டைட்டானிக்கை விட 5 மடங்கு பெரிய சொகுசு கப்பல்... கட்டணம் எவ்வளவு தெரியுமா?
17 Jul,2023
கப்பல் பயணம் என்பது பலருக்கும் கனவாகவே இருக்கும். கப்பல் பயணத்தை வளா்ந்து வரும் தொழில்நுட்பம் மேலும் சொகுசாக்கி கொண்டு போகும் நிலையில் அடுத்த ஆண்டு உலகின் மிகப்பொிய கப்பல் அறிமுகமாகவுள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
உலகின் மிக பெரிய கப்பல் ஜனவரி மாதம் பின்லாந்தில் அறிமுகமாக இருக்கிறது. ஐகான் ஆஃப் தி சீஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல், 2024-ல் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தனது முதல் சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளது.
450-க்கும் மேற்பட்ட நிபுணர்களை கொண்டு சத்தம், அதிர்வு உள்ளிட்டவை குறித்து சோதனை நடைபெற்றுவரும் நிலையில் ஐகான் ஆஃப் தி சீஸ், இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டாவது முறை சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்படும்.
இந்த பிரமாண்ட கப்பல் 1,200 அடி நீளமும், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் டன் எடையும் கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கப்பல் புறப்படும்போது, அதில் 2,350 பணியாளர்கள் மற்றும் 7,960 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்யும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
கப்பலில் 6 வகையான நீர் ஸ்லைடு விளையாட்டுகள் இடம் பிடித்துள்ளன. அத்துடன், 9 வகையான நீர் சுழல்கள் மற்றும் 7 நீச்சல் குளங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமன்றி பிரமிக்கவைக்கும் 20 தளங்கள், திரையரங்குகள், தாவர பூங்கா உள்ளிட்ட பல பொழுதுபோக்கு அம்சங்களும் இந்த கப்பலில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த சொகுசு கப்பல், டைட்டானிக் கப்பலை விட 5 மடங்கு பெரியதாக, கனமானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கப்பலில் இடம்பெற்றுள்ள 82 சதவீத அறைகள் மூன்றுக்கும் மேற்பட்டோர் தங்கும் வகையில் உள்ளன. 70 சதவீதத்திற்கும் அதிகமான அறைகள் பால்கனி வசதியுடனே உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் அறைகளின் கேபின்கள் மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு.
கப்பலில் பயணிப்பதற்காக கட்டணம் என்பது, மாறுதலுக்கு உட்பட்டது. குறைந்தபட்சம் இந்திய மதிப்பில் 1.3 லட்சம் செலவிட வேண்டியிருக்கும் என்று கப்பல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.