கொரோனாவால் பெல்ஜியத்தில் ஏன் இத்தனை மரணங்கள்?
22 Apr,2020
உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்புக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் மிக மோசமாக இருக்கின்றது. அதிக தொற்றாளர்கள் உள்ள கண்டமாக ஐரோப்பா விளங்குகின்றது.
உயிரிழப்புக்களையும், தொற்றாளர்களையும் பொறுத்தவரையில் அமெரிக்கா ‘எண்ணிக்கை’யின் அடிப்படையில் முதலிடத்தில் இருந்தாலும், சனத்தொகைக்கு ஏற்ப இறப்பு வீதத்தைப் பார்க்கும்போது பெல்ஜியம் முதலிடத்தில் உள்ளது.
ஏறக்குறைய 11.5 மில்லியன் மக்கள் வசிக்கும் பெல்ஜியத்தில் ஒரு மில்லியன் மக்களுக்கு 518 பேர் உயிரிழந்துள்ளனர். ஏன் அங்கு இந்த நிலைமை ஏற்பட்டது? என்பதே இப்பொழுது கேள்வியாக உள்ளது.
பெல்ஜியத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 828 ஆக உயர்வடைந்துள்ளது. இதில் 47 சதவீதமான உயிரிழப்புக்கள் வைத்தியசாலைகளிலும், 52 சதவீதமான இறப்புக்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்களுக்குமே நிகழ்ந்துள்ளது.
அதிலும், வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்களில் 96 சதவீதமானவர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்படாமல், சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டவர்களேயாவர்.
பெல்ஜியத்தையும் விட தீவிரமாகவும், அதிக உயிரிழப்புக்களையும் ஏற்படுத்திய இத்தாலி மற்றும் ஸ்பெயினில், ஒரு லட்சம் மக்களுக்கு உயிரிழந்தவர்களின் விகிதம் குறைவாகவே உள்ளது.
பெல்ஜியத்தில் ஒரு லட்சம் மக்களுக்கு உயிரிழப்புக்களின் விகிதம் 49.75 ஆகவும், ஸ்பெயினில் 43.77 ஆகவும், இத்தாலியில் 39.15 ஆகவும் காணப்படுகின்றது.
ஆனால், உயிரிழப்புக்கள் தொடர்பில் தாங்கள் சரியான தரவுகளை வெளிப்படுத்திவருவதாக பெல்ஜியத்தின் பொதுச்சுகாதார அமைச்சர் மக்கி டி ப்ளொக் (Maggie De Block) எல்.என்.24 என்ற தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.
இதேபோலவே, தாங்கள் எந்தவொரு ஒளிவுமறைவும் இல்லாமல் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்திவருவதாக பெல்ஜியம் பிரதமர் சோஃபி வில்மெஸ் (Sophie Wilmழூs) தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் குறித்து வைரஸ் தொற்றுநோயியல் நிபுணர் வன் குச்ட் (Van Gucht) தெரிவிக்கையில், ‘எங்களுடைய கணக்கெடுப்பு மிகவும் பூரணமானது. நாங்கள் வைத்தியசாலையில் நிகழும் மரணங்களைப் பற்றி மட்டும் கணக்கெடுப்பதில்லை. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் மரணங்களையும் கணக்கில் எடுக்கின்றோம்.
அதிலும், நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களை மட்டுமல்லாது நோய்த்தொற்று சந்தேக நபர்களையும் கணக்கெடுக்கின்றோம். ஏனெனில் அவர்களும் வைத்தியர்களிடம் தங்களைப் பதிந்து கொண்டுள்ளனர்’ என்றார்.