமாய்ப் பாதுகாப்பதிலும், சிற்பம், சித்திரம், சங்கீதம் முதலிய கலைகளை வளர்ப்பதிலும் நரசிம்மவர்மர் மிகச் சிறந்து விளங்கியது பற்றி அவருடைய பிரஜைகள் மிக்க பெருமை கொண்டிருந்தார்கள். வடக்கே நர்மதை நதி வரையில் படையெடுத்துச் சென்று பொல்லாத புலிகேசியைப் போரில் கொன்று, வாதாபி நகரையும் தீக்கிரையாக்கி விட்டு வந்ததன் பின்னர், மாமல்ல சக்கரவர்த்தியைப் பற்றி அவருடைய குடிகள் கொண்டிருந்த பெருமை பன்மடங்கு பெருகியிருந்தன. "தட்சிண தேசத்தில் நரசிம்மவர்மரைப் போல் ஒரு சக்கரவர்த்தி இதுவரையில் தோன்றியதுமில்லை; இனிமேல் தோன்றப் போவதுமில்லை! என்று அந்தக் காலத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த ஜனங்கள் நம்பினார்கள். முன்னூறு வருஷத்துக்குப் பிறகு தஞ்சையில் இராஜராஜன், இராஜேந்திர சோழன் என்னும் மகாசக்கரவர்த்திகள் தோன்றப் போகிறார்கள் என்பதை அந்தக் காலத்து மக்கள் அறிந்திருக்க முடியாதல்லவா?

இவ்விதம் பல்லவ சாம்ராஜ்யத்தின் பிரஜைகள் எல்லாருமே நரசிம்மவர்ம சக்கரவர்த்தியிடம் பக்தி விசுவாசம் கொண்டிருந்தவர்களாயினும், மாமல்லபுரம் வாசிகளுக்குச் சக்கரவர்த்தியிடம் ஒரு தனித்த உறவு ஏற்பட்டிருந்தது. அந்தப் பட்டினத்துக்குப் பெயரும் புகழும் அளித்தவர் அவரேயல்லவா? மகேந்திரவர்ம சக்கரவர்த்தியின் காலத்தில், நரசிம்மவர்மர் இளம் பருவத்தினராயிருந்தபோது, ஒரு தடவை மல்யுத்தத்தில் பிரசித்தி பெற்ற மல்லர்களையெல்லாம் தோற்கடித்து வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு 'மகாமல்லன்' என்ற பட்டம் அவருடைய தந்தை மகேந்திரவர்மரால் அளிக்கப்பட்டது. சில காலத்திற்குப் பிறகு இந்தப் பட்டப் பெயரை வைத்தே அந்தக் கடற்கரைப் பட்டினத்துக்குப் பெயர் வழங்கலாயிற்று.

"அப்பா! இந்தப் பட்டினத்துக்கு உங்கள் பட்டப் பெயரை எதற்காக வைத்தார்கள்?" என்று கோமகள் குந்தவி தேவி, தந்தை நரசிம்மவர்மரைப் பார்த்துக் கேட்டாள். இருவரும் பல்லவ சாம்ராஜ்யத்தின் பட்டத்து யானை மீது அம்பாரியில் வீற்றிருந்தார்கள். அந்தப் பட்டத்து யானைக்கு முன்னாலும் பின்னாலும் வேலும் வாளும் தாங்கிய போர் வீரர்கள் அணிவகுத்துச் சென்றார்கள். இன்னும் பலவகைப்பட்ட விருதுகளும் சென்றன. எல்லாருக்கும் முன்னால் பெரிய ரிஷபங்கள் முதுகில் முரசுகளைச் சுமந்து கொண்டு சென்றன. சற்று நேரத்துக்கொரு தடவை அந்த முரசுகள் அடிக்கப்பட்டபோது உண்டான சத்தம் அலைமோதிக்கொண்டு நாலாபுறமும் பரவியது.

அம்பாரியின் மீது வீற்றிருந்த நரசிம்மவர்ம சக்கரவர்த்தியையும் அவர் அருமைப் புதல்வியையும் ஏக காலத்தில் பார்த்தவர்கள், உதய சூரியனையும் பூரணச் சந்திரனையும் அருகருகே பார்த்தவர்களைப் போல் திணறித் திண்டாடிப் போவார்கள். இருவருடைய திருமுகத்திலும் அத்தகைய திவ்ய தேஜஸ் ஜொலித்துக் கொண்டிருந்தது. அவர்கள் அணிந்திருந்த கிரீடங்களிலும், மற்ற ஆபரணங்களிலும் பதிந்த நவரத்தினங்களின் காந்தி பார்ப்பவர்களின் கண்களைக் கூசச் செய்தன.

