6 பேர் கைது... 25கிலோ தங்கம் மீட்பு... 24 மணிநேரத்தில் போலீஸ் அதிரடி வேட்டை.
23 Jan,2021
.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ளது முத்தூட் பைனான்ஸ் நிறுவனம். நகைகளை வாங்கி அடமானம் வைத்து, நிதியளிக்கும் நிறுவனமாக செயல்பட்டுவருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் நேற்று காலையில் திடீரென முகமூடி அணிந்தபடி வந்த துப்பாக்கியுடன் ஆறு பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. வெளியே நின்ற காவலரை துப்பாக்கி முனையில் பிடித்துவைத்துக்கொண்டு கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி 25 கிலோ தங்க நகைகள் 96 ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். நகரின் முக்கியமான பகுதியில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். இந்தச் சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடினர். ஜி.பி.எஸ் உதவியுடன் கொள்ளையர்களைத் தேடிய தனிப்படை போலீசார், ஹைதராபாத் பகுதியில் சம்சாத்பூர் என்ற இடத்தில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் 6 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் என தெரியவந்துள்ளது. மேலும் இவர்களிடம் இருந்து 7 துப்பாக்கிகள், 2 கத்திகள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 11 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.