ஓடிவந்த ஒற்றைக் காட்டு யானை! – நொடிப்பொழுதில் தப்பிய ஊட்டி முதியவர்VIDEO
26 Jun,2019
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை, தூதூர்மட்டம் பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளாக உணவு தேடி காட்டு யானைகள் கூட்டமாக அவ்வப்போது வந்துசெல்கின்றன.
வனத்துறையினர், யானைகளைத் தொடர்ந்து கண்காணித்து, வனப்பகுதிக்குள் விரட்டிவருகின்றனர். சில நாள்கள் கழித்து, மீண்டும் இதே பகுதிக்கு யானைகள் திரும்ப வருகின்றன.
கடந்த 5 ஆண்டுகளாக இது தொடர் நிகழ்வாக உள்ளது. இந்த நிலையில், கடந்த 22-ம் தேதி, 4 காட்டு யானைகள் இந்தப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டிருந்தன.
வனத்துறை ஊழியர்கள் அவற்றை வனத்துக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கூட்டத்தில் இருந்து பிரிந்த யானை ஒன்று, திடீரென கொலக்கொம்பை சாலையில் மிரட்சியில் ஓடியது.
அப்போது, அந்த சாலையில் நடந்துசென்றுகொண்டிருந்த அப்துல் காதர் என்ற முதியவர், சத்தம்கேட்டு திரும்பிப் பார்க்கையில், யானை ஒன்று ஆக்ரோஷமாக ஓடிவருதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
நொடிப் பொழுதில் அருகில் நெருங்கிவிட்ட யானையிடம் இருந்து தப்பிக்க சாலை ஓரத்தில் இருந்த சுவருடன் அச்சத்தில் சேர்ந்து நின்றுகொண்டார்.
வேகமாக ஓடி வந்த யானை, ஒரு கணம் முதியவர் அருகில் நின்று தும்பிக்கையால் தாக்க முயன்றது. அவர்மீது லேசாக தும்பிக்கைபட்டது.
ஏற்கெனவே பயத்தில் ஓடிவந்த யானை, அங்கிருந்து திரும்பவும் வேகமாக ஓட்டம் எடுத்தது. இந்தக் காட்சிகள், கொக்கொம்பை காவல் நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.
யானையிடமிருந்து நொடிப் பொழுதில் முதியவர் உயிர் தப்பிய இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.