பல்லவ சக்கரவர்த்தி ஆஜானுபாகுவாய், கம்பீரமான தோற்றமுடையவராகயிருந்தார். வலிமையும் திறமையுங் கொண்ட அவருடைய திருமேனியில் மென்மையும் சௌந்தரியமும் கலந்து உறவாடின. இராஜ களை ததும்பிய அவருடைய முகத்தில் காணப்பட்ட காயங்களின் வடுக்கள், அவர் எத்தனையோ கோர யுத்தங்களில் கைகலந்து போரிட்டு ஜயபேரிகை முழக்கத்துடன் திரும்பி வந்தவர் என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தன. கோமகள் குந்தவி தேவியோ பெண் குலத்தின் அழகெல்லாம் திரண்டு உருக்கொண்டவள் போலிருந்தாள். பல்லவ சாம்ராஜ்யத்திலிருந்த மகா சிற்பிகளும் ஓவியக்காரர்களும் குந்தவி தேவியிடம் தங்கள் கலைத்திறன் தோற்றுவிட்டதென்பதை ஒப்புக் கொண்டார்கள். "கோமகளின் கருவிழிகளில்தான் என்ன மாய சக்தி இருக்கிறதோ தெரியவில்லை. தேவி தமது அஞ்சனந் தீட்டிய கண்களை அகல விரித்து எங்களைப் பார்த்தவுடனேயே நாங்கள் உணர்விழந்து மெய்ம்மறந்து போய் விடுகிறோம். அப்புறம் சிற்பம் அமைப்பதெங்கே? சித்திரம் வரைவதெங்கே?" என்றார்கள். "எங்களையெல்லாம் கர்வ பங்கம் செய்வதற்கென்றே பிரம்மன் குந்தவி தேவியைப் படைத்திருக்க வேண்டும்!" என்று அவர்கள் சொன்னார்கள்.

"அப்பா! இந்த நகருக்குத் தங்கள் பட்டப் பெயரை எதற்காக வைத்தார்கள்? சொல்லுகிறேன், சொல்லுகிறேன் என்று ஏமாற்றிக் கொண்டு வருகிறீர்களே, இன்றைக்குக் கட்டாயம் சொல்லியாக வேண்டும்" என்று மறுபடியும் கேட்டாள் குந்தவி. "அப்படியானால் இப்போது இந்த யானைமேலிருந்து நாம் இறங்கியாக வேண்டும்" என்றார் சக்கரவர்த்தி. "இப்படியே நான் தரையில் குதித்து விடட்டுமா" என்றாள் குந்தவி. "நீ சாதாரண மனுஷியாகயிருந்தால் குதிக்கலாம் அம்மா! குதித்துக் காலையும் ஒடித்துக் கொள்ளலாம்! சக்கரவர்த்தியின் மகளாயிருப்பதால் அப்படியெல்லாம் செய்யக்கூடாது!" என்றார் சக்கரவர்த்தி. "எதற்காக அப்பா, அப்படி. சக்கரவர்த்தின் மகளாயிருப்பதால், யானை மேலிருந்து குதித்துக் காலை ஒடித்துக் கொள்ளக்கூடவா பாத்தியதை இல்லை?" என்று சிரித்துக் கொண்டே குந்தவி கேட்டாள். "ஆமாம், ஆமாம்! அப்படி நீ இருந்தால் 'காஞ்சி சக்கரவர்த்தியின் மகள் குந்தவி யானை மேலிருந்து குதித்தாளாம்" என்ற செய்தி உலகமெல்லாம் பரவிவிடும். அப்புறம் அங்க, வங்க, கலிங்கம் முதலான ஐம்பத்தாறு தேசத்து இராஜ குமாரர்களில் யாரும் உன்னைக் கலியாணம் செய்து கொள்ள முன் வரமாட்டார்கள்! அப்புறம் உன் கலியாணத்துக்குச் சீதை விஷயத்தில் ஜனகர் செய்ததுபோல் நானும் ஏதாவது தந்திரம் செய்தாக வேண்டும்."

"ஜனகர் தந்திரம் செய்தாரா? என்ன தந்திரம் அப்பா?" என்று குந்தவி கேட்டாள். "அது தெரியாதா உனக்கு? சீதை சிறு பெண்ணாயிருந்த போது ஒரு நாள் வில்லைத் தெரியாத்தனமாய்த் தூக்கி நிறுத்திவிட்டாள். இதற்காக அவளை ஐம்பத்தாறு தேசத்து இராஜகுமாரர்களும் கலியாணம் செய்து கொள்ள மறுத்து விட்டார்கள். கடைசியில் சீதையின் தகப்பனார் என்ன செய்தார் தெரியுமா? விசுவாமித்திர ரிஷியை அனுப்பி இராமன் என்ற அசட்டு இராஜகுமாரனைத் தந்திரமாய் அழைத்துவரப் பண்ணினார். ஒரு பெரிய வில்லை நடுவில் முறித்து, முறிந்தது தெரியாதபடி தந்திரமாய்ப் பெட்டிக்குள் வைத்திருந்தார்! இராமன் அந்த வில்லை விளையாட்டாக எடுத்ததும், வில் முறிந்து இரண்டு துண்டாக விழுந்து விட்டது! உடனே ஜனகர், "ஐயையோ! எங்கள் குல சம்பத்தாகிய வில்லை ஒடித்து விட்டாயே! ஒன்று ஒடிந்த வில்லைச் சேர்த்துக் கொடு; இல்லாவிட்டால் என் மகள் சீதையைக் கலியாணம் பண்ணிக் கொள்" என்றார். இராமன் வேறு வழியில்லாமல் சீதையைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டியதாயிற்று!"

