ரஷ்யாவின் மிரட்டலுக்கு அடிபணியாத பின்லாந்து; நேட்டோவில் இணைய விருப்பம்
16 May,2022
உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடங்கிய நிலையில், கடந்த சில மாதங்களாகவே இந்த போர் நீடித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதலில், உக்ரைன் மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடான பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கு எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்யா, பின்லாந்துக்கு வழங்கி வந்த மின் சப்ளையை நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவின் மிரட்டலுக்கு அடிபணிய தயாராக இல்லை என்பதை உணர்த்தும் வகையில் நேட்டோ உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிப்பேன் என பின்லாந்து அதிபர் தெரிவித்துள்ளார். பின்லாந்தின் ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ ஞாயிற்றுக்கிழமை இதனை அறிவித்தார்.
பின்லாந்தின் அதிபர் அலுவலகம் மற்றும் அந்நாட்டு நாடாளுமன்றம் உட்பட அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைக் குழுவும் பின்லாந்து ஐரோப்பிய இராணுவக் கூட்டணியில் இணைய வேண்டும் என்று ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிபர் கூறினார்.
"இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள். ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது," என்று அதிபர் சவுலி நினிஸ்டோ உறுதிபடக் கூறினார்.
பின்லாந்து மற்றும் ஸ்வீடனின் வெளியுறவு அமைச்சர்கள் பெர்லினில் பாதுகாப்பு கூட்டணி குறித்து தங்கள் சகாக்களுடன் பேச்சுவார்த்தையில் இணைந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துருக்கி அதிபர் எர்டோகன், முன்னதாக, நேட்டோவில் பின்லாந்து இணைவதற்கு முன்னதாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்த போதிலும், பிரச்சினைக்கு தீர்வுகாண பேசுவதற்கு தயாராக இருப்பதாக தற்போது கூறியுள்ளது.