நாய்களின் உண்மையான வயதைக் கணக்கிடுவது எப்படி?
27 Nov,2019
செல்லப் பிராணியாக நாயை வளர்க்கிறீர்களா? அதன் வயதைக் கணக்கிடுவது குறித்து எப்போதாவது யோசித்ததுண்டா?
நாயின் வயதை 7ஆல் பெருக்கினால் வரும் விடை மனித ஆயுள்கால அளவுகோல்படி அந்த நாயின் வயதாக இதுவரை கருதப்பட்டு வந்தது.
உதாரணத்திற்கு உங்கள் நாய்க்கு 2 வயது என்றால், மனித ஆயுளில் அதன் வயது 14ஆக மதிப்பிடப்படும்.
ஆனால் கலிஃபோர்னியா பல்கலைக் கழக ஆய்வாளர்களின் அண்மை ஆய்வுமுடிவு அந்தக் கருத்தை மாற்றியுள்ளது.
நாய்கள் நாம் நினைப்பதை விடவும் வேகமாக மூப்படைகின்றனவாம்.
பலருக்கும் ஆச்சரியமாக அமைந்த அந்த ஆய்வுமுடிவு, மனித ஆயுள் அளவுப்படி 2 வயது நாய் மத்திம வயதை எட்டிவிட்டதாகக் கருதவேண்டும் என்று கூறுகிறது.
நாய்கள், வாழ்நாளின் ஆரம்பத்தில் வெகுவேகமாக முதிர்ச்சியடைவதை மரபணுச் சோதனை முடிவுகள் காட்டுவதாக ஆய்வு குறிப்பிடுகிறது.
அவை 8 அல்லது 9 வயதை எட்டும்போது அந்த வேகம் தணிகிறது.
இதுவரை நம்பப்பட்ட 7ஆல் பெருக்கி நாயின் வயதைக் கணக்கிடும் முறைக்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் ஏதுமில்லை என்று கூறப்பட்டது.