சாதாரணமாக திருமணமான தம்பதிகள் தமக்கு உரிய காலத்தில் குழந்தைப் பாக்கியம் கிடைக்காவிட்டால் வைத்திய ஆலோசனையின் அடிப்படையில் சிகிச்சை பெற ஆரம்பிக்கின்றனர். ஆரம்பத்தில் எளிமையான வழிமுறைகள் மற்றும் எளிமையான சிகிச்சைகளில் தான் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அதில் வெற்றி பலருக்கு சாத்தியமாகின்றது. ஆனால் சிலருக்கு தொடர்ச்சியான தோல்விகளே ஆரம்ப சிகிச்சைகளில் கிடைக்கின்றன. இதனால் இவர்கள் தமது காலத்தையும் வயதையும் தொடர்ந்து வீணாக்காமல் சரியான தீர்மானத்தையும் தேர்வையும் முடிவு செய்ய வேண்டும்.
எளிமையான சிகிச்சைகளில் வெற்றி கிடைக்காவிட்டால் அதாவது மாத்திரைகள், ஊசிகள் மற்றும் ஐ.யு.ஐ போன்ற சிகிச்சைகளில் தொடர் தோல்வியை சந்தித்து வருபவர்கள் தமது ஆரோக்கியமான காலத்தை வீணடித்து சரியான முடிவுகளை எடுக்கத் தெரியாமல் பலரது அபிப்பிராயங்களையும் விமர்சனங்களையும் கேட்டு தடுமாறுகின்றனர்.
இப்படி அடுத்து என்ன செய்வது?, எங்கு போவது? எவரது ஆலோசனையை கேட்பது? என்று பெறுமதியான காலத்தையும் வயதையும் தொலைத்தவர்களின் நிலை மிகவும் கவலைக்குரியது. ஏனெனில் இவ்வாறு காலம் கடத்துவதால் இறுதிக்கட்ட சிகிச்சையான I.V.F சிகிச்சை கூட சிரமமாகி விடும்.
I.V.F செய்வதற்கும் அதில் சிறந்த வெற்றியை அடைவதற்கும் பெண்ணின் வயது முக்கிய காரணியாக அமைந்துள்ளது. பெண்களின் சூல் முட்டைகளின் சேமிப்பின் அளவு வருடா வருடம் குறைவடையத் தொடங்கும். சூல் முட்டைகளின் வளர்ச்சியும் ஆரோக்கியமும் வீழ்ச்சியடையும்
இதன் மூலம் காலம் கடந்து I.V.F க்கு முயற்சிக்கும்போது அதில் வெற்றி காண்பது சவாலாகி விடுகிறது. இதனால் காலம் கடந்து முடிவுகளை எடுக்காமல் சரியான மருத்துவ ஆலோசனைகளை உரிய காலத்தில் பெற வேண்டும். அப்போதே I.V.F.சிகிச்சையிலும் அதி கூடிய வெற்றியை ஒரே தடவையில் பெற முடியும்.
பெண்களின் வயது கூடும் போது சூல் முட்டைகளின் சேமிப்பு வீழ்ச்சியை எவ்வாறு அறிவது..?
பெண்களின் ஹோர்மோன் இரத்த பரிசோதனையில் A.M.H மற்றும் F.S.H. இன் அளவுகள் முட்டைகளின் சேமிப்பை அறிய உதவும் முக்கிய பரிசோதனைகளாகும். அத்துடன் ஸ்கேன் பரிசோதனையான T.V.S ஸ்கேனிங் மூலம் சூலகத்தின் A.F.C எண்ணிக்கை அறியப்படும். இந்த ஸ்கேன் மாதவிடாய் தொடங்கி இரண்டாம் நாளில் செய்வது வழமை. இதன் மூலம் எத்தனை முட்டைகளை வளரச் செய்ய முடியும் என எதிர்வு கூற முடியும்.
குழந்தைப் பாக்கியத்துக்கான ஆரம்ப சிகிச்சைகள் மற்றும் I.U.F. போன்றன தோல்வியடைந்தால் தொடர்ந்து அவற்றில் காலத்தை விரயமாக்காமல் சரியான கால எல்லையில் அடுத்த கட்ட சிகிச்சைக்கு நகர வேண்டியுள்ளது.
இதனை முடிவு செய்ய தம்பதிகள் தடுமாறுவது வழமை. இது குறித்து சிறந்த விளக்கமும் அனுபவமும் உள்ளவர்கள் சொல்லும் ஆலோசனைகளை கருத்தில் எடுத்தல் நல்லது. ஏனெனில் மேற்படி A.M.H, A.F.C போன்றன குறைவடைந்த பின்னர் I.V.F.சிகிச்சை கூட கேள்விக்குறியாகி விடும். ஆகையால் சரியான கால எல்லையில் இவற்றை முடிவு செய்து சிகிச்சைகளை ஆரம்பிக்க வேண்டும்.
பெண்ணின் வயது கூடி விட்டால் I.V.F சிகிச்சையி்ல் எத்தகைய மாற்றம் உள்ளது
பெண்களின் வயது கூடும் போது நாம் மேற்சொன்ன A.M.H, A.F.C , F.S.H. போன்ற பரிசோதனைகளில் சூல் முட்டையை வளரச் செய்ய முடியுமா அப்படி வளர்ந்தாலும் அவை ஆரோக்கியமாக இருக்குமா என அறிய முடியும். இதன் பெறுபேறுகளை வைத்து சூல் முட்டையை வளரச் செய்ய முடியா விட்டால் இவர்களிடம் அடுத்த வழிமுறையைப் பற்றி கூற வேண்டும். அதாவது சூல் முட்டைகளை தானமாக சூல் முட்டைவங்கியின் சேமிப்பில் இருந்து தேர்வு செய்து I.V.F. சிகிச்சைக்கு செல்ல வேண்டியிருக்கும். இதன் மூலம் சிறந்த வெற்றியை அடைய முடியும்.
இதனை எல்லோரும் விரும்ப மாட்டார்கள் அதனால் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யலாம். எனவே தம்பதிகளின் காலம் முக்கியமானது. காலத்தை வீணடித்து பின்னர் இறுதிக் கட்ட I.V.F. சிகிச்சையிலும் சிரமங்களை எதிர்நோக்காமல் உரிய காலத்தில் ஆரம்ப சிகிச்சைகள் தோல்வியடைந்தால் I.V.F.சிகிச்சை பற்றி தீர்மானிப்போம். இதன் மூலம் உங்கள் சூல் முட்டைகள் சிறப்பாக வளர்ந்து சிறந்த வெற்றி தரும்.