10. ஆவியுலகத் தொடர்பு என்றால் என்ன?
10 ஜனங்களை ஏமாற்றுவதற்காக, பேய்கள் ஆவியுலகத் தொடர்பைப் பயன்படுத்துகின்றன. ஆவியுலகத் தொடர்பு என்பது பேய்களோடு நேரடியாக அல்லது ஒரு மத்தியஸ்தர் மூலமாகத் தொடர்பு கொள்வதை அர்த்தப்படுத்துகிறது. அத்தகைய ஆவியுலகத் தொடர்பை பைபிள் கண்டனம் செய்கிறது, அதனுடன் சம்பந்தப்பட்ட எல்லாக் காரியங்களிலிருந்தும் விலகியிருக்கும்படி நம்மை எச்சரிக்கிறது. (கலாத்தியர் 5:19-21) மீன் பிடிப்பவர்கள் எப்படித் தூண்டிலில் இரையைப் பயன்படுத்துகிறார்களோ, அப்படியே பேய்கள் ஆவியுலகத் தொடர்பு பழக்கத்தைப் பயன்படுத்துகின்றன. எப்படியெனில், வெவ்வேறு மீன்களைப் பிடிக்க வெவ்வேறு இரைகளை மீன் பிடிப்பவர்கள் அந்தத் தூண்டிலில் வைக்கிறார்கள். அதேபோல, எல்லாத் தரப்பு மக்களையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக வெவ்வேறு வகையான ஆவியுலகத் தொடர்பு பழக்கங்களை அந்தப் பொல்லாத ஆவிகள் கண்ணியாகப் பயன்படுத்துகின்றன.
11. குறிசொல்லுதல் என்றால் என்ன, நாம் ஏன் அதைத் தவிர்க்க வேண்டும்?
11 பேய்கள் பயன்படுத்துகிற ஒரு கண்ணி குறிசொல்லுதல் ஆகும். குறிசொல்லுதல் என்றால் என்ன? எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கான முயற்சியே அது. ஜாதகம், கிளி ஜோசியம், கைரேகை ஆகியவற்றைப் பார்ப்பது, அதோடு கனவுகளுக்கு அர்த்தம் தேடுவது போன்றவை குறிசொல்லுதலில் உட்படுகின்றன. குறிசொல்லும் பழக்கம் தீங்கற்றது என அநேகர் நினைத்தாலும், குறிசொல்பவர்கள் உண்மையில் பொல்லாத ஆவிகளுடன் சேர்ந்துதான் செயல்படுகிறார்கள் என்பதை பைபிள் காண்பிக்கிறது. உதாரணத்திற்கு, ‘குறிசொல்ல ஏவுகிற ஆவியைக் கொண்டிருந்த’ ஒரு பெண்ணைப் பற்றி அப்போஸ்தலர் 16:16-18 சொல்கிறது. அந்தக் கெட்ட ஆவி அவளிடமிருந்து துரத்தப்பட்ட பிறகோ குறிசொல்கிற திறமையை அவள் இழந்துபோனாள்.
12. செத்தவர்களுடன் தொடர்புகொள்ள முயலுவது ஏன் ஆபத்தானது?
