ஆர்க்டிக் பகுதியில் 206 பேருடன் சகதியில் மாட்டிக்கொண்ட சொகுசு கப்பல்ஸ 4 நாட்கள் நடந்தது என்ன?
14 Sep,2023
இந்த கப்பலில் பயணிக்கும்போது திமிங்கலம், சுறா, போலார் கரடிகள் உள்ளிட்ட உயிரினங்களை பார்க்க முடியும் என்பதால் செல்வந்தர்கள் இந்த பயணத்தை விரும்புகின்றனர்
ஆர்க்டிக் பெருடங்கடல் பகுதியில் 206 பயணிகளுடன் சொகுசு கப்பல் ஒன்று சகதியில் சிக்கி நகர முடியாமல் இருந்தது. கப்பலை மீட்டெடுக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்ட நிலையில் 4 நாட்களுக்கு பின்னர் கப்பல் மீட்கப்பட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளது.. இதற்கிடையே கப்பலில் உள்ள சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகம் தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
முழுமையாக கப்பலை மீட்பதற்கு சில நாட்கள் ஆகும் என்று முன்பு தகவல்கள் வெளிவந்தன. கிரீன்லாந்து அருகே சிக்கிய இந்த கப்பலை மீட்க கடந்த 3 நாட்களாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் 4 ஆம் நாள் முயற்சி பலனை கொடுத்துள்ளது.
பயணிகளில் பெரும்பாலானோர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள். இந்த கப்பல் மிகச்சரியாக கிரீன்லாந்து தலைநகர் நூக்கில் இருந்து 1400 கிலோ மீட்டர் தொலைவில் கடந்த புதன் அன்று மதியம் கடல் சகதியில் சிக்கியது. மோசமான வானிலை காரணமாக மீட்பு நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டது.
இன்று டென்மார்க் ராணுவத்தினர் கப்பலை வெளியே கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதில் கப்பல் மீட்டெடுக்கப்பட்டு புறப்பட்டு சென்றுள்ளது.
இதற்கிடையே கப்பலில் உள்ள சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
டென்மார்க்கில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல் ஒரு மாதத்திற்கு மேலாக உலக நாடுகளை சுற்றி வரும் . சொகுசு கப்பலான இது கடற்கரை ஓரம் உள்ள காட்டு பகுதிகளை பயணிகளுக்கு சுற்றிக் காட்டும்.
இந்த கப்பலில் பயணிக்கும்போது திமிங்கலம், சுறா, போலார் கரடிகள் உள்ளிட்ட உயிரினங்களை பார்க்க முடியும் என்பதால் செல்வந்தர்கள் இந்த பயணத்தை விரும்புகின்றனர். நபர் ஒருவர் பயணம் செய்வதற்கு இந்த கப்பலில் ரூ. 28 லட்சம் வரையில் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.