"குந்தவி விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே, "அப்பா! நானும் இராமாயணக் கதையைக் கேட்டிருக்கிறேன். நீங்கள் சொல்லுவது புதிய இராமாயணமாயிருக்கிறதே!" என்றாள். சற்று சிரிப்பு அடங்கிய பிறகு அவள், "ஆனால் உங்களுக்கு அதைப் பற்றிக் கவலை வேண்டாம் அப்பா! நான் கலியாணமே செய்து கொள்ளப் போவதில்லை" என்று சொன்னாள். சக்கரவர்த்தி மூக்கின்மேல் விரலை வைத்துக் கொண்டு, "அது என்ன சமாசாரம்? கலியாணம் உன்னை என்ன பண்ணிற்று? அதன்மேல் ஏன் அவ்வளவு கோபம்? என்று கேட்டார். அப்போது குந்தவி "கலியாணம் செய்து கொண்டால் நான் உங்களை விட்டுப் பிரியத்தானே வேண்டும்? உங்களை விட்டுவிட்டுப் போக எனக்கு இஷ்டமில்லை. உங்களுடனேயே நான் எப்போதும் இருப்பேன்" என்றாள். "அப்படியா சமாசாரம் குந்தவி? இன்னொரு தடவை சொல்லு" என்றார் சக்கரவர்த்தி.

"அதெல்லாம் ஒரு தடவைக்குமேல் சொல்ல மாட்டேன் அப்பா! நீங்கள் ஏக சந்தக்கிராகி என்பது உலகமெல்லாம் பிரசித்தியாயிருக்கிறதே! ஒரு தடவைக்கு மேல் ஏன் கேட்கிறீர்கள்?" "ஓ ஆபத்பாந்தவா! அநாதரட்சகா! இந்த வாயாடிப் பெண்ணைக் கட்டிக் கொண்டு எந்த இராஜகுமாரன் திண்டாடப் போகிறானோ? யார் தலையில் அவ்விதமிருக்கிறதோ? அவனை நீதான் காப்பாற்றியருள வேண்டும்" என்று சொல்லியபடி சக்கரவர்த்தி தலைமேல் கைகூப்பி வானத்தை அண்ணாந்து நோக்கினார். "உங்களுடைய பரிகாசம் இருக்கட்டும். இப்போது யானையை நிறுத்துகிறீர்களா, இல்லையா? இல்லாவிடில் நான் கீழே குதித்து விட்டேனானால், அப்புறம் என்னை ஒரு இராஜகுமாரனும் கலியாணம் செய்து கொள்ள மாட்டான். எப்போதும் உங்கள் பிராணனைத்தான் வாங்கிக் கொண்டிருப்பேன்" என்று குந்தவி சொல்லி எழுந்து நின்று அம்பாரியிலிருந்து கீழே குதிப்பது போல் பாசாங்கு செய்தாள்.

"வேண்டாம், வேண்டாம் அப்படிப்பட்ட விபரீதம் பண்ணி வைக்காதே!" என்று கூறி பல்லவ சக்கரவர்த்தி யானைப்பாகனைக் கூப்பிட்டு யானையை நிறுத்தச் சொன்னார். யானை நின்றதும், தந்தையும் மகளும் கீழே இறங்கினார்கள். சக்கரவர்த்தி குதிரையும் பல்லக்கும் கொண்டு வரும்படி சமிக்ஞை காட்டினார். அவை அருகில் வந்ததும், பரிவாரத் தலைவனை அழைத்து, "நீங்கள் நேரே போய் நகர் வாசலருகில் நில்லுங்கள். நாங்கள் அங்கே வந்து சேர்ந்து கொள்கிறோம்" என்றார். பிறகு, குதிரைமீது ஆரோகணித்து இராஜ மார்க்கத்திலிருந்து பிரிந்து குறுக்கு வழியாகப் போகத் தொடங்கினார். இளவரசி ஏறியிருந்த பல்லக்கும் அவரைத் தொடர்ந்து சென்றது. சக்கரவர்த்தி இம்மாதிரியெல்லாம் எதிர்பாராத காரியங்களைச் செய்வது சர்வ சகஜமாய்ப் போயிருந்தபடியால், அவரைத் தொடர்ந்து வந்த பரிவாரங்கள் சிறிதும் வியப்பு அடையாமல் இராஜ மார்க்கத்தோடு மேலே சென்றன



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies