டென்மார்க் அணியை தோற்கடித்து பிரான்ஸ் அபார வெற்றி
27 Nov,2022
2022 ம் ஆண்டுக்கான கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் டென்மார்க் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டென்மார்க் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின.
இரண்டு அணிகளுமே சூப்பர் 16 சுற்றுக்கு தகுதி பெற இந்த போட்டியின் வெற்றி முக்கியமானதாக கருத்தப்பட்ட நிலையில், இரு அணிகளும் இன்று பலப்பரீட்சை செய்தனர்.
முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல்களை அடிக்க கடுமையாக போராடியும் கோல் அடிக்க முடியாததால், ஆட்டத்தின் முதல் பாதி 0-0 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
ஆனால் இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணிக்கு களமிறங்கிய கைலியன் எம்பாப்பே ஆட்டத்தின் 61 வது நிமிடத்தில் தனது முதல் கோலை பிரான்ஸ் அணிக்காக அடித்தார்.
இதனை தொடர்ந்து டென்மார்க் அணியின் கிறிஸ்டென்சன், ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்து மீண்டும் ஆட்டத்தை 1-1 என்ற சமநிலைக்கு கொண்டு வந்தார்.
போட்டி இறுதி நிமிடங்களை நெருங்கி கொண்டு இருந்த போது பிரான்ஸ் அணி வீரர் கைலியன் எம்பாப்பே 86வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலை அடித்து பிரான்ஸ் அணியை வெற்றி பெற செய்தார்.
இறுதியில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
டென்மார்க் அணியை பிரான்ஸ் அணி இன்று வெற்றி பெற்றதன் மூலம் குரூப் டி-யில் சூப்பர் 16 சுற்றுக்கு பிரான்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.
இதையடுத்து சுப்பர் 16 சுற்றுக்கு குரூப் டி பிரிவில் இருந்து தகுதிபெறும் மற்றொரு அணி யார் என்று அடுத்து வரும் டென்மார்க் மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான போட்டி முடிவு செய்யும்.
டென்மார்க் மற்றும் பிரான்ஸ் அணி இடையிலான போட்டியில் இரண்டு கோல்களை அடித்து அணியை வெற்றி பெற செய்த கைலியன் எம்பாப்பே ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.