ஈரானால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேனின் பயணிகள் விமானத்தை, முதல் ஏவுகணை தாக்கிய பிறகும், விமானிகளுக்கு இடையே 19 வினாடிகள் உரையாடல்கள் நீடித்ததாக ஈரானின் விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.
ஈரான் விமானப் போக்குவரத்து அமைப்பின் தலைவர் கேப்டன் சங்கானே இதுகுறித்து கூறுகையில், ‘முதல் ஏவுகணை விமானத்தை தாக்கிய பின்னும் 19 வினாடிகள் வரை இரண்டு விமானிகள் மற்றும் அவர்களின் வழிகாட்டி ஆகியோரிடையே உரையாடல் நடந்தது.
அதற்கு 25 வினாடிகளுக்கு பிறகு இரண்டாவது ஏவுகணை விமானத்தைத் தாக்கியது அவர்கள் கடைசி வினாடிகள் வரை விமானத்தை இயக்கி வந்துள்ளனர்.
19 வினாடிகளுக்கு பிறகு இந்தப்பதிவு நின்றுவிட்டது. அந்த சமயத்தில் பயணிகள் பகுதியிலிருந்து எந்த ஒலியும் பதிவாகவில்லை’ என கூறினார்.
எனினும், இவர்களுக்கு இடைடேய இடம்பெற்ற உரையாடல் குறித்த விபரங்களை சங்கானே தெரிவிக்க மறுத்துவிட்டார்.
கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி, ஈரான் தலைநகர் டெஹ்ரானிலுள்ள விமான நிலையத்திலிருந்து கனடாவில் ரொறன்ரோவுக்கு புறப்பட்ட உக்ரேன் இன்டர்நேஷனல் ஏயார்லைன்ஸுக்குச் சொந்தமான பயணிகள் விமானம், விமான நிலையத்துக்கு 45 கி.மீ. தொலைவில் விழுந்து நொறுங்கியது.
இதில், விமானத்திலிருந்த 176 பேரும் உயிரிழந்தனர். அவர்களில் 82 பேர் ஈரானியர்கள் கனடா நாட்டைச் சேர்ந்த 63 பேர் அவர்களில் பெரும்பாலானவர்கள் ஈரானைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் ஆவர்.
இந்த விமான விபத்துக்கு இயந்திரக் கோளாறுதான் காரணம் என்று விபத்து நடந்த போது கூறி வந்த ஈரான், 3 நாட்களுக்குப் பிறகு, தவறுதலாக உக்ரேன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உண்மையை ஒப்புக் கொண்டு விசாரணையைத் தொடங்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்ட ஆரம்ப அறிக்கையில், ‘ஜனவரி 8ஆம் திகதி உள்ளூர் நேரப்படி 06:12 மணிக்கு தெஹ்ரானின் இமாம் காமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பின்னர், உக்ரைன் விமானம் சுமார் 8,100 அடியில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் இருந்த அனைத்து தொடர்புகளையும் இழந்தது.
வடக்கிலிருந்து, போயிங் 737-800 விமானத்தின் மீது இரண்டு டோர்-எம் 1 (தரை முதல் வான்வழி) ஏவுகணைகள் வீசப்பட்டன’ என தெரிவிக்கப்பட்டது.
இதற்கமைய கடந்த 8ஆம் திகதி உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அந்த விமானத்தின் மீது இரு டார்-எம்1 ரக ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிய வந்தது. ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய போதே இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமை உறுதிசெய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அத்துடன், இந்த விபத்தின் போது கண்டெடுக்கப்பட்ட கருப்பு பெட்டிகளை பிரான்சுக்கு அனுப்பி ஆய்வுக்கு உட்படுத்துமாறு கனடா வலிறுத்தியது.
ஆனால், அதனை ஈரான் உள்நாட்டிலே ஆய்வுக்கு உட்படுத்துவதாக கூறியது. எனினும் இதனை ஏற்க மறுத்த கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ஈரான் தகவல்களை அழிக்க முற்படும் அச்சம் வெளியிட்டன.
இதனையடுத்து, தரவுகளை அணுகுவது தொடர்பாக கனடா, உக்ரேன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடனான ஒரு நீண்ட மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ஈரான் ஜூன் மாதத்தில் கருப்பு பெட்டிகளை சிவில் விமானப் பாதுகாப்புக்கான விசாரணை மற்றும் பகுப்பாய்வு பணியகத்துக்கு அனுப்ப ஒப்புக்கொண்டது.
அண்மையில், மோசமான இராணுவ தகவல் பரிமாற்றத்தினாலேயே, ஈரானில் உக்ரேனின் பயணிகள் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் விமான போக்குவரத்து அமைப்பு ஒப்புக்கொண்டது. இதன்பின்னணியில் கடந்த ஜூலை மாதம் பிரான்ஸிடம் கருப்பு பெட்டி ஒப்படைக்கப்பட்டது