தோமஸ் குக்கின் அனைத்துக் கிளைகளையும் ஹேய்ஸ் ட்ராவல்ஸ் திறக்கவுள்ளது
10 Oct,2019
தோமஸ் குக் நிறுவனத்தின் 555 கிளைகளும் ஹேய்ஸ் ட்ராவல் நிறுவனத்தால் வாங்கப்படவுள்ளன.
அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் இருந்து தோமஸ் குக்கின் அனைத்துக் கிளைகளும் ஹேய்ஸ் ட்ராவல் நிறுவனத்தால் வாங்கப்படவுள்ளன.
கடந்த மாதம் தோமஸ் குக் நிறுவனம் நிதிநிலைமையால் இயங்கமுடியாமல் மூடப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றிய 2,500 பணியாளர்களும் வேலையை இழந்திருந்தனர்.
சன்டர்லான்டைத் தளமாகக் கொண்ட ஹேய்ஸ் ட்ராவல் நிறுவனத்தின் நிர்வாகத்தில் அனைத்துக் கிளைகளும் உடனடியாகத் திறக்கப்படும் என்று அதன் தலைவர் ஐரீன் ஹேய்ஸ் (Irene Hays) தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தோமஸ் குக் நிறுவனத்தின் 600 பணியாளர்களுக்கு ஹேய்ஸ் ட்ராவல் நிறுவனத்தில் வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அதன் விரைவான விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக மேலும் பலர் உள்வாங்கப்படவுள்ளனர்.
இந்த நடவடிக்கை தற்போது பிரித்தானியா முழுவதும் 190 கிளைகளைக் கொண்ட ஹேய்ஸ் ட்ராவல்ஸுக்கு ஒரு வளர்ச்சியாக அமைகின்றது.