தோல்வி என்பது முடிவல்ல...

10 Aug,2020
 

 
 
மிகவும் பதட்டமாக இருந்தார், பெருமாள். காரணம், அன்றைக்கு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக இருந்தன.
இந்த ஆண்டு, அவருடைய மகன், நவீன்குமாரும், பிளஸ் 2 தேர்வு எழுதி இருந்தான். அவன், ௧௦ம் வகுப்பில் தேர்ச்சி அடைந்ததே, பெரிய சாதனை. பிளஸ் 2வில் பெயிலாகி விடுவானோ என்று பயமாக இருந்தது, பெருமாளுக்கு.
ஆனால், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வதற்கு எந்த ஆர்வமும் காட்டாமல், அவனுக்கு முன் இருந்த மடிக் கணினியில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தான், நவீன்.
'நீங்க, அவனுக்கு ஓவரா செல்லங் குடுத்துத்தான் அவன் கெட்டுக் குட்டிச் சுவராகிக் கொண்டிருக்கிறான். எது கேட்டாலும் வாங்கிக் குடுத்தே அவனைக் கெடுத்துட்டீங்க...' என்று, எப்போதும், கடிந்து கொள்வாள், மனைவி சரோஜா.
'பரவாயில்லம்மா; சின்னப் பையன் தானே. கொஞ்ச நாள் போனா, அவனுக்கே படிப்புல அக்கறை வந்துடும்...' என்று, மனைவியை சமாதானப்படுத்துவார், பெருமாள்.
 
தனியார் கம்பெனியில், சிவில் இன்ஜினியராக இருக்கிறார், பெருமாள். காலையில், 7:00 மணிக்கு வீட்டிலிருந்து வேலைக்கு கிளம்பினால், இரவு, 9:00 மணிக்கு மேல் தான் திரும்புவார். சில சமயங்களில் ஞாயிற்றுக் கிழமையும் வேலைக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம்.
அவர் மனைவி, எல்.ஐ.சி.,யில் அதிகாரியாக இருக்கிறாள். அவள் தான் மகனைக் கவனித்துக் கொள்கிறாள். அப்பா செல்லம் அதிகம் என்பதால், எவ்வளவு முயன்றும் அவளால், மகனை வழிக்குக் கொண்டு வரவே முடியவில்லை.
படிப்பு விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே மிகவும் அசட்டையாகவே இருக்கிறான், நவீன்குமார். காரணம், அவன் பாட்டி; பெருமாளின் அம்மா.
பெருமாளுக்கும் - சரோஜாவிற்கும் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல், மிகவும் காலதாமதமாக பிறந்தான், நவீன்குமார். இருவரும் வேலைக்குப் போய்க் கொண்டிருந்ததால், பெருமாளின் அம்மா தான் கிராமத்திலிருந்து வந்து, அவனை வளர்த்தாள்.
கிராமத்தில் நிலம், மாடு என்று நிறைய இருந்ததால், அவற்றைப் பராமரிக்க, அவள் கிராமத்தில் இருக்க வேண்டி இருந்தது. அதனால், அவளும் தொடர்ந்து சென்னையில் இருக்க முடியாமல், நவீன்குமாரை கிராமத்திற்கே அழைத்து போய் விட்டாள்.
கிராமத்துப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு வரை படித்தான், நவீன்குமார். அவன் படிப்பில் மிகவும் பின்தங்கி இருப்பதைக் கவனித்து, ஒருமுறை, மகனை கண்டித்தாள், சரோஜா.
'அவன் படிக்கிற வரைக்கும் படிக்கட்டும்; சும்மா புள்ளைய திட்டிக்கிட்டு இருக்காத...' என்றார், பெருமாளின் அம்மா.
கிராமத்தில் தொடர்ந்து இருந்தால், பையன் ஒன்றுக்கும் ஆகாமல் போய் விடுவான் என்று, அவனை, சென்னைக்கே அழைத்து வந்து விட்டாள்.
ஒரு தனியார் பள்ளியில், புது மாணவர்களை, பிரி.கே.ஜி.,யில் மட்டுமே சேர்த்துக் கொள்வர். பெருந்தொகையை, 'டொனேஷனா'கக் கொடுத்து, 6ம் வகுப்பில் சேர்த்து விட்டனர். தனியார் பள்ளியிலும் பெரிதாய் சோபிக்கவில்லை, நவீன்குமார்.
அவன், 9ம் வகுப்பு முடித்ததும், 'உங்க பையனுக்கு பாஸ்ன்னு போட்டு 'டீசி' குடுத்துடுறோம். வேற எங்கேயாவது அழைத்து போய் சேர்த்துக்குங்க...' என்றார், பிரின்சிபால்.
விசாரிதததில், 'உங்க பையன், ௧௦ம் வகுப்பில், கண்டிப்பாக பெயில் ஆயிடுவான். எங்க ஸ்கூல்ல எப்பவுமே, 100 சதவீதம் தேர்ச்சி காண்பிக்குறது. உங்க பையனால பாதிப்புக்கு உள்ளாகிடும்...' என்று, காரணம் கூறினர்.
மிகவும் கெஞ்சிய பின்பு, நவீன்குமார், அதே பள்ளியில் தொடர்ந்து படிக்கலாம். ஆனால், பரீட்சை மட்டும் அவர்களுடைய பள்ளியின் ரோலில் வராமல் பிரைவேட்டாக எழுதுவது போல், ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
ஆனால், ஆச்சரியமாக, ௧௦ம் வகுப்பில், சுமாரான மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்தான், நவீன்குமார். அதே பள்ளியில், பிளஸ் 2வில் சேர்த்தனர். எப்போதும், 'லேப் - டாப்'பில் ஏதாவது செய்து கொண்டும், வீட்டின் மொட்டை மாடியில் அவன் வளர்க்கும் செடி கொடிகளை பராமரிப்பதிலும், மூழ்கி இருந்தான்; படிப்பில் பெரிதாய் ஆர்வம் காண்பிக்கவில்லை.
ஒவ்வொரு விடுமுறைக்கும், பாட்டி வீட்டிற்கு சென்று, அவளுடனேயே காடு, தோட்டம் என்று அலைந்து கொண்டிருந்ததாலும், செடி, கொடிகள் வளர்ப்பதில், அவனுக்கு ஆர்வம் இருந்தது.
அவனிடம் இருந்த விவசாயம் பற்றிய புரிதல்களிலிருந்து, வீட்டின் மொட்டை மாடியில் தோட்டம் அமைத்து, வீட்டிற்குத் தேவையான காய்கறிகளை விளைவித்துக் கொடுத்தான்.
ஒருமுறை, மகனிடம், 'ஏண்டா, எப்பப் பார்த்தாலும் இந்த கம்யூட்டரையே கட்டிக்கிட்டு, அதுலயே விளையாண்டுக்கிட்டு இருக்குற...' என்று கடிந்து கொண்டார், பெருமாள்.
'அதுல, 'கேம்ஸ்' ஆடலப்பா; விவசாயம் பண்றதுக்கு ஒரு, 'புரோகிராம்' பண்றேன். விவசாயம் பற்றிய நுணுக்கமான விவரங்கள் அனைத்தையும் கணினியில் பதிந்து, அதன் மூலம், விவசாய வேலைகளை கண்காணிக்கிற, 'சாப்ட்வேரை' உருவாக்க முயற்சிக்கிறேன்.
'மழை, வெயிலின் அளவு, காற்றின் ஈரப்பதம் அறிந்து, எந்த நேரத்தில் விதைக்கலாம், எப்போது, என்ன மாதிரியான, எந்த அளவில் உரமிடலாம், எப்போது களை பறிக்கலாம், எப்போது அறுவடை செய்யலாம் என்றெல்லாம் கணினியே விவசாயிகளுக்கு அறிவுறுத்தும்.
'மண் பரிசோதனை முடிவுகளின்படி, என்ன பயிரை வளர்க்கலாம், வளரும் பயிர்களில் புழு வெட்டு மாதிரி ஏதும் பிரச்னை வந்தால், அவற்றிலிருந்து பயிர்களை பாதுகாப்பது எப்படிங்கிற விபரங்கள் அனைத்தும், அதில் உள்ளீடு செய்யப்பட்டிருக்கிறது.
'இதை வைத்திருக்கிற விவசாயி, விதை துாவியபின் அந்த விபரத்தை மட்டும் அதற்கான பாக்சில் கொடுத்து விட்டால், அவரை கணினியே வழி நடத்தும்படி, 'சாப்ட்வேரை' உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்...' என்றான், நவீன்குமார்.
அவன் பேசிய பல விவரங்கள், பெருமாளுக்கு புரியவே இல்லை.
 
மொபைல் போனில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் இணைய தளத்திற்கு போய், நவீன்குமாரின் விவரங்களை தேட, ஊதா நிற வளையம் வேகவேகமாக சுற்றத் துவங்கியது. பெருமாளின் இதயம், அதைவிடவும் வேகமாகத் துடிக்கத் துவங்கியது.
பத்தாம் வகுப்பில், அதிசயமாக பாஸாகி விட்டதைப் போன்ற அற்புதம், இப்போதும் நிகழ்ந்து விடாதா என்கிற நப்பாசையுடன், அலைபேசியின் ஊதா நிற வளையம் சுற்றி நிற்க காத்திருந்தார்.
பெருமாளின் கிராமத்திலிருந்த பள்ளிக்கு, 6ம் வகுப்பில் சேர வந்தான், அவரது பால்ய நண்பன், பாண்டியன். அதுவரை வகுப்பில் எப்போதும் முதல் மாணவனாக கோலோச்சிக் கொண்டிருந்த, பெருமாளை ஓரம் கட்டி, அந்த இடத்தை மிக எளிதாக பிடித்துக் கொண்டான்.
ஆரம்பத்தில் எதிரியாக பாவித்து, அவனுடன் படிப்பில் போட்டி போட்டுக் கொண்டிருந்தார், பெருமாள். என்ன தான் குட்டிக் கரணம் போட்டாலும், அவனுக்கு அருகில் தன்னால் நெருங்க முடியாது என்கிற நிதர்சனம் புரிந்ததும், சிநேகிதமாய் பழகத் துவங்கி, அவனிடமிருந்தே பாடங்களைக் கற்றுக் கொள்ள துவங்கினார்.
பாண்டியனிடம் எப்போதும் விதவிதமான தீப்பெட்டி படங்களும், தனித் தனி சினிமா பிலிம்களும் நிறைய இருக்கும். அவற்றை வைத்து, அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை வீட்டிற்கு வரவழைத்து, நிறைய வேடிக்கைகள் நிகழ்த்திக் காட்டுவான்.
'பியுஷ்' போன குண்டு பல்பின் தலை பகுதியை லேசாய் உடைத்து, உள்ளே இருப்பவற்றை நீக்கி, பல்பில் தண்ணீர் ஊற்றி சூரிய ஒளியை கண்ணாடி மூலம், வீட்டுக் கதவின் சாவி துவாரத்தின் வழியாக அதன் மீது விழச் செய்வான்.
அவனிடமிருக்கும் பிலிமை அதற்கு முன் காட்ட, சுவற்றில் கட்டப்பட்டிருக்கும் வெள்ளை வேட்டியின் மீது, பெரிது படுத்தப்பட்ட சினிமாவாகத் தெரியும். எல்லாருக்கும் ஆச்சர்யமாக இருக்கும்.
 
ஒன்பதாம் வகுப்பிலிருந்து, பெருமாளும், பாண்டியனும் பக்கத்து கிராமமான, குல்லுார் சந்தைக்கு படிக்க சென்றனர். அங்கும் பாண்டியனே, முதல் மாணவனாக வந்தான். ஆனால், எஸ்.எஸ்.எல்.சி., முடிவு, தின பத்திரிகைகளில் வந்த போது, தேர்ச்சி அடைந்தவர்களின் பட்டியலில், பாண்டியனின் நம்பர் இல்லை.
எப்படியும் பெயிலாகி விடுவோம் என்று பயந்து, ஊரிலிருந்து ஓடிப்போய் விட்டிருந்த மூக்கொழுகி மூக்காண்டி கூட பாஸாகி இருந்தான். ஆனால், பாண்டியனின் நம்பர், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் இல்லை.
பாண்டியன் பெயிலாவதாவது, எங்கோ, ஏதோ பிசகு நடந்திருக்கிறது என்று, அனைவருக்கும் நிச்சயமாக தெரிந்தது. ஆனால், பாண்டியனை தான் யாராலும் சமாதானப்படுத்தவே முடியவில்லை.
அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே, அடுத்த நாள் தினசரிகளில், 'தேர்ச்சி அடைந்து, முந்தின நாள் விடுபட்டு போனவர்கள்...' என்று வருத்தம் தெரிவித்து, சில நம்பர்களை வெளியிட்டிருந்தனர்.
அதில், பாண்டியனின் நம்பர் இருந்தது. ஆனால், அதைத் தெரிந்து கொள்வதற்கு, உயிரோடு இல்லை.
'ரிசல்ட்' வந்த இரவே, தோட்டத்திற்குப் போய் அங்கு வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து, அங்கிருந்த மோட்டார் அறையில் நிரந்தரமாய் துாங்கி விட்டான்.
பாண்டியனை பற்றி நினைத்ததுமே, பெருமாளுக்கு, கண்ணீர் முட்டி, விழிகளில் திரையிட்டது.
சுந்தர ராமசாமி, தன், ஜே.ஜே.குறிப்புகள் எனும் நாவலில், 'மேதைமைக்கும் சிறு வயது மரணங்களுக்கும் அப்படி என்ன தான் சம்பந்தமோ...' என்று விசனப்பட்டிருப்பார்.
பாண்டியனும் அப்படி ஒரு பெரிய மேதையாக மலர்ந்திருக்க வேண்டியவன். ஆனால், அற்பக் காரணத்தால், அகாலத்தில் தன் உயிரை மாய்த்துக் கொள்ள நேர்ந்து விட்டது.
 
சுற்றிக் கொண்டிருந்த நீலவளையம் நின்றதும், தேர்வு முடிவுகள் அலைபேசியின் சின்னத் திரையில் விரிந்தது. கணிதத்திலும், இயற்பியலிலும், பெயிலாகி இருந்தான், நவீன்குமார்.
கண்கள் இருண்டு மயக்கம் வரும் போலிருந்தது, பெருமாளுக்கு.
கொஞ்ச துாரத்தில் அவன் கணினியில் மூழ்கியிருந்தான். பெருமாளின் மனதுக்குள் அடுத்த பிரச்னை தலை துாக்கியது. பெயிலாகி விட்டோம் என்று தெரிந்தால், அவன், விபரீதமாக ஏதும் செய்து கொண்டால் என்ன செய்வது என்று பதறத் துவங்கினார்.
அவன் மனதை நோகடித்து விடாமல் தேர்வு முடிவுகளை சாமர்த்தியமாய் தெரிவிப்பது என்று, தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்த போது, 'சக்ஸஸ்... சக்ஸஸ்...' என்று சந்தோஷமாய்க் குரல் எழுப்பினான், நவீன்.
''என்னாச்சுப்பா...'' என்றார், பெருமாள்.
''நான் சொல்லிக்கிட்டு இருந்தேன்ல்ல, விவசாயம் சம்பந்தமான, 'சாப்ட்வேர் புரோகிராம்' பண்றதா... அது வெற்றிகரமா முடிஞ்சுருச்சுப்பா... இதை ஏதாவது ஒரு கம்பெனியில குடுத்து மார்க்கெட் பண்ணனும்ப்பா.
''இதை வாங்குற என்னைப் போன்ற இளைஞர்களுக்கு எல்லாம் விவசாயம் பண்ணி பார்க்கலாம்ன்னு ஒரு ஆர்வம் வரும்ப்பா,'' என்றவன், திடீரன்று, ''என்னப்பா பெயில் ஆயிட்டேனா?'' என்றான்.
துக்கம் பொங்கும் முகத்துடன், பெருமாள் தலை அசைக்கவும், ''விடுப்பா; ஒரு பரீட்சையில தேறலைன்னா எல்லாமே முடிஞ்சு போச்சா என்ன... தோல்விங்கிறது எப்பவுமே வாழ்க்கையோட முடிவு இல்லப்பா. அதுவும் ஒரு நிகழ்வு; அவ்வளவு தான்.
''அதைக் கொஞ்சம் கவனமா கடந்து வந்துட்டோம்ன்னா, அது, நம்மள பெரிசா பாதிக்காது. நீ கவலைப்படாதப்பா; கொஞ்ச நாள்ல, 'இப்ரூமெண்ட் எக்ஸாம்' வைப்பாங்க. அதுல எழுதி, கண்டிப்பா பாசாகிடுவேன்,'' என்றான், நம்பிக்கையாக.
அப்போது பெருமாளின் கண்களுக்கு, அப்பன் சிவனுக்கே பாடம் சொன்ன முருகப் பெருமானாக தெரிந்தான், மகன் நவீன்குமார்.
அவனை அணைத்துக் கொண்டார், கண்ணீர் மல்க.
 
ராஜ்Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம்india

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Kommende Film danmark

Tamilnews.cc-facebook

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Kashmir Tour 09N in- 3* Hotel

Maldives Special

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies