உலகெங்கிலும் அதிகபட்ச வெப்பநிலை பதிவு..காரணம் என்ன.?
04 Oct,2023
வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிக அதிகபட்ச வெப்பநிலை உலகின் பல்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ளது. இதுகுறித்த முழுமையான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
உலகெங்கிலும் கடந்த செப்டம்பர் மாதத்தில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிக அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளான ஆஸ்திரியா, பிரான்ஸ், ஜெர்மனி, போலாந்து, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் மிக உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. மனிதகுல வரலாற்றிலேயே இது மிக அதிகபட்சமான வெப்பநிலை என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மனிதர்களின் நடவடிக்கையால் ஏற்பட்ட பருவநிலை மாற்றம்தான் இதற்கெல்லாம் காரணம் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
பிரான்ஸ் நாட்டின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி அந்நாட்டில் கடந்த செப்டம்பர் மாதத்தில் பதிவான வெப்பநிலை அளவு 21.5 டிகிரி செல்சியஸ் ஆகும். கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை கணக்கிடும் போது சராசரியாக பதிவான வெப்பநிலையை விட தற்போதைய வெப்பநிலை என்பது 3.5 டிகிரி செல்சியஸ் முதல் 3.6 டிகிரி செல்சியஸ் கூடுதலாகும். அதிலும் பிரான்ஸ் நாட்டில் சராசரி வெப்பநிலையை காட்டிலும் கடந்த 2 ஆண்டுகளாக வெப்பநிலை கூடுதலாக பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனியில் உச்சபட்ச வெப்பநிலை :
ஜெர்மனியிலும் கடந்த செப்டம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகபட்சமான வெப்பநிலை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1961 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரையிலான சராசரி வெப்பநிலையை கணக்கிடும்போது தற்போதைய வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் கூடுதலாகும்.
போலாந்து நிலவரம் :
போலாந்து நாட்டில் கடந்த நூற்றாண்டில் கணக்கிடப்பட்ட சராசரி வெப்பநிலையை காட்டிலும் செப்டம்பர் மாதத்தில் வெப்பநிலையானது 3.6 டிகிரி செல்சியஸ் கூடுதலாக பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து :
ஆல்ஃபைன் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஆசிரியர் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் செப்டம்பர் மாதத்தில் மிக அதிக அளவிலான வெப்பநிலை பதிவாகியுள்ளது என்று அந்நாடுகளின் வானிலை ஆராய்ச்சி மையங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஐஸ்கட்டி மலைகள், கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மனிதர்களின் நடவடிக்கைகளே காரணம் :
மனிதர்களின் இயற்கைக்கு விரோதமான போக்குதான் உலகின் வெப்பநிலை அதிகரிக்க காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதிலும் தொழிற்சாலைகள் அமைவதற்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிடுகையில் தற்போது சராசரி வெப்பநிலை என்பது 1.2 டிகிரி செல்சியஸ் கூடுதலாக உள்ளது என்று கூறுகின்றனர்.
மனிதகுல வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 2023 ஆம் ஆண்டு தான் மிக அதிகபட்ச வெப்பநிலை கொண்ட ஆண்டாக இருக்கும் என்று ஐரோப்பாவில் அண்மையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்வது தொடர்பாக துபாயில் வரும் நவம்பர் 30ம் தேதி அன்று உலக தலைவர்கள் ஒன்று கூடி விவாதிக்க உள்ளனர். முன்னதாக 2015 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பாரிஸ் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்க உள்ளனர்.