'விர்ஜின் கேலக்டிக்ஸ்' நிறுவனத்தின் விண்வெளி சுற்றுலா திட்டத்தின் கீழ், அந்நிறுவன அதிபர் ரிச்சர்ட் பிரான்சன் தலைமையிலான குழுவினர், நேற்று விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனைச் சேர்ந்த தொழில் அதிபர் ரிச்சர்ட் பிரான்சன், 70. பொழுதுபோக்கு, நிதி சேவைகள் உட்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் இவர், சாமானியர்களையும் விண்வெளிக்கு அழைத்து செல்லும், விண்வெளி சுற்றுலா திட்டத்திற்காக, 'விர்ஜின் கேலக்டிக்ஸ்' என்ற நிறுவனத்தை, 2004ல் துவங்கினார்.விண்வெளி பயணம் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் முயற்சிகளில், 17 ஆண்டுகளாக இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.கடந்த 2018, 2019 மற்றும் 2020ல் மூன்று முறை விண்வெளி பயணத்தின் சோதனை ஓட்டத்தை, இந்நிறுவனம் நடத்தியது.
இதையடுத்து, பயணியரை விண்வெளிக்கு அழைத்து செல்ல, அமெரிக்க விமான போக்குவரத்து நிறுவனம் கடந்த மாதம் அனுமதி அளித்தது. தன் குழுவினருடனான முதல் பயணத்தை, ஜூலை 11ல் மேற்கொள்ள ரிச்சர்ட் பிரான்சன் திட்டமிட்டார்.இதன்படி, அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள, இந்நிறுவனத்துக்கு சொந்தமான, 'ஸ்பேஸ் போர்ட்' விண்வெளி தளத்திலிருந்து, இரட்டை இயந்திரம் பொருத்தப்பட்ட பிரமாண்ட விமானம், நேற்று புறப்பட்டது. இந்த விமானத்துடன் இணைக்கப்பட்டு இருந்த, 'யூனிட்டி - 22' என்ற விண்வெளி ராக்கெட்டில், ரிச்சர்ட் பிரான்சன் உட்பட ஆறு பேர் பயணம் செய்தனர். இதில், அந்நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, சிரிஷா பண்ட்லாவும் குழுவில் இடம்பெற்றார்.
விமானம், 44 ஆயிரம் அடி உயரத்தை அடைந்ததும், யூனிட்டி - 22 ராக்கெட் தனியாக பிரிந்து, விண்வெளியை நோக்கி பயணித்தது. இந்த காட்சிகள் இணையதளங்களில் நேரலையில் ஒளிபரப்பாகின.புவி ஈர்ப்பு பாதையை கடந்து விண்வெளியை அடைந்ததும், உடல் எடையற்ற தன்மையை பயணியர் உணர்ந்தனர். அதன் பின், 4 - 5 நிமிடங்கள் பயணித்து, விண்வெளியில் இருந்து பூமியின் அழகிய தோற்றத்தை கண்டு களித்த பின், பயணியர் மீண்டும் பாதுகாப்பாக தரை இறங்கினர். 'இந்த விண்வெளி சுற்றுலாவின் மொத்த கால அளவு, 90 நிமிடங்கள்' என, கூறப்பட்டுள்ளது.அடுத்தகட்ட விண்வெளி சுற்றுலாவுக்கு, 600க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
இப்போதைக்கு ஒரு நபருக்கு, 2 கோடி ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த பயணங்களில் இந்த கட்டணம் கணிசமாக குறைக்கப்படும் என தெரிகிறது. இது குறித்து ரிச்சர்ட் பிரான்சன், ''இந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். எங்கள் நிறுவனத்தின், 17 ஆண்டு உழைப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது.''இதற்காக எனக்கு ஆதரவு அளித்த, என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன்,'' என, நெகிழ்ச்சியுடன் கூறினார்.இதற்கிடையே, 'அமேசான்' நிறுவன அதிபர் ஜெப் பெஸாசின், 'புளூ ஆரிஜின்' நிறுவனத்தின் முதல் விண்வெளி பயணம், வரும், 20ம் தேதி நடைபெறுகிறது. இதில், தன் குழுவினருடன் ஜெப் பெஸாஸ் பயணம் மேற்கொள்கிறார்.