முழங்கால் வீக்கம் காரணங்கள் என்ன? சிகிச்சைஎன்ன?
03 Sep,2023
இன்றைய சூழ்நிலையில் எம்மில் சிலர் திடீரென்று ஆரோக்கியத்தின் மீது கரிசனை ஏற்பட்டு நான்கு கிலோமீற்றர் தொலைவு வரை நடைபயிற்சி மேற்கொள்வார்கள். இதில் சிலர் எந்தவித முன் தயாரிப்பு இன்றி 8 வடிவத்தில் நடை பயிற்சி மேற்கொள்வர்.
இறுதியில் முழங்காலில் வீக்கம் ஏற்பட்டு அதனால் அவதியுறுவர். முழங்காலில் வீக்கம் ஏற்படுவதற்கு இன்னும் பல காரணங்கள் உள்ளன.
முழங்காலில் எதிர்பாராத விதமாக காயம் ஏற்படுவது, முழங்காலில் உள்ள சினேவியல் எனும் திரவ நிலையில் ஏற்படும் மாற்றம், அகில்லெஸ் எனும் தசை நார் பாதிப்பு, பேக்கர் சிஸ்ட் எனப்படும் நீர்க்கட்டி பாதிப்பு, செல்லுலிடீஸ் எனும் தோல் பாதிப்பு, முழங்கால் மூட்டில் உள்ள பராசிடிஸ் எனும் திரவ பைகளில் ஏற்படும் வீக்கம், முடக்குவாதம் ஒஸ்டியோ ஒர்தரைட்டிஸ் என பல்வேறு பாதிப்பின் காரணமாக முழங்காலில் வீக்கம் ஏற்படக்கூடும்.
வேறு சிலருக்கு முழங்கால் பகுதியில் உள்ள தசை பகுதியில் வீக்கம் ஏற்பட்டாலோ அல்லது அப்பகுதியில் அசாதாரணமான திசு வளர்ச்சி உண்டானாலும் முழங்கால் வீக்க பாதிப்பு ஏற்படும்.
இவர்கள் உடனடியாக அருகில் உள்ள பிரத்தியேக சிகிச்சை நிபுணரிடம் சென்று அவர்கள் பரிந்துரைக்கும் எக்ஸ்ரே மற்றும் எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு பாதிப்பின் தன்மைக்கேற்ப அரித்ரோஸ்கோப்பி என்ற சிகிச்சை மூலம் இதற்கு எளிய முறையில் முழுமையான நிவாரணத்தை பெறலாம். அதே தருணத்தில் வேறு சிலருக்கு உடல் எடையை சீராக பராமரிக்க முடியாததன் காரணமாகவும் முழங்கால் பகுதியில் வீக்க பாதிப்பு உண்டாகக்கூடும்.