நிலவில் மர்ம பொருள்: சீன 'ரோவர்' கண்டுபிடிப்பு
07 Dec,2021
நிலவில் ஆய்வு செய்து வரும் சீனாவின் 'யுடு - 2 ரோவர்' மர்மமான பொருளை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
நம் அண்டை நாடான சீனா, 2019ல் 'லாங் மார்ச் - 3பி' ராக்கெட் வாயிலாக 'சாங்கி - 4' என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. அதில் இருந்து 'யுடு - 2' என்ற ரோவர், நிலவில் இறங்கி படமெடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
இது குறித்து பத்திரிகையாளர் ஆண்ட்ரூ ஜோன்ஸ் கூறியதாவது: வோன் கர்மன் பாறைப் பகுதியில் இருந்து 80 கி.மீ., துாரத்தில் யுடு - 2 படம் எடுத்து அனுப்பி வருகிறது. அதில் அறுங்கோண வடிவில் மர்மமான பொருள் காணப்படுகிறது.அனுப்பிய படத்தில் இருந்து அப்பொருளை துல்லியமாக கணிப்பது கடினமாக உள்ளது.
சில சமயம் பெரிய கற்பாறைகள் கூட பலவித தாக்கத்தால் அதுபோன்ற வடிவில் இருக்கக் கூடும். யுடு - 2 இன்னும் நெருக்கமாகச் செல்லும் போது அந்த மர்ம பொருள் என்னவென்பது தெரிந்து விடும். ஏற்கனவே ஒரு கற்பாறையின் அடியில் பிசின் போன்ற பொருளை யுடு - 2 படமெடுத்து அனுப்பியது. அதை ஆராய்ந்து பார்த்ததில் அது கல் என தெரியவந்தது. அதுபோல இந்த மர்ம பொருளுக்கான விடை விரைவில் தெரியவரும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்