12 ஜனங்களைப் பேய்கள் ஏமாற்றுகிற மற்றொரு வழி, செத்தவர்களிடம் குறிகேட்கத் தூண்டுவதாகும். பிரியமான ஒருவர் இறந்துவிட்ட துக்கத்தில் இருப்பவர்கள், செத்தவர்களைப் பற்றிய தவறான கருத்துகளால் பெரும்பாலும் வஞ்சிக்கப்படுகிறார்கள். ஆவி மத்தியஸ்தர் ஒருவர் செத்தவரைப் பற்றி ஏதாவது விசேஷ அடையாளத்தைச் சொல்லலாம் அல்லது செத்தவருடைய குரல் என்றே நினைக்க வைக்கிற ஒரு குரலில் பேசலாம். இதை வைத்து, செத்தவர்கள் உயிருடன்தான் இருக்கிறார்களென்று அநேகர் நம்பிவிடுகிறார்கள். எனவே செத்துப்போன தங்கள் பிரியமானவர்களுடன் தொடர்புகொண்டு பேசினால் தங்களுக்கு ஆறுதலாக இருக்குமென்று நினைக்கிறார்கள். ஆனால், அப்படிப்பட்ட எந்த “ஆறுதலும்” பொய்யானது, சொல்லப்போனால் ஆபத்தானது. ஏன்? ஏனென்றால், செத்தவரைப் போலவே பேய்களால் பேசவும் முடியும், செத்தவரைப் பற்றிய அடையாளங்களை ஆவி மத்தியஸ்தர்களுக்குக் கொடுக்கவும் முடியும். (1 சாமுவேல் 28:3-19) அதுமட்டுமல்ல, 6-ம் அதிகாரத்தில் நாம் பார்த்தபடி, செத்தவர்கள் எங்கேயும் உயிர் வாழ்வதில்லை. (சங்கீதம் 115:17) ஆகவே, ‘செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவர்கள்’ பொல்லாத ஆவிகளால் ஏமாற்றப்படுகிறார்கள், கடவுளுடைய சித்தத்திற்கு எதிராக நடக்கிறார்கள். (உபாகமம் 18:10, 11; ஏசாயா 8:19) ஆகையால், பேய்கள் உபயோகிக்கும் ஆபத்தான இந்தக் கண்ணியிலிருந்து விலகியிருக்க விழிப்போடு இருங்கள்.
13. முன்பு பேய்களைப் பற்றிய பயத்திலிருந்த பலரால் இப்போது என்ன செய்ய முடிந்திருக்கிறது?
13 பொல்லாத ஆவிகள் ஜனங்களை ஏமாற்றுவது மட்டுமல்லாமல் அவர்களைப் பயமுறுத்தவும் செய்கின்றன. இன்னும் ‘கொஞ்சக் காலத்திற்குள்’ செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்படப் போவது சாத்தானுக்கும் அவனுடைய பேய்களுக்கும் தெரியும், அதனால் முன்பைவிட இப்போது அதிகப்படியாகக் கேடு விளைவித்துக் கொண்டிருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 12:12, 17) என்றபோதிலும், பொல்லாத ஆவிகளைப் பற்றிய பயத்தில் தினம் தினம் செத்துக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் அத்தகைய பயத்திலிருந்து இன்று விடுபட்டிருக்கிறார்கள். அவர்களால் எப்படி முடிந்தது? ஒரு நபர் ஆவியுலகத் தொடர்பு பழக்கத்தில் ஏற்கெனவே ஈடுபட்டு வந்தால்கூட, அவர் என்ன செய்யலாம்?
பொல்லாத ஆவிகளை எதிர்ப்பது எப்படி
14. எபேசுவிலிருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போல, நாம் எப்படிப் பொல்லாத ஆவிகளிடமிருந்து விடுபட முடியும்?
14 பொல்லாத ஆவிகளை எப்படி எதிர்ப்பதென்றும் அவற்றுடன் நமக்குள்ள தொடர்பை எப்படித் துண்டிப்பதென்றும் பைபிள் நமக்குச் சொல்கிறது. எபேசு பட்டணத்திலிருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கிறிஸ்தவர்களாக ஆவதற்கு முன் அவர்களில் சிலர் ஆவியுலகத் தொடர்பு பழக்கத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அதிலிருந்து விடுபட அவர்கள் தீர்மானித்தபோது, என்ன செய்தார்கள்? பைபிள் இவ்வாறு சொல்கிறது: “மாய வித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கு முன்பாகச் சுட்டெரித்தார்கள்.” (அப்போஸ்தலர் 19:19) மாயமந்திரப் புத்தகங்களை இப்படிச் சுட்டெரித்ததன் மூலம் பொல்லாத ஆவிகளை எதிர்க்க விரும்புகிறவர்களுக்கு இன்று அந்தப் புதிய கிறிஸ்தவர்கள் முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள். யெகோவாவுக்குச் சேவை செய்ய விரும்புகிறவர்கள் ஆவியுலகத் தொடர்பு சம்பந்தப்பட்ட எல்லாக் காரியங்களையும் ஒழித்துக்கட்ட வேண்டும். அதாவது, அந்தப் பழக்கத்தை வசீகரமிக்கதாகவும் ஆர்வமிக்கதாகவும் தோன்றச் செய்கிற புத்தகங்கள், பத்திரிகைகள், சினிமாப் படங்கள், போஸ்டர்கள், மியூஸிக் டேப்புகள் ஆகியவற்றை ஒழித்துக்கட்ட வேண்டும். அதோடு, தீங்கிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அணியப்படுகிற தாயத்துகளையும் வேறு பொருள்களையும் ஒழித்துக்கட்ட வேண்டும்.—1 கொரிந்தியர் 10:21.
15. பொல்லாத ஆவி சேனைகளை எதிர்த்துப் போராட நாம் என்ன செய்ய வேண்டும்?
15 எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்கள் தங்களுடைய மாயமந்திரப் புத்தகங்களைச் சுட்டெரித்த சில வருடங்களுக்குப் பின்னர் அப்போஸ்தலன் பவுல் அவர்களுக்கு இவ்வாறு எழுதினார்: ‘பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு நமக்குப் போராட்டம் உண்டு.’ (எபேசியர் 6:12) ஆம், ஜனங்கள் மீது அந்தப் பேய்கள் தீவிர செல்வாக்கு செலுத்த தொடர்ந்து முயன்று கொண்டிருந்தன. அப்படியானால், அந்தக் கிறிஸ்தவர்கள் வேறு என்னவும்கூட செய்ய வேண்டியிருந்தது? “பொல்லாங்கன் [சாத்தான்] எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப் போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக் கொண்டவர்களாயும் நில்லுங்கள்” என பவுல் சொன்னார். (எபேசியர் 6:16) விசுவாசமெனும் நம்முடைய கேடகம் எந்தளவுக்கு உறுதியாக இருக்கிறதோ அந்தளவுக்கு அதிகமாகப் பொல்லாத ஆவி சேனைகளை நம்மால் எதிர்த்துப் போராட முடியும்.—மத்தேயு 17:20.
16. நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துவது எப்படி?
16 அப்படியானால், நம்முடைய விசுவாசத்தை பலப்படுத்துவது எப்படி? பைபிளைப் படிப்பதன் மூலமே. ஒரு சுவர் எந்தளவு உறுதியானது என்பது பெருமளவு அதன் அஸ்திவாரத்தைப் பொறுத்தே இருக்கிறது. அதேபோல, நம்முடைய விசுவாசம் எந்தளவு பலமானது என்பது பெருமளவு அதன் அஸ்திவாரத்தைப் பொறுத்தே இருக்கிறது, அதாவது கடவுளுடைய வார்த்தையான பைபிளைப் பற்றிய திருத்தமான அறிவைப் பொறுத்தே இருக்கிறது. தினந்தோறும் பைபிளை வாசித்து, அதை ஆராய்ந்தால், நம்முடைய விசுவாசம் மேலும் பலப்படும். அத்தகைய விசுவாசம் உறுதியான சுவரைப் போல, பொல்லாத ஆவிகளின் செல்வாக்கிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.—1 யோவான் 5:5.
17. பொல்லாத ஆவிகளை எதிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
17 எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்கள் வேறு என்னவும் செய்ய வேண்டியிருந்தது? பேய் வணக்கம் நிறைந்த அந்த நகரத்தில் வாழ்ந்து வந்ததால் அவர்களுக்கு மேலுமான பாதுகாப்பு அவசியப்பட்டது. எனவே அவர்களிடம் பவுல் இவ்வாறு சொன்னார்: ‘எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் . . . ஜெபம் பண்ணுங்கள்.’ (எபேசியர் 6:18) நாமும்கூட பேய் வணக்கம் நிறைந்த ஓர் உலகில் வாழ்ந்து வருகிறோம், அதனால் பொல்லாத ஆவிகளை எதிர்ப்பதற்குப் பாதுகாப்பு கேட்டு யெகோவாவிடம் ஊக்கமாக ஜெபிப்பது அவசியம். அதேசமயத்தில், நம்முடைய ஜெபங்களில் யெகோவாவுடைய பெயரைக் கண்டிப்பாக உபயோகிக்க வேண்டும். (நீதிமொழிகள் 18:10) ஆகவே, ‘பொல்லாங்கனிடமிருந்து [அதாவது, பிசாசாகிய சாத்தானிடமிருந்து] நம்மை இரட்சிக்கும்படி’ நாம் தொடர்ந்து அவரிடம் ஜெபிக்க வேண்டும். (மத்தேயு 6:13, NW) அத்தகைய ஊக்கமான ஜெபங்களை யெகோவா கேட்பார்
18 பொல்லாத ஆவிகள் ஆபத்தானவை; ஆனால் அவற்றிற்கு நாம் பயப்படத் தேவையில்லை. அவ்வாறு பயப்படாதிருக்க, நாம் பிசாசை எதிர்த்து நிற்க வேண்டும்; கடவுளுடைய சித்தத்தைச் செய்வதன் மூலம் அவரிடமாக நெருங்கி வர வேண்டும். (யாக்கோபு 4:7, 8) அந்தப் பொல்லாத ஆவிகளுக்கு ஓரளவுதான் வல்லமை இருக்கிறது. நோவாவின் நாளில் அவை தண்டிக்கப்பட்டன; அதுமட்டுமல்ல, எதிர்காலத்தில் தங்களுடைய இறுதி நியாயத்தீர்ப்பையும் சந்திக்கப் போகின்றன. (யூதா 6) யெகோவாவின் வல்லமைமிக்க தூதர்களின் பாதுகாப்பு நமக்கு இருக்கிறது என்பதையும் நினைவில் வையுங்கள். (2 இராஜாக்கள் 6:15-17) பொல்லாத ஆவிகளை நாம் எதிர்த்துப் போராடி வெற்றிபெற வேண்டுமென்று உண்மையுள்ள தேவதூதர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். அதற்காக நம்மை அவர்கள் உற்சாகமூட்டிக் கொண்டே இருக்கிறார்கள் என்று சொல்லலாம். எனவே, யெகோவாவுடனும் உண்மையுள்ள ஆவி சிருஷ்டிகளாலான அவருடைய குடும்பத்துடனும் நாம் நெருங்கி இருப்போமாக. ஆவியுலகத் தொடர்பு சம்பந்தமான எல்லாப் பழக்கங்களையும் தவிர்த்துவிட்டு, கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஆலோசனைகளை எப்போதும் கடைப்பிடிப்போமாக. (1 பேதுரு 5:6, 7; 2 பேதுரு 2:9) அப்படிச் செய்வோமானால், பொல்லாத ஆவி சிருஷ்டிகளுக்கு எதிரான போராட்டத்தில் நமக்கு வெற்றி நிச்சயம்.
19 ஆனால், இந்தத் தீய ஆவிகளையும், மக்களுக்கு இந்தளவு துயரங்களை உண்டாக்குகிற அக்கிரமச் செயல்களையும் கடவுள் ஏன் அனுமதித்திருக்கிறார்? இந்தக் கேள்விக்கான பதிலை அடுத்த அதிகாரத்தில் தெரிந்துகொள்ளலாம்.