குடும்ப தகராறில், மனைவியை கத்தியால் குத்தி, காரை மேலே ஏற்றி கொலை செய்த கொடூர கணவர், சாலை விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழியில் வசிப்பவர் கோகுல்குமார், 36; தனியார் மருத்துவமனை மருத்துவர். இவரது மனைவி கீர்த்தனா, 33; தனியார் நிறுவன மேலாளர். இவர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது; குழந்தை இல்லை.தம்பதி இடையே, இரு ஆண்டுகளாக, குடும்ப தகராறு இருந்துள்ளது. தவிர, கொரோனா தொற்று பரவல் காரணமாக, கோகுல்குமார் பணிக்கு செல்லவில்லை.
இதனால், விவாகரத்து கேட்டு, மதுராந்தகம் நீதிமன்றத்தில், ஆறு மாதங்களுக்கு முன், இருவரும் வழக்கு தொடர்ந்தனர்; வழக்கு விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில், மதுராந்தகம், ஆனந்த் நகரில் வசிக்கும், மாமனார் முஹாரி, 70, வீட்டுக்கு, நேற்று மதியம் சென்ற கோகுல்குமார், அங்கிருந்த மனைவி கீர்த்தனாவிடம் பேசியுள்ளார். அப்போதும், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த கோகுல்குமார், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து, கீர்த்தனாவின் கழுத்தில் குத்தினார். தடுக்க வந்த முஹாரியின் வயிறு, மார்பு பகுதியிலும், மாமியார் குமாரியின் கைகளிலும், கண்மூடித்தனமாக குத்தினார்.தொடர்ந்து, மனைவியின் முடியை பிடித்து, அவரை வெளியே இழுத்து வந்து, சாலையில் கிடத்தினார். பின், அங்கு நிறுத்திஇருந்த தன் காரை எடுத்து, கீர்த்தனாவின் மீது ஏற்றி, தப்பிச்சென்றார்.
தகவலறிந்து வந்த மதுராந்தகம் போலீசார், இறந்து கிடந்த கீர்த்தனாவின் சடலத்தை மீட்டு, முஹாரி, குமாரியை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்நிலையில், மாலை, 5:30 மணிக்கு கோகுல்குமார் சென்ற கார், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அச்சிறுப்பாக்கம் அருகே, கட்டுப் பாடை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், கோகுல்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அச்சிறுப்பாக்கம் போலீசார், அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். கீர்த்தனா கொலை சம்பந்தமாக, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கோகுல்குமாரின் அண்ணன் தினேஷ், மாமனார் முஹாரியின் பெரிய பெண்ணை திருமணம் செய்துள்ளார்.