ரிஷி சுனக் மட்டும் பிரதமராகக் கூடாது. போரிஸ்
17 Jul,2022
சொந்த கட்சியினரின் கடும் அழுத்தம் காரணமாக பிரிட்டன் நாட்டின் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ஜூலை 7ஆம் தேதி ராஜினாமா செய்தார். இந்நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்வதில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இதற்கான கட்சி உறுப்பினர்கள் ஆதரவு திரட்டும் வகையில் உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் என்பவரும் முன்னிலையில் உள்ளார்.
தான் பிரதமரானால் நிதி நிலைமையைச் சரியாக்கும் விதமாக வரிகளைக் குறைத்து, முன்னால் பிரதமர் மார்கரெட் தாட்சர் போல சிறந்த ஆட்சி நடத்துவேன் ரிஷி சுனக் கூறி வருகிறார். இந்நிலையில், பிரதமர் பதவியில் இருந்து விலகி தற்போது காபந்து பிரதமராக உள்ள போரிஸ் ஜான்சன் ரிஷி சுனாக்கிற்கு எதிரான பரப்புரையில் தீவிரமாக ஈடுபடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தான் விட்டுச்செல்லும் பிரதமர் பதவிக்கு ரிஷியை தவிர யார் வேண்டுமானாலும் வரட்டும் என போரிஸ் தனது சொந்த கட்சியினரிடம் கூறி வருவதாக கன்சர்வேட்டிவ் கட்சி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. ஜான்சனின் பதவி பறிபோவதற்கு ரிஷி சுனாக் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். எனவே, ரிஷி சுனக் மீது ஜான்சனுக்கு தனிப்பட்ட முறையில் பூசல் நிலவி வருகிறது.
பிரதமரை தேர்வு செய்வதற்கான உட்கட்சி தேர்தலில் 900 பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் லிஸ் ட்ரஸ் அல்லது பென்னி மோர்டான்ட் ஆகிய இருவரில் ஒருவர் வருவதையே போரிஸ் ஜான்சன் விரும்புகிறார். குறிப்பாக லிஸ் ட்ரஸ் பிரதமர் ஜான்சன்னின் தீவிர விசுவாசியாவார். அதேவேளை, ரிஷி சுனக் தரப்பும் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி வெற்றி பெறுவோம் என நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இந்த உட்கட்சி தேர்தலில், சமமான வாக்குகளை இவர்கள் பெற்றால், அடுத்த வாக்கெடுப்பு வரும் 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 பேரை தேர்வு செய்து, கட்சியைச் சேர்ந்த 2,00,000 பேர் தலைவரைத் தேர்ந்தெடுப்பர். அதனுடைய முடிவு வரும் செப்டெம்பர் 5ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.