உடலுறவுக்கு ஒத்துழைத்தால் அதிக மதிப்பெண் - மாணவிகளுக்கு தூண்டில் போட்ட ஆசிரியர்
02 Jan,2022
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் உள்ள யஜ்டா நகரில் ஒரு வணிகவியல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் ஒரு ஆசிரியரின் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது.
அவர் மாணவிகளிடம் நல்ல மதிப்பெண்களை அளிக்க வேண்டும் என்றால் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார் என்று பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பான தகவல்கள் உள்ளூர் ஊடகங்களில் வெளியிடப்பட்டன. இது அந்த நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அந்த ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து மொராக்கோ நாட்டின் கல்வி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கும் ஆசிரியர் ஒழுங்காற்று வாரியத்தின் முன் ஆஜராகும் வரை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்தார்.
மேலும் அந்த கல்வி நிறுவனத்தின் இயக்குனரை ராஜினாமா செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமைச்சகம் விசாரணை தொடங்கி உள்ளது.
மொராக்கோ நாட்டில் சில ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் பல்கலைக்கழகங்களில் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்துவருகிறது.
ஆனால் இதுதொடர்பாக பெரிய அளவில் விசாரணை நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் தற்போது பாலியல் குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் வெளி வந்துள்ளதையடுத்து இவ்விவகாரம் சூடுபிடித்துள்ளது.
அவுட்லாஸ் என்ற இயக்கம் பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சாட்சியங்களை சேகரிக்க ‘மீ டூ’ போன்ற பிரசாரத்தை தொடங்கி உள்ளது.
மொரோகாவில் பாலியல் வன்முறை பரவலாக இருப்பதாக மனித உரிமை குழுக்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பழி வாங்குதல் அல்லது குடும்ப நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் என்ற அச்சத்தில் பெண்கள் புகார் அளிக்க தயங்குகிறார்கள் என்று தெரிவித்தனர்.