இந்தக் குற்றம் 35 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இதுகுறித்த வழக்கு விசாரணை 25 ஆண்டுகளுக்கு நடந்தது. இறுதித் தீர்ப்பு கடந்த ஆண்டு அளிக்கப்பட்டது.
கேட்பவரின் மனதை உலுக்கும் இந்தக் குற்றம் மகாராஷ்டிராவில் நடந்தது.
அரசுத் தரப்பிலான நீண்ட இழுபறி, தேவையற்ற நடைமுறைகள் உள்ளிட்ட காரணங்களால் இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்ட சீரியல் கொலையாளிகளுக்கு உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரண தண்டனை ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை.
மகாராஷ்டிராவில் மிகக் கொடூரமான சீரியல் கொலையாளிகளாக மாறிய மூன்று பெண்களின் திகில் கதை இது. அவர்கள் பிச்சை எடுப்பவர்களின் குழந்தைகளைத் திருடினார்கள், அந்தக் குழந்தைகளையே கேடயமாகப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டார்கள். பின்னர் அந்தக் குழந்தைகளைக் கொலையும் செய்தார்கள்.
கொடூரத்தின் உச்சகட்டத்தைக் குறிக்கும் உரிச்சொற்கள் பெரும்பாலும் ஆண்பாலைத்தான் குறிக்கின்றன. ஏனெனில் பெண்மை என்பது இந்திய சமூகத்தில் கருணை, அன்பு போன்றவற்றுக்காகப் போற்றப்படும் பாலினமாக இருக்கிறது.
அன்பு, பாசம் என பெண்பாலுக்குச் சொல்லப்படும் அனைத்தையும் சுக்குநூறாக உடைத்த இந்த மூன்று பெண்களும் திட்டமிட்டு 42 குழந்தைகளைக் கடத்தினார்கள். அதில் பெரும்பாலான குழந்தைகளைக் கொலையும் செய்தார்கள்.
தாயும் இரண்டு மகள்களும் செய்த குற்றங்களுக்கு எதிரான தீர்ப்பு கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.
இதுபோன்ற கொலைகள் ஆறு ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாகத் தொடர்ந்து நடந்து வந்தன. இந்தக் கொலைகள் தொடர்பான வழக்கில் இருந்த சிக்கலான முடிச்சுகளை அவிழ்க்கப் பல ஆண்டுகள் ஆனது.
இறுதியில் 13 குழந்தைகள் கடத்தப்பட்டதும், அவர்களில் குறைந்தது 6 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டதும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.
மகாராஷ்டிராவின் வரலாற்றில் மிக நீண்டகாலம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கு இது. மிகக் கொடூரமான காவித் சகோதரிகள் தங்கள் தாயுடன் சேர்ந்து நடத்திய கொடூர குற்றங்கள் பெரும்பாலானோரால் அறியப்பட்ட ஒன்று.
அவர்கள் செய்த குற்றங்களுக்கு எதிரான தீர்ப்பு கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.
இந்தக் கொலைகள் குறித்த தகவல்கள் மிகவும் தாமதமாகவே வெளிச்சத்திற்கு வந்தன. அதன்பின், வழக்கு விசாரணை நீண்ட காலம் இழுத்தடிக்கப்பட்டது. இறுதியாக வெளியான தீர்ப்புக்குப் பிறகு, குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவதும் தாமதமானது.
அதன் பின்னர் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரிப்பதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டதால், உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனையை ரத்து செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.
இவையனைத்தும் குழந்தைகள் காணாமல் போவதில் இருந்து தொடங்கியது. 1990 மற்றும் 1996க்கு இடையில், மேற்கு மகாராஷ்டிரா மற்றும் மும்பைக்கு அருகில் உள்ள புனே, மும்பை புறநகர்ப் பகுதிகள், நாசிக், கோலாப்பூர் போன்ற நகரங்களில் இருந்து குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.
இந்தக் காலகட்டத்தில், 42 குழந்தைகளைக் கடத்தியவர்கள் மூன்று பெண்கள்தான் என்பது தாமதமாகவே தெரிய வந்தது. அஞ்சனாபாய் காவித், அவரது மகள் சீமா என்ற தேவகி காவித் மற்றும் அவருடைய மற்றொரு திருமணமான மகள் ரேணுகா ஷிண்டே (ரிங்கு என்கிற ரத்தன்) ஆகியோர் 90களின் முற்பகுதியில் புனேவில் கணஜெநகர் நகர்ப்புற குடிசைப் பகுதியில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.
அவர்கள் கூலி வேலை செய்தும், முக்கியமாக சிறிய அளவிலான திருட்டுகள் மூலமாகவும் சம்பாதித்து வந்தனர். அப்போது ரேணுகாவின் கணவர் கிரண் ஷிண்டே புனேவில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். பின்னர் விசாரணையின்போது அவர்தான் முக்கியப் பங்கு வகித்தார்.
சொந்த மகனைக் கொண்டு தொடங்கிய 'பாதுகாப்பான' திருட்டு
சீமா, ரேணுகா மற்றும் அவர்களது தாய் அஞ்சனாபாய் ஆகியோர் கூட்ட நெரிசலான இடங்கள், சந்தைகள் மற்றும் கண்காட்சிகளில் பெண்களின் பணப்பைகள், நகைகள், ஆண்களின் பணப்பைகளைத் திருடுவது வழக்கம்.
ஒருமுறை 1990ஆம் ஆண்டில், நெரிசலான இடத்தில் ஒரு பெண்ணின் பணப்பையை ரேணுகா பறித்தார். ஆனால் அங்கிருந்த பொதுமக்கள் அவரைக் கையும் களவுமாகப் பிடித்தனர். அப்போது அவரது 2 வயது மகன் உடன் இருந்தான். பொதுமக்களிடம் பிடிபட்டதும், ரேணுகா குழந்தையை சற்று தொலைவுக்கு முன்னோக்கி அழைத்துச் சென்றார்.
"நான் திருடவே இல்லை. இந்தக் குழந்தை என்னுடைய குழந்தை. இதை வைத்துக்கொண்டு நான் எப்படித் திருட முடியும்?" எனக் கேட்டு அழுதுபுலம்பத் தொடங்கினார். இதனால் அனுதாபம் பெற்று அந்த பொதுமக்கள் கூட்டத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டார்.
இந்தக் கதையை அவர் தனது அம்மா மற்றும் சகோதரியிடம் சொன்னார். இதைக் கேட்ட பிறகு அவர்கள் மூவரும் திருடுவதற்கான புதிய, 'பாதுகாப்பான' வழி ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டதாக மகிழ்ந்தனர்.
பின்னர் தெருவோரம் காணப்படும் ஆதரவற்ற குழந்தைகள், பிச்சை எடுப்பவர்களின் குழந்தைகள் என ஏராளமான குழந்தைகளை கடத்திச் சென்று வெவ்வேறு நகரங்களில் அவர்களைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
கோவில் திருவிழாக்கள் மற்றும் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் இடங்களில் மகனையும் பிற குழந்தைகளையும் பயன்படுத்தி திருடுவதை வழக்கமாகக் கொண்டனர்.
குழந்தையுடன் இருக்கும் பெண்ணை யாரும் திருடராகப் பார்ப்பதில்லை. இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அஞ்சனாபாயும் அவருடைய இரு மகள்களும் சேர்ந்து திருட்டுத் தொழிலைச் செவ்வனே செய்து வந்தனர்.
அவர்கள் புனே, மும்பை, நாசிக், கோலாப்பூர் எனப் பல நகரங்களிலும் இதுபோன்ற திருட்டுகளில் ஈடுபட்டது பின்னர் விசாரணையில் தெரிய வந்தது.
முதல் பலி: அழுததால் கொலை செய்யப்பட்ட குழந்தை சந்தோஷ்
ஒருமுறை அஞ்சனாபாய் தன் மகள்களுடன் திருடச் சென்றிருந்தார். அப்போது பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஒருவரின் ஒன்றரை வயது மகனைத் தூக்கிச் சென்றார். அந்தச் சிறுவனின் பெயர் சந்தோஷ்.
பின்னர் அந்தச் சிறுவனுடன் திருடச் சென்றபோது, நகைகளைத் திருடிய சீமாவை பொதுமக்கள் பிடித்தனர். அங்கே கூடிய கூட்டத்தில் இருந்த பெண்கள் சீமாவை அடிக்க ஆரம்பித்தனர். அப்போது கைகளில் ஒரு குழந்தையுடன் இருந்த அஞ்சனாபாய், கூட்டத்தினரின் கவனத்தை திசைதிருப்ப குழந்தை சந்தோஷை தூக்கி வீசினார். இதனால் குழந்தை சந்தோஷ் பெரும் குரலில் அழத் தொடங்கினான்.
அப்போது கூட்டத்தினரைப் பார்த்துப் பேசிய சீமா, அழுதுகொண்டிருந்த சந்தோஷ் மீது சத்தியம் செய்து தான் திருடவில்லை எனக் கூறினார். பின்னர் கூட்டத்தினரிடம் மன்னிப்பு கேட்பதாக மன்றாடினார். அவரை போலீசாரிடம் பிடித்துக் கொடுக்க முயன்ற கூட்டத்தினர் அந்தப் பெண்ணின் சத்தியம் மற்றும் கண்ணீரைக் கண்டு நம்பி, பரிதாபப்பட்டு, கருணை காட்டி அவரை விட்டுவிட்டனர்.
பின்னர், மூவரும் அந்த கிராமத்தை விட்டு வெளியேறுவதற்காக அங்கிருந்த பேருந்து நிறுத்தத்திற்கு வந்தனர். ஆனால், நிலத்தில் வீசப்பட்ட சந்தோஷ், வலியால் தொடர்ந்து அழுது கொண்டிருந்தான்.
அதேநேரம் அவனுடைய காயத்தை முழுவதுமாகப் பொருட்படுத்தாமல் அவர்கள் தப்பிக்கும் அவசரத்தில் இருந்தனர். காயம்பட்ட நிலையில் சந்தோஷை தூக்கிச் செல்வதும் ஆபத்தாக இருந்தது. அவனும் அழுகையை நிறுத்தவில்லை. சிறுவனின் உடல்நிலை சிக்கலை உருவாக்கும் என்பதை உணர்ந்த அஞ்சனாபாய், சிறுவனின் தலையை நேரடியாக ஒரு மின் கம்பத்தில் அடித்தார்.
சந்தோஷின் உடலை அங்கேயே புதைத்துவிட்டு அவர்கள் மூவரும் தப்பிச் சென்றனர்.
அந்த அடியால் சிறுவன் மயக்கமடைந்தான். மேலும், தலையில் மற்றொரு பெரிய காயம் ஏற்பட்டதால் குழந்தை சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தான். பின்னர் சந்தோஷின் உடலை அங்கேயே புதைத்துவிட்டு அவர்கள் மூவரும் தப்பிச் சென்றனர்.
ஒன்றரை வயது சிறுவனை மிக 'எளிதாக' கொன்றுவிட்டு, மூவரும் எந்தச் சலனமும் இன்றி சாதாரணமாகத் தப்பிச் சென்றனர். அதன் பின் அவர்களுக்கு ஒரு புதிய திட்டம் தோன்றியது. அதன்படி, திருட்டின்போது பயன்படுத்தப்படும் குழந்தைகளை இதுபோல் ஈவு இரக்கமின்றிக் கொலை செய்வதை வழக்கமாகக் கொண்டனர்.
ஒவ்வொரு முறை பொது மக்களால் சூழப்படும் போதும் மூன்று பேரும் குழந்தைகள் மீது சத்தியம் செய்யத் தொடங்கினர். இதேபோன்ற சம்பவங்கள் வெவ்வேறு நகரங்களில் நடப்பதால், இதைப் பற்றிய ஒரு ஒருங்கிணைந்த தகவல் பெரிய அளவில் யாருக்கும் தெரியவில்லை.
யாரும் இந்தச் சம்பவங்களைப் பற்றிச் சிந்திக்கவும் இல்லை. அதுமட்டுமின்றி, ரேணுகாவும், சீமாவும் தங்களைப் போன்ற ஏழை குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளை உளவு பார்த்து, அவர்களைக் கடத்துவதை வழக்கமாகக் கொண்டனர்.
நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் திரிந்துகொண்டிருந்த, ஆதரவற்ற குழந்தைகளே அவர்களுடைய இரையாக இருந்தனர். ஏனெனில், அந்தப் பகுதிகளில் குழந்தைகளைக் காணவில்லை எனப் பல நேரங்களில் போலீசாரிடம்கூட எந்தப் புகாரும் வரவில்லை. ஒருவேளை புகார் அளித்தாலும், தொடர்ந்து போலீசாருடன் இணைந்து குழந்தையைத் தேடுவதில் யாரும் அக்கறை காட்டவில்லை. இது அவர்களுக்கு வசதியாக இருந்தது.
கொடூரத்தின் உச்சகட்டம்
ரேணுகா, சீமா, அஞ்சனாபாய் ஆகிய மூவரும் சேர்ந்து 42 குழந்தைகளைக் கடத்தியிருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில் பெரும்பாலோரை அவர்கள் கொன்றிருக்க வேண்டும் என்றும் சந்தேகங்கள் எழுந்தன.
ஆனால், அந்தக் கொலைகள் குறித்த பல வழக்குகளில் போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் காவல்துறையால் வழக்கு தொடர முடியவில்லை. போலீசார் தொடர்ந்த வழக்குகளில் 13 குழந்தை கடத்தல்கள் மற்றும் குறைந்தது 6 கொலைகள் மட்டுமே நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டன.
நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் திரிந்துகொண்டிருந்த, ஆதரவற்ற குழந்தைகளே அவர்களுடைய இரையாக இருந்தனர்.
கடத்தப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் மிகச் சிறியவர்கள். எந்தவொரு ஆயுதமும் இல்லாமல் அவர்களைக் கொலை செய்திருக்க முடியும் என்பதால், கொலைக்கான உபகரணங்களை போலீசார் மீட்க முடியவில்லை.
குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை. அவர்களில் பெரும்பாலான குழந்தைகள் தரையில் மோதி, ஒரு மின் கம்பத்தில் தலையை மோதி, கழுத்தை நெரித்து, மூக்கு மற்றும் வாயை அழுத்துவது உள்ளிட்ட கொடூர செயல்கள் மூலம் கொல்லப்பட்டனர்.
ஒரு குழந்தையை அவர்கள் மிதித்தே கொன்றுவிட்டதாகவும் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் பல குழந்தைகளின் உடல்கள் இத்தனை ஆண்டுகள் கழித்தும் கிடைக்காததால் இதை நிரூபிக்க முடியவில்லை.
கணவரின் இரண்டாவது மனைவியால் வெளிச்சத்திற்கு வந்த கொலைகள்
அஞ்சனாபாய் காவித் இரண்டு முறை திருமணம் செய்துகொண்டார். முதல் கணவரால் போதுமான வசதிகளைப் பெற முடியவில்லை என்ற நிலையில் முன்னாள் ராணுவ வீரர் மோகன் காவித்தை அஞ்சனாபாய் திருமணம் செய்துகொண்டார்.
பின்னர், மோகன் காவித் மீண்டும் ஒரு திருமணம் செய்துகொண்டார். அவரது இரண்டாவது மனைவிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் பெயர் கிராந்தி. இந்த குடும்ப வட்டத்திலிருந்து தப்பிக்க அஞ்சனாபாய் ஒரு திட்டம் தீட்டினார்.
தன் கணவருக்கும், அவருடைய இரண்டாவது மனைவியான சாவதிக்கும் பாடம் புகட்ட, கிராந்தியை ஒழிக்க முடிவெடுத்தார் அஞ்சனாபாய்.
அதன் பின்னர் நாசிக் அருகே உள்ள ஒரு கிராமத்தில் இருந்த வயலில் 9 வயது கிராந்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மோகன் காவித்தின் இரண்டாவது மனைவி தனது மகள் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகார் தொடர்பான விசாரணையில் அஞ்சனாபாயிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
சீமா, ரேணுகா ஆகியோரும் விசாரணைக்காக போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது, போலீசார் தங்களது விசாரணை முறையைக் கையாண்டபோது ரேணுகா முதன்முதலில் வாய் திறந்தார்.
போலீசாரின் விசாரணையின்போது, தாயின் ஆலோசனையின் பேரில் கிராந்தியை தான் கொன்றதாக ரேணுகா ஒப்புக்கொண்டார்.
அஞ்சனாபாய், ரேணுகா, சீமா, கிரண் ஷிண்டே ஆகியோர் கிராந்தியை 19 ஆகஸ்ட் 1995 அன்று பள்ளியிலிருந்து கடத்திச் சென்றனர். இவர்கள் அனைவரும் புனேவில் உள்ள மக்வானா சாலியில் கிராந்தியுடன் மூன்றரை மாதங்கள் தங்கினர்.
பின்னர், 6 டிசம்பர் 1995 அன்று, அவர்கள் அனைவரும் கிராந்தியுடன் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள நர்சோபாச்சி வாடிக்கு வந்தனர். தத் ஜெயந்தியையொட்டி அப்போது அங்கே இருந்த கோவிலில் கூட்டம் அலை மோதியது.
அனைவரும் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தபோது, பக்கத்து வயலில் கிராந்தியை கழுத்தை நெரித்துக் கொன்று, அங்குள்ள ஆற்றங்கரையில் உடலை வீசியதாக சகோதரிகள் வாக்குமூலம் அளித்தனர்.
அவர் அந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வரும்போது, கோலாப்பூரின் சில காணாமல்போன குழந்தைகளின் வழக்குகளும் முடிவுக்கு வந்தன. காவல்துறையின் விசாரணை அதிகாரியான சுஹாஸ் நாட் கௌடா இந்த சம்பவங்களுக்கு இடையிலான தொடர்பை விசாரிப்பதில் சிறப்பாகப் பணியாற்றினார்.
தொடர் கொலைகளாக அரங்கேற்றப்பட்ட பயங்கர குற்றங்கள்
கோலாப்பூரில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சுஹாஸ் நாட் கௌடாவுக்கு நாசிக் போலீசார் அஞ்சனாபாயை கைது செய்தது குறித்த தகவல் கிடைத்தது.
பின்னர் கோலாப்பூரை சேர்ந்த சில குழந்தைகள் காணாமல் போனது தொடர்பாக, அஞ்சனாபாய் மற்றும் அவரது மகள்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ரேணுகாவின் கணவர் கிரண் ஷிண்டேவையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், ரேணுகாவும் அவரும் சேர்ந்து பல குற்றங்களை ஒப்புக்கொண்டனர். இந்தக் குற்றங்களில் குழந்தைகளை மிகவும் கொடூரமாகக் கொலை செய்த விவரங்கள் வெளிவரத் தொடங்கின.
ஆனால், ஆறு ஆண்டுகளில் நடந்த அனைத்து குற்றங்களையும் ஒன்றாகக் கருதி ஆதாரங்களைத் திரட்டி வழக்கை வலுப்படுத்துவது அவ்வளவு சாதாரண வேலையாக இருக்கவில்லை.
போலீசாரிடம் வெறும் வாக்குமூலம் மட்டும் இருந்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த அந்த வாக்குமூலம் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை.
இதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழிடம் பேசிய அப்போதைய போலீஸ் அதிகாரி சுஹாஸ் நாட் கௌடா, "இந்த கொலை விவகாரங்கள் தொடர்பாகப் பல மாவட்டங்களில் இருந்து போலீஸ் குழுக்கள் இணைந்து செயல்படத் தொடங்கின. குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரித்து, கோலாப்பூர் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்தது. அப்போது நான் கோலாப்பூரில் பணியில் இருந்தேன்," என்றார்.
அப்ரூவராக மாறி சாட்சியளித்த ரேணுகாவின் கணவர்
ரேணுகாவும் சீமாவும் நீதிபதியிடம் குற்றங்கள் தொடர்பாக பொய்யான வாக்குமூலம் அளித்தனர். அவர் மீது பொய்யாக போலீசார் குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்ததாக நீதிபதியிடம் தெரிவித்தனர். மேலும், குழந்தை கொலைகள் நடக்கவே இல்லை என்றும் வாதிட்டனர்.
இறுதியாக, பல குற்றங்களில் அவர்களுக்கு உடந்தையாக இருந்த ரேணுகாவின் கணவர் கிரண் ஷிண்டே அப்ரூவராக மாறி சாட்சி அளித்தார்.
இந்த நால்வரும் செய்த கொடூரக் கொலைகள் குறித்த ஒவ்வொரு தகவலையும் நீதிமன்றமும், பொது மக்களும் கிரண் ஷிண்டே அளித்த வாக்குமூலத்தில் இருந்துதான் புரிந்துகொண்டனர். நீதிமன்றத்தில் அவர் அளித்த தகவல்கள் மகாராஷ்டிரா மாநிலத்தையே உலுக்கின.
விசாரணையின் இறுதியில் ரேணுகா ஷிண்டே மற்றும் சீமா காவித் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஏனெனில் அவர்களுடைய குற்றங்கள் மிகவும் அரிதான நிகழ்வுகள் என்பதுடன், உச்சகட்ட கொடூரம் நிறைந்தவையாக இருந்தன. இந்த வழக்கு முதன்முதலில் 1996இல் வெளிச்சத்திற்கு வந்தது. அதன் பிறகு இரண்டு சகோதரிகள், தாய் அஞ்சனாபாய் மற்றும் கிரண் ஷிண்டே ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு முன்பே அஞ்சனாபாய் போலீஸ் காவலில் உயிரிழந்தார். இதனால், ரேணுகா மற்றும் சீமா மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. கிரண் அப்ரூவராக மாறியதால் விடுவிக்கப்பட்டார்.
நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் பிற சாட்சியங்கள் இல்லாததால், குற்றவாளிகளை போலீசார் பிடித்திருந்தாலும், நீதிமன்ற விசாரணையின்போது போலீசார் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது என்கின்றனர் வழக்கு தொடர்பான வழக்கறிஞர்கள். இந்த வழக்கில் 156 சாட்சிகள் கீழ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர்.
"கிராம சகோதரிகளால் கடத்தப்பட்ட அல்லது கொல்லப்பட்ட சில குழந்தைகளின் பெற்றோர்கள் முதலில் வழக்கு வந்தபோது நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராகினர். அவர்கள் நீதிபதியின் முன்பாக வாக்குமூலங்களையும் பதிவு செய்தனர்.
ஆனால் வழக்கு மிகவும் சிக்கலானதாகவும் தாமதமானதாகவும் மாறியதால், அவர்கள் தொடர்ந்து விசாரணைக்கு வரவில்லை," என்று வழக்கறிஞர் மாணிக் முலிக் கூறினார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழிடம் பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கீழமை நீதிமன்றத்தில் காவித் சகோதரிகள் சார்பில் வழக்கறிஞர் முலிக் வாதிட்டார்.
இந்த சீரியல் கொலைகார சகோதரிகளால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் மிகவும் சாதாரண அல்லது ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். தெருக்களில் ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வந்தவர்கள். அதனால் அவர்கள் தரப்பில் வழக்கு தொடர யாரும் இல்லை, அல்லது குழந்தைகளின் பெற்றோரால் பணம் செலவழிக்க முடியவில்லை.
விசாரணையின்போது பொதுமக்கள் மத்தியில் எழுந்த கடும் கோபம்
டெய்லி புத்தாரியின் மூத்த பத்திரிக்கையாளர் மகேஷ் குர்லேகர், கோலாப்பூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை தொடர்பான செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தார்.
இப்படி கொடூரமாக குழந்தைகளைக் கொன்ற இந்த மூவர் மீதும் மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்பட்டது என்றும், அப்போது விசாரணையின் போது நீதிமன்ற வளாகத்தில் கூட்டம் அலை மோதியது என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.
"இந்தப் படுகொலையில் அப்பாவி குழந்தைகள் உயிரிழந்தனர். இதனால் மக்கள் மத்தியில் குறிப்பாக பெண்கள் மத்தியில் பயங்கர கோபம் ஏற்பட்டது. இந்தக் கோபத்தை வெளிப்படுத்த அந்த நேரத்தில் ஏராளமான பெண்கள் நீதிமன்றத்துக்கே நேரில் வந்திருந்தனர்."
"கொடூரமான கொலைகளைச் செய்த இந்த மூன்று பெண்களையும் கடுமையாகத் தாக்கும் மனநிலையில் வந்த பெண்களை உரிய நேரத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்தப் பெண்கள் அனைவரும், கொலை செய்யப்பட்ட குழந்தைகளுக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத பெண்கள் என்பதை நாம் கவனிக்கவேண்டும்," என்று குர்லேகர் பிபிசி மராத்தியுடன் பேசும்போது தெரிவித்தார்.
மூத்த பத்திரிக்கையாளர் உதய் குல்கர்னி கூறும்போது, “இந்த வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்த இந்த குற்றவாளிகளின் முகத்தில் அப்போது எந்த வருத்தமும் காணப்படவில்லை," என்றார்.
அன்று 28 ஜூன் 2001. கோலாப்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் 13 சிறார்களைக் கடத்திச் சென்று அவர்களில் குறைந்தது 6 பேரைக் கொன்றதற்காக ரேணுகா ஷிண்டே மற்றும் சீமா காவித் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்தது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், மும்பை உயர்நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது. ஆனால் 6 குழந்தைகளுக்குப் பதிலாக 5 குழந்தைகளைக் கொன்ற குற்றச்சாட்டுகள் மட்டும் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பில் கூறப்பட்டது.
உச்சநீதிமன்றம் 2006ஆம் ஆண்டில், உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்து மரண தண்டனையை உறுதி செய்தது. பின்னர், வழக்கம் போல், இந்த இரண்டு சகோதரிகளும் கருணை மனுக்களை அனுப்பினர். ஆனால் குடியரசுத் தலைவர் 2014இல் தான் முடிவெடுத்தார்.
அதன்படி, அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கருணை மனுவை நிராகரித்ததால், தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஆனால் கருணை மனுவை பரிசீலிக்கவே ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆனது.
குற்றம் சாட்டப்பட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது.
இந்தத் தாமதம் காரணமாக, தற்போது தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று காவித் சகோதரிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது 2021இல் விசாரிக்கப்பட்டு இறுதியாக ஜனவரி 20, 2022 அன்று மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
காவித் சகோதரிகள் இப்போது புனேவின் எரவாடா சிறையில் தங்கள் வாழ்நாள் முழுவதையும் கழித்து வருகின்றனர். தற்போது ரேணுகாவுக்கு 49 வயது, சீமாவுக்கு 44 வயது.
அவரது தாயார் அஞ்சனாபாய் 50 வயதில் போலீஸ் காவலில் விசாரணை தொடங்கும் முன்பே இறந்தார்.
அரசின் கோப்புகள் நகர்வதில் இருக்கும் ஆமை வேகம் முதல் சிவப்பு நாடா எனப்படும் நடைமுறைகள் வரை, இந்த வழக்கில் தாமதமாக தீர்ப்பளிக்கப்பட்டதற்குப் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
சீமா காவித் 10 அக்டோபர் 2008 அன்றும், ரேணுகா 17 அக்டோபர் 2009 அன்றும் கருணை மனு தாக்கல் செய்தனர்.
பிரணாப் முகர்ஜி அதை நிராகரித்த பிறகு, 2014இல் அவர்கள் இது போன்ற தேவையற்ற தாமதத்தைக் காரணம் காட்டி மரண தண்டனையை ரத்து செய்ய மேல்முறையீடு செய்தனர்.
"ஏழு ஆண்டுகள், 10 மாதங்கள் மற்றும் 15 நாட்கள் தாமதத்திற்குத் தெளிவான காரணம் இல்லாததால், அவர்களது தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது," என்று நீதிமன்றம் கூறியது.
இதுபோன்ற கருணை மனுக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் முடிவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அரசு அதிகாரிகளின் தாமதமான அணுகுமுறை மற்றும் தேவையற்ற காலதாமதம் போன்ற காரணங்களால் கருணை மனு மீதான முடிவும் தேவையில்லாமல் தாமதமானது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
வழக்கம் போல் மாநில அரசு அதிகாரிகளும், மத்திய அரசு அதிகாரிகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டனர். ஆனால் மத்திய அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் மும்பையில் உள்ள அரசு அலுவலகத்தில் நேரிட்ட தீ விபத்து குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தீயில் கருணை மனு குறித்த ஆவணங்கள் எரிந்துவிட்டன என்றும், புதிய ஆவணங்களைத் தயாரிக்க மாநில அரசு கூடுதல் அவகாசம் எடுத்துக்கொண்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.