சிலைகளை உடைத்துவிட்டு வாருங்கள்’ ஸஹ்ரான் சகாக்களிடம் கூறியுள்ளதாக சி.ஐ.டி தெரிவிப்பு!
14 Jun,2019
மாவனெல்லை நகரை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவங்களானது உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஷிமின் உத்தரவுக்கு அமையவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சி.ஐ.டி. இன்று (13) மாவனெல்லை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்தது
.
இந்த விவகாரம் தொடர்பிலான வழ்ககு நேற்று மாவனெல்லை நீதிவான் உப்புல் ராஜகருணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பிரதான விசாரணை அதிகாரியான சி.ஐ.டி.யின் விசேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மாரசிங்க இதனை நீதிவானுக்கு அறிவித்துள்ளார்.
இதன்போது இந்தச் சிலை உடைப்பு விவகாரத்தை பூரணமாக நெறிப்படுத்தியுள்ள ஸஹ்ரான் அதனை முன்னெடுத்த சந்தேக நபர்களுக்கு ‘ நீங்கள் போய் சிலைகளை உடைத்துவிட்டு என்னிடம் வாருங்கள்’ என கூறியுள்ளதாகவும் சி.ஐ.டி.யின் விசாரணை அதிகாரி நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
இதனைவிட இந்தச் சிலை உடைப்பு விவகாரத்தில் சந்தேக நபர்கள் சிலர் சில நாட்களில் கைதான நிலையில் அவர்களைப் பிணையில் விடுவித்துக் கொள்ள சட்டத்தரணிகளுக்கு வழங்குமாறு கூறி ஸஹ்ரான் 20 இலட்சம் ரூபா பணத்தை இப்ராஹீம் மெளலவி எனும் சந்தேக நபருக்கு கொடுத்துள்ளமை தொடர்பிலும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் அது